சொல்வனம் இதழ் கவிதைகள் சிறப்பிதழ் - முகப்புக் கட்டுரை
இயந்திரங்களுக்கு சிந்திக்கும் திறனை அளிப்பதில் முனைப்பாக இருக்கிறோம், அவை கவிதைகளையும் எழுதுகின்றன. ஆனாலும் தன் உம்மாவை மக்காவுக்கு அனுப்ப இயலாத ஒரு மனத்தின் குரல் கவிதையில் ஒலிக்கையில் நாம் நெகிழ்ந்துவிடுகிறோம். கவிதை படைத்தலின் அடிப்படையான உந்துப் புள்ளிகளும் அகத்தூண்டலும், கவிதை வாசிப்பின் இயல்பும் இன்னும் மாறாமல் அதே வீச்சுடன் இருப்பதையே இது உணர்த்துகிறது. மனித அகத்தால் மட்டுமே உணரக்கூடிய மெல்லிய அசைவுகளை, அவை மொழியில் வெளிப்படும் அழகிய உருவக இயல்பை இயந்திரங்களால் என்றுமே நிரப்ப இயலாது.
ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது இதழும் கவிதைகள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இந்த முறையும் பரவலாக அறியப்பட்ட கவிஞர்களின் படைப்புகளுடன் இனி அறியப்படும் சாத்தியங்கள் கொண்டவர்களின் கவிதைகளும் வெளிவந்துள்ளன. இலக்கிய வாசகர்களை சமூகத்தின் குறுங்குழு என்று வகுத்தால் அதற்குள் இயங்கும் இன்னும் சிறு தீவு வாசிகளின் இயக்கமாகவே கவிதை எழுத்தும் வாசிப்பும் இருக்கிறது. இலக்கியத்தின் பிற வடிவங்களில் பரிச்சயம் கொண்ட வாசகர்களிடம் கவிதை எனும் வடிவம் சென்று சேரவேண்டிய தேவை என்றுமே உள்ளது.
நுண்ணுணர்வும் கற்பனை விரிவும் உள்ள இலக்கியவாசகர்கள் எப்போதுமே பற்றிக்கொள்ளக் காத்திருக்கும் சருகு போன்றவர்கள். அப்படி சிலரையேனும் இந்த இதழின் கவிதைகள் ஈர்த்தால், அதன் வாயிலாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் அவர்கள் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால் சொல்வனத்தின் இந்த முயற்சி சிறு பலனை எட்டியது என்று கொள்ளலாம். இது இரு இதழ்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடுவதல்ல, தொடர் முயற்சிகள் வாயிலாகவே அடையக்கூடுவது.
பிரபஞ்சம் கவிதைகளுக்கான கருக்களை கவிஞர்களிடம் அளித்துக்கொண்டேதான் இருக்கிறது. பெற்றுக்கொண்ட கருக்கள் நொதிக்கும் களனாகவே கவிஞனின் மனம் இருக்கிறது. நன்று நொதித்த மதுவை வாசகர்களுக்கு கடத்தும் இந்த முயற்சி வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும் மட்டுமல்ல சொல்வனம் இதழுக்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்தான்.
பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் சொல்வனம் குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
Comments
Post a Comment