மதார், இரு கவிதைகள் - பதில்கள்
சங்கர் நலமா?
மதார் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘ஓசை மட்டும் கேட்டால்’
அதி காலையில் உறக்கத்தில் இருக்கிறோம், விழிப்பு வந்தும் வராமலும் இருக்கும் நிலை. நம் பிரக்ஞை விழிப்பில் இருக்கிறது, அனால் கண்கள் மூடியிருக்கிறது. ஓசைகளை மட்டும் கேட்கிறோம் அல்லவா, அப்போது நாம் கேட்கும் ஓசைகள் ஒரு கவிஞனுக்கு எப்படிப் பொருள்படுகின்றன என்பதாக ஒரு கோணத்தை இந்தக் கவிதைக்கு அளிக்கலாம். ஜெ தத்துவ வகுப்பில் ரொமாண்டிசம் பற்றிச் சொன்னார் அல்லவா, அப்படி அந்தக் கடைசி வரி கற்பனையின் உச்சத்தில் சென்று நிற்கிறது. குக்கர் விசில் சப்தம் வரும் ஒரு நொடியில் அதுவரை கேட்ட சப்தங்கள் எல்லாம் எப்படி ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்தனவோ, அப்படி ஒரு உலகின் உணவாக அது வேகிறது.
பொதுவாக கவிதைகள் முடிவடைகையில் ஒரு உச்சம் தொட்டுத்தான் முடியும், அப்படி வடிவ ரீதியாகவும் மதார் இதை அற்புதமாக முடித்திருக்கிறார். இன்னொன்று, கவிதைகளை வாசிக்கையில் எல்லாவற்றுக்கும் நேரடிப் பொருள் அளித்துத் புரிந்துகொள்ள முடியாது, அது சாத்தியமும் இல்லை. இந்தக் கவிதை குறித்து மதாரிடம் பொருள் கேட்டால் அவருக்குமே கூட அது தெரியாமல் இருக்கலாம், அது ஒருவகை கவிதைகளின் இரகசிய சூத்திரம். தொடர்ந்து கவிதைகளை வாசிக்கும் போது நமக்கு கவிதையின் தனித்தனி வரிகளோ, மொத்தக் கவிதையோ புரியாமல் இருப்பதன் அசூயை குறைந்துவிடும். அப்போது அந்த இரகசிய சூத்திரத்தை நாம் புரிந்துகொள்ளத் தலைப்பட்டுவிட்டோம் என்று கொள்ளலாம். இது ஒருவகை அருவமான பதில்தான், திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியவில்லை. அதாவது நாம் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பதால் கவிதைகள் குறித்த ஒரு நுண் உணர்வு இயல்பாக வளர்ந்துவிடுகிறது.
நான் மதாரின் பல கவிதைகளில் இப்படி முட்டிக்கொண்டு நின்றிருக்கிறேன். இதே கவிதை எப்போதாவது உங்களுக்கு வேறொன்றாகத் தெரியும் தருணம் அமையக்கூடும்.
அதற்காக கவிதைகளை தனியாகப் பொருள் கொள்ளக் கூடாதா என்று கேள்வி வரலாம். அப்படி அல்ல, நிச்சயம் அப்படிப் பொருள் கொள்ள முயலலாம். எல்லாக் கவிதைகளையும் அப்படிப் புரிந்துகொள்ள முடியாது என்றே சொல்கிறேன். குழப்பிவிட்டேனா உங்களை என்று தெரியவில்லை, அப்படி இருந்தால் மன்னிக்கவும்.
இக்கவிதையின் கடைசி வரி கவிதையில் மட்டுமே அமர முடியும் ஒரு வரி. பெருமதிப்பிற்குரிய கார்ல் மார்க்ஸ் “யாரிந்தப் பையன்…?” என்று திடுக்கிட்டு வினவும் ஒரு வரி.
கை நடுங்காமல் இந்தக் கடைசி வரியை எழுதிவிட்டவனைக் காண ஆச்சர்யமாக உள்ளது. பயமாக உள்ளது. அருவருப்பாக உள்ளது. “ எவ்வளவு பெரிய நயவஞ்சகன் நீ?” என்று பற்களைக் கடிக்கத் தோன்றுகிறது. அவன் முகத்திற்கு நேரே ஆக்ரோஷமாக நடுவிரலை தூக்கி நீட்டத் தோன்றுகிறது.
அப்படி நீட்டும் முன்னே அவனை ஒரு முறை நெஞ்சார அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
கவிஞர் இசை மதாரின் இந்தக் கவிதைக்கு எழுதிய குறிப்பு. அகழ் இதழில் உள்ளது.
