Sisu: Road to Revenge - உயிர்த்துடிப்பான படைப்பு

                                                    

ஒன்றரை மணிநேர அதிரடித் திரைப்படங்கள் சரியான முறையில் எடுக்கப்பட்டால், பார்வையாளனை ஆட்கொண்டுவிடுகின்றன. 'Behind the Enemy Lines' என்ற திரைப்படத்தை திருச்சி மாரீஸ் திரையரங்கில் கல்லுரி நாட்களில் பார்த்த நினைவு இருக்கிறது. எதிரிகளின் எல்லைக்குள் மாட்டிக்கொண்ட அமெரிக்க இராணுவ வீரன் அங்கிருந்து பல தடைகளை மீறி மீள்வதே அந்தப் படத்தின் கதை. சென்ற வருடம் மீண்டும் பார்க்கையிலும் சுவாரசியம் குறையாமல் இருந்தது அந்தத் திரைப்படம்.

ஒன்றரை மணிநேரத்தில் பார்வையாளனைக் கவர்ந்துவிடவேண்டும் எனும் அசாத்திய சவால் இந்த வகைப் படங்களுக்கு உண்டு. Sisu: Road to Revenge இந்தச் சவாலை அநாயாசமாக ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாகக் கடக்கிறது.

பழிவாங்குதல் எனும் என்றும் பார்த்துத் தீராத அம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய திரைப்படங்கள், சரியான புள்ளியில் பார்வையாளனைத் தூண்டி, உணர்வுரீதியான பயணத்தை அமைத்துத் தருவதால் வெற்றியடைகின்றன. தமிழில் பூமணியின் 'வெக்கை' நாவலைத் தழுவி வெளிவந்த 'அசுரன்' அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். 

படத்தை இன்று காலை முதல் காட்சியாகப் பார்த்தேன். முழுக்க என்னை ஆட்கொண்டுவிட்ட திரைப்படம். தன் குடும்பத்தை இழந்த பின்லாந்தைச் சார்ந்த நாயகன், ரஸ்ய எல்லைக்குள் இருக்கும் தன் வீட்டைக் காணச் செல்கிறான். மனைவி, இரண்டு ஆண் பிள்ளைகளின் நினைவுகள் பொதிந்த அந்த மரவீட்டை முற்றிலும் அகற்றி பின்லாந்துக்குள் கொண்டுவர முயல்கிறான்.

நாயகனுக்கு ஒரு கடந்த கால வரலாறு இருக்கிறது. தன் குடும்பத்தை இழந்த வெறியில், அதற்கு காரணமான பல ஆயிரம் ரஸ்ய வீரர்களைக் கொன்று குவித்தவன் அவன், ஒரு Legend. ரஸ்ய எல்லைக்குள் தான் வாழ்ந்த வீட்டை மீட்டுக்கொண்டு செல்ல வரும் நாயகனை அழிக்க, அவன் குடும்பத்தைக் கொல்லக் காரணமாக இருந்த வில்லனை சைப்பீரியச் சிறையிலிருந்து விடுவித்து, சன்மானமும் அளிக்க முன்வருகிறது ரஸ்ய இராணுவம்.

ஒரு அறுபது வயது அடைந்த, எளிய, ஆனால் அசாத்திய வீரம் படைத்த நாயகன். அதே வயதொத்த, திறன் வாய்ந்த, அவனை அழிக்க முயலும் வில்லன். இரு பாத்திரங்கள், ஒரு பழிவாங்கல் என எளிய முடிச்சுதான் படத்தின் கதை. இதை ஒன்றரை மணிநேரத்தில் துப்பாக்கி, மோட்டார் சைக்கிள், ஹெலிகாப்டர், பீரங்கி, டிரக், ரயில் வண்டி, நிறைய வன்முறை, கட்டுக்கடங்காத இரத்தம் என திகட்டாமல் நமக்குத் தருகிறாது திரைப்படம்.

படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், அதன் எளிமையான திரைக்கதை. பார்வையாளனை ஒரு நொடிகூட திரையிலிருந்து விலக்காத வகையில் அமைந்திருக்கிறது. படத்தின் தொடக்க காட்சியிலேயே நாயகனின் மன வலியையும், துயரத்தையும் உணர்ந்துவிடுகிறோம். பின் அவனுடன் சேர்ந்து உணர்வுரீதியாக வில்லனை எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு முறை நாயகன் தடைகளை உடைத்து முன்னேறுகையிலும் உவகை அடைகிறோம். படத்தின் சண்டைக் காட்சிகள் மிகுந்த கற்பனையுடன், காணும் போது எழுச்சியை அளிப்பதாக அமைந்திருந்தன.

படத்தில் அதிக பட்சம் பத்து நிமிடங்களே வசனங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவை 'Unleash Hell' போல நேரடியான, ஆனால் கூர்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் நாயகனுக்கு வசனங்களே இல்லை என்பது தனித்துவமான ஒரு அம்சம். பின்லந்து நாட்டின் நடிகரான Aatami Korpi என்ற நடிகர், தன் முக பாவனைகளாலேயே வன்மம், வலி என பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். இவர் மேடை நடிகராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இது 'Sisu' என்ற 2022ம் ஆண்டு வெளிவந்த படத்தின் இரண்டாவது பாகம். முதல் பாகத்தையும் பார்த்துவிடுவேன். இனி தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவில் இந்தப் படத்தின் தாக்கத்தை நாம் நிச்சயம் பார்க்கலாம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு காலைக் காட்சியாக ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறேன், ஏனோ மனதுக்குள் சிறு சங்கடம் இருந்தது. படம் முடிந்து வெளிவருகையில் 'Time Well Spent' என்று எண்ணிக்கொண்டேன்.

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

அமெரிக்கா, இரு வீடுகள்

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்