முதல் கதை எழுதியவருக்கு மூன்று கதைகள் எழுதியவனின் கடிதம்

                                                


நண்பருக்கு வணக்கம்.


முதல் கதை வந்துவிட்டது, வாழ்த்துக்கள்.


கதை நல்ல ஒழுக்குடன் செல்கிறது, அதற்குரிய ஒரு இயல்பான முடிவையும் அடைகிறது. ‘ஆயிரம் நீலப் பறவைகள்’ அழகிய தலைப்பு.  


கதை குறித்து நான் இங்கு பகிரப்போவது கதைகள் எழுத எனக்கு நானே சொல்லிக்கொள்வது மற்றும் பிற நண்பர்கள் என் கதைகளை வாசித்துவிட்டு பகிர்ந்துகொண்டவை. நான் ஆங்கிலம் கலந்த உரையாடல்களை முடிந்தளவு தவிர்க்கவே முயல்வேன். அல்லது அதற்குரிய கதைகளையே எழுத எண்ணுகிறேன், தனிப்பட்ட தேர்வு இது அவ்வளவுதான்.


கதையின் நடை கதாப்பாத்திரங்களுக்குள் நிகழும் உரையாடல் மற்றும் அவ்வப்போது ஆசிரியரின் மூன்றாம் குரல் என்று நகர்கிறது. படித்த உயர் நடுத்தர வர்க்கம் என்பதால் அவர்களுக்குள் தெளிவான தமிழில் பேசிக்கொள்வது நடப்பதல்ல, ஆங்கிலம் கலந்த உரையாடல்கள் கதையின் போக்குக்கு இயல்பானதுதான். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஆசிரியர் குரலாக ஒலிக்கும் இடையீடுகளிலும் கதையின் நடை பேச்சுமொழிக்கும் தூய மொழிக்கும் இடையில் தடுமாறுகிறது. அது துறுத்திக்கொண்டு தெரிகிறது.


‘உணவு மட்டும் சரியா காலியாகிவிடும்’, என்பதில் சரியா என்பது பேச்சுமொழி. ‘சரியாக காலியாகிவிடும்’ என்று வருவது பொருத்தமாக இருக்கும். 


‘சந்தோகஷமா அவன் சொல்லும் போது’ - இங்கு சந்தோஷமாக என்று வரலாம். 

கதை முழுக்க நடையில் இந்தப் போக்கு இருக்கிறது, இதை நீங்கள் திருத்தலாம். இவையெல்லாம் உறுதியான முறைமைகள் அல்ல, நான் இப்படி எழுதியிருப்பேன் என்று மட்டும் சொல்கிறேன்.

அப்புறம் ‘ஆனந்தக் கண்ணிரே வந்துவிட்டது’, ‘அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது’ என்பதெல்லம் அரதப் பழசான தேய்வழக்குகள். இவற்றை புனைவெழுத்தில் தவிர்ப்பது நல்லது. இந்த உணர்வுகளை வேறு வார்த்தைகளில் சொல்வதில்தான் எழுத்தின் சவால் இருக்கிறது. அது எழுத எழுத கைகூடிவிடும்.


ஒரு இடத்தில் ‘மாலை நான் ஸ்கூல் விட்டு வந்ததும்’ என்று சித் சொல்வது போல வருகிறது. கதை அளிக்கும் தோற்றத்தின்படி இன்றைய பள்ளி வர்க்கத்தை சார்ந்த சிறுவன் ‘மாலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இயல்பாகத் தெரியவில்லை. இதை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.


அப்புறம் அந்த நீலப் பறவை குறித்த வர்ணனைகள். அந்தப் பறவை எந்த இனம் என்று குறிப்பாக சொல்லலாம். கதையின் நுண்தகவல்கள் கதைக்கு நம்பகத்தன்மையையும் வலுவையும் அளிக்கும். ‘சொல்லாதே காட்டு’ என்று சொல்கிறார்கள் இல்லையா. இதே போல அந்தக் கரிய பாம்பு எந்த வகை என்றும் சொல்லலாம்.


‘சிறு புள்ளை வரைந்த கோலத்தை ஒரு நாளில் அழித்துவிட்டதே இந்தப் பாம்பு’ என்று ஒரு வரி வருகிறது. கதையில் இது போன்ற முன்முடிவுகளை நாம் கதையின் போக்கில் சொல்லாமல் உணர்த்தவே முயலவேண்டும். இந்த இடத்தில் இதை நேரடியாக சொல்லவேண்டுமா என்று நீங்கள் பரிசீலிக்கலாம். இங்கும் சரி தவறு என்பதெல்லாம் இல்லை, எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.


கடைசியாக கதை எதைச் சொல்ல உத்தேசிக்கிறது என்ற கேள்வி. சிறுவனின் கனவுகள் எப்படி சிதைகின்றன என்று சொல்லி எதிர்காலத்தில் வாழ்வு அவனுக்கு அளிக்கும் சவால்களை சுட்டிக்காட்டுகிறதா? அல்லது இயற்கையாக சுந்ததிரமாக அலைந்த சிறு பறவைகளை சிறை வைப்பதால் ஏற்படும் சூழல் கேட்டை உணர்த்தி தம்முடைய ஆசைகளுக்கு சூழலை மனிதன் எப்படி கையாள்கிறான் அதனால் ஏற்படும் பாதகங்கள் என்ன என்று சொல்கிறதா?


இதை நீங்கள் உங்கள் பார்வையில் எண்ணிப்பார்க்கலாம். இன்னொன்று நாம் எழுதிய கதை என்பதால் இதில் நிறை குறைகளை நாம் கண்டுகொள்வது தொடக்கத்தில் மிகவும் கடினமான காரியம். இதற்கு ஒரு வழி இருக்கிறது, கதையை அப்படியே விட்டுவிட்டு ஒரு இரண்டு மூன்று வாரங்கள் கழித்து வாசித்துப் பாருங்கள். எதையேனும் சேர்க்க வேண்டுமா, தவிர்க்கவேண்டுமா என்பவை இந்த இடைவெளியில் புலப்படும். அதற்கு பிறகு நீங்கள் முடிவுசெய்யலாம். இங்கு உங்களுடைய இத்தனை வருட இலக்கிய வாசிப்பு துணைசெய்யும். எழுதிய பிறகு வார்த்தைக் கட்டுமானங்களுக்கு அப்பால் கதையின் ஒட்டுமொத்த பார்வை என்ன என்பதைக் காண்பதில்தான் சவால்கள் இருக்கின்றன.


நான் பத்து கதைகள்தான் எழுதியிருக்கிறேன். அவற்றில் இரண்டு மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளன. ஒரு கதை நிராகரிக்கப்பட்டது, அதையும் நான் ஒரு வருடம் கழித்தே மிகுந்த தயக்கத்துடன் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். மீதிக் கதைகளை நான் வெளியே அனுப்பவில்லை, அவற்றை ஒரு பயிற்சியாகவே எண்ணினேன். வெளிவந்த இரண்டு கதைகளிலும் ஒரு கதையை அவசரப்பட்டு அனுப்பிவிட்டோமா என்றே எண்ணினேன்.


எழுத்தில் நான் கண்டுகொண்டது, வாசிப்பிற்கும் எழுத்துக்குமான இடைவெளி நெடுந்தொலைவு என்பது. எழுதும்போதுதான் இதை உணர்ந்தேன். ஆனால் இதை தொடர்ச்சியாக எழுதும்போது களைந்துவிடலாம். உங்களுக்கும் இது நிகழும், நீங்களே உணர்வீர்கள்.


தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை