ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும், வண்ணதாசன் - ஒரு வாசிப்பு

                                         

நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு வண்ணதாசனின் சிறுகதை ஒன்றை கனலி இதழில் வாசித்தேன், மிகவும் கவர்ந்தது.

வண்ணதாசனின் கதைகளுக்கே உரிய திருநெல்வேலி மண்ணைச் சார்ந்த நடுத்தரவர்கத்து கதைமாந்தர்கள். அவருடைய கதைகளில் எப்போதும் இடம்பெற்றுவிடும் பூக்கள் (வாடாமல்லிப் பூ, அரளிப் பூ) என நிறைந்த வசிப்பனுபவம் அளித்த சிறுகதை. அவர் கவிஞராக இருப்பதால் கதை முழுக்க சொல்லியும், சொல்லாமலும் விடப்பட்ட பூடக அம்சங்கள் கொண்ட கதையாகவும் உள்ளது. வாசகன் கதைக்குள் நுழைந்து அதன் நிகழ்வுகளை அவதானித்து தனக்கான கேள்விகளை எழுப்பிக்கொள்ள நிறைய இடைவெளி அளித்திருக்கிறார். சிறுகதையின் காட்சிகள் நுண்சித்தரிப்புகளாக இயல்பாக மனதில் அமர்கின்றன. வண்ணதாசன் ஒரு ஓவியர் என்பதையும் நினைவுகூரலாம்.

பிரேமாவும் சந்திரனும் பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு சிறிய தெருவில் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு சினேகா என்றொரு மகள் பிறக்கிறாள், மூளை வளர்ச்சி குறைந்த பெண், மூன்று வயதுக்குள் இருக்கலாம். சந்திரன் அந்தக் குறையைப் பொருட்படுத்தாமல் குழந்தையிடம் தொடர்ந்து பேசிக்கொண்டும், உரையாடிக்கொண்டும் சகஜமாக இருக்கிறான். பிரேமாவைக் குழந்தையின் குறைபாடு வெகுவாக பாதிக்கிறது. சந்திரன் ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்கிறான், வியாபாரக் குறைவு காரணமாக அரைச் சம்பளம் பெறுகிறான். ஒரு மழைநாளில் மனம் பிறழ்ந்தவன்போல நடக்கத் துவங்குகிறான். ஒரு இரவில் காணாமல் போகிறான், குழந்தை இரண்டு மாதங்கள் கழித்து இறக்கிறது, அவன் திரும்பவே இல்லை. பிரேமா சந்திரனின் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் சூப்பர்வைசர் பிரம நாயகத்தைத் திருமணம் செய்துகொள்கிறாள், மீண்டும் கருவுறுகிறாள்.

சந்திரனின் சைக்கிள், ஊசித்தட்டான், பிரம நாயகத்தின் ஆறாவது விரல் என சிறுகதை மிக நுண்ணிய படிமங்களால் நெய்யப்படுகிறது. இத்தனை வாஞ்சையோடு இருக்கும் சந்திரன் ஏன் காணாமல் போகிறான்? மனிதர்கள் தம் துக்கங்களை நன்றாக மறைக்கத் தெரிந்தவர்கள். சந்திரனிடம் வாழ்வு இரக்கமில்லாமல் நடந்துகொள்வதை, சமன்படுத்தவே அவன் சினேகாவிடம் பாசமாக நடந்துகொள்கிறானா? கதையின் தொடக்கத்தில் வரும் ஊசித்தட்டான் பிரேமாவுக்கு சந்திரனை நினைவுபடுத்துகிறது. பிரம நாயகத்தின் ஆறாவது விரல் பிரேமாவின் கடந்தகால வாழ்வின் ஒரு மிச்சமாகத் தோற்றமளிக்கிறது. அவள் சந்திரனையும், சினேகாவையும் இன்னும் நினைவுகளில் தொட்டெடுத்துக்கொண்டிருக்கிறாள், அதன் நீட்சியே அந்த ஆறாவது விரல்.

தர்க்கங்களை மீறி மெல்லிய நுண் உணர்வுகளால் அமைக்கப்பட்ட, கல்யாண்ஜியின் கவிதைகளை நினைவுபடுத்திய ஒரு சிறுகதை இது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை