நூறு பதிவுகள் - சில எண்ணங்கள்

                                               

2021ம் ஆண்டு இலையுதிர் கால நாளொன்றில் வலைத்தளம் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது, அதை நண்பர் ஜெகதீஷ் குமாரிடம் பகிர்ந்துகொண்டேன், தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தவர். மார்ச் 2021ல் அவருடைய வலைத்தளத்தில் கவிதை ஒன்றை வாசித்துவிட்டு முதலில் தொடர்புகொண்டேன், பின்னர் அலைபேசி உரையாடலில் ஜெயமோகனின் பத்து சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் இருப்பதாகச் சொன்னார். கொரொனா வீடுறைவு காலத்தில் ஜெயமோகன் தினமும் ஒரு சிறுகதை எழுதி அவருடைய தளத்தில் வெளியிட்டுக்கொண்டிருந்தார் (தனிமையின் புனைவுக் களியாட்டு), அவற்றை உடனுக்குடன் வாசித்துக்கொண்டிருந்தேன். 'பிறசண்டு', 'முதல் ஆறு' என சில கதைகளையும் அவருக்குப் பரிந்துரை செய்தேன், பெருந்தன்மையாக அவற்றையும் மொழிபெயர்ப்புக்காக எடுத்துக்கொண்டார். கதைகளை மொழிபெயர்த்தவுடன் பிரதியை என்னிடம் பகிர்ந்துகொண்டிருந்தார். 

ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு என்னுடைய எண்ணங்களை வாட்ஸப்பில் அவருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தேன். தொடக்கத்தில் ஆங்கிலக் கதைகளை தமிழுடன் ஒப்பிட்டு மொழிபெயர்ப்பு குறித்து எனக்குத் தோன்றியவற்றை சிறிதாக எழுதிக்கொண்டிருந்தவன், அந்தக் கதைகள் வாசிப்பில் என்னிடம் ஏற்படுத்திய தாக்கங்களையும் எழுதத் தொடங்கினேன். சிறிய குறிப்புகளாகத் தொடங்கியவை, சில கதைகளுக்கு முழுமையான ஒரு ரசனைக்குறிப்ப்பு என்று சொல்லுமளவுக்கு இயல்பாக நீண்டிருந்தன. 2017லிருந்து தொடர்ச்சியாக நாட்குறிப்பை எழுதிக்கொண்டிருந்தாலும், வலைத்தளத்தில் இலக்கியம் குறித்து சிலவற்றை எழுதமுடியும் என்ற நம்பிக்கை வளர நண்பர் ஜெகதீஷ் குமாருடனான தொடர் இலக்கிய உரையாடலே காரணம் என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமுமில்லை.

பிப்ரவரி 19, 2022ல் முதல் பதிவு வெளிவந்து, செப்டம்பர் 19, 2022ல் நூறு பதிவுகள் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. முதல் பதிவை எழுதுகையில் நூறு என்ற இந்த எண்ணிக்கையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எட்டு மாதங்கள் என்று காலக்கணக்கு சொன்னாலும், பதிவுகளுக்கான தயாரிப்பு 2021ம் ஆண்டே தொடங்கிவிட்டது. அந்தவகையில் ஒரு வருடத்தில் நூறு பதிவுகள் என்பதே சரியான கணக்கீடு. பதிவுகளில் நாற்பத்து மூன்று கவிதைகளை எழுதிப்பார்த்திருக்கிறேன், எஞ்சியவை கவிதைகள் குறித்தும், பிற படைப்புகள் குறித்தும் தனிப்பட்ட முறையில் படைப்பாளிகளுக்கு கடிதமாக எழுதியவை, சிறுகதைகள் குறித்த வாசிப்பனுபவங்களும் அவற்றில் அடங்கும். சினிமா குறித்து மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறேன், இரண்டு சிறுகதைகளையும் எழுதிப்பார்த்திருக்கிறேன், கவிதைத் தொகுப்புக்கான ரசனைக்குறிப்புகள் இரண்டு. 

பல பதிவுகளை ஏதாவது எழுதவேண்டுமே என்று என்னை நானே உந்திக்கொண்டு எழுதியவை. எனக்கு நானே வேலை கொடுத்துக்கொள்ளும் ஒரு செயல்பாடுதான் இது. புதிதாக எழுதத்தொடங்கியவன் என்பதால் சில சவால்களைச் சந்தித்தேன். சிறுகதைகளைப் பற்றிய குறிப்புகளில் ஒரே வகையான வார்த்தைகள் வந்து அமைவது, அவற்றைத் தடுப்பது என போராடியிருக்கிறேன். உள்ளத்தில் குமைவதை வார்த்தைகளில் கொண்டுவர, தேய்வழக்குகளை தவிர்த்துக்கொள்ள என ஊசலாட்டம் நிகழ்ந்தது.

என்னுடைய கவிதை முயற்சிகளில் சில பொதுப்பண்புகள் தெரிகின்றன. நேரடியான சொல்முறையே எனக்கு சாத்தியமாகியுள்ளது. ஒரு கருவை மொழியில் தீட்டியெடுக்க மிகுந்த பிரயத்தனப்படவேண்டியிருந்தது. கவிதைகான கருக்கள் பல, மொழியில் சரளமின்மை, கற்பனை வறட்சி ஆகியவற்றால் நாட்குறிப்பில் அடங்கிக்கிடக்கின்றன. உவமைகளுக்காக மிகுந்த மெனக்கெடல் தேவைப்படுகிறது. நான்கிலிருந்து, ஐந்து கவிதைகள் என்னை மீறி எழுந்துகொண்டவை. கரு எழுந்த தருணத்திலிருந்து, அடுத்த சில நிமிடங்களில் முழுக்கவிதையாகி என்முன் நின்றவை. ஒரு வகையில் தன்னெழுச்சி கொண்ட இந்த சில கவிதைகளை அடையவே தொடர்ந்து பல மோசமான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன், எழுதுவேன். என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுபவை தானாக எழுந்துகொள்ளும் இந்தக் கவிதைகளை அடையும் ஒரு தேடல்தான். சில கவிதைகள் எழுதி உதறப்பட்டு, மறுபரிசீலனையில் கவிதையாகத் தோன்றி அமைந்தவை. நாற்பது கவிதைகளில் மூன்றிலிருந்து, ஐந்து கவிதைகளே கவிதை எனும் வரையறைக்கு நெருக்கமாக வருபவை. மற்றவை கவிதை எனும் வடிவத்துக்குள் ஒளிந்துகொண்டு ஏமாற்றுபவை என்றே எண்ணுகிறேன்.

கவிதைகள் என்று நான் வரையறுப்பதை என்னுடைய ஆசிரியர் ஜெயமோகனிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் சலிக்கும் சல்லடைகள் மிக நுண்ணிய துளைகள் கொண்டவை. அவற்றை மீறி கவிதைகளாகச் சலிக்கப்படுபவை பெரும்பாலும் அரிதானவை. கவிதைகளுக்காக என்னை நானே கடுமையாகவே நோக்கிக்கொள்கிறேன், அது அவசியமானதும்கூட. ஒரு கட்டத்தில் என்னுடைய வரையறைகள் தெளிவாகி, நான் கவிதைகள் என்று எண்ணுபவற்றை நம்பிக்கையாக முனவைக்கும் கட்டம் வரலாம். அப்போது என்முன் நிற்கும் வரையறைகளை நான் மீறவும் எத்தனிக்கலாம். ஆனால், அதற்கான தெளிவுகள் என்னில் தற்போது இல்லை என்றே எண்ணுகிறேன்.

சில மாதங்களில் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறேன், சில மாதங்கள் ஐந்திலிருந்து பத்து பதிவுகளுக்குள் அடங்குகின்றன. ஒவ்வொரு பதிவுக்குப் பின்னரும் மனம் விரும்பிய ஒரு செயலைச் செய்த நிறைவு ஏற்பட்டது. எழுதப் பழகிய பிறகு, ஒரு இலக்கியப் படைப்பை வாசித்ததும் எண்ணங்கள் ஒரு சிறு புள்ளியாகத் தொடங்கி பின் அதிலிருந்து கருத்துக்களாக உருமாற்றம் அடைவதை உணர்கிறேன். அலைபாயும் மனதை எழுத்துச் செயல்பாட்டில் குவிப்பது மிகுந்த உவகையைத் தருகிறது. சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழாவில் நண்பர் சிஜொ வலைத்தளம் தொடங்கினால் தொடர்ச்சியாக எழுத ஊக்கத்தை எப்படித் தக்கவைத்துக்கொள்வீர்கள் என்று கேட்டார், நியாமான கேள்வி. 

