நாவல் பயிற்சி வகுப்பு - ஜெயமோகன்

                                                    


நாவலை அறிதல் – பாலாஜி ராஜு | எழுத்தாளர் ஜெயமோகன்


ஆசிரியருக்கு,


அமெரிக்காவில் மற்றுமொரு அழகிய இலையுதிர் காலம் உங்கள் வருகையால் அர்த்தத்துடன் கடந்திருக்கிறது. தத்துவ வகுப்புகள் முடிந்து கொலம்பஸ் திரும்பிய இரண்டு நாட்களிலேயே நாவல் பயிற்சி வகுப்புக்காக மீண்டும் மலைகளினூடாக ஏழுமணிநேர சாலைப் பயணம். இடம் - ஹெர்ன்டன், விர்ஜீனியா மாகாணம். 


கற்றல் மட்டுமே வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்று நீங்கள் பலமுறை எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள். இதை தத்துவம், நாவல் வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்களின் வாயிலாக தொகுத்துப் பார்க்கையில் இன்னும் ஆழமாக உணர்கிறேன்.


நாவல் பயிற்சி வகுப்பின் உச்ச அனுபவமாக என்னில் எஞ்சுவது, ‘The Master Christian’ நாவலின் தரிசனத்தை, தருணங்களை எங்கள் முன் பகிர்ந்த உங்களில் எழுந்த உணர்ச்சிகரமான உடல்மொழியும், முகபாவமும்தான். இதே உணர்வெழுச்சியை தத்துவ வகுப்பில் விவேகானந்தர் குறித்தும், வேதத்தை இன்று வரை நம்மிடம் சேர்க்கும் அன்றாட மனிதர்களின் பங்கை விவரிக்கையிலும் உங்களிடம் கண்டேன்.


நாவல் பயிற்சி வகுப்பை இப்படிச் சொல்லி முடித்தீர்கள், “நீங்கள் எழுதுவது, தொடங்குவது குறு நாவலாக இருக்கலாம். ஆனால், உங்கள் முயற்சி ஒரு பெரும் நாவலின் தரிசனத்தை நோக்கியே இருக்கட்டும்”.


நாவல்களை ஏன் எழுதவேண்டும்?


Narration (வர்ணனை, விவரிப்பு)


ஓரு நிலமோ, பண்பாடோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கங்களோ புனைவெழுத்தில் பதிவுசெய்யப்படும்போது நம் நினைவுகளில் ஆழ்ந்து வேர்விடுகின்றன. தவளை தண்ணீரில் எண்ணிலடங்காது முட்டையிடுகையில், அவை பசைபோன்ற ஒரு திரவத்தில் சரடாக இணைக்கப்படுகின்றன என்ற உங்கள் உவமை, புனைவெழுத்தினூடாகத் தகவல்கள் நம்மில் சேகரமாகும் தன்மையை காட்சிப்படுத்தியது.


இதை விளக்க நீங்கள் ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் மீனவர்கள் தண்ணீரில் சலனத்தை ஏற்படுத்துவதன் மூலம் பக்கவாட்டில் திரும்பும் மீன் வகைகளை அடையாளம் காணும் பகுதியை ஒப்பீடாகச் சொன்னீர்கள். 


Structure (கட்டமைப்பு)


நாவல் எழுத்து எனும் செயல், நம்முடைய அகத்தை உள்நோக்கிக் காட்டும் கண்ணாடி. வாழ்வு, தருணங்கள், மனம் ஆகியவை அதனளவில் சிதறிய இயல்பு கொண்டவை என்றும், அவற்றைத் தொகுத்து பொருள் அளித்துக்கொள்ளவும், நமக்குள் இயங்கும் முரண்களைக் கேள்விக்குட்படுத்திக் கொள்ளவும், அதற்கான பதில்களைக் கண்டடையும் களமாகவும் நாவல் எழுத்து அமையும் என்று விளக்கினீர்கள்.


Power (அதிகாரத்தில் பங்கெடுத்தல்)


அரசியல், பண்பாடு ஆகிய புறவயமான அடுக்குகளின் கீழ் சிந்தனை எனும் அம்சம் புதைந்துள்ளது. அம்பேத்கர் தொடங்கி இன்றைய ‘பைசன்’ சினிமா வரை வளர்ந்து நிற்கும் ‘தலித் சிந்தனை’ இயக்கம் எப்படி இன்றைய பண்பாடு மற்றும் அதிகாரத்தில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்று நிற்கிறது என்பதை விளக்கினீர்கள். 


நாவல் எழுத்தின் வகைமைகள்


Novella/Novelette (குறுநாவல், நவீன நாவல்)


பிரிட்டனில் பதினேழாம் நூற்றாண்டில் பிறந்த சிறுகதை வடிவம், முடிவில் எதிர்பாராத திருப்பம் கொண்டவையாக இருந்தது. குறுநாவல் எனும் வடிவமும் முடிவில் திருப்பம் எனும் தன்மை கொண்டிருக்கும், ஆனால் சிறுகதையைப் போல அல்லாமல் விரிவான தகவல்களுடனும், தனக்குள் வளரும் பல படிகளுடனும் அமைந்திருக்கும்.


இதற்கு ‘வாடிவாசல்’, ‘The Old Men and the Sea’ நாவல்களை முன்னிறுத்தி குறுநாவலுக்கான தன்மைகளை விளக்கினீர்கள்.


நாவல் எழுத்து எனும் வகைமையில், குறு நாவல் என்பதை மட்டுமே கற்பிக்க இயலும் என்று சொன்னீர்கள்.


Big Novel, Grand Novel (Narration), Epic (பெரும் புதினம், பெருங்காவியம்)


இவை தன்னுள் பெரும் காலத்தினூடாக நிகழும் வாழ்வைச் சித்தரிக்கும் (கால விரிவு, பரிணாமம்). அடிப்படையான தரிசனங்கள் (vision) மற்றும் தத்துவச் செரிவு ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும். தனக்குள் சிறிய நிகழ்வுகள் மற்றும் கதாப்பாத்திரங்களுக்கும் இடமளிக்கும்.


போரும் அமைதியும், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், வெண்முரசு, காவியம் ஆகிய நாவல்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். 


Anti Novel, Non-Linear Novel, Experimental Novel (வடிவமற்ற நாவல், சோதனைத் தன்மை)


மிலோராத் பாவிச்சின் ‘காசர்களின் அகராதி’ நாவல் இந்த வகைமைக்கு சரியான எடுத்துக்காட்டு. இந்த வகை நாவல்கள் வடிவச் சோதனையையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும். ஒரு இயந்திரத்தின் இயக்கக் கையேடு வடிவத்தில் கூட நாவலை எழுதிப் பார்க்கலாம் என்று கூறினீர்கள்.


Theme (கரு)


கதைக்கான களம் என்பது கரு அல்ல, கரு என்பது ஒரு கதைமாந்தர் அல்ல, கரு என்பது ஒரு பேசுபொருளும் அல்ல!


அம்மன் கோவில் திருவிழாவின்போது கோவிலில் உள்ள விக்ரகத்தை எடுத்துக்கொண்டு இன்னொரு இடத்தில் வைத்து மக்கள் கூடிக் கொண்டாடும் வழக்கத்தை நாவலாக எழுதப்போவதாக ஒரு நண்பர் உங்களிடம் சொல்கிறார். ஆனால், அது ஒரு நிகழ்வு மட்டுமே, கரு அல்ல.


எட்டு பிள்ளைகளை கடுமையான வறுமையின் பின்புலத்தில் படிக்கவைத்து வாழ்வில் முன்னேற்றும் ஒரு தாய் என்பது ஆச்சரியமளிக்கும் கதைமாந்தர் மட்டுமே.


ஆணவக் கொலை, சிகரெட் புகைத்தல் போன்றவற்றைக் கூட நாவலாக எழுதலாம். ஆனால் அவையும் தன்னளவில் வெறும் பேசு பொருட்களே.


சரி, எவற்றையெல்லாம் நாவலுக்கான கரு என்று கருதலாம்?


நாவலுக்கான கரு என்பது அடிப்படையான ஒரு பிரச்சினை, கேள்வி அல்லது முரண்பாடுகளின் தன்மைகளைக் கொண்டிருக்கும். சிகரெட் பிடித்தல் பழக்கத்தை, ஏன் ஒரு பருப்பொருளின் மீது இத்தனை ஈர்ப்பு ஏற்படுகிறது என்று விரித்துப் பார்த்தால் அது கருவுக்கு நெருக்கமாக வருகிறது.


எட்டு பிள்ளைகளையும் கரைசேர்க்கும் அந்த அன்னை, தன்னுடைய வாழ்வுக்கான பொருள் என்ன, தான் இழந்தது என்ன என்ற கேள்வியைக் கேட்டால் அது நாவலுக்கான கருவாகத் தோற்றம் கொள்கிறது.


ஒரு நல்ல நாவலில் அடிப்படைக் கேள்வி அதனுள் விரிவாக வளர்வதை உணரமுடியும். இந்த அம்சத்தைப் புரிந்துகொள்ள ஒப்பீட்டுக்காக ‘சாயாவனம்’, ‘சஞ்சாரம்’ ஆகிய நாவல்களை மனதுக்குள் பொருத்திப் பார்த்தேன்.


(Characters) கதைமாந்தர்


முதன்மை கதாப்பாத்திரம்


முதன்மைக் கதாப்பாத்திரங்கள் ஒன்றோ, இரண்டோ ஒரு குறு நாவலில் இருக்கலாம். இவர்கள் நாவலை நகர்த்துவதில், அதன் பரிணாமத்தில் பெரும் பங்காற்றுவார்கள். ‘படுகளம்’ நாவலில் தன் தந்தையின் கடையை முன்னேற்றப் பாடுபடும் துணை இயக்குநர் பாத்திரம் மற்றும் அவனுடைய கடையின் முன் பெரிய பதாகையை வைத்து மறைக்கும் தொழிலதிபர் பாத்திரம் ஆகியவற்றை இங்கு எண்ணிக்கொள்ளலாம்.


இரண்டாம் நிலை கதாப்பாத்திரம்


இந்த வகைக் கதாப்பாத்திரங்கள் நாவலின் மைய முடிச்சு அல்லது பாத்திரத்துக்கு பங்களிப்பாற்றுவார்கள். ‘படுகளம்’ நாவலின் வழக்கறிஞர் பாத்திரம், மற்றும் மையப் பாத்திரத்தின் தாய் ஆகியோரை இரண்டாம் நிலைக்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.


மூன்றாம் நிலை


இவர்களுக்கும் நாவலில் சிறிய பங்கு இருக்கலாம். மையப் பாத்திரத்தின் கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் மாமா, மைய பாத்திரத்துக்கு சிக்கல்களில் இருந்து வெளிவர உதவும் இஸ்லாமியர் பாத்திரம் ஆகியோர் இதற்கான எடுத்துக்காட்டுகள்.


Plot (கட்டமைப்பு)


தொடக்கம் (Opening), அடிப்படைக் கேள்வி பெரிதாக வளர்வது (Culmination), எதிர்பாராத முடிவு ஆகியவற்றை குறுநாவலுக்கான பண்புகளாகக் கருதலாம். முடிவுக்கு நெருக்கமாக, ஒரு வலுவான உலுக்கலுடன் நாவலின் தொடக்கம் அமைய வேண்டும் (‘There is no start, only startling’, ‘Start with a bang’).


சுந்தர ராமசாமி, “நாகர்கோவில்ல உயரம் தண்டுற கதாப்பாத்திரம் ஓடி வந்து தாண்டலாம், ஆனா அது திருவனந்தபுரத்தில இருந்து ஓட்டத்தத் தொடங்கக்கூடாது”.


நாவலின் மையக் கேள்விக்கான பதிலாக முடிவை அமைக்கலாம். திட்டவட்டமான முடிவு இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது வாசகக் கற்பனையைத் தூண்டும் விதமாக அமைதல் அவசியம். தற்செயலை ஒரு நாவலின் முடிவாகக் கருதலாகாது (‘மையப் பாத்திரம் ஒரு விபத்தில் மறைவது’, ‘ஆட்சி மாறிவிடுவது’), அது எழுத்தாளனின் கற்பனை வறட்சியையே காட்டுகிறது.


Style (நடை)


தொடக்கத்தில் எழுதுபவர்கள் எளிய நடையிலேயே நாவலை அமைத்துக்கொள்வது அவசியம். சிக்கலான நடை என்பது எழுத்துப் பயணத்தின் ஒரு பகுதியாக இயல்பாக நிகழவேண்டும், செயற்கையாக முயலக்கூடாது.


தேய்வழக்குகளைப் புனைவில் களையவேண்டும். நம் அன்றாடம் தேய்வழக்குகளால் ஆனது, அவற்றையே புனைவிலும் கொண்டுவரக்கூடாது (‘வயித்தில பால வார்த்த மாதிரி’, ‘நெஞ்சு பத்திக்கிட்டு எரியுது’).


நாவலில் ஆசிரியர் குரல் ஊடுறுவதைத் தவிர்க்கவேண்டும். கதையின் இயல்பான நகர்வுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் இடை புகுந்து வர்ணனைகளையோ, சொந்தக் கருத்துக்களையோ எழுதக் கூடாது.


விளக்கம் அளிப்பதையும் தவிர்க்கவேண்டும். வாசகனுக்கு ஒரு குறிப்பிட்ட சூழல் புரியாது என்று கருதும் ஆசிரியனின் பலகீனமே விளக்கங்களாக வெளிப்படுகின்றன. 


யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறதோ, அந்தக் கோணத்தை மாற்றுவது தவிர்க்கப்படவேண்டும். இந்த அம்சம் ஒரு அழகியல் பிழையாகும். இவற்றை பல கடந்த கால மூத்த எழுத்தாளர்களின் நாவல்களில் கூடக் காணலாம். ஒருவேளை இரு கதாப்பாத்திரங்களின் கோணங்களும் பதிவுசெய்யப்படுவது நாவலின் அடிப்படை நோக்கமாகவோ, உக்தியாகவோ இருந்தால் மட்டுமே அதை அனுமதிக்கவேண்டும். 


ஹாலிவுட் திரைப்படங்களின் கேமராக் கோணத்தை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு சிறுவனின் பார்வையில் காணப்படும் உலகிற்கு, கேமராக் கோணம் அவனுடைய உயரத்திற்கு ஏற்பவே அமைக்கப்படும்.


நடையுடன் தொடர்புடைய சில கூடுதல் பண்புகள்


விவரணை (Description)


Personal Narration, Emotional Element, Symbolic Expansion


கதையின் ஓட்டம், நடை மற்றும் காட்சிகள் கதை சொல்லியின் மன நிலையை அல்லது பார்வையை ஒட்டியதாகவே இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வுக்கு செல்லும் ஒருவன் சன்னல் வழியாகக் காணும் கோவில் கோபுரம், இயல்பாக அதற்குரிய அர்த்தச் செறிவைப் பெற்றுவிடுகிறது.


நாவலிலில் எழுத்தினூடாக வளரும் காட்சிகளோ சம்பவங்களோ பாத்திரங்களின் மைய உணர்ச்சிகளையும், குறியீட்டு ரீதியான விரிவாக்கங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் வகையில் அமைக்கலாம். 


தி. ஜானகிராமனின் கதை ஒன்றில் தொடக்கத்தில் கோலத்தில் ரதத்தை வரையும் பெண் தன் அம்மாவிடம், “ஆமா, என் ஆம்படையான் வந்து என்ன இந்த ரதத்தில வெச்சு கூட்டிண்டு போவான்” என்று சொல்லும் பகுதியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.


‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில் கங்கா மெல்லும் சூயிங்கம் எப்படி அர்த்தம் பெறுகிறது என்பதை எண்ணிப் பார்த்தேன் (நாவலின் இந்தக் குறிப்பிட்ட பகுதி குறித்து நீங்கள் எழுதிய ஒரு கட்டுரை தளத்தில் உள்ளது.)


Shift (மாற்று, பரிணாமம்)


Location Shift (கதைக்கள மாற்றம்)


கதையின் களத்தில் மாற்றம் தேவை என்றால், நூறு பக்க நாவலில் முதல் பதினைந்து அல்லது இருபது பக்கங்களிலேயே நிகழவேண்டும். இந்த மாற்றத்திற்கான சமிக்ஞைகளும், குறிப்புகளும் நாவலின் தொடக்கதில் அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.


Character Shift (கதாப்பாத்திர பரிணாமம்)


நாவலின் மையக் கதாப்பாத்திரங்களின் வளர்ச்சியை, குணநல நகர்வை மாற்றம் என்று கருதலாமா? அது கதைக் கருவின் போக்கிற்கு ஏற்ப வளரும் தன்மை கொண்டது.


அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையில் புலியாகத் தோற்றம் கொள்ளும் நடிகனின் பாத்திரத்தை எண்ணிக்கொண்டேன்.


Conversations (உரையாடல்)


செறிவான பொருள் பொதிந்த உரையாடல்களே நாவலில் இடம்பெற வேண்டும். அது இயற்கையானதாகவும் தோன்ற வேண்டும். இதை போலியாக உருவாக்க முனையக் கூடாது.


கருத்து, புத்திசாலித்தனம், உணர்ச்சிகரம் ஆகிவை உரையாடல்களின் தன்மையாக இருக்கவேண்டும். நாவலில் எப்போதும் பொருட்படுத்தப்படவேண்டியவர்களே உரையாடல்களில் இடம்பெற வேண்டும்.


உங்கள் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லோருமே எப்படி அறிவார்ந்த தன்மை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதில், “தெளிவும் தர்க்கமும் இல்லாத கதாப்பாத்திரங்களும் உண்டு, அவர்களை என் கதைகளில் நான் பேச விடுவதில்லை, அவ்வளவுதான்”.


Character Arc (கதாப்பாத்திர வளர்கோடு)


நாவலில் இடம்பெறும் அதன் நகர்வுக்கு வித்தாக இருக்கும் பாத்திரங்கள், கதை வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு வளர்ச்சியை அடைகிறார்கள். அதை ஒரு வரைகோட்டினூடாக தொடர்புபடுத்திப் பார்க்கலாம்,

                                    

Dynamic Characters (மாறும் தன்மை கொண்ட கதாப்பாத்திரம்)


ஒரு நாவலின் முதன்மைக் கதாப்பாத்திரமோ, இரண்டாம் நிலை கதாப்பாத்திரமோ இதற்கான உதாரணங்கள். ‘படுகளம்’ நாவலின் முதன்மைப் பாத்திரங்களை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஒரு நாவலில் எத்தனை மாறும் தன்மை கொண்ட பாத்திரங்கள் இருக்கிறார்களோ, அதற்கேற்ப நாவலும் செறிவானதாக அமையும். 


காதாப்பாதிர இயல்பில் ஏற்படும் மாறுதல்கள், கதையின் மையக் கருவுடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்; எதிர்பாராத வகையில் திணிக்கப்படும் மாற்றங்கள் நாவலின் மையப் கருவிலிருந்து விலகி துருத்தித்தெரியும் வாய்புகள் உள்ளது.


தி. ஜானகிராமனின் நாவல்களில் எப்போதுமே இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களே இருப்பார்கள். 'மோக முள்' நாவலில் பாபுவின் கதாபாத்திரம் அடையும் மாற்றங்களை இங்கு கருத்தில் கொள்ளலாம்.


Static Characters (மாறாத் தன்மை கொண்ட கதாப்பாத்திரம்)


சிறிய மற்றும் ஒற்றைப்படையான சட்டகப் பாத்திரங்களை இதற்கு எட்டுதுக்காட்டாகக் கருதலாம். நிலையான இயல்புகள் கொண்டவை இத்தகையை பாத்திரங்கள். காவல்துறை அதிகாரி, செவிலி, நீதிபதி ஆகியோரைப் போல.


குறுநாவலில் பெரும்பாலும் இத்தகைய பண்புகள் கொண்ட பாத்திரங்களைத் தவிர்க்க முயலவேண்டும்.


இந்த விதிகளுக்கு ஒரே விதிவிலக்கு ‘துப்பறிவாளர்’ எனும் பாத்திரம். அதுவே மையப் பாத்திரமாகவும் அமைந்திருக்கும்.


நாவல் எழுத மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய பொதுப் பண்புகள்


நாவலுக்கான ஆராய்ச்சி, பின்புலப் பணிகள் நாவலைத் தொடங்க உந்துதலாக இருக்கும் வரை மட்டுமே செய்தால் போதுமானது. முழுமையான ஆராய்ச்சி செய்த பிறகு நாவலைத் தொடங்குவதில் சிக்கல்கள் உண்டு. எழுது எழுத நாவலின் இயல்பு நெகிழும் தன்மைகொண்டது என்பதால், அப்போதைய தேவைக்கு ஏற்ப பின்புல ஆராய்ச்சிகளைத் தொடரலாம்.


நாவலைத் தொடங்குவதே எழுதுவதற்கான சிறந்த வழி. அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் பிராவோ எனும் பாத்திரம் எழுதவிருக்கும் மொத்த நாவலையும் வரைபடமாக சுவற்றில் கோர்த்து வைத்திருப்பதை அசோகமித்திரன் வியக்கிறார். இந்த நாவல் எழுதப்பட்டால் எத்தனை சிறந்ததாக அமையும் என்றும் சொல்கிறார். ஆனால், பதினைந்து வருடங்கள் கடந்தும் பிராவோ நாவலை எழுதாமல் இருப்பது இதற்கான சிறந்த உதாரணம். 


குறு நாவல் எழுதும்போது சுயசரிதையை எழுதுவதைத் தவிர்க்கவேண்டும். அதீத சுய இரக்கம், தன் நியாயம், சோர்வினால் அதீத சுருக்கம் அல்லது அதீத நீளம் என சுயசரிதையை எழுதுவதில் பல சிக்கல்கள் உண்டு. பெரும்பாலான இலக்கியவாதிகள் தங்கள் சுயசரிதையை புனைவுகளை எழுதித் தீர்த்த பின் எழுதுகிறார்கள். ஹெர்மென் ஹெஸ்ஸேயின் சுயசரிதை ஒரு உதாரணம், அது புனைவுத் தன்மையுடன் இருப்பதை உணரலாம்.


புறப்பாடு, பனி உருகுவதில்லை ஆகிய புத்தகங்களையும் அதில் உள்ள புனைவுகலந்த தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.


சுய சாயலுள்ள இன்னொரு கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுப்பது நல்ல உக்தி. எழுதுவதே இன்னொருவரின் வாழ்வை வாழ்ந்து பார்க்கவும், அது அளிக்கும் விடுதலைக்காகவும்தான்.


எழுதும் குறு நாவல் பதிப்பிக்குமளவுக்கான தரத்தில் இல்லாமல் போகலாம், ஆனால் எழுதிப் பார்த்து நாவலில் அதன் முழுமையை அடைவதே குறிப்பிடத்தக்க செயல்தான். 


Vision (தரிசனம்)


ஒட்டுமொத்தமான பார்வை, சாராம்சமான பார்வை என தரிசனத்தை வரையறுக்கலாம்.


மிகச் சிறந்த நாவல்கள் உருவகம் மற்றும் படிமம் வாயிலாக நிலைகொள்கின்றன. ‘ஒரு புளியமரத்தின் கதை’ உருவகத்துக்கான நல்ல எடுத்துக்காட்டு.


கதைச் சந்தர்ப்பம் மற்றும் சிறந்த நிகழ்வுகள் வாயிலாக அறியப்படும் நாவல்களுக்கான சான்றாக ‘சித்தார்த்தா’ நாவலைக் கருதலாம். 


ஒரு சிறந்த நாவல் தத்துவார்த்தமான உச்சத்தையும் உயரிய தரிசனத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். ‘பரபாஸ்’ (Barabbas by Par Lagerkvist) மற்றும் ‘மாஸ்டர் கிரிஸ்டியன்’ (The Master Christian by Marie Corelli) ஆகிய நாவல்களின் உச்சங்களை இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.


நாவல் பயிற்சி வகுப்பில் முப்பது பேர் கலந்துகொண்டனர். அதில் ஒலிபெருக்கியைப் பராமரிக்கும் இரண்டுபேர் கூடுதலாக வகுப்பில் இணைந்துகொண்டனர். அவர்கள் இருவருமே நீங்கள் அளித்த இருபது நிமிட சுய பரிட்சையில் எழுதியதையும் கண்டேன். 


நிகழ்ந்த இரு நாவல் பயிற்சி வகுப்புகளிலும் பங்குபெற்றவர்களில் சிலரேனும் நாவல்களை எழுதக்கூடும். அது யாராக இருக்கும் என ஊகிப்பது கடினம், ஆனால் அவர்களுடைய நாவல்களில் நீங்கள் பயிற்றுவித்த நாவலுக்கான வரையறைகளின் தொடுகை இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.


அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்