நோக்க நோக்கக் களியாட்டம் : இசை
நானொரு மணல் ஓவியன்
அப்பாவைப்
பார்க்க முடியாதுதான்
ஆனால்
நானொரு மணல் ஓவியன்
அப்பாவை என்னால்
வரைய முடியும்
அப்படியே
வரைய முடியும்
வெறும் கைகளால்
வரைந்துவிடுவேன்
வரைந்ததும்
அப்பாவின் வட்டக் கண்களில் மட்டும்
தடித்த கருப்பு எறும்புகளை
வட்டமிட விடுவேன்
சில நிமிடங்களுக்கு
அப்பா என்னைப் பார்ப்பார்
எறும்புகள் மூக்கிற்கு இறங்கும்
அப்பா என்னை முகர்வார்
உதடுகளுக்கு இறங்கும்
அப்போது நான்
வீட்டிற்குகுத் திரும்பியிருப்பேன்.
அப்பா இல்லாத ஒருவனுடைய, அல்லது அப்பாவை இழந்த ஒருவன் அவரைப் பற்றிய நினைவுகளை மீட்டிக்கொள்ளும் மனச்சித்திரம் இந்தக் கவிதை. எறும்பு உதடுகளுக்கு இறங்கும் போது வீடு திரும்பிவிடுதல் என்பதுதான் இந்தக் கவிதையின் உச்சம். அதாவது, அப்பாவின் நினைவு மட்டும்தான் அது, முத்தம் என்பது நிதர்சன உண்மை அல்லவா, அது சாத்தியமாவதல்ல என்று உக்கிரமாக இந்தக் கவிதை சொல்கிறது என்று வாசிக்கலாம்.
இன்னொரு கோணத்தில், அப்பா குறித்த அதிருப்தி கொண்ட ஒருவனுடைய, என்னை ஏன் இப்படிப் பிரிந்தாய் என்று எண்ணுபவனுடைய பதிவு என்றும் இதை வாசிக்கலாம். கவிதையின் கடைசி வரியில் அந்த அப்பா கவிதை கூறுபவனைப் பற்றி ஏங்குவதாகக் கவிதையின் கோணம் மாறிவிடுகிறது. ஓவியம் உயிர்பெறும் தருணம் என்றும் இதைக் கொள்ளலாம்.
அப்பாவைப் பற்றி பல கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள் (போகன் சங்கர், லட்சுமி மணிவண்ணன்). ஆனால் மதாரின் இதக் கவிதை அளிக்கும் கோணம் முற்றிலும் புதியது.
மதார் பொதுவாக எல்லாக் கவிதைகளுக்கும் தலைப்பு வைக்கமாட்டார். நல்லவேளை நீங்கள் குறிப்பிட்ட இரு கவிதைகளுக்கும் தலைப்பு இருக்கிறது. முதல் கவிதையை தலைப்பில் இருந்துதான் வாசித்தேன்.
மற்ற கவிதைகளையும் வாசித்துவிட்டு ஏதாவது கேட்கவேண்டும் என்றால் தயங்காமல் சொல்லுங்கள். உங்கள் மூலமாக இந்தத் தொகுப்பின் கவிதைகளை மறுவாசிப்பு செய்துவிடுகிறேன்.
மதாரின் பதில்
மிக்க மகிழ்ச்சி. கவிதைகள் குறித்து நீங்கள் உரையாடிக் கொள்வது எனக்கு கூடுதல் உந்துதலையும், பொறுப்பையும் அளிக்கிறது. ஓசை மட்டும் கேட்டால் கவிதை முதன்முதலில் தினவு இதழில் வெளிவந்தது. அப்போது கவிஞர் இசையும் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு கேட்டார். அதற்கு இவ்வாறு அனுப்பினேன். 'அந்தக் கவிதை ஒரு அதிகாலை வேளையில் ஒலியும் காட்சியும் குழம்பியபோது எழுதியது. எனது மாமா வீடு பள்ளிவாசலை ஒட்டியது. கோவில், பாலகம், சர்ச்,போஸ்ட் ஆபீஸ், காவல் நிலையம், பள்ளிக்கூடம், கராதே பள்ளி எல்லாமே அதன் அருகே தான். அங்கு தூங்கி விழிக்கும் காலைகளில் கேட்கின்ற சப்தங்கள் ஒலி கூட்டப்பட்டது போல தோன்றும். இந்த விநோதம் தந்த உணர்வினாலேயே தோன்றியும் முடிந்தும் விட்ட கவிதை'. இந்தக் கவிதையை இப்படித்தான் எழுதியதாக நியாபகம்.நீங்கள் சொல்லியிருப்பது போல உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட இடம்தான் இந்தக் கவிதை. இந்தக் கவிதையின் முடிவு ரொமாண்டிசமாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். வாசிக்கும்போது அப்படித் தோன்றலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் எழுதும்போது அப்படி எழுதியதாக நினைவில்லை. சமீபத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அள்ளி உண்ணத் தெரியாத மாடு வாயை மட்டும் அருகில் கொண்டு போக ஊட்டியே விட்டது புல்வெளி இந்தக் கவிதை - என் மகனுக்கு சோறூட்டும்போது அருகில் ஒரு மாடு புல்லைத் தின்னும் காட்சியைப் பார்த்தேன். இரண்டும் ஒன்றுதான் போல. இயல்பாகவே புல்வெளி புல்லை மாட்டுக்கு ஊட்டித்தான் விடுகிறது போல என்று நினைத்தே எழுதினேன். ஆனால் ஸ்ரீநிவாசனிடம் அனுப்பியபோது இந்தக் கவிதை தற்குறிப்பேற்ற அணியில் வருகிறது என்று கூறினார். அது எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு ஒரு வாசகனாக வாசிக்கையில் அது சரியென்றே தோன்றியது. நிறைய கவிதைகளில் இப்படி உணர்ந்ததுண்டு. கைக்குட்டை பறக்கிற கவிதையும் இதே போல இயல்பான எழுதிய கவிதைதான். ஆனால் எழுதி முடித்து வாசிக்கிறபோது அதில் ஒரு ரொமாண்டிசம் பிடிபடுகிறது. இது ஏன் நிகழ்கிறது எப்படி என்று புரியவில்லை. ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட கணத்தில் இயல்பும், ரொமாண்டிசமும் தராசின் ஒரே தட்டில் சந்திக்கிறதோ என்றும் தோன்றும். நானொரு மணல் ஓவியன் கவிதை -
கவிஞர் தேவதச்சன் ஒருமுறை நேரில் இந்தக் கவிதையைப் பற்றி இதை ஏன் எழுதினேன் இதில் வரும் அப்பா யார் என்று கேட்டார். நான் கூறத் தொடங்கினேன். உளறி முடித்தேன். ஒரு பதட்டத்தை உணர்ந்தேன். இது என்னையும் என் அப்பாவையும் பற்றிய மிக அந்தரங்கமான கவிதையாக உணர்ந்தேன்.
என் உறவுகளை கவிதையில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். மனைவியை, குழந்தையை அதிகமாக எழுதியிருக்கிறேன். அவர்கள் புதிதாக வந்தவர்கள். அவர்களை எழுதுவதில் தடை இல்லை. ஆனால் அப்பா, அம்மா மற்ற உறவினர்கள் காலத்தால் நிறைய உணர்வுக் கலவைகளை கிளப்பிவிடுபவர்கள். இந்தக் கவிதையில் அப்பாவை எழுதியதும் ஒரு ஆழமான புண்ணைச் சுரண்டிவிட்ட பதட்டத்துக்கு உள்ளானேன். அதில் இரத்தம் கொப்பளிக்கத் துவங்கியதுமே அதைப் பார்க்கப் பயந்து புண்ணை மூடிவிடுகிறேன். (எறும்புகள் அப்பாவின் உதட்டில் இறங்கும்போது அவர் பேசிவிடுவாரோ என்ற பதட்டத்தில் நான் வீட்டிற்கு திரும்புகிறேன்). இது என் தனிப்பட்ட அவஸ்தை.
இதை விளக்கமாகக் கூற நிறைய தனி அனுபவங்களைத்தான் கூற வேண்டும். அதனால் அதை மூடிவிட்டேன். இப்போது இந்தத் தடை கொஞ்சம் குறைந்துள்ளதாகவே உணர்கிறேன். ஆயிஷா நன்னி, உம்மாவை மக்காவுக்கு அனுப்ப காசில்லை என்று என் அசெளகரியமான சில இடங்களையும் எழுதப் பழகுகிறேன். இந்த மாற்றம் வாழ்க்கையில் ஏற்படுவதாலேயே கவிதையிலும் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். கவிதையைப் பற்றி இவ்வளவு பேச வைத்ததற்கு நன்றி உங்களுக்கும் சங்கருக்கும்...

Comments
Post a Comment