Cathedral சிறுகதை – ஒரு பார்வையற்ற தேவதூதன்

                                                        

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் 'Raymond Carver' எழுதிய 'Cathedral' சிறுகதை, ஒரு வாசகக் குறிப்பு.

பார்வையற்ற ஒரு மனிதர், தன்னுடைய நீண்ட நாள் தோழியைப் பார்க்க அவளுடைய வீட்டுக்கு வருகை தரும் ஒரு இரவில் துவங்குகிறது இந்தச் சிறுகதை, அசாத்தியமான ஒரு இரவு அது. அந்தத் தோழியின் கணவனுடைய கண்ணோட்டத்தில் கதை விவரிக்கப்படுகிறது. அவளுடைய கணவன் சராசரியான ஒரு மனிதன், எதிலும் நம்பிக்கையற்ற, வாழ்வில் எதையும் உதாசீனமாகக் கடந்துவிடும், சுயநலப்போக்குள்ள ஒரு மனிதன். பார்வையற்ற அந்த மனிதரின் வருகையை அவன் ஒருவித சங்கடத்துடனே எதிர்கொள்கிறான், அவனுடைய மொத்த வாழ்வும் அந்த ஒரு இரவில் மாறப்போவதை அறியாமல்!

தம் மனைவிக்கும் அந்தப் பார்வையற்ற மனிதருக்குமான நீண்ட கால நட்பை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுடைய மனைவியும், அந்த மனிதனும் ஒலிப்பேழைகளை அஞ்சலில் பரிமாறிக்கொள்கிறார்கள். தத்தமது வாழ்வையும், அவற்றின் நிகழ்வுகளையும் அந்த ஒலிப்பேழைகளின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அவனுடைய மனைவி, அந்தப் பார்வையற்ற மனிதரிடம் சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்குச் செல்கிறாள். அந்த மனிதருடைய அலுவலகப் பணி சார்ந்த ஆவணங்களை வாசித்துக் காட்டும் வேலை அது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஆழ்ந்த நட்பு மலர்கிறது. அவளுடைய வேலை முடிவுக்கு வரும் கடைசி நாளில், அந்த மனிதர் அவளுடைய முகத்தைத் தொட்டு அறிந்துகொள்ள விரும்புகிறார், அவளும் அதற்கு இசைகிறாள். அவள் முகத்தின் ஒவ்வொரு பாகமும் அவருடைய விரல்களின் தொடுகையை உணர்கிறது. அவள் வாழ்வின் மகத்தான ஒரு தருணம் அது. அவருடைய தொடுகையின் தாக்கத்தை அவள் கவிதையாக எழுதிவிடுகிறாள். அந்தத் தொடுகையின்போது அவள் மனதில் தோன்றிய எண்ணங்களை விவரிகிறாள். அவளுடைய கணவனுக்கு அந்தக் கவிதை எந்த விதமான சலனங்களையும் ஏற்படுத்தவில்லை.

அந்த மனிதருக்கு சுவையான இரவு உணவை விருந்தாக அளிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், உணவுக்குப் பின் கஞ்சாவும் புகைக்கிறார்கள். அந்த மனிதரின் புத்திக் கூர்மையும், பேச்சுத் திறனும் அவனை ஆச்சரியப்படுத்துகிறது. மனைவி இலேசாகக் கண்ணயர்கிறாள், அந்தக் கணவன் தொலைக்காட்சியில் தேவாலயங்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அந்த மனிதர் தேவாலயம் ஒன்றின் தோற்றத்தை விவரிக்குமாறு அவனிடம் கோரிக்கை விடுக்கிறார், இங்குதான் கதை அதன் மைய தரிசனத்தை நோக்கி நகர்கிறது. அவனுடைய மொத்த வாழ்வும் அந்த மனிதருக்கு தேவாலயத்தை சரியாக விவரிப்பதில் அடங்கியிருப்பதாக உணர்ந்து திகைத்துவிடுகிறான், சில வார்த்தைகளில் விவரிக்க முயன்று தோற்கிறான். அந்த மனிதர் அவனுடைய கைகளைத் தன் கைகளால் போர்த்தி ஒரு தேவாலயத்தைக் காகித்தில் வரைகிறார், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு தேவாலயத்தை உருவாக்க முனைகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அவனுடைய கண்களையும் மூடிவிடச் சொல்கிறார், அவனுடைய கைகள் அந்த மனிதருடைய கைகளின் வழிகாட்டலில் ஒரு தேவாலயத்தை வரைகிறது. முடிந்தபின் அவனிடம் கண்களைத் திறந்து அந்த தேவாலயத்தைப் பார்க்குமாறு பணிக்கிறார். அவன் கண்களைத் திறக்காமலேயே, 'இது போன்ற ஒரு அற்புதத்தை என் வாழ்நாளில் கண்டதில்லை' என்று வினவுகிறான், கதை நிறைகிறது.

கவிதைகள் நம்முள் நிகழ்த்திவிடும் மாயங்களின், அற்புதங்களின் சாத்தியங்கள் ஒரு நல்ல சிறுகதையிலும் அமைந்துவிடுவதுண்டு, அதற்கான சான்று இந்தச் சிறுகதை. அவளுடைய முகத்தை அவர் தொட்டு அறிந்துகொள்ள முயலும் அந்தத் தருணம், அந்த மனிதரின் தொடுகையுடன் அவன் உருவாக்கிவிடும் தேவாலயம் என கவிதைகளின் மைய நரம்பைத் தொட்டுவிடும் பண்புகளே இந்தச் சிறுகதையை மகத்தான இலக்கியப் படைப்பாக்கிவிடுகிறது.

பார்வையற்றிருப்பதும், குருடனாயிருப்பதும் ஒன்றல்ல!

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை