வெறுங்கால் பாதை, போகன் சங்கர் கவிதைகள் - ஒரு கட்டுரை
kavithaigal.in செப்டம்பர் மாத இதழில் கவிஞர் போகன் சங்கரின் 'வெறுங்கால் பாதை' தொகுப்பை ஒட்டி எழுதிய என் கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் பிரதி இங்கு,
வெறுங்கால் பாதை –
கவிஞர் போகன் சங்கரின் 'தடித்த கண்ணாடி போட்ட பூனை' தொகுப்பை சில
வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். அந்த தொகுப்பிலிருந்து
சில கவிதைகளை மனம் அவ்வப்போது மீட்டெடுத்து அசைபோடும். சில வருட
இடைவெளிக்குப் பிறகு அவருடைய 'வெறுங்கால் பாதை' (தமிழினி வெளியீடு) தொகுப்பை வாசித்தேன். ஐந்தாவது பக்கத்தில் தொடங்குகிற கவிதைகள், நூற்றி நாலாவது
பக்கம் வரை நம்மை பல்வேறு உணர்வுநிலைகளுக்கு ஆட்படுத்துகின்றன.
ஒரு கவிதைத் தொகுப்பு வாசித்தவுடன் கவர்ந்துவிடும்
கவிதைகளையும், நம் ரசனை வெளிக்கு, வாசிப்பின்
எல்லைகளுக்கு அப்பால் நின்றிருக்கும் கவிதைகளையும் உள்ளடக்கிய கலவையாகவே திரண்டிருக்கும்.
'வெறுங்கால் பாதை' தொகுப்பு, பெரும் எண்ணிக்கையில் மிகச் சிறந்த வாசிப்பனுபவங்களை அளிக்கும் கவிதைகளையும்,
பல முறை வாசிக்கத் தூண்டும் கவிதைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.
கவிஞர் போகன் சங்கருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு
இது. 'மொழியின் மீது இன்னும் கட்டுப்பாடு உடையவனாக
மாறியிருக்கிறேன் எனத் தெரிகிறது. மொழியை இன்னும் சுருக்கிப்
பயன்படுத்துகிறவனாக மாறியிருக்கிறேன். சில நேரங்களில் அது ஒரு
சூத்திரம் அளவுக்குச் சுருங்கி இருப்பதும் உண்மைதான்', என முன்னுரையில்
அவர் குறிப்பிடும் வரிகளை ஒட்டி இந்தக் கட்டுரையை விரித்துக்கொள்ள முனைகிறேன்.
குறுங்கவிதைகள் -
இந்த தொகுப்பு நூற்றி எழுபத்து நான்கு கவிதைகளால்
ஆனது. ஐந்தாவது பக்கத்திலிருந்து நூற்றி நான்கு பக்கங்களுக்குள்
சாத்தியமாகியுள்ள இந்த எண்ணிக்கை, பெருமளவு 'குறுங்கவிதைகள்' என்று வரையறுக்கத்தக்க கவிதைகளால் அமைந்துள்ளது.
ஒரு புரிதலுக்காக இங்கு குறுங்கவிதைகள் என்று நான் குறிப்பிடுவதை மூன்றிலிருந்து
ஐந்து வரிகளுக்குள் எழுதப்பட்டவை என்று வகைப்படுத்துகிறேன்.
குறுங்கவிதைகள் என்றவுடன் கல்யாண்ஜியின் "தேக்கும் பூக்கும்" (ஒற்றை வரி)
கவிதையும், பிரமிளின் 'பல்லி'
(1963) – (கவிதை – இறக்கத் துடிக்கும் வாலா?
– உயிரோடு மீண்ட உடலா?) கவிதையும் நினைவில் தோன்றுகிறது.
கவிதை வரிகளின் எண்ணிக்கையை முன்னிட்டே இவற்றை குறுங்கவிதைகள் என்று
வகைப்படுத்துகிறேன். அர்த்தசாத்தியங்கள், படிமங்களின் வீச்சு, வாசகனின் கற்பனையைத் தீண்டும் பண்புகள்
என அளவில் நீண்ட கவிதைகள் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை இவையும் அளிக்கத் தவறுவதில்லை.
குறுங்கவிதைகளை எதிர்கொள்வதில் ஒரு வாசகனுக்கு
சில சாதக அம்சங்கள் உள்ளன. அளவில் குறுங்கவிதைகள் எனும்
இந்த வரையறைக்கு வெளியே அமையும் எந்தக் கவிதையிலும், ஒரு வாசகன்
தன்னுடைய வாசிப்பை குறிப்பிட்ட சில வரிகளில் குவித்தும், சிலவற்றைத்
தவிர்த்தும் பயணிக்கும் அவசியம் உள்ளது. கவிதை வாசிப்பின் இன்றியமையாத
அம்சமான இத்தகைய தேர்வுகளின், தவிர்ப்புகளின் தேவைகளைக் கோராமல்,
நேரடியாக ஒரு கவிஞன் அடையும் உள எழுச்சியை, வாழ்வின்
சில உச்ச தருணங்களை மற்றும் படிமங்களை குறைந்த சொற்களால் சுட்டும் வகையில் குறுங்கவிதைகள்
அமைகின்றன.
ஒரு குறுங்கவிதை வாசகனின் மனதில் நீடித்து
இயங்குவதற்கு தேர்ந்த சொற்களால் நினைவில் மீட்டெடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்த அதன்
வடிவம், உரையாடல்களில் இயல்பாக வரிகளைத் தொட்டுச் செல்ல
ஏதுவான எளிமை, சக வாசகனிடம் கவிதையின் சொற்களை இழக்காமல் முழுமையாகப்
பகிர ஏதுவான தன்மை என சில கூறுகளைக் கொண்டுள்ளது. தமிழின் பிரபலமான
கவிதைகளே கூட குறிப்பிட்ட சில வரிகளின் மூலமே நினைவுகூரப்படுவதை உணரலாம். (தேவதேவன் 'அசையும் போது தோணி - அசையாத போதே தீவு', தேவதச்சன் 'காற்றில் - அலைக்கழியும்
வண்ணத்துப் பூச்சிகள், காலில் - காட்டைத்
தூக்கிக்கொண்டு அலைகின்றன').
குறுங்கவிதைகள் மொழியில் முகிழ்ந்து திளைத்த
ஒரு மனதின் கூர்மையை நாடுபவை. சரியாக வெளிப்படாத குறுங்கவிதைகள்
வெறும் கூற்றுகளாக, எண்ணத் தெறிப்புகளாக நின்றுவிட வாய்ப்புகளுண்டு.
இந்த தொகுப்பின் சில கவிதைகள் தனி வாசிப்பில் அப்படித் தோற்றமளிக்கலாம்.
ஆனால் தொகுப்பாக வாசிக்கும்போது, இதே கவிதைகள்
ஒரு கவிஞனின் கவியுலகில் நுழைந்து குறுக்கும் நெடுக்குமாக அலையும் வாசகனுக்கு,
பிற கவிதைகளின் நீட்சியாக அமைந்து, முழு வாசிப்பு
சாத்தியங்களை அளிக்கின்றன.
குறுங்கவிதைகளில் சொல் மயக்கமும் பொருள் மயக்கமும்
அளிக்கும் கவிதைகளுக்கும் இடமுண்டு. (மதார், உயரம் குறையக் குறைய – உயரம் கூடுவதைக் – காண்கிறது – கிணறு). மாறாக இந்த
தொகுப்பில் போகன் சங்கர் குறுங்கவிதைகளை கூர்மையான சொற்களால், நேரடியான முறையிலேயே அமைத்திருக்கிறார். பல கவிதைகளில்
வினைச்சொற்களை நீக்கிவிட்டால் முழுமையான ஹைக்கூக்களாக மாறுகின்றன. தொகுப்பின் கவிதைகள், சதையில் உணரப்படும் கத்தியின் கீறலாய்த்
தொடங்கி, பின் குருதி வழியும்போது புலன்களால் முழுமையாக உணரப்படும்
நிலைக்கு ஒப்பாக, முதல் வாசிப்பில் நம்மைக் கீறி, மெல்ல நம் பிரக்ஞையில் பெருகி வளர்கிறது.
தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதைகள் –
தொகுப்பிற்கு மிகச் சிறந்த ஒரு தொடக்கத்தை
அளிக்கிறது ஹைக்கூத் தன்மைகொண்ட இந்தக் கவிதை. விடுமுறை
நாளில் இயக்கம் குறைந்த ஒரு பாலமும், அதில் பிரதிபலிக்கும் வெயில்
மற்றும் நகரும் ஒரு ஆட்டோ என முதலில் காட்சிகளாக விரியும் கவிதை, பிரபஞ்சத்தின் தனிமையை உணரும் ஒரு மனதின் வெளிப்பாடாக பரிணமித்துவிடுகிறது.
'விடுமுறை நாளின் வெயில்
ஒரு மஞ்சள் ஆட்டோவாக
பாலத்தின் மீது செல்கிறது'.
…..
'பிரியத்தின் சர்ப்பம்' எனும்
வரியில் இணைந்துகொள்ளும் இந்த சொற்களில் உள்ள முரண்பாடு அழிந்து கவிதைக்கு ஒரு முழு
விச்சை அளிக்கிறது. உறங்கும் மழைத்துளிகளும், பிரியத்தின் சர்ப்பமும் அழகிய படிமங்களாக மாறுகின்றன.
'உறங்கும் மழைத்துளிகளை
எழுப்பாமல்
புல்வெளியைக் கடந்துசெல்கிறது
பிரியத்தின் சர்ப்பம்'.
…..
சில குறிப்பிட்ட படிமங்கள் எத்தனை முறை எழுதப்பட்டாலும்
அதன் அர்த்த வரையறைகள் நெகிழ்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. நாம் வழக்கமாகக் கடந்து செல்லும் ஒரு காட்சி இங்கு வேறொன்றாக
மாற்றம்கொண்டு குறியீட்டு அர்த்தம் பெற்றுவிடுகிறது. சிக்கனமான
சொற்களால் அமையப்பெற்ற இந்தக் கவிதை, குழந்தை கைகளை விரித்து
விவரிக்கும் யானையின் அளவைப்போல வாசகக் கற்பனையை வேண்டுகிறது.
'மொட்டைக் கோபுரம்
நிழலில்
தன்னைப் பூர்த்தி செய்துகொள்கிறது'.
…..
இந்தக் கவிதையின் முதல் வரியைத் தாண்டி என்னால்
வாசிக்க இயலவில்லை. தொடக்கத்திலேயே கவிதையின்
உச்சம் நிகழ்ந்து முடிவடைந்துவிடுகிறது. திங்கட்கிழமை எனும் படிமம்
நகரத்தின் மீது ஏற்றப்படுகையில் மனதில் ஏற்படும் சலனங்கள் மிக ஆழமானவை.
'நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை.
வேலையற்றவனின் காலை பத்து மணி.
அறையில் இருப்பவன் உயிரை
எட்டிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொள்கிறான்
விடுதிக் காப்பாளன்'.
…..
'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலில் அருணாசலம் பிறழ்வின் பிடியில், தனிமை இரவில்
கேட்கும் பனை ஓசை ஏற்படுத்திய அதே தாக்கத்தை மீண்டும் உணரவைத்த கவிதை இது.
அலைபாயும், கொந்தளிக்கும்
மனதுக்கு இந்த மூங்கில்களின் ஓசை என்பது வெறும் ஓசையல்ல…
'எதிர்பாராத மூங்கில்களிலிருந்து
எழும் இசை
அசவுகர்யமாக இருக்கிறது'.
…..
தனிமையை இந்த வரிகளை விடக் கூர்மையாகவும், பரிசுத்தமாகவும் சொல்லிவிட இயலுமா? இந்த
ஒரு கவிதையை அடைய நூற்றுக்கணக்கான கவிதைகளை ஒரு வாசகன் கடக்கலாம் - ஒரு வாசகன் நூற்றுக்கணக்கான கவிதைகளை வாசிப்பதே இது போன்ற ஒர் கவிதையை அடையத்தான்
என்றும் சொல்லத் துணிவேன். இந்தக் கவிதை அளிக்கும் உணர்வுகளை
விளக்க முயல்வது, எரிந்துகொண்டிருக்கும் கானகத் தீயை உள்ளங்கைத்
தண்ணீரால் அணைக்க இயலும் செயலைப் போன்றது.
கவிதை அல்லது கவிதைக்கான கரு என்பது கவிஞனில்
வெளிப்படும் ஒரு தற்செயல் நிகழ்வு. தற்செயல்கள் பிரபஞ்ச விதிகளால்
ஆனது, கவிஞன் அதன் ஊடகம் மட்டும்தான். அது
கவிஞனில் நுழைந்து வெளிப்பட்டு முழுமை அடைகிறது. இருண்மையே உச்சமாக
அமைந்த ஒரு நிலை, இதன் முழுமையில் உள்ள துயரம், அதே சமயம் வாசகனாக மனதில் எழும் இரகசியமான ஒரு பரவச உணர்வு (ஆம், பரவச உணர்வுதான்) என மூச்சு
முட்டவைக்கிறது இந்தக் கவிதை.
'திருடப்பட்ட குழந்தை
நகரத்தில்
தன் மடியில்
தானே தலை புதைத்து
தூங்குகிறது'.
…..
தொகுப்பில் கவிதைகளின் போக்கு –
குறுங்கவிதைகள் எனும் வரையறையை அழித்துவிட்டு
'வெறுங்கால் பாதை' தொகுப்பின்
கவிதைகளை ஒட்டுமொத்தமாக அணுகினால் தனிமை, மரணம், கடவுள், காமம், வீடு, உடலிலின் ரணம் (என் உடல் காற்றாய் தீயாய் புகையாய்
– என்னைத் தாண்டிச் சென்றது), கிறுத்துவம்,
இருண்மை, வாழ்வின் அபத்தம், காதல், ஆன்மீகம் (யாருமற்ற தெருவில்
– ஒரு யானையைக் கூட்டிச் செல்லும் – நபராய்
– ஞானி இருக்கிறான்), எதிர்பாராத இடங்களில் வெளிப்படும்
அன்பு, படைப்பு மனதின் ஊசலாட்டங்கள், தாய்மைக்கான
ஏக்கம், மெல்லிய பகடி (கையில்லை
– காலில்லை – அட்டகோணல் – அவலட்சணம் - கடவுளின் தலத்தில் - அவர்தான் நட்சத்திரப் பிச்சைக்கார்) என பல தளங்களாக விரிந்துகிடப்பதைக்
காணலாம்.
போகன் சங்கர் இத்தகைய உணர்வுகளை, மனதின் அலைவுகளை கவிதைகளில் புறச்சூழலின் வர்ணனைகளாக,
கூர்மையான உருவகங்களாக மாற்றி நம்மிடம் கடத்துகிறார் (ரயில் – இரவை – தீப்பொறிகள் கொண்டு
தீட்டுகிறது), (தூரப்பேருந்திலிருந்து – வயல்வெளிகள் மீது மிதக்கும் – கோபுரங்கள்), (யாரோ கைதட்டிக் கலைத்தாற்போல் – சிதறிச்செல்லும் கிளிகள்),
(பாலத்தை மெதுவாகக் கடக்கும் – கடைசிப்
– பேருந்து).
மேலும் சில கவிதைகள் –
கவிதையின் கடைசி வரியை வாசித்து முடித்ததும், முதல் நான்கு வரிகள் அழுத்தம்பெறுகின்றன. சலனங்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனதில் தொடர்பற்ற உவமைகளாய் இருப்பின் வலி,
இல்லாமல் போவதன் நிதர்சனம், இழந்துவிட்ட ஏதோ ஒன்றின்
ஏக்கம் என உணர்வுகளின் கூட்டாய் இந்தக் கவிதை.
தொகுப்பின் 'நீச்சல் தெரியாதவன் – நீண்ட நடனத்துக்குப்
பிறகு – நதியின் ஆழத்தில் அடையும் அமைதி' என்ற கவிதையை இதன் குறுகிய பிரதியாக தொடர்புபடுத்தி வாசிக்கலாம்.
'பாத்திரத்திலிருந்து
திரும்பி வர மறந்த
நடிகனை
ரசாயனம் மூலம் உறங்கப்பண்ணிவிட்டு
அவர் வீடு திரும்பினார்.
சாலையில் ஒரு தடவை
ஒரு கதிர் அரிவாள் போலத்
துள்ளிக் கடக்கும் மானுக்காக
காரை நிறுத்தினார்.
அதன் கண்கள் பச்சையாக ஒளிர்ந்து
மீண்டன.
சிறிய மழை ஒன்று
காற்றையும் வானையும் கழுவியிருந்தது.
காட்டு முல்லையின் நறுமணம்
ஒரு ரகசிய காதல் போல் எழுந்துவந்தது.
முற்றிலும் பூக்களால் ஆன ஒரு மரம் என்று
நினைத்துக்கொண்டார்.
தொடர்பற்ற ஒரு உவமை
கூடத்தில் கணப்புப் பாத்திரத்துக்குள் பழைய
உணவு
கொஞ்சம் மது
உயர்ரத்தஅழுத்த மாத்திரைகள்
மனைவி உடலின் பழகிய வளைவுகள்
ஜன்னல் வழியே தெரிந்த வானம்
மிகத் தெளிவாக இருந்தது.
கடுவன் பூனையின் கண் கொண்ட நட்சத்திரங்கள்.
உறக்க மாத்திரை ஆட்கொள்ளும் முன்பு
ஒரே ஒரு துளிக் கண்ணீர்'.
…..
தொகுப்பின் பல கவிதைகளில் கவித்துவமும், சிறுகதைத்தன்மையும் பிணைந்திருப்பதை உணரலாம். கிறுத்துவத்தின் மீதான அவருடைய ஈடுபாட்டைக் காட்டும் ஒரு கவிதையாகவும் இதை
வாசிக்கலாம்.
"முந்தின நாள் இரவில் கூட
அவன் வழக்கம்போல்
பேரம் பேசித்தான் மீன் வாங்கிப் போனான்"
என்றாள் 'எல்லீ….ய்ய்ய்…'
என்று எல்லோரும் அழைக்கும் எலிசபெத்.
"அவனது சிறுமகளுக்கு மீன் உலாத்தாத
குழம்பு இறங்காது"
மிகக் குறைந்த நேரத்தில்தான் எதுவோ நிகழ்ந்துவிட்டது.
அவளுக்குப் பேரம் பேசுகிறவர்களைப் பிடிக்கும்
அவ்வப்போது அவள் அதனால் கோபமுற்றுவிட்டால்
கூட.
அது வாழ்வின் பாசை.
பேரம் பேசாதவர் பையிலிருப்பது
சாபப் பணம் என்பது அவள் எண்ணம்
அது நோயிலும் மருந்திலும் சென்று வீழும்.
எலிசபெத் கச்சோடம் முடிந்து வீடு திரும்புகையில்
வழியில்
அவன் தூக்கிட்டுச் செத்த மரத்தைப் பார்த்தாள்
சற்று நேரம் அங்கேயே நின்றாள்.
"வாழ்வோடு இன்னும் கொஞ்சம்
நீ பேரம் பேசியிருக்கலாம் சோசப்பே".
…..
போகன் சங்கர் கவிதைகளில் பூனைகள் பரவலாகத்
தோன்றுகின்றன. எல்லாவற்றுக்குமான பிரதிநிதியாய், சாட்சியாய், கவிஞனின் வேற்று உருவமாய் அவை கவிதைகளில்
உலவுகின்றன (நான் போகன் – நான் போகனின்
பூனை – நான் போகனின் பூனையின் போகன்).
ஒரு இழப்பை செயலின் மூலம் கடக்கும் மேதையும், ஆறுதல் தவிர ஏதுமற்ற வெற்றுப்பையைச் சுமந்து கற்பனை உணவைக் கைகாட்டிவிட்டு
சிரிக்க முயலும் கவிஞனும் என வாழ்வின் அபத்தத்தைச் சித்தரிக்கிறது இந்தக் கவிதை.
'ஒரு மேதையைக் காண
அவர் வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
சமீபத்தில் அவரது மனைவி இறந்துவிட்டார்.
உள்ளறையில் கலைந்த சிகையுடன்
மேதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்.
முற்றத்தில் அவரது மகள்
கோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
சமையலறையில் பூனை எதையோ
தேடிக்கொண்டிருக்கிறது.
மேதையின் மகள் உள்ளே வந்து
"அப்பா காலைல இருந்து சாப்பிடாம
எழுதிட்டிருக்கிறார்" என்கிறாள்.
அவளும் சாப்பிடவில்லை எனத் தெரிகிறது.
"உண்மையில் இங்கே சாப்பிட எதுவுமில்லை"
என்கிறது பூனை.
உங்கள் பையிலும் மேதைக்கு
ஒரு ஆறுதல் விசாரிப்புச் செய்தியைத் தவிர எதுவுமில்லை.
உங்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.
சன்னலில் தூரத்தில் பனி புகையும் ஒரு மலை தெரிகிறது.
நீங்கள் மேதையின் மகளிடம் அது ஒரு
பெரிய ஐஸ்கிரீம் என்கிறீர்கள்
"நாம் அதைத் தின்னலாம்."
பூனை "சரிதான் இவனும் கிறுக்கு" என்கிறது.
சொல்லிவிட்டு எரிச்சலுடன்
புகைக்கூண்டு வழியாகத் தாவி மறைகிறது.
உங்களுக்கு சிரிப்பு வருகிறது.
மேதையின் மகளுக்கும்தான்.
இருவரும் உரக்கச் சிரிக்கத் துவங்குகிறீர்கள்
அப்போது ஒன்றைக் கண்டுபிடிக்கிறீர்கள்.
சிரிக்கையில் நமக்குப் பசி தெரிவதேயில்லை.
…..
Comments
Post a Comment