இசூமியின் நறுமணம் - ஒரு வாசிப்பு

                                                    

இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பை சென்ற வருடம் கரூர் வருகையில் வாங்கினேன். ஆனால் விமானத்தில் கொண்டுசெல்லவேண்டிய பொருட்களில் மற்றவை இடம் எடுத்துக்கொண்டதால் சில புத்தகங்களை கரூரிலேயே வைத்துவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வருட நவம்பர் மாதம் முழுக்க கரூரில் இருந்தேன். மனம் வாசிப்புக்கு அடங்காமல் திமிறிக்கொண்டிருந்தது. அரைமனதோடும் ஒருவித குற்றஉணர்வோடும் சிமெண்ட் அலமாரியில் இருந்த அட்டைபெட்டியை தூசுதட்டி, வைத்திருந்த புத்தகங்களில் அளவில் சிறியது என்பதால் இந்த தொகுப்பை வாசிப்புக்கு எடுத்தேன்.

ரா. செந்தில்குமார் ஜப்பானில் புலம்பெயர்ந்து வாழ்பவர், ஜெயமோகனின் வாசகர். சிலவருடங்களுக்கு முன் இந்த தொகுப்பின் வெளியீட்டு விழாவில் ஜெயமோகனின் உரையைக் கேட்டிருந்தேன். நான் இன்றைய சூழலில் எழுதும் அதிகம் பெயர் அறியப்படாதவர்களின் தொகுப்புகளை பரவலாக வாசித்ததில்லை. இணைய இதழ்களில் அவ்வப்போது சில கதைகளை வாசிப்பேன். இந்த கதைகளில் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன், தொகுப்பு என்னை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டது.

எல்லா புலம்பெயர்ந்த எழுத்தாளர்களைப் போலவே ரா. செந்தில்குமாரின் கதைகளையும் அவருடைய சொந்த நிலமான தஞ்சை டெல்டாவை பிண்ணனியாகக் கொண்டவை என்றும், தற்போது அவர் வாழும் ஜப்பானை அடித்தளமாகக் கொண்டவை என்றும் பிரிக்கலாம். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் (எட்டு கதைகள்) ஜப்பானில் நிகழ்பவை. இந்த தொகுப்பின் மிகச் சிறந்த கதைளாக நான் எண்ணுபவையும் ஜப்பானை கதைக்களமாக கொண்டவையே.

ஒரு எழுத்தாளன் பிறந்து வளர்ந்த சூழல் அவனுடைய மனதில் படிமங்களாக அமைந்து பின் கதைகளில் எழுகின்றன. செந்தில்குமாரின் தஞ்சை சார்ந்த கதைகளில் 'அனுபவ பாத்திரம்' 'அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்' இரண்டும் விவசாய நிலம், வாழ்ந்துகெட்டவரின் ஒரு வீடு ஆகியவற்றை சார்ந்தது. இன்னும் கடந்தகால மதிப்பீடுகளை பேணிக்கொண்டிருக்கும், உச்சத்தில் வாழ்ந்து சரிந்து தற்போதைய கால மாற்றங்களின் சுழலைப் புரிந்துகொள்ளாமல் தவிக்கும் பாத்திரங்களின் மனநிலைகளைப் பேசுபையாக உள்ளன. தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் மேதைகளால் கையாளப்பட்ட கதைக்கருக்கள் என்பதால் எனக்கு இந்த கதைகளில் அவ்வவாக ஈர்ப்பு ஏற்படவில்லை.

'மலரினும் மெல்லிது', 'மடத்து வீடு' இரண்டு கதைகளும் இளைஞர்களுடைய தவிப்புகளைப் பேசுபவை. முதல் கதையில் தன்னுடைய காதலியின் திருமணத்திற்கு செல்லும் ஒருவனுடைய மனநிலையையும், இரண்டாவது கதை ஏழ்மையை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை இளைஞர்களின் பார்வையில் சொல்கிறது. இரண்டு கதைகளிலும் ஆண்களின் காமம் மற்றும் செருக்கு ஆகியவை பேசப்படுகின்றன. குறிப்பிடத்தக்க கதைகள் இல்லையென்றாலும் நேர்த்தியான கதைசொல்லல் இவற்றில் உள்ளன.

செந்தில்குமாரின் ஜப்பான் குறித்த கதைகள் அனைத்துமே நான் இதுவரை பார்த்திராத வாழ்வை சொல்கின்றன. 'தானிவத்தாரி' திருமணத்திற்கு வெளியே ஏற்பட்ட உறவால் வாழ்வை சிதைத்துக்கொண்ட ஒரு ஜப்பானிய பெண்ணின் சித்திரம் வருகிறது. 'செர்ரி ஃப்ளாசம்' கலிபோர்னியாவிலிருந்து ஜப்பான் வழியாக இந்தியா பயணிக்கும் ஒரு இந்தியப் பெண் எதிர்கொள்ளும் இறப்பைச் சொல்கிறது. ஜப்பானில் ஈரல் நோய்க்கு கணவனை இழந்து அவனுடைய உடலுடன் ஊர் திரும்பும் ஒரு பெண்ணின் சித்திரம் அது, மனதை உறைய வைக்கும் ஒரு கதை.

'இசூமியின் நறுமணம்' சிறுகதை அலுவலக வேலை முடிந்து மது அருந்தும் கலாச்சாரம் குறித்து பேசுகிறது. ஜப்பானில் அதீத வேலைப்பளுவை சரிசெய்துகொள்ளும் ஒரு முறையாக மதுக்கூடங்களில் குவிந்து கிடக்கும் ஜப்பானியர்களின் சித்திரம் அழகாக விரிகிறது. 'அன்பும், அறனும் உடைத்தாயின்' சிறுகதை ஜப்பனிய நவீன சூழலில் வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் ஒருவனைப் பற்றிய கதை. இதில் தற்கொலை செய்துகொள்பவர் சிவா எனும் மலேசியத் தமிழர். 

'கனவுகளில் தொடர்பவள்' மதுக்கூடத்தில் சந்தித்துக்கொள்ளும் ஒரு இந்திய ஆணுக்கும் ஜப்பானிய பெண்ணுக்குமான உறவை சொல்கிறது. கதையின் முடிவு யதார்த்தத்திலிருந்து எழுந்து ஒரு அமானுஷ்ய தளத்திற்கு நகர்கிறது. 'மயக்குறு மக்கள்' சிறுகதை தன் இந்திய மகனுடன் ஜப்பானில் வசிக்கும் பேரக்குழந்தைகளை எதிர்பார்க்கும் இந்தியத் தாயின் ஒரு எதிர்பாராத செயலைச் சொல்கிறது. 'நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்' சிறுகதை சியாம் மரண ரயில் பாதையில் வேலைசெய்து மனநிலை பாதிகப்பட்ட ஒரு மலேசிய இந்தியனுடைய பேரன் தற்கால வேலைச் சூழலில் ஒரு ஜப்பானியனை எப்படி எதிர்கொள்கிறான் என்று விரிகிறது.

'சிபுயா கிராஸிங்' சிறுகதை தற்கால ஜப்பானிய சூழலில் மனநோயால் தன்னுடைய அறையிலிருந்து வெளியேறாத ரிக்கு எனும் இளைஞர் குறித்த கதை. இதே கதையில் யுகிகோ எனும் ஜப்பனிய இளம் பெண்ணின் கதை வருகிறது. அவள் ஒரு அழகி, மாடலாக விரும்பி பின் மென் புணர்வுகளை காட்சிகளாக சித்தரிக்கும் படங்களில் நடித்து, போர்ன் படங்கள் சிலவற்றிலும் நடித்துவிட்டு தன்னுடைய அடையாளத்தைத் துறந்து வாழ எண்ணுகிறாள். அவளுடைய யோனியை பொம்மையாகச் செய்து விற்கிறார்கள். இவர்கள் இருவருடைய வாழ்வும் நிலநடுக்கச் சூழலில் இணைகிறது. 

ஒரு வேலைநாளின் பரபரப்பான ஜப்பனிய ரயில் நிலையம், சாஃட் பார்ன் என்று சொல்லப்படும் படங்களில் நடிக்கும் ஒரு பெண், நிலநடுக்கம் என மிகச் சிறந்த கதைக்கருக்களையும் படிமங்களையும் கொண்டிருந்தாலும் இந்தக் கதை அடைந்திருக்கவேண்டிய உச்சம் நிகழவில்லை என்றே தோன்றியது. கதையின் முடிவு சற்று செயற்கையாக திணிக்கப்பட்டதைப்போல இருந்தது. சிபு யுகிகோ இருவரும் வாழ்வில் நெருக்கடிகளைக் கடந்து நிலநடுக்கம் எனும் இயற்கை நிகழ்வால் வெளிச்சம் காண்கிறார்கள் என்றாலும் ஒரு வாசகனாக ஏனோ சிறுகதைகே உரிய மயக்கு நிகழவில்லை என்றே தோன்றுகிறது. ரிக்கு யுகிகோ இருவருடைய கதைகளும் தனித்தனியான சிறுகதைகளாகும் அளவுக்கு ஆழம்கொண்டவையும் கூட.

ரா. செந்தில்குமாரின் கதைகளில் நாம் இதுவரை காணாத களங்களும் வாழ்வியல் சூழல்களும் சொல்லப்பட்டுள்ளன. எளிய மொழி, நேரடியான உரையாடல்கள் இவற்றைக் கடந்து கதைகளின் முடிவில் தொடங்கவேண்டிய புள்ளிகளும் நிறைந்தே இருக்கின்றன. தொகுப்பின் ஜப்பானிய சூழல் கதைகளில் மனிதர்களின் மன அழுத்தம், தனிமை, உறவுச் சிக்கல்கள், இயற்கை என ஒரு வாசகனை தன்னுடம் பயணம் செய்யவைக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வாசகனின் கண்கள் முன் ஜப்பான் எனும் விசித்திர கனவுநிலத்தை காத்திரமாக முன்வைக்கும் ரா. செந்தில்குமாரின் தனித்துவமான பங்களிப்பு என்று இந்த கதைகளையே எண்ணுகிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை