'வெயில் பறந்தது' கவிதைத் தொகுப்பு – மதாருக்கு எழுதிய கடிதம்

                                                                

கவிஞர் மதாருக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது. 

கடிதம் எழுதப்பட்ட நாள் நவம்பர் 17, 2021.

அன்புள்ள மதார்,

நலம் விழைகிறேன். என் பெயர் பாலாஜி ராஜூ, உங்கள் கவிதைகளின் வாசகன். முதலில் அற்புதமான இந்தத் தொகுப்புக்காக என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கவிதைகளை மறு வாசிப்பு செய்யும் வழக்கமுள்ளவன், மறு வாசிப்புகளில் மட்டுமே கவிதைகளை இன்னும் சற்று நெருக்கமாக உணர்கிறேன், முதல் வாசிப்பில் விடுபட்டவற்றை அடையச் செய்யும் ஒரு முயற்சி என இதை எடுத்துக்கொள்ளலாம். 'வெயில் பறந்தது' தொகுப்பை மூன்று முறை வாசித்தேன், இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டரை முறை. ஒரு வாசகனாக என்னை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன உங்கள் கவிதைகள்.

உங்கள் கவிதைகள் குறித்த சில எண்ணங்களையும் பகிர்கிறேன், இவை முழுமை பெறாத எண்ணங்களாக இருக்கலாம், உங்கள் கவிதைகளின் நுட்பங்களையும் சிடுக்குகளையும் முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். உங்கள் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன என்பதைப் புலப்படுத்த இதை விட சிறந்த முறை எனக்குத் தெரியவில்லை. இதை எழுதுவதன் மூலம் இன்னும் சில தெளிவுகள் கிடைக்குமா என்று பார்க்கவும் முயல்கிறேன்.

வெயில் குறித்த கவிதைகள்

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் வெயில் காலங்கள் என் மனதில் நீங்கா நினைவுகளாக தங்கி இருப்பவை, என் பால்யத்துடன் நேரடித் தொடர்புடையவை. கோடைக் கால பள்ளி விடுமுறை நாட்களில் வயல் வெளிகள், கிணறுகள், வரண்ட நிலங்கள், சிறார் விளையாட்டுகள் என அலைந்து திரிவதில் கழிந்தன என் நாட்கள். வெயில் என் மனதில் மஞ்சள் நிறம், புழுதி, வைக்கோல், வெப்பம் என பல கோணங்களில் விரிகிறது.

உங்கள் கவிதைகளில் வெயில் ஒரு காலநிலையாக மட்டும் இல்லாமல் தனிப்பட்ட ஒரு பாத்திரமாக உயிர்ப்புடன் உலவுகிறது. வெயில் பறக்கிறது, நம் முகத்தை மறைக்கும் முகமூடியாகிறது, வாசனையாக எஞ்சுகிறது, தும்முகிறது. கவிஞராக உங்களை எனக்கு மிக அணுக்கமாக உணரவைத்த கவிதைகள் இவை.

பால்யம் குறித்த கவிதைகள்

உங்கள் கவிதைகளில் குழந்தைகளும், சிறுவர்களும், பால்ய காலமும் பரவலாக இடம்பெறுகின்றன, அவர்கள் உலகம் அற்புதமானது. நீங்கள் பால்ய காலங்களுக்கு திரும்பச் செல்ல எத்தனிக்கும் ஒருவராக, அதைத் தொலைத்துவிட்டு ஏங்குபவராக எனக்குத் தெரிகிறீர்கள், எல்லா ஞாயிறுகளிலும் பலூன் விற்பவரை எதிர்பார்க்கும் ஒரு சிறுவனாகவும்.

என் வாசிப்பில் சிறந்த கவிதைகள் எனத் தோன்றியவை

என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளை இங்கு வரிசைப்படுத்துகிறேன், இவை எண் வரிசைப்படி அமைந்தவை. இவைகளுக்குள் மூன்றை மட்டும் தேர்வு செய்யச் சொன்னால் அது இந்த வரிசையில் கடைசி மூன்று கவிதைகளாக இருக்கும். மற்ற கவிதைகள் பிடிக்கவில்லை என அர்த்தமில்லை, அடுத்த வாசிப்புகளில் பல கவிதைகள் இந்த வரிசையில் இணைந்துகொள்ளும் வாய்ப்பிருப்பதை மறுக்க இயலாது.

பல கவிதைகளுக்கு தலைப்பில்லை என்பதால் அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவே இந்தப் பெயர்கள்/தலைப்புகள்.

எண் 5 – பந்து குறித்த கவிதை

எண் 6 – சொந்த ஊருக்குத் திரும்பும் ஒருவன்

எண் 9 – வெயில் பறந்தது

எண் 14 – வெயில் கழுவுதல்

எண் 19 – சிறுவனும் கதவும்

எண் 21 – மஞ்சள் நிறத்தின் வாசனை

எண் 26 – அசைவற்று நிற்கும் இரயில்

எண் 28 – பலூன்

எண் 30 – நீரோ நீ வாசி

எண் 32 – இரயில் நிலையத்து நாய்

எண் 40 – அதிகாலையின் இசை

எண் 45 – நிலவொளியில் திருடன்

எண் 57 – ஊரின் முகப்பில் பூக்கடை

அதிகாலையின் இசை

இந்த தொகுப்பின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று இது. ஆற்றில் அதிகாலையில் மூழ்கி அதன் ஓசைகளைக் கேட்கிறான் கவிஞன், தன்னில் மடிபவர்களின் நிறைவேறா பிரயாசைகளை, நினைவுகளை அது இசையாக மீட்டுகிறது. கவிஞனும் அதில் மூழ்கி இசையாக முயல்கிறான், அதற்கான தகுதிகள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறான்.

'அதிகாலையின் இசையை

நான் கேட்கத் துவங்கிவிட்டேன்

அது ஆற்றுக்குள்

இசைக்கப்படுகிறது

----

துல்லியமான இசையைக் கேட்க

நான் ஆற்றுக்குப் போகிறேன்

ஆற்றில் ஒரு நாயின் உடல்

மிதந்து வரக் கண்டேன்

நாளை அது வீணையாகலாம்

ஆறு அதை இசைக்கலாம்

தற்கொலை செய்துகொள்பவர்கள்

கொலை செய்யப்படுபவர்கள்

விபத்துக்குள்ளாகிறவர்கள்

ஆற்றின் இசைக்கருவிகள் ஆகிறார்கள்

----

அதிகாலையின் இசை

என் நெஞ்சை அடைக்கிறது

நான் மூழ்குகிறேன்

ஒரு இசைக்கருவி ஆவதற்குரிய

அத்தனை தகுதிகளோடும்'

நிலவொளியில் திருடன்

திருடனின் மூலம் நிலவொளி பயணித்து அவன் குகைக்குச் சென்றுவிடுகிறது. நிலவொளி நாட்கள் மகிழ்வைக் குறிக்கிறது, பஞ்ச நாட்களில் அந்த நிலவொளியைத் தன் குகையில் பொக்கிஷங்களின் ஓசை மூலம் மீட்டெடுத்துக்கொள்கிறான் திருடன். நிலவொளியில் திருடன் என்கிற காட்சி அழகிய ஒரு ஓவியமாக மனதில் நிறைகிறது.

'ஒளிர ஒளிர

திருடச் செல்கிறான்

நிலவொளியில் திருடன்

திருட்டுப் பொருட்களில்

விழுகிற நிலவொளி

எதோ பேசுகிறது

திருடன்

தன் குகை வரை

ஒளிர்ந்துகொண்டே செல்கிறான்

 

பஞ்ச காலத்தில்

தன் குகையில்

தானே

திருடுகிறான்

திருடன்

பொட்டல் முடிச்சுகளை

அங்கேயே கட்டி

அங்கேயே அவிழ்த்து

பொக்கிஷங்களைக் கொட்டுகிறான்

கொட்டுகையில்

பொக்கிஷம் மேல் பொக்கிஷம்

விழும் சப்தம்'

ஆசைவற்ற இரயில்

அசைவற்ற இரயிலை வரைய தூரிகையைத் தூக்கிக்கொண்டு ஓடும் ஓவியனுக்கு கிடைப்பது சில நிமிடங்கள் மட்டும். ஓவியமாக மாறிவிட எண்ணும் இரயிலுக்கும் கிடைப்பது சில நிமிடங்கள்தான். இடைவிடாத இந்த விளையாட்டில் முற்றுப்பெறாத ஓவியமாக   வாழ்வு!

'யாரோ தன்னை

வரைவதாக

அசைவற்று

நிலைகுத்தி நிற்கும்

இரயில் நகரத் தொடங்குகிறது

ஒவ்வொரு நிலையத்திற்கும்

ஓவியன் வருகிறான்

தூரிகையைத் தூக்கிக்கொண்டு'

சொந்த ஊருக்குத் திரும்பும் ஒருவன்

இந்தக் கவிதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. சொந்த ஊரை விட்டு வெகு தொலைவில் வசிப்பவனாக, ஒவ்வொரு முறை ஊர் திரும்பும் போதும் நான் காணும் காட்சிகள் என் பைத்தியத்தை தெளியவைத்துக்கொண்டே இருப்பவை, நான் இழந்தவற்றை எனக்கு உணர்த்திக்கொண்டே இருப்பவை. இந்த பைத்திய மனநிலை என்பது செல்வம் சேர்ப்பது, நுகர்வு, வெளிநாட்டு மோகம் என எல்லாம் கலந்த ஒன்றின் வெளிப்பாடு. ஒரு வகையில் நதிக்கு ஓடும் பைத்தியமாகவும் என்னை நான் உணர்கிறேன்.

'சாரலுக்கு ஒதுங்கும் பெண்களை

மழை புகை சிகரெட்டை

பேருந்து நிலையக் கடைகளை

விரையும் வாகனங்களை

----

பரோட்டா வாசனையை

பிச்சி கனகாம்பரத்தை

நதிக்கு ஓடும் பைத்தியத்தை

சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான்

பைத்தியம் தெளிபவனின்

மண்டையில் நிகழும்

மாற்றங்களுக்கு

ஓப்பானது அது'

பூக்கடை

ஊர்களின் முகப்பிலுள்ள கடைகள் வெறும் கடைகளல்ல, கடைகள் மூடப்பட்ட ஊர்கள் ஜீவனிழந்து ஒருவித இயக்கமற்ற நிலையில் இருக்கின்றன. நாம் அன்றாடம் காணும் ஒரு காட்சி கவிதையாக ஒளிரும் மாயம் இதில் இருக்கிறது. பூக்கடைக்காரி அந்த ஊரையே திறக்கிறாள் மூடுகிறாள், பாரமான கற்பனை, அற்புதமான கவிதையாகிவிடுகிறது.

'ஒரு பூக்கடையை

முகப்பெனக் கொண்டு

இந்த ஊர்

திறந்து கிடக்கிறது

 

பூக்கடைக்காரி

அப்போதும் போல்

வருகிறாள்

பூக்களைப் பின்னுகிறாள்

கடையைத் திறப்பதாகவும்

கடையை மூடுவதாகவும்

சொல்லிக்கொண்டு

ஊரையே திறக்கிறாள்

ஊரையே மூடுகிறாள்'

வெயில் பறந்தது, வெயில் கழுவுதல்

வெயில் என்றால் வெம்மை, வெம்மை வெளிப்படும் எல்லாவற்றிலும் வெயில் ஒளிந்துகொண்டிருக்கிறது, நம் உடலே கூட வெம்மையால் ஆனதுதான், வெயில் இல்லாமல் உலகில்லை. மழை பெய்யும்போது ஒளிந்துகொண்டிருந்த வெயில் முத்தமிட்டுக்கொண்ட இரு குயில்களின் வாயிலாக விடுதலையடைந்து வானில் பறக்கிறது.

'மழை

குடையில்லை

மரம்

ஒதுங்கினேன்

குளிர்

குளிர்

இரு குயில் மரக்கிளையில்

இட்டுக்கொண்ட முத்தம்

இதமான சூடு

வெயில்

வெயில்

வெயில் பறந்தது

குக்கூ என்றபடி வானில்'

வெயில் நம் முகத்தில் அப்பிக்கொள்கிறது, தண்ணீர் கொண்டு நாம் கழுவுவது முகத்தை அல்ல வெயிலை, இங்கு முகம் கழுவுவது வெயில் களைந்து முகம் தேடும் செயலாகிறது. இரண்டு கவிதைகளுமே அழகிய கற்பனை, மனதில் நிறைந்துகொள்கிறது.

'கடும் வெயில் காலம்

முகம் கழுவுதல் என்பது

முகம் கழுவுதலாய் இருப்பதில்லை

முகத்திற்குத் தண்ணீர் ஊற்றினேன்

வெயில் கழுவினேன்

----

முகம் கழுவ இவ்வளவு நேரமா

என்ற வெளிக்குரல்

அது அறியாது

நான் வெயில் கழுவி

முகம் தேடும் திகிலை'

மரம், சிறுவன்

மனிதனின் வாழ்வில் பேரின்பம் மிக்க பருவங்களில் ஒன்று  சிறார் பருவம். ஆனால் காலம் நம்மில் இருக்கும் சிறுவனை கல்வி, இளமை, காமம், வேலை, செல்வம் என எடைமிக்க பாவனைகளைக் குவித்து மூடிவிடுகிறது. இந்த பாவனைகளை எல்லாம் அழித்துவிட்டு உற்று நோக்கினால் நம்மில் என்றும் வாழும் சிறுவனைக் கண்டுகொள்ளலாம். இந்த கவிதை வாழ்வில் கதவு எனும் பாவனைகளையெல்லாம் நீக்கிவிட்டு அதன் மூல வடிவத்தை நோக்கி அறைகூவுகிறது, நம்முள் உள்ள சிறுவனை நினைவுறுத்தி மீட்டெடுக்கச் சொல்கிறது.

'இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும்

மூன்றாவது பக்க வெளிம்பிலிருந்தும்

நான்காவது பக்கம் நிறைவுற்றபோது

மரம் உறுதி செய்தது

தான் ஒரு கதவென

----

மரத்தின் கீழ் விளையாடும்

சிறுவர்களைப் பார்த்தபடி இருப்பேன்

----

அப்படிப் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள்

காற்றடித்தது

கதவும் நானும் ஒருவரையொருவர்

பார்த்துக்கொண்டோம்

ஞாபகப்படுத்திச் சொன்னேன்

'மரம்தானே நீங்க'

கதவு சொன்னது

'ஏ! குட்டிப் பயலே'

கிணறு –

முதல் சில வாசிப்புகளில் கிணறு ஒன்றின் தோற்றம் மட்டுமே மனதில் திரண்டு வந்துகொண்டிருந்தது, தண்ணீர் நிறைந்தும் குறைந்ததுமான ஒரு கிணற்றின் வடிவமது. மறு வாசிப்புகளில் இப்படி ஒரு கோணத்தை அடைகிறேன், கிணறு என்பது வளத்தின் பிம்பம், தாகம் தீர்ப்பது. தன்னிடம் இருப்பதையெல்லாம் வாரி வழங்கிவிட்டு ஏதுமற்று நிற்கும் ஒன்று, உயரம் கூடுவது இந்த வழங்குதல் மூலம்