மேசன்களின் உலகம் - கவிஞர் வேணு தயாநிதி

                                        

கவிஞர் வேணு தயாநிதி 'காஸ்மிக் தூசி' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்வனம், அகழ், பதாகைkavithaigal.in போன்ற பல இணைய இதழ்களில் அவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. தன்னுடைய கவிதைகளைத் தொகுத்து அதன் வரைவை வாசிக்க அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதம் இங்கே,

அன்புள்ள வேணு,

தொகுப்பை இரண்டு முறை வாசித்தேன், பெரும்பாலான கவிதைகளை பலமுறை வாசித்துவிட்டேன். கவிதைகள் குறித்து தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்கிறேன்.

கவிதைகளை தொகுப்பாக வாசிக்கையில் கவிஞனுடைய அக மற்றும் புறச்சூழல் குறித்த சித்திரம் வாசகனின் மனதில் உருவாகிவிடுகிறது; அது ஒருவகையில் இயல்பானது என்றே எண்ணுகிறேன். எனக்கும் உங்கள் தொகுப்பை வாசிக்கையில் வேணு தயாநிதி எனும் கவிஞனுடைய சூழல் குறித்த ஒரு பார்வை கிட்டியது; அல்லது அதை நான் என்னுடைய வாசிப்பில் உருவாக்கிக்கொண்டேன்.

முதலில் புறச்சூழலைப் பார்ப்போம் – இதையே இரண்டாகப் பிரித்துக்கொள்கிறேன் – மேப்பிள், பிர்ச், பைன், அணில், ஏகார்ன் பழம், வெண்பனி, பூங்கா, ஏரி, பறவைகள், அம்முக்குட்டி என தற்போதைய மினியாபொலிஸின் அடர்குளிர் அமெரிக்க சூழல். மதுரை மேலூர் சாலை, ராஜ கோபுரம், ஒரு நகரத்தின் விடுதி அனுபவம், பால்ய நண்பர்கள், கோவில்கள், பூதகணங்கள், குமரகுருபன் தேனீர்நிலையம் என ஒரு தென்தமிழக சூழல்.

அடுத்து அகச்சூழல் – உங்கள் கவிதைகளை வாசித்தவுடன் முதலில் எனக்கு தோன்றியது வார்த்தைகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் ஒரு வரண்ட புன்னகை. இதே புன்னகை வாசகனாக என் மனதிலும் இயல்பாக அமைந்துகொள்கிறது, அது வெளிப் புன்னகையாகவும் மாறிவிடுகிறது. பல கவிதைகள் படு ரகளையான துள்ளலான மனநிலைகளையும் தோற்றுவிக்கின்றன. இப்படி வரண்ட புன்னகைக்கும் ரகளைக்கும் இடையில் தனிமையை, தற்செயல்களின் வலிமையை, பழைய நினைவுகளின் வலியை, நம்மைத் தொடரும் தெய்வங்களின் கருணையைப் பேசும் கவிதைகளும் உள்ளன.

இப்படி கவிதைகளை வகைப்படுத்திக்கொள்வது அவற்றை குறுக்கிவிடும் நோக்கில் அல்ல; எல்லா கவிதைகளும் ஏதோ ஒரு சூழலில் இருந்தே எழுகின்றன – அவை எல்லோருக்குமான எல்லா சூழல்களுக்குமான பொதுவான ஒரு கலைவடிவமாக மாறுகின்றன, எழுச்சி அடைகின்றன. அதில்தான் ஒரு கவிஞனின் படைப்பெழுச்சியும் அவனுக்கேயான ஞானமும் வெளிப்படுகிறது. நிலத்தில் விதையாக தொடங்கும் மரம் தன் உச்சிக்கிளை கொண்டு வானைத் துளாவுவதைப் போலத்தான் கவிதைகளும். உங்கள் தொகுப்பிலும் நான் குறிப்பிட்ட அக புறச்சூழல் தாண்டி அனைவருக்குமான பொதுத் தளத்தில் இயங்கும் அனுபவங்களையும் மனநிலைகளையும் தோற்றுவிக்கும் பல கவிதைகள் உள்ளன.

உங்கள் கவிதைகளின் நடை குறித்து குறிப்பிட்டு சொல்லவேண்டும். மிக எளிய வார்த்தைகளில் சரளமாக உருவாகி ஒரு உச்சம் நோக்கி லாவகமாக நகரும் கவிதைகள் உங்களுடையவை. எளிமையான மொழில் அமைந்த கவிதைகளின் வரிகளே நம்மால் என்றும் நினைவுகூரப்படுகின்றன. அது ஆழந்த இயற்கை வர்ணனையாகட்டும், ஒரு நகரச் சூழலாகட்டும், கோவில்களின் அற்புதங்களாகட்டும் - முகமூடிகள் நிழல் மேசன்கள் டைனோசர் ஆடிகள் போன்ற படிமங்களால் மட்டுமே அமைந்த கவிதைகளாகட்டும், எல்லாமும் இயல்பாக குவிந்து மனதில் நுழைந்து வெடித்து அமர்ந்துகொள்கின்றன. உங்கள் கவிதைகளை ஒரு தொடக்க கவிதை வாசகனால் சிரமமில்லாமல் வாசிக்க இயலும். ‘நிகழ்தகவின் மானுடத்துவம்’ போன்ற கவிதைகள் விதிவிலக்குகளே.

‘ஒரு புத்தகத்தின் மரணம் (ஆல்லது) கவிதையைக் கொலை செய்வது எப்படி?’ என்ற கவிதையில் வரும் இந்த வரிகள் மேல் குறிப்பிட்ட பத்தியை விளக்க உதவலாம். இது கவிஞன் உத்தேசிக்கும் கவியுலகிலிருந்து வெளியேறித் துளைக்கும் தோட்டாவாகவும் இருக்கலாம்.

படிமங்கள் செறிந்த

வரிகளுக்குள்

ஆழமாகவே

நுழைந்து சென்றிருந்தது

தோட்டா

----

தொகுப்பில் தனிமையின் ஆழத்தைச் சொல்பவை என பல கவிதைகளை சுட்ட இயலும். அவற்றில் ‘சர்ப்பம்’, ‘தனித்த பறவையின் நிலப்பரப்பு’ கவிதைகளை திரும்பிப் பார்க்கிறேன்,

பார்க்க எவருமில்லை

என அறிந்தபின்

படம் சுருக்கி

தளர்ந்து திரும்பிச் செல்லும்

சலிப்புடன்

என சர்ப்பத்துக்கும்

நூற்றாண்டுகளின்

குரோதம்

அல்லது கருணை

என எழுந்த கடும் பனிச்சூழலில் யாருக்கோ காத்திருக்கும் ஒரு முதிய பறவைக்குமான தொடர்ச்சியை காணமுடிகிறது. ‘விழிப்பு’ கவிதையில் யாமத்தில் எழுந்து பதறும் உள்ளம் எதிர்கொள்ளும் தனிமையும் இதில் இணைந்துகொள்ளும், ஆனால் இந்த உள்ளத்தின் தனிமை விவரிக்க இயலா பிரபஞ்சத்தனிமை; மனிதர்களுக்கு மட்டுமேயானது.

----

நாம் எண்ணிப்பார்த்திராத கோணம் ஒன்றை அளிப்பவனே கவிஞன். ‘கருந்துளை’ கவிதையின் இந்த வரிகள் நாம் கருந்துளைகளை கருமை என்றும் தொலைவிருப்பவை என்றும் எண்ணிக்கொண்டிருப்பதை அந்த எண்ணங்களை உடைப்பவை,

கவனமற்ற புதர்

கத்தரிப்பு, கவனமாக நீக்கப்பட்டு

ஏதுமற்ற மையம்

இவற்றில்

மறைந்திருக்கும்.”

----

‘அந்த சம்பவத்துக்குப் பிறகு’ கவிதையில் நரியிடம் வடையைப் பறிகொடுத்த காகம் பாட்டு பயிற்சியை விட்டுவிட்டு ஒல்லிப் பையனுடன் காதல் செய்யச் சென்றுவிடுகிறது. வடையைத் தின்ற நரி இன்னொரு கதையில் திராட்சையை எட்ட இயலாமல் மும்பை ரயிலில் இருமிக்கொண்டிருக்கிறது. வடைசுட்ட பாட்டி பெரிய மகள் வீட்டில் தொலைக்காட்சி தொடர் பார்த்துக்கொண்டிருக்கிறாள். புன்னகைக்காமல் இந்த கவிதையை எப்படி வாசிக்க இயலும், பின்நவீனத்துவ பிரதி அல்லவா?

திருடுபோன வடையும்

புளிக்கும் திராட்சையும் தவிர

சில கதைகள் மட்டும்

ஏன் இவ்வளவு நீளமானவையாக இருக்க வேண்டும்

என்பது மட்டும்

அவளுக்கு இன்னும்

விளங்கவே இல்லை

----

‘அல்லல் உழப்பது’ கவிதையின் நண்பன் நட்புக்காக குடிக்கும் நண்பனின் வாந்தியை துவைத்துக்கொண்டு அடுத்த அழைப்பையும் மறுக்க இயலாமல் தவிக்கிறான். அந்த நண்பன் அசோகமித்திரன் சிறுகதைகளில் வரும் ஒரு கதாப்பாத்திரம் என்று தோன்றியது,

ஆனால்

இன்றிரவு

அவன் உடலை

அவன் வீட்டில்,

வேறு யார்

கையளிப்பார்?

----

‘மயானத்திலிருந்து திரும்பியபிறகு’, ‘அழுகையின் விதிமுறைகள்’ கவிதைகளை ஒன்றின் நீட்சியாகவே வாசித்தேன். அழுகை என்பது ஒரு இழப்பின் வலியாக மட்டுமல்லாமல், காரணமற்ற அல்லது எல்லாக் காரணங்களையும் இணைத்துக்கொண்ட ஒரு உணர்வினூடாகவும் இருக்கலாம்,

ஆகவே அழுகையை

உடனே அழுதுவிடுவது

நல்லது

----

கடவுள்களையும் குழந்தைகளையும் தவிர்த்துவிட்டு கவிதைகளை எழுதிவிட முடியாது. ஒரு கவிஞன் எல்லாவற்றுக்கும் காரணமான பேரிருப்பை கொந்தளிப்பான கேள்விகளோடு எதிர்கொள்ளலாம், பணிந்து முனகலாம், சரணடைந்து கலங்கலாம்; அல்லது புதுமைப்பித்தனைப் போலவும் எதிர்கொள்ளலாம். நீங்கள் “உன் இருப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை, அதனால் என்ன உன்னுடன் சற்று விளையாடிப் பார்க்கிறேனே” என்று சொல்கிறீர்கள்.

‘சடாரி’, ‘அப்பாவின் கடவுள்’, ‘கால பைரவரின் கடைசி பயணம்’, ‘நாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தகள்’, ‘நந்தி’, ஆகிய கவிதைகளில் மனிதனுக்குள்ள எல்லா சராசரித்தனங்களோடும் கடவுள்கள்கள் சித்தரிக்கப்படுகின்றன; கடவுள்கள் பலகீனமான ஆத்மாக்களாக இருக்கிறார்கள். ‘நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம்’ கவிதையில் கடவுள்கள் மனிதர்களாவே வெளிப்படுகிறார்கள், அல்லது மனிதர்கள் கடவுள்களாக. இந்த கவிதைகளில் உள்ள எள்ளல் இவற்றை இனிய வாசிப்பனுவங்களாக மாற்றுகிறது, அதீத ரகளை என்று சொல்லக்கூட தயங்கமாட்டேன்,

எல்லாவற்றையும்

மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்

அந்த

பெரிய கடவுளுக்கு –

யாராம் கடவுள்?

சிறிய பிழைகள்தாம்

என்றாலும்

பெரிய விளைவுகள் –

மகாவிஷ்ணு

மற்றும் மனிதர்கள் –

யாராயினும்

----

‘ராஜ கோபுரம்’ கவிதை சித்திரை வீதியையும் அதனை சூழ்ந்த காட்சிகளையும் நுணுக்கமாக விவரித்து சென்று மேளம் கொட்டும் சிற்பமாய் நிற்கும் ஒரு மனிதரின் மார்பில் உள்ள ஈயைச் சுட்டி திகைத்து நிற்கிறது. இத்தனை அதிசயங்களையும் கண்டு சலிக்கும் ஒரு மனதிற்கு ஈ தென்படுகிறது. கவிதை நுண்ணிய உணர்வுகளைச் சொல்லும் அல்லது கிளர்த்தும் கலை, அது இந்த கவிதையில் உங்களுக்கு கைகூடியிருக்கிறது. எனக்கு மிகவும் அணுக்கமான கவிதைகளில் ஒன்று இது,

அவர் மார்பில்

மாலைகள்

நகைகள்

பூக்கள்

ஆ…

!”

----

கவிதை தொகுப்புகளை வாசிப்பது நம்முடன் என்றும் பயணம் செய்யத்தக்க சில கவிதைகளை தேடித்தான்; ‘மேசன்களின் உலகம்’ அப்படியான ஒரு கவிதை. எனக்கு ‘மேசன்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது, ‘மேசன்’ எனும் படிமம் உடனடியாக புரிந்துவிட்டதைப்போலவும் புரியாததைப்போலவும் கலவையாக மனம் மயங்குகிறது. ஆனால் கவிதையின் வசீகரம் அபாரம். எல்லாம் துலங்கிவிட்டால் அது கவிதையாக இருக்காது அல்லவா? சற்று அருவமாக இந்த கவிதையை என் மனதில் நிறுத்திக்கொள்கிறேன்,

நம்மைச் சுற்றிலும்

எங்கும் எப்போதும்

நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்,

மேசன்கள்.

நான் ஒரு மேசன்.

இதுவரையும்

விடாது இதைப் படித்துவிட்டமையால்

நீங்களும் ஒரு மேசன் தான்

----

ஒரு தொகுப்பில் சில படிமங்கள் தொடர்ந்து வருவது இயல்பானதே, உங்கள் தொகுப்புக்கு முகமூடி என்று எண்ணிக்கொள்கிறேன். மேசன் என்பதைக்கூட ஒரு முகமூடியாகவே வாசிக்கிறேன்.

ஒரு நகரம் தன் முகமூடிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது,

துப்புரவு செய்த

பழைய முகமூடிகளை

புதைப்பதா? எரிப்பதா?

என்ற வரிகளில் தொடங்கி ‘முகமூடிகளின் நகரம்’ கவிதையை மீண்டும் வாசிக்கலாம்.

‘முகமூடித்தொழிற்சாலை’ கவிதையில் இந்த கடைசி வரி எதைக் குறிக்கிறது? இந்த முகமூடிகள் எவை? நாம் முகமூடிகளைத் தயாரிப்பவர்களா அல்லது தயாரிக்கப்படும் முகமூடிகளை அணிந்துகொள்பவர்களா?

"இதுவா என் முகம்?"

----

‘தூரதேசத்து ஓடையில் ஒரு துளி’ கவிதை பால்யகாலத்தின் மறக்கவியலாத தருணங்களை சுட்டி நிற்கிறது,

எவர் சொன்னது?

தூய நீர் –

மணம் நிறம் சுவை

அற்றதென?

‘மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்” கவிதையின் இந்த வரிகளும்,

உனை நினைவுபடுத்த என்று

இந்த உலகில்

எப்பவும்

ஏதோ ஒன்று

இருக்கத்தான் செய்கிறது

‘நினைவு கொண்டிருப்பது’ கவிதையின் இந்த வரிகளும் நினைவுகளின் வலிமையைப் பேசுகிறது. சூழல் நம் நினைவுகளை அசாதாரண தருணங்களில் மீட்டெடுத்துவிடுகிறது,

சரிதான். ஒரு இலை கூட

உன்னைத் தவிர –

வேறு யாரைத்தான்

நினைவுபடுத்தும்?

----

‘முதல் துளியின் பனி’ கவிதை சுட்டும் முதல் பனி எத்தனை காத்திரமானது? இதன் தூய அழகு எத்தனை காரணிகளைச் சுமந்து வருகிறது? எண்ண எண்ண நம் கற்பனைகளில் விரிந்து மலைக்க வைக்கிறது. அபாரமான ஒரு கவிதை இது,

விசும்பிலிருந்து

துளிர்த்துத் தெறிக்கிறது –

முதல் துளியின்

பனி.

‘தூய வெண்மையின் பொருளின்மை’ கவிதையில் வரும் அணிலின் விழித்திரையில் ஒருங்கும் பிரபஞ்சம் எனும் வரிகளை என்னால் எளிதாக கடக்கமுடியவில்லை,

இப்போது

எங்களுடன் –

ஏரி தியானிக்கிறது

காற்று தியானிக்கிறது

வானம் தியானிக்கிறது

மரங்கள் தியானிக்கின்றன

மலைகள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்

ஒரு புராதன ஓவியமாய்

அசைவின்றி

எஞ்சி ஒருங்கும்

இப்பிரபஞ்சம்.

----

‘புத்தர் விமானநிலையத்தில் காத்திருக்கிறார்’ கவிதையின் கடைசி வரிகள் மனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்துகிறது. இங்கு வரும் ரோலக்ஸ் கடிகாரம் காலம் எனும் நாம் என்றும் கடக்கவியலா வலிமையை குறிப்புணர்த்துகிறது. இயல்பான வர்ணனைகளாக தொடங்கும் கவிதை தொடர்வாசிப்பில் ஆழமாய் மனதில் இறங்குகிறது,

யாரோ ஒருவர்

தவறவிட்ட விமானம்

பறவையாகி

தலைக்குமேல்

பறந்து செல்கிறது

----

‘செம்பருத்தி’ கவிதையில் ஆட்டுக்குட்டியும் செம்பருத்தியும் எதிர்கொண்டு நிற்கும் கூடம் நம் எல்லோருடைய மனதிலும் கடந்தகாலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது; ஒரு ஓவியத்தின் பிம்பமாய் கிடக்கிறது. எனோ இந்த கவிதை ஒரு தீராத வலியை அளிக்கிறது,

தன் ஞான திருஷ்டியால்

அறிந்துவிட்ட

கறுப்பு நிற ஆட்டுக்குட்டி

குலையை மென்றபடி

மோனத்தில் நிற்கும் வாசலில்

அக்கணத்தை இறுகப்பற்றி

கூடத்தின் திசை நோக்கி

இன்னும்

எட்டிப்பார்த்து நின்றிருக்கும்

செம்பருத்திப்பூக்கள்

இரண்டு.

----

‘தற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம்’ கவிதையில் உள்ள தெய்வத்தை அடையாளம் காணத்தெரிந்த உள்ளம் ஆழமானது. சாதாரண ஒரு காலைநடை என்னுடைய வாசிப்பில் அமானுஷ்யமான ஒன்றாக மாறுகிறது. நான் மிகவும் நெருக்கமாக உணரும் மற்றுமொரு கவிதை,

தனியனாய்

நான் நடக்கும்

பாதை நெடிதும்

காட்டுப்பூவின்

நறுமணமாய்

நிறைந்து

விடாது

உடன் வரும்

துணையென –

பெயர் தெரியாத

ஒரு தெய்வம்.

----

'நம் கடைசி இடம்', 'நூற்றாண்டுகளின் சர்ப்பம்', 'பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்', 'எண்ண முடியாத இலைகளில் வெறுமை' , 'கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்', 'திரை விலகிய அறையின் அதிசயங்கள்' என இன்னும் பல கவிதைகளை பல்வேறு காரணங்களுக்காக என்னால் குறிப்பிடமுடியும். கடிதத்தின் அளவு கூடிவிடும் என்பதால் நிறுத்திக்கொள்கிறேன். 

மிக நிறைவான ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்த உணர்வு என்னை வியாபித்திருக்கிறது, மனமார்ந்த வாழ்த்துக்கள் வேணு.

அன்புடன்,

பாலாஜி ராஜூ எனும் பெயருடைய மற்றுமொரு மேசன்

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை