மதார், ஒரு கவிதை பல பிரதிகள்
மதார்,
கவிதைகளை பலமுறை வாசித்துப் பார்த்தேன், வாய் விட்டுக்கூட வாசித்தேன். முதல் மற்றும் கடைசிப் பிரதிகளின் கடைசி வரிகள் ஒரு ஸ்டேட்மண்ட் என்ற தோற்றம் தருகின்றன அல்லது ஒரு முடிவை வாசகனுக்கு அறிவிப்பது போல இருக்கிறது.
இரண்டாம் பிரதியின் கடைசி வரிகளும் நன்றாகவே உள்ளன, ஏனோ அதன் வார்த்தைகள் கவிதையோடு ஒட்டவில்லை என்று தோன்றியது.
“அங்கிருந்தே
விரிகிறது
விடை
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை”
கவிதையின் ஒழுக்குக்கு தோதாய் (லயத்துக்கு) இருப்பது மூன்றாம் பிரதி என்று எனக்கு தோன்றுகிறது. அது கவிதையோடு நன்றாக ஒட்டிக்கொள்கிறது என்று எண்ணுகிறேன்.
“எதை
எதோடு
கூட்டச் சொல்கிறது
தேவாலய உச்சி
அந்தக் கூட்டல் குறிக்கு
முன்னும் பின்னும்
என்ன
வானம் + வானம் என
அங்கிருந்தே
வானம்
விரிகிறது
விடை என”
இதன் கடைசி நான்கு வரிகளை நான் இப்படி எழுதிப் பார்த்தேன். ஒரு சாத்தியம்தான் - உங்களுடைய வரிகளும் நன்றாகவே உள்ளன.
“ஆங்கிருந்தே
விரிகிறது
வானம்
விடை என”
இதே தொனியில் தேவாலயத்தை வைத்து நான் முன்னர் ஒரு கவிதை எழுதியிருந்தேன், அது நினைவுக்கு வந்தது.
“மனிதம் கூட்டமாய்
தேவாலயங்களுக்குள்
தொழுதுகொண்டிருந்தது,
தேவாலயங்கள்
சிலுவைகளை உயர்த்தி
வான் நோக்கிக்
கூவிக்கொண்டிருந்தன,
வான் நெடிந்து பரவி
பிரபஞ்சத்திடம்
விடை தேடிக்கொண்டிருந்தது,
பிரபஞ்சங்கள் வரிசையாய்
முடிவிலிகளிடம்
தம் கோரிக்கைகளை
அடுக்கிக்கிடந்தன,
கடவுள்
இருண்ட கருவறைக்குள்
புழுக்கத்துடன்
புரண்டுகொண்டிருந்தான்.”
Comments
Post a Comment