வலைத்தளத்தை வாசிப்பது அதிகபட்சம் ஐந்துபேர் என்பதுதான் நிதர்சனம். அவருடைய கேள்வியில் பரவலாக யாரும் வாசிக்காத சூழலில் எப்படித் தொடர் ஊக்கம் அமையும் என்ற வினவல் உள்ளது. எழுத்தில் உறைய உள்ளம் அடையும் தூண்டலும், எழுதுவதன் இன்பமுமே தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கப்புள்ளிகள் என்பதே அதற்கான பதிலாகத் தெரிகிறது. நண்பர்கள், இணையுள்ளங்கள் வாசித்தால் நல்லது. ஆனால், அனைவரையும் வாசிக்கவைக்கும் வகையில் எழுத நான் ஒன்றும் வசீகரமாக எழுதுபவனல்ல, இன்னும் எழுதப் பழகிக்கொண்டிருப்பவன். இந்தவகை எதிர்பார்ப்புகள் எழுத்துச் செயலுக்கு எதிரான மனநிலையையும், சோர்வையும் அளிக்கும் என்றே எண்ணுகிறேன். எழுத்து என்னில் என்னவாக நிகழ்கிறது என்பதைக் காண்பதே முதன்மையான தூண்டுகோல்.

இனி என்ன எழுதப்போகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். வாசிக்கும் நாவல்கள் குறித்து இன்னும் எழுதத் துவங்கவில்லை. பல முறை நாவல்களுக்கான குறிப்புகளை எடுத்துவைத்து பாதியில் கைவிட்டிருக்கிறேன். மனதில் வாசிப்பைக் கற்பனையால், தர்க்கத்தால் விரித்துப் பார்ப்பதற்கான பயிற்சியும், உள்ளக்குவிப்பும் தேவைப்படுகிறது, அதற்காக உழைக்கவேண்டும். தொடர்ந்து கவிதைகளில் ஈடுபட ஒரு குறிப்பிட்ட உளநிலை தேவைப்படுகிறது, அது கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பதால் எனக்குள் நிகழும் ஒன்று, அதைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த நகர்வாக சிறுகதைகளை எழுதிப்பார்க்கவேண்டும். கதைக்கான கருக்கள் மனதில் உள்ளன என்றாலும், எழுதுவதில் தயக்கங்களும், இயலாமையும், சோம்பலுமாக சில தடைகள் உள்ளன, அவற்றைக் கடக்கவேண்டும் - அதற்கு ஒரே தீர்வு எழுதிப்பார்ப்பதுதான். இவற்றுடன் கிரிக்கெட், குடிப்பழக்கம் போன்ற கவனச்சிதறல்களும் உண்டு.

நூறு பதிவுகளை எட்டியிருக்கும் இந்தத் தருணத்தில் என் ஆசிரியரான எழுத்தாளர் ஜெயமோகனை எண்ணிக்கொள்கிறேன். எனக்குள் எழும் ஒவ்வொரு வார்த்தைக்குமான வித்து அவரிடமிருந்து பெற்றுக்கொண்டது. எழுதுவதற்காக தொடர்ந்து ஊக்கப்படுத்திய நண்பர் ஜெகதீஷ் குமாருக்கும் நன்றிகள். இன்னொரு காரணி என்னுடைய தற்போதைய பணிச்சூழல். எழுத்துக்கும், வாசிப்புக்கும் நேரம் அளிக்கும் இந்த வகையான பணிச்சூழலுக்காக கடந்த பத்து வருடங்களாக ஏங்கியிருக்கிறேன், இப்போது அமைந்துள்ளது. இது நிரந்தரமல்ல என்றாலும், இந்தச் சூழல் அளிக்கும் நேரத்தைக் குறைத்து மதிப்பிடமாட்டேன். மனைவிடமும் மகனிடமும் எழுதுவதற்கான நேரத்தை உரிமையாகப் பெற்றுக்கொள்கிறேன், அவர்கள் பெரிதாக சச்சரவு செய்ததில்லை, அவர்களுக்கும் நன்றி. இந்த நூறு பதிவுகளும் புனைவுகளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைப்பதற்கான சிறிய முயற்சிகள் என்றே எண்ண விரும்புகிறேன்.

மர இலைகளில் இலையுதிர்காலத்திற்கான சமிக்ஞைகள் தெரியும் இந்தக் காலையில், அடுத்து என்ன எழுதப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடனும், அது தெரியாமல் இருப்பதன் இன்பத்துடன் இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை