மானசீக கவிக்கு ஒரு தனிப்பட்ட கடிதம்
கவிஞர் அபியின் கவிதைகள் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்படி விளக்குவது என்று எனக்கு பிடிபட்டதில்லை. ஜெயமோகன் 'மீபொருண்மை' என்ற வார்த்தையை அபியின் கவிதைகளைக் குறிக்க பயன்படுத்துகிறார். நாம் விளக்க இயலாமல் தவிக்கும் ஒரு நிலையை ஒற்றைக் கலைச்சொல் செய்துவிடுகிறது. நேற்று அபயின் மாலை கவிதைகள் சிலவற்றை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய உந்துதலில் உணர்ச்சிவசப்பட்டு கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினேன்.
சில மணிநேரங்கள் கழித்து இதை அனுப்பியிருக்கவேண்டாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் இதை அனுபபுகையில் நான் அடைந்த உச்சமே இதை அனுப்பத்தூண்டியது. இதுபோனற உணர்வுப் பீடிப்புகளுக்கு ஆட்படுவது அரிதான ஒன்று என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்தேன். ஒரு தயக்கத்தோடுதான் இதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
அன்புள்ள அபி சார்,
இது பாலாஜி ராஜு. என்னை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீண்ட நாட்கள் கழித்து உங்களுடைய மாலை கவிதைகள் சிலவற்றை வாசித்தேன். அந்த உந்துதலில் இதைப் பகிர்கிறேன்.
இந்த கவிதைகளை வாசித்த சூழலை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இருண்ட ஒரு குழிக்குள் விழுந்துகொண்டே இருப்பதைப் போன்ற ஒரு மனநிலையில் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
நவீன மருத்துவமும் உளவியலும் இதை நரம்பியல் கோளாறு என்று தர்க்கத்தால் நிராகரித்துவிடும். ஆனால் மனதில் இறங்கும் இந்த எடை தாங்கவியலாததாகவே இருக்கிறது. எதிர்காலம் குறித்த ஒரு அச்சம், சமூகம் நிறுவிய அளவீடுகளில் நம்மைப் பொருத்திப் பார்த்து அதில் பின்தங்குவதைப் போன்ற ஒரு பிம்பம், வாழ்வில் நான் நிகழாது என்று எண்ணிக்கொண்டிருந்தவை என்முன் உருவம் பெற்றுக்கொண்டிருப்பதைக் காணும் அதிர்ச்சி, ஊழின் குரூர சிரிப்பு என மனதின் சலனங்கள் பல.
கவிதைகளை வாசித்ததும் மனதில் ஏற்பட்டது ஒரு பிரமிப்பு, நன்றி உணர்ச்சி, பரவசம், உங்கள் மேதமை மீதான ஒரு மிரட்சி, சரியான அலைவரிசையில் ஒருவனது உணர்வுகளைத் தொட்டுவிட்ட தீர்க்கதரிசித்தனம், 'எல்லாம் நன்று கவலைகொள்ளாதே' என்று சொல்லும் உங்கள் கவிதைகளின் வார்த்தைகளில் உள்ள பரிவு இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மனம் குவிந்து நான் செல்ல நினைத்த ஒரு நிலைக்கு என்னை அழைத்துச் சென்றன உங்கள் கவிதைகள். இது தற்காலிகம்தான், நான் மீண்டும் அந்த குழிக்குள் செல்லலாம், ஆனால் என்னை மீட்டுக்கொள்ள கருவியாக உங்கள் கவிதைகள் இருக்கின்றன என்று ஆசுவாசம் கொள்கிறேன்.
ஏதோ அருவமான ஒன்றை அடைந்துவிட்டதைப் போன்றும் தொட்டு உணர்வதைப் போன்றும் ஒரு நிலையை அடைந்து அதன் தாக்கத்தில் இருக்கிறேன்.
உங்களை நேரில் சந்தித்த நினைவுகளை மீட்டிக்கொள்கிறேன், எத்தனை பெரிய கொடுப்பினை!
'வெளியேறுதல்
இல்லை என்று ஆனபின்
எனக்காகக் காத்திருந்த என்மலை
சற்று அசைந்து
குவடுகளால்
எனதொரு எல்லையை வருடும்'
என்ற வரிகளை வாசிக்கையில் ஏதோ ஒரு மலையின் நிழல் உங்கள் மாடி அறையை நிரப்புவதாகவும், அதன் ஸ்பரிசத்தை நீங்கள் உணர்ந்து புன்னகைப்பதாகவும் ஒரு எண்ணம் எழுகிறது. மனது கனத்து ஒரு புன்னகை உதடுகளில் ஊறுகிறது.
நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன், எதற்கெல்லாம் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஆனாலும் மனது முழுக்க நன்றிகளால் கனக்கிறேன் சார்.
----
கவிஞர் அபியின் பதில்,
மகிழ்ச்சி பாலாஜி. உங்களுக்குள்ளேயே இருக்கும் உங்களுக்கான மருந்தை வெளிச்சம் காட்டியதற்காக நானும் என் கவிதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலம்.
Comments
Post a Comment