கல்லளை சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்

                                                 

நண்பர் ஜெகதீஷ் குமார் எழுதிய கல்லளை சிறுகதை சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. சிறுகதையை குறித்து அவருக்கு எழுதிய கடிதம்,

அன்புள்ள ஜெகதீஷ்,

சிறுகதை முதல் வரியிலேயே துவங்கி, பரபரப்புடன் நகர்ந்து, கவித்துவமான, தத்துவார்த்தமான ஒரு முடிவுடன் நிறைகிறது. முதல் வாசிப்பில் தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் உணர்வே ஏற்பட்டது. தடையில்லாத ஒழுக்கான நடை, அற்புதமான கதைசொல்லல் என முழுமையான ஒரு வாசிப்பனுபவத்தை அளித்த சிறுகதை. 'கல்லளை' எனும் தலைப்பு பொருத்தமாகவும், மிகுந்த அர்த்தத்துடனும் கதையைத் தாங்கி நிற்கிறது. இந்த தலைப்பே கதையை தனித்துவமான ஒன்றாக நிலைநிறுத்துகிறது, அவ்வளவு கூர்மை.

அறிவின் பாதையைத் தேடுபவனான சித்தி குலத்தின் பஸ்தாவா, அதிகாரத்தின் ஆயுதத்தின் பாதையைத் நாடும் ஹொய்சால அரசின் வாரிசான ஹக்கா ராவ் என இரு கதைமாந்தர்களின் தேடலாகவே இந்தச் சிறுகதையை வாசிக்கிறேன். கர்னாடகாவின் கங்காமூலா, சித்தி, கோலிதோர், கோண்டு, மரத்தி, நைக்டா என்று ஐந்து குடிகள், அவர்களுடைய ஹிரயிரி மூத்தோர் வழிபாடு, வீர பல்லாலர்கள், ஹெய்சால, காகதீய, செவுன யாதவ மன்னர்களின் வீழ்ச்சி, டெல்லி சுல்தான்களின் தென்னிந்திய அக்ரமிப்பு என பரந்த வரலாற்றுப் பிண்ணனியும், தகவல்களுமாக மிகுந்த உழைப்பைக் கோரும் ஒரு சிறுகதையை இயல்பாக அமைத்திருக்கிறீர்கள்.

சிறுகதையில் ஹக்கா ராவ் புலியைக் கொல்ல அம்புகளைத் தயாரிக்கையில், பஸ்தாவா குருநாதரின் ஓலைச்சுவடிகளை அடுக்க தோதகத்தி மரத்தில் அலமாரியைத் தயாரிக்கிறான். இருவருடைய எதிர்காலப் பாதையையும் குறிப்புணர்த்தும் இந்தப் பகுதி அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. குருவின் ஜீவன் முக்தி ஸ்வரூபம் குறித்த விளக்கம் எளிமையாக, ஆனால் அழகாக வெளிப்பட்டிருந்தது. 

இந்தக் குறிப்பை எழுத விக்கியில் நிறைய வாசித்துக்கொண்டிருந்தேன், சிறுகதை அதற்கான தூண்டலை அளித்தது. கதையின் சூழல் டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் அழிந்த அரசுகளின், குறிப்பாக ஹொய்சால மன்னர்களின் காலம் என்றால் அது 13ம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்ற எண்ணத்தையே தரவுகள் அளிக்கின்றன. விஜயநகரப் பேரரசு உருவாவதற்கான முக்கிய ஆலோசகராக இருந்த, ஜீவமுக்திவிவேகத்தை எழுதியவராகக் கருதப்படும் வித்யாரண்யகர் குருநாதராக கங்காமுலாவில் வந்தமைகிறார். விஜயநகரப் பேரரசு உருவானது 13ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து என எடுத்துக்கொண்டால், அவர் முன்னரே வந்து இறந்துவிடுவது தர்க்கத்தை சற்று நிரடுகிறது. அவர் வித்யாரண்யகர் என்பது ஒரு ஊகம்தான் என்று கதையில் ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் இவ்வளவு வரலாற்றுப் பிரக்ஞையோடு, தகவல் கூட்டோடு எழுதப்பட்ட சிறுகதை என்பதால் நான் எனக்கு தெளிவுபடுத்திக்கொள்ளவே இதைக் கேட்கிறேன். இன்னொன்று ஹக்கா ராவ் ஐந்து குடிகளையும் இணைத்து துங்கா, பத்ரா, நேத்ராவதி என மூன்று நதிகள் பாயும் இடத்தில் அமைக்க எண்ணுவது எந்த மாதிரியான அரசு? அது புனைவுதானா?

கூகை, கல்தாமரை, பூனைக்காலி, கஸ்தூரி மஞ்சள் என காட்டின் சூழல் நன்றாக அமைந்திருந்தது. கதையில் அந்தக் குகை மற்றும் காடு குறித்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் இரண்டாவது வாசிப்பில் ஏற்பட்டது, அதையும் பகிர்ந்துகொள்கிறேன். அதற்கான காரணங்கள் உங்களுக்கிருக்கலாம் என்பதையும் கவனத்தில்கொள்கிறேன். உங்களுக்கு நேரமிருந்தால் இந்த வாரம் ஒருநாள் பேசலாம், கதை குறித்து இன்னும் தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலாக உள்ளேன்.

இதுவரை வெளிவந்த உங்களுடைய கதைகளிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தோடு அமைந்தும், சுவாரசியமான வாசிப்பும் அளித்த சிறுகதை இது, மிகுந்த தன்னம்பிக்கையோடு வெளிப்பட்டிருக்கிறீர்கள் ஜெகதீஷ், மனமார்ந்த வாழ்த்துகள். கதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வந்தால் சிறிதும் ஆச்சரியப்படமாட்டேன்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை