அசுரகணம் குறுநாவல் - வாசிப்பு
ஜெயமோகனின் நாவல் பயிற்சி வகுப்பிற்காக நண்பர் நிர்மல் சில குறுநாவல்களை வாசிக்குமாறு பரிந்துரைத்தார். கா.நா.சு வின் 'அசுரகணம்' நாவலை வாசித்தேன். நூறு பக்கங்கள் இருக்கலாம், ஒவ்வொரு அத்தியாயமும் இருநூறு வார்த்தைகளுக்குள், இரண்டு பக்கங்கள் என்ற அளவில் திட்டமிட்டு பகுக்கப்பட்ட நாவல் அசுரகணம்.
ஜெயமோகன் ஒரு குறுநாவலின் முதல் அத்தியாயம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவேண்டும் என்று பயிற்சி வகுப்பில் குறிப்பிட்டார். இந்த நாவலில் நாயகனுக்கு கேட்கும் நாதஸ்வர ஓசை தப்புச் சப்தம் போல ஒலித்து அவனுக்கு மரணத்தை நினைவூட்டுகிறது. நாவல் மிக சுவாரசியமாகவே தொடங்குகிறது.
நினைவோடை உக்தி என்ற முறையில் கதை சொல்லியின் மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துமாறு எழுதப்பட்ட நாவல். ராமன் கல்லூரி மாணவன், பிற மாணவர்களால் பிறழ்ந்த மனநிலை கொண்டவன் என்றும் கருதப்படுகிறான் (கிராக்கு). தான் சிந்திப்பவன், பிறரிலிருந்து வேறுபட்டவன் என்ற சுய ஊக்கம் அமைந்த கதாப்பாத்திரமாக ராமன் எனும் கதைசொல்லியை கா.நா.சு. அமைத்திருக்கிறார்.
தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க தன் கல்லூரியில் படிக்கும் பெண் தோழியுடைய வீட்டுக்கு செல்கிறான் ராமன். அங்கு அவனை நன்றாக அறிந்திருந்த அந்தப் பெண்ணும் அவளுடைய அம்மாவும் இருக்கிறார்கள். பெண்ணின் அம்மா ராமனிடம் 'நீ விசித்திரமானவன்' என்று தன் பெண் சொன்னதாகக் கூறுகிறாள்.
ராமனுக்கு 'காதல் என்றால் என்ன?, அது காமத்தைப் புனிதப்படுத்திய மனித அகத்தின் ஒரு வெளிப்படுதானா?' என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. 'காதல் என்பதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று தோழியின் அம்மா கேட்கிறாள். ராமனுக்கு தன் பெண் தோழியின் அன்னையின் மேல் தவிர்க்கமுடியாத காம உணர்வு ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க தன் எண்ணங்களுடன் போராடும் ராமன் அவளை 'சூர்ப்பணகை' என்ற இராமாயணத்தின் காவியப் பாத்திரமாகக் காண்கிறான்.
இந்த நாவலில் சிக்மண்ட் ஃபிராய்ட் எழுதிய காமம் குறித்த எண்ணங்களை கா.நா.சு. விசாரணை செய்கிறார். ஒரு கட்டத்தில் ராமன் அந்தப் பெண் தோழியின் அன்னையை வெறுக்கிறான், மனசீகமாக அவளுடைய கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு வீடு திரும்புகிறான். பிறகு அந்தத் தோழியையே திருமணம் செய்துகொள்கிறான். சூர்ப்பணகையைக் கொன்றுவிடுவதால், மனதில் இருக்கும் காமத்தை அகற்றி திருமணத்தில் மகிழ்ச்சியாக இணைகிறான். விழாவில் அவளுடைய தாயைக் காணும்பேது அவன் மனம் பழைய எண்ணங்களுக்குள் திரும்புவதில்லை, அவளை அம்மா என்றே அழைக்கிறான்.
ஒட்டுமொத்தமாக யோசித்தால் இந்த நாவல் காதலா, காமமா எனும் கேள்வியினூடாக உடலா, மனமா எனும் தளத்திற்கு நகர்ந்து அடிப்படையான மனித இச்சை என்பதைப் பேச முயல்கிறது. மனித சிந்தனையின் இயல்பு கட்டற்று இயங்குவது, அதன் போக்கை நாவலில் காட்சிப்படுத்த கா.நா.சு. முயன்றிருக்கிறார்.
மனித மனத்தின் இச்சை மீதான ஈர்ப்பைப் பேச முனையும் நாவல் அதற்குரிய விரிவுகள் எதையும் அடையாமல் மிக எளிமையான ஒரு படைப்பாக எஞ்சிவிடுகிறது. சிக்கனமான, விவரிப்புகள் இல்லாத எழுத்துமுறை என்பதால் மன எழுச்சி தரக்கூடிய பகுதி என எதுவும் நாவலில் தென்படவில்லை. நாவலை நான் வேறு கோணத்தில் வாசிக்கவேண்டுமா என்றும் தெரியவில்லை. நாவல் குறித்து சி. மோகனுடைய சிறிய குறிப்பைத் தவிர குறிப்பிடத்தக்க பதிவுகள் எவையும் இணையத்தில் தென்படவில்லை.
கா.நா.சு வின் பிற நாவல்களுடன் இணைத்து அவருடைய படைப்புலகை விரித்துப் பார்த்தால் இந்த நாவலுக்கு அதற்குரிய இடம் அமையலாம். இந்த நாவலைத் தொடங்கி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே கா.நா.சு முடித்ததாகக் கூறுகிறார். குறுநாவல் என்பதால் கதாப்பாத்திரங்களுடன் அதிக ஒட்டுதல் ஏற்படவில்லை, நண்பர்கள் யாரேனும் இதை வாசித்திருக்கிறார்களா, அவர்களுடைய பார்வை என்ன என்று பார்க்கவேண்டும்.
இலக்கிய முன்னோடிகள் நூலில் ஜெயமோகன் கா.நா.சு வின் நாவல்கள் குறித்து என்ன எழுதியிருக்கிறார் என்று வாசித்துப் பார்க்க ஒரு காரணம் கிடைத்திருக்கிறது.

Comments
Post a Comment