'An Untold Story' - கதையினுள் ஒரு கதை
நண்பரும், எழுத்தாளருமான ஜெகதீஷ் குமாரின் ஆங்கிலச் சிறுகதை ' An Untold Story', Spillwords Press இணைய இதழில் வெளியாகியுள்ளது. இந்தச் சிறுகதையின் தமிழ் மொழியாக்கத்தை அவருடைய தளத்தில் வாசித்தேன். இதன் ஆங்கில மூலவடிவத்தை சில மாதங்களுக்கு முன்னரே பகிர்ந்திருந்தார், வாசித்தவுடன் கதை மிகவும் கவர்ந்தது. இன்று தமிழ் வடிவத்தை வாசித்தவுடன் சில எண்ணங்கள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. அவற்றைத் தொகுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கட்டுரை. யாருமே சொல்லியிராத ஒரு கதையைப் படைத்துவிட முயலும் எழுத்தாளனும், யாருமே சொல்லியிராத கதையைத் தேடி அலையும் வாசகனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் இணைந்து கதையைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள், முரண்பாடு ஏற்பட்டு சண்டையிட்டுக்கொள்கிறார்கள், கதை கேட்பாரற்றுத் தரையில் கிடக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 'ஒரு கதையைப் பற்றிய கதை'. ஒரு எழுத்தாளனின் மனதில் கத...