மதார் கவிதைகள், ஓலைச்சுவடி இதழ் - ஒரு கடிதம்

                                          

ஓலைச்சுவடி இதழில் வெளிவந்த மதார் கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம்.

கடிதம் எழுதப்பட்ட நாள்: செப்டம்பர் 5, 2022

அன்புள்ள மதார்,

நாம் கடைசியாக உரையாடி இரண்டு மாதங்களிருக்கலாம், நீங்களும் வேலைப்பளுவால் அவ்வளவாக எழுதவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். சென்ற முறை உரையாடுகையில் ஓலைச்சுவடி இதழில் சில கவிதைகள் வெளிவர இருப்பதாகச் சொன்னது நினைவிருக்கிறது. உங்கள் கவிதைகள் வந்திருக்கிறதா என்று அவ்வப்போது தேடிக்கொண்டிருந்தேன், கடைசியில் நீங்களே பகிர்ந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி. உங்களுக்கே உரிய மொழியில் அமைந்த நிறைவான வாசிப்புக்கு வழிவகுத்த கவிதைகள். 

இதழின் ஆசிரியர் குழுவே கவிதைகளுக்கான தலைப்பை வைத்துவிட்டார்கள் போல. நீங்கள் கவிதைகளுக்கு மேலோட்டமாக தலைப்பிடத் தயங்குபவர் என்பதை உங்கள் முந்தைய கவிதைகளிலும், உரையாடல்களிலும் உணர்ந்திருக்கிறேன். 

ஒரு கவிஞன் இயல்பாக எழுதிய கவிதையை வாசகன் தன் கைகளில் அளிக்கப்பட்ட பட்டமாக அனுபவவெளியில் வானில் மிதக்கவிடுவதும், வான் தொட்டுவிடும் என்று உத்தேசிக்கப்பட்ட கவிதைகள் அதே வாசகனின் பிழையால் மரங்களில் மாட்டிக்கொண்டு சிதைவதும் சேர்ந்தே நிகழ்கின்றன இல்லையா? என்னுடைய குறிப்புகளில் இந்த இரண்டும் நிகழ்ந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

1. தீயில் யானை - 

ஒரு விசித்திரமான கவிதையாக எனக்கு இது தோன்றுகிறது. ஒரு காட்சியையோ, சித்தரிப்பையோ கவிதையாகச் சமைக்கமுடியும் என்று உணரும் கவிஞனின் நம்பிக்கைக்குப் பின் அவன் கடந்துவந்த, வாசித்த பல கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறு தூண்டல் கவிஞனின் மனதுக்குள் என்னவாக நிறமாற்றம் அடைகிறது என்பதை எண்ணிப்பார்க்கிறேன். அடிப்படையாக நரம்புகளின் தொடர்மின்சாரம், நினைவாற்றல், வாழ்வனுபவம், அவனுக்கே உரிய தத்துவார்த்த தேடல், மொழிக்கூர்மை என்று கவிஞன் ஒரு கவிதையை எழுதப் பல காரணிகள் உள்ளன.

ஒரு காட்சி துணுக்குறலாகத் தொடங்கி, பின் நம்பிக்கையாக விரிந்து, அதை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் கருமை பூசப்பட்டு யானையாகவே உருவெடுக்கிறது. பனிமூட்டத்தின் பிண்ணனியில் விரியும் காட்சி சில நொடிகளில் துலக்கமாவதுபோல, மெல்ல ஒரு தெளிவு அல்லது தெளிவு என்று நாம் நம்பும் ஒன்று. பலமுறை வாசித்தும் என் புரிதல்களிலிருந்து நழுவிக்கொள்ளும் ஒரு கவிதை இது.

2. காட்சி அதிசயம் - 

உறங்கும் முன் வானில் தோன்றும் நட்சத்திரக்கூட்டத்தைப் பார்க்கும் வழக்கத்தை நீண்ட நாட்களாகத் தொடர்கிறேன். அப்படி நான் பார்க்கையில் ஒரு நண்பரின் மூத்த மகன் (இளைஞன்), தரையில் தெரியும் தெருவிளக்குகளைக் கைகளால் மறைத்துக்கொண்டு நோக்குமாறு சொன்னான். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் கைகளை கண்களின் முன் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு ஒரு இருளை உருவாக்கி வானை நோக்குகிறேன். வானில் மறைந்துகொண்டிருக்கும் வெளிச்சப்புள்ளிகள் மெல்லத் துலங்குவது ஒரு அற்புத அனுபவம். இந்தக் கவிதை எனக்கு நினைவுபடுத்துவது இந்த அனுபவத்தைத்தான். இதற்கு மேலும் இந்தக் கவிதையை விரித்துக்கொள்ளலாம், கவிதையில் போதுமான இடமிருக்கிறது.

3. வாழ்வுக்கும் மரணத்துக்கும் - 

'முடுக்குகளில் நிலவைத் திருப்பிய சிறுவன்' என்ற ஒற்றை வரி கவிதையைச் சுமந்துகொண்டிருக்கிறது. இந்த ஒற்றை வரியை நான் எனக்குள் ஒளித்துவைத்துக்கொள்வேன், அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்ள. அதற்குமேல் எதையும் சொல்ல விருப்பமில்லை, கவிதையனுபவம் சிதைந்துபோகும்.

4. சந்திப்புப் புள்ளி - 

இந்தக் கவிதை சுட்டுவது எல்லையற்ற ஒன்றை. இவ்வளவு சிக்கனமாக எழுதப்பட்டுவிட்ட இதன் பிரம்மாண்டம் கொஞ்சம் மலைக்கவைக்கிறது. தர்க்கத்தையெல்லாம் வீசியெறிந்துவிட்டு நிர்வாணமாக நிற்கும் ஒரு மன அமைப்பு தேவை இதை வாசிக்க.

5. அடுக்குத் தும்மல் - 

உங்கள் கவிதைகளை வாசிக்கையில் ஒரு புன்னகை என்னில் வந்து அமர்ந்துகொள்ளும், அது இந்தக் கவிதையை வாசிக்கையில் நிகழ்ந்தது. ஒவ்வொரு தும்மலுக்குப் பிறகும் நாம் வெகு தொலைவிலிருந்து திரும்பவேண்டியிருக்கிறது. ஒரு தும்மலில் சிதறும் அனைத்தையும் நாம் அள்ளிக் கோர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது, அழகிய கவிதை.

6. மந்தை - 

'வெயில் பறந்தது' தொகுப்பிலிருந்த இடையனைத் தொலைத்த ஆடு கவிதை இன்னும் என்னைத் தொந்தரவு செய்கிறது. 'வாகனம் ஊடறுத்துச் சென்ற கணம்' என்பதை வாழ்வின் உச்சப் புள்ளிகளான பிறப்பு, மரணம் என இரண்டுக்குமான உருவகமாகக் கற்பனை செய்துகொள்கிறேன். ஒவ்வொரு கணத்திலும் வாழ்வு அதன் போக்கில் நகர்ந்துகொண்டேதானிருக்கிறது. நம் இருப்பை எடை என்று உணர்வது எத்தனை அபத்தம், நதியின் போக்கில் சிறு இலையாக இருக்கத்தான் நாம் எத்தனை கவிதைகளை எழுதவேண்டியிருக்கிறது. 'பிரிந்த மந்தையின் முதல் ஆட்டுக்குட்டி' எனும் வரிகளை என்னால் எளிதில் கடக்கமுடியவில்லை.

விரிந்த வாசிப்பைக் கோரும் கவிதைகள் மதார். உங்களிடம் மீண்டும் பேசவேண்டிய தருணம் வந்துவிட்டது, விரைவில் உரையாடுவோம், மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை