எரி நட்சத்திரம் - சிறுகதை

                                             

வானில் எரி நட்சத்திரம் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டு என் கண்களைக் கூர்ந்து நோக்கிய அவருக்கு அறுபதிலிருந்து எழுபது வயதுக்குள் இருக்கலாம். அகன்ற மார்பும் ஆறடியைத் தொடும் உயரமுமாக பொருட்களால் நிறைந்திருந்த தன்னுடைய நீண்ட வாகனத்தின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்தார். காருண்யமான கண்களும் முகச் சுருக்கங்கள் உணர்த்திய உலக ஞானமும் அவரை வசீகரமானவராகக் காட்டியது.

வாகனத்தின் கண்ணாடியில் தெரிந்த உட்புறம் ‘பயணம்’ என்று வெகுளித்தனமாக உலகுக்கு அறிவித்துக்கொண்டிருந்தது. ஊதா நிற டெனிம் சட்டையை அதே நிற ஜீன்ஸ் பேன்டினுள் பொருத்தி சற்று வெளிறிய காவி நிற இடுப்புப் பட்டையும் அதே நிறத்தில் கௌபாய் பூட்சும் அணிந்திருந்தார். ஏப்ரல் மாத வசந்தகால முன் மதியம் தனகே உரிய பூரிப்புகளுடன் திழந்துகொண்டிருந்தது. சுகர் மேப்பிள் மரங்களின் வெளிற்பச்சை இலைகளிலிருந்து சிறு குருவிகளின் கொண்டாட்டமான உரையாடல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

“என்ன ஒரு அருமையான நாள்” என்று தொடங்கியது எங்கள் உரையாடல். அவருடைய வாகனத்தின் உடலில் அழகிய மலை ஒன்று வரையப்பட்டிருந்தது. நீண்ட வாகனத்தின் உடல் முழுக்க அந்த மலை விரவியிருந்தது. மிகுந்த பிரயாசையோடு நேர்த்தியாக வரையப்பட்ட அந்த ஓவியத்தால் கவரப்பட்டு "அற்புதமான ஓவியம்" என்ற என்னுடைய பாராட்டுக்கு மறுமொழியாக அவர்  “வானில் எரி நட்சத்திரம் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

நாங்கள் இருவரும் ஒஹாயோ மாகாணத்தில் டொலிடோ நகரின் மேற்கு மூலையில் மனித ஆரவாரமற்ற ஒரு பல்பொருள் அங்காடியின் அகன்ற வாகன அமைவிடத்தில் நின்றிருத்தோம். இதமான வெயிலும் மேப்பிள் மற்றும் பியர் மரங்களின் பச்சை இலைகளினுள் நுழைந்து ஓசையாக வெளியேறிய காற்றும் ஒரு செவ்வியல் நாடகக் காட்சியின் பிண்ணனியில் ஒலிக்கும் பொருத்தமான மெல்லிசையாக ஒன்றிப்போனது.

“எரி நட்சத்திரம் காணக்கிடைப்பது அதிர்ஷ்டவசமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்”.

அவருடைய கேள்வி என்னில் ஏற்படுத்திய துணுக்குறலை மறைக்க முயன்றேன். நான் கடைசியாக எப்போது எரி நட்சத்திரம் பார்த்தேன் என்று நினைவிலில்லை. தெளிந்த இரவின் வான்வெளியில் சில நொடிகளே காட்சியளித்து மறையும் ஒளிக்கீற்றின் பிம்பம் மனதில் தோன்றி மறைந்தது.

“ஆம், சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டின் மேல்தள சாளரக் கண்ணாடியில் காணக்கிடைத்தது. இந்த ஊரில் நாங்கள் வாழ்ந்த கடைசி சில மாதங்கள். நானும் என் மனைவியும் உத்தேசித்த அடுத்தகட்ட வாழ்வுக்குள் நுழையக் கிடைத்த நற்சகுனம் என்றே அதை எண்ணிக்கொண்டோம்”.

அவர் மேலும் பகிரப்போகிறவை குறித்த எதிர்பார்ப்புகளை என் கண்களில் அடக்க இயலாமல் தவித்தேன். 

“நான் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவன். பதினெட்டாவது வயதில் ஒரு கட்டுமானப் பணியாளனாக என்னுடைய தொழில்முறை வாழ்வைத் தொடங்கினேன். வேலைக்காக அருகிலிருக்கும் பல ஊர்களுக்கு பயணம் செய்வேன். கிழக்கில் இருபது மைல் தொலைவிலிருக்கும் பௌலிங்க்ரீன் என்ற சிற்றூரில் என் மனைவியைச் சந்தித்தேன், சந்திப்பின் ஆறு மாதங்களுக்குள் இந்த ஊரின் பிரதான தேவாலயம் ஒன்றில் அழகான ஒரு முன் மதியத்தில் எங்கள் வாழ்வை இணைத்துக்கொண்டோம்”.

அடியற்ற முக்கோணமாக தலைக்குமேல் சென்ற வாத்துக் கூட்டத்தின் நிழல் எங்கள் இருவரையும் வருடிச் சென்றது.

“என் மனைவி செவிலியாகப் பணி செய்து ஓய்வுபெற்றாள். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரு மகன்களும் அமெரிக்க இராணுவத்தில் பணிசெய்கிறார்கள். மகள்கள் மனம் புரிந்துகொண்டு வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள். பன்னிரண்டு பேரக் குழந்தைகள். நிறைவான அமெரிக்க கனவை வாழ்ந்தோம்”.

அவர் மேலும் பேசக் காத்திருந்தேன். இருபது அடிகள் தள்ளி பொருட்கள் பிதுங்க நின்றிருந்த என்னுடைய வாகனத்தை அனிச்சையாக பார்த்துவிட்டு மீண்டும் அவருடைய கண்களை நோக்கினேன்.

“என் மனைவி ஒரு புத்தக விரும்பி, வாசிப்பில் மூழ்கிக் கிடந்தவள். எங்கள் இருவருக்குமே மலைகள் மேல் பெருவிருப்பம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு மலைநகர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக வைத்திருந்தோம். மேற்கு விர்ஜீனியா, டென்னெஸி, யூட்டாஹ், கொலராடோ என நாங்கள் சென்ற இடங்களின் நினைவுகளை வருடம் முழுக்க பேசிப் பேசி வளர்த்துக்கொள்வோம். அடுத்த முறை எந்த மலைநகருக்கு செல்வது என்பது குறித்த எதிர்பார்ப்பு எங்களுக்குள் வளர்ந்த வண்ணமே இருக்கும்”.

மலைகளின் மேல் ஏன் இந்த ஈடுபாடு என்ற என்னுடைய கேள்வியை ஊகித்தவராகத் தொடர்ந்தார்.

“மலைகளின் மேல் ஏன் இந்தப் பற்று என்பதை எங்கள் இருவருக்குமே தர்க்கரீதியாக விளக்கத் தெரியவில்லை. நாங்கள் ஃப்ளோரிடாவின் கடற்கரைகளுக்கும் கலிஃபோர்னியாவின் காடுகளுக்கும் கூட பயணித்திருக்கிறோம். நம்முன் அசைவற்ற பேரிருப்பாக வீற்றிருக்கும் மலைகளின் காலடியில் சிற்றுயிர்களாக இருப்பது ஒரு ஆன்மீக அனுபவம் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது”.

அவர் இந்தக் கேள்வியை வாழ்வின் பல தருணங்களில் எதிர்கொண்டிருப்பார் என்று ஊகித்தேன். தொடர்ச்சியாக இயற்கையின் முன் நின்றிருக்கும் மனம் அதை வேடிக்கை பார்க்கும் மனநிலை தாண்டி வேறொன்றாக உருவகப்படுத்திக்கொள்வதை இயல்பான நகர்வு என்றே எண்ணினேன்.

“நாங்கள் எங்களுடைய கடைசி கட்ட வாழ்க்கையை மலைகள் சூழ்ந்த ஒரு கிராமத்தில் கழிக்க முடிவுசெய்தோம். கடந்த பத்தாண்டுகளாக அது குறித்த கனவுகளில் ஆழ்ந்திருந்தோம். நாங்கள் மேற்கொண்ட ஒவ்வொரு பயணமும் எங்களை இந்த நகர்வுக்காக மனதளவில் ஆழமாக தயார்படுத்தியிருப்பதாக நம்பினோம்”.

'இவர் ஏன் அவருடைய வாழ்வை என்னிடம் பகிர்கிறார்?' என்று எனக்குள் எழுந்த கேள்வியை தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த எண்ணங்கள் சிதறடித்தன. நான் இந்த மனிதரை அவருடைய வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில் சந்தித்திருக்கிறேன் என்று உள்ளுணர்ந்தேன். எங்கள் இருவருக்குமே இந்த நாள், நாங்கள் உரையாடும் இந்த நிமிடங்கள் திரும்ப வரப்போவதில்லை என்பதை எண்ணித் திகைத்தேன். மனித வாழ்வு தற்செயல்களின் முயக்கங்களால் அசையக்கூடியது எனும் எண்ணம் உடையவன் நான். இந்த தற்செயல்களுக்குப் பின் பிரபஞ்சத்தின் தீராத விசை ஒன்றும் உள்ளது. எங்கள் இருவரையும் இணைக்கும் இந்த தற்செயலுக்குப் பின் உள்ள திட்டம்தான் என்ன?

“நானும் என் மனைவியும் எங்கள் விருப்பத்தின்படி கொலராடோ மாகாணத்தில் ரெட்ஸ்டோன் என்ற சிறிய மலைநகரத்தில் ஒரு பண்ணை வீட்டை வாங்கியிருந்தோம். கடந்த சில வருடங்களாகவே சில மாதங்களை அங்கு தங்கிச் செல்விட்டோம். வீட்டைச் சுற்றி மலைகள், அருகில் பிறந்த குழந்தையைப் போன்ற தூய நீர் கொண்ட குளிர்ந்த சுனை, மலைகளின் வெள்ளிச் சரடாய் ஆறுகள், சில மைல்களில் வழிபாட்டுக்கு ஒரு பழைய தேவாலயம் என்று எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற ஒரு சூழல்”.

அவர் பேச்சை நிறுத்தி தொலைவில் எங்கோ பார்வையைச் செலுத்தி ஒரு பெருமூச்சை அயிர்த்தார். அவருடைய வாழ்வைத் திருப்பிப் போட்ட ஒரு நிகழ்வைப் பகிரப்போகும் தீவிரம் அவரில் கூடியது. தன்னை மீட்டுக்கொண்டவராக தொடர்ந்தார்.

“ஆறு மாதங்களுக்கு முன் என் மனைவி நோயில் வீழ்ந்தாள். வாழ்வு முழுக்க சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தவள். நான் அவள் நோயுற்று கண்ட நாட்கள் மிகக் குறைவு. நோயில் வீழ்ந்த ஒரு வார காலத்துக்குள் கடவுள் அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். எனக்கு அவளுடைய பிரிவை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. சில மாதங்கள் உயிர்ப்பற்று இயங்கிக்கொண்டிருந்தேன்”.

“உங்களுடைய மனைவியின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்ற வார்த்தைகளை உதிர்த்தேன். என்னுடைய மனஅதிர்வை இந்த சம்பிரதாயமான வார்த்தைகள் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்று தோன்றியது. தேய்வழக்காக ஒரு சொற்றொடரை உதிர்த்ததற்காக என்மேல் ஒரு சுயவெறுப்பு தோன்றியது.

“நன்றி. நம் வாழ்வின் மிகச் சிறந்த நாட்களை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்கிறோமா? அப்படி பிரக்ஞைபூர்வமாக உணர்ந்துகொண்டால் இயல்பாக இந்த நாட்களைக் கடக்க இயலுமா? எங்களுடைய வாழ்வின் அதீத இனிமையை கடவுள் விரும்பவில்லையா? நான் கேள்விகளை மட்டும் அடுக்கிக்கொண்டிருந்தேன். நாம் எதிர்பாராத ஒரு சூழலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது தெரியாமல்தான் சோர்வில் மூழ்குகிறோம். எங்களுடைய கூட்டு விருப்பப்படி ரெட்ஸ்டோன் பண்ணை வீட்டில் என்னுடைய கடைசி நாட்களைச் செலவிட வீட்டையும் ஊரையும் விட்டு நிரந்தரமாகக் குடிபெயர முடிவுசெய்தேன்”.

எனக்கு அந்த மனிதரின் மேல் அனுதாபமும் வியப்பும் ஒருசேரக் கூடியது. தன்னுடைய வாழ்வின் மொத்த நிகழ்வுகளையும் கோர்த்து அதன் கூர்ந்த முனையில் நின்று இந்த முடிவுக்கு வந்திருப்பார் என்று தோன்றியது.

“ஆனால் என் மனைவி என்னுடன் எப்போதும் இருக்கிறாள் என்றே உணர்கிறேன். நான் அவளோடு தொடர் உரையாடலில்தான் இருக்கிறேன். இதோ என்னுடைய ஆர்.வியில் அவளுடைய புத்தங்கள் அடங்கிய சில பெட்டிகளையும் எடுத்துச் செல்கிறேன், அவள் அங்கு வாசிக்க விரும்பக்கூடும்.  எங்களுடைய பண்ணை வீட்டின் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு மலைகளை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தோம். மாமிசத்தை வாட்டிக்கொண்டு வைன் அருந்தியபடி மலைகளின் காலடியில் அமர்ந்திருந்தோம். நான் அங்குள்ள மலையாற்றில் டிரௌட் மீன்களைப் பிடித்து வருவேன். அவற்றை பலவகை பதார்த்தங்களாகச் சமைப்பதில் தேர்ந்தவள்".

அவர் என்னிடம் பகிர்ந்துகொள்ளவேண்டியவை சொற்களின் கணக்கில் இன்னும் சொற்பமே உள்ளது என்று தெரிந்தது.

“நான் அவளோடு உரையாடுவது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அவள் என்னுடன் வாழ்ந்தபோது நான் உணர்ந்த அருகாமையைவிட இப்போது அதிகமாக உணர்கிறேன். என் மனைவி உயிரோடு இருக்கையில் உடல்களாக நாங்கள் பிரிந்திருந்தது பௌதிக விதிகளின்படி தவிர்க்கமுடியாதது. ஆனால் மறைவுக்குப் பின் அவள் என்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவளுடைய உடலற்ற ஏதோ ஒன்று என்னுடன் எப்போதும் உள்ளது, அதை ஆன்மா என்று சொல்லிக்கொள்ளலாம். இதோ நம் உரையாடலைக்கூட அவள் கவனித்துக்கொண்டுதானிருக்கிறாள்”, என்று சொல்லிப் புன்னகைத்தார்.

என்னுடைய மனம் இன்னும் கனக்கத் தொடங்கியது, ஒரு பெருமூச்சு என்னைவிட்டு வெளியேறியது. அங்காடிக்குள் செல்ல மக்கள் தங்கள் வாகனங்களுடன் வந்த வண்ணமிருந்தனர்.

“575 என்ற எண்ணுடன் ஒரு தபால் பெட்டி இருக்கும் வீட்டை இந்த கிராமத்து சாலையின் வடக்காக நான்கு மைல்கள் சென்றால் காணலாம். நாங்கள் நாற்பது வருடங்கள் கொண்டாட்டமாகக் கழித்த வீடு அது. நண்பர்களிடமும் சுற்றத்திடமும் விடைபெற்று இதோ எங்களுடைய பயணத்தின் பாதையில் இருக்கிறேன். கடைசியாக இன்னொருமுறை நான் வாழ்ந்த ஊரைத் திரும்பிப்பார்க்கலாம் என்று இங்கு நிறுத்தினேன். மனிதன் நினைவுப் பொதிகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஒரு ஜந்துதானே? கடந்த சில நாட்களாக என்னை அணைத்து விடையளித்த உடல்களின் வெம்மை இன்னும் அகலவில்லை” என்று சொல்லி நிறுத்தினார்.

“உங்களுடைய நகர்வு வெற்றிகரமாக அமையட்டும், கடவுள் உங்களுடனிருப்பார்” என்று சொல்லி அவரை இறுக்கமாக அணைத்து விடையளித்தேன்.

சில அடிகள் நகர்ந்தவர் எதோ எண்ணியவராகத் திரும்பி, “நீங்கள் இந்த ஊருக்குப் புதியவரா? மன்னிக்கவும், பேச்சின் ஓட்டத்தில் கேட்கத் தவறிவிட்டேன்” என்றார்.

“ஆம்” என்று மட்டும் சொன்னேன்.

“வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு அவர் வண்டியை இயக்கி அருகில் உள்ள சாலையில் இணைந்து பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“575 ஃபாக்ஸ் ஸ்ட்ரீட், கௌன்டி ரோட், சில்வேனியா” என்ற விலாசம் கொண்ட அந்த விட்டுக்குள் என்னுடைய வண்டியை நுழைத்தேன். நான் இதே வீட்டை வாங்கியிருப்பதையும் இங்கு குடிபெயரப்போவதையும் அவரிடம் சொல்லவில்லை.

சில நாட்கள் கழித்து பின்னிரவில் மேல்தள சாளரக் கண்ணாடியில் தெரிந்த நட்சத்திரங்கள் அடர்ந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நட்சத்திரக் கூட்டங்களினூடே ஒரு எரி நட்சத்திரம் நெருப்புக் கோடாய் சில நொடிகள் ஒளிர்ந்து நகர்ந்து மறைந்தது. அவர் இந்த நேரம் தன்னுடைய பண்ணைவீட்டில் அமர்ந்துகொண்டு மலைகளின்மேல் நகர்ந்த இதே எரி நட்சத்திரத்தைப் பார்த்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். என் முகம் இயல்பாக ஒரு புன்னகையை வரித்துக்கொண்டது.

Comments

  1. இனிவரும் நாளில் எரிநட்சந்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் நேரங்களில் உங்களின் கதை நினைவில் வரும். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கதை. வாழ்த்துக்கள் பாலாஜி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை