வாசக சாலை, தினவு இதழ் - மதார் கவிதைகள்

                                                 


அன்புள்ள மதார்,

இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்து சற்று ஏமாற்றத்தில் இருந்தேன். சுகுமாரன் கவிதைகள் மொத்த தொகுப்பு (காலச்சுவடு வெளியீடு), இசை கவிதைகள் (சிவாஜி கணேசனின் முத்தங்கள்); இரண்டுமே ஏனோ திருப்தி தரவில்லை. இதற்கான காரணங்கள் வாசகனாக என்னுடைய தரப்பிலும் இருக்கலாம். கவிதைகளை வாசிக்கும்போது பற்றிக்கொள்ள ஏதுவாக காய்ந்த சருகாக இருப்பது எல்லா சமயங்களிலும் வாய்ப்பதில்லை; புற எதார்த்தங்களின் ஈரத்தால் ஊறிப்போயிருந்ததும் ஒரு காரணம்தான். 

உங்கள் கவிதைகளை இங்கு கடும் குளிர் காலத்தின் அதிகாலையில் என் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வாகன நிறுத்தத்தில் அவன் உள்ளே செல்லக் காத்திருந்த பத்து நிமிட இடைவெளிக்குள் வாசித்தேன், மனச் சருகுகள் பற்றிக்கொண்டன; ஒரு நல்ல கவிதை நம்மை கணநேரம் எல்லாவற்றையும் துறந்து ஆழமாக சிந்திக்க வைத்துவிடுகிறது. மீண்டும் கவிதைகளை நோக்கி நம்மை நகர்த்தும் காரணியும் அதுதான்.

வாசக சாலை தினவு இதழில்களில் வந்த கவிதைகளில் இருந்த வாசிப்பு சாத்தியங்கள், பொருள் மயக்கம், துள்ளல், இனிமை என்று சில மணிநேரங்கள் மனதை மிகக் கூர்மையாக வைத்துக்கொள்ள உதவின. ஆம், நல்ல கவிதைகள் என் சிந்தனைகளைக் கூராக்குகின்றன. அது வாழ்வை தத்துவ நோக்கில் அணுகவும், சற்று விலகி நின்று வேடிக்கை பார்க்கவும் சொல்கின்றன. புத்துணர்வு அளித்தன என்று நிச்சயமாக சொல்லலாம்.

ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒன்றைப் புதிதாக எனக்கு அளித்தன. எனக்கு மிகவும் அணுக்கமான கவிதைகளாக 'ஓசை மட்டும் கேட்டால்', 'படத்தொகுபாளன்' ஆகியவற்றைச் சொல்வேன். 'காலம் அம்பு' (2) கவிதையின் இசைமை மிகவும் கவர்ந்தது - இசைமையும் கூர்மையும் சேர்ந்துகொள்வது அபூர்வமான ஒரு கலவை, அது இந்த கவிதையில் சாத்தியமாகியுள்ளது. வாசக சாலை கவிதைகளில் ஆறாவது கவிதையில் இருந்த அனாயாசமாக ஒன்றைத் தொட்டுவிடும் தன்மையும் (படிகள்), தினவு இதழில் வந்த நெருப்பு கவிதையில் இருந்த படிமத்தன்மையும் தத்துவப் பார்வையும் குறிப்பிடத்தக்கவை. 

உங்களிடம் ஒரு மந்திரக்கோல் உள்ளது என்று கண்டிப்பாகச் சொல்வேன், அது கடவுள் உங்களுக்கு அளித்தது. அதிலிருந்து கவிதைகள் வந்துகொண்டே இருக்கட்டும், மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: கவிதை வாசகரை பேட்டி எடுத்திருந்த ஐடியா பிரமாதம்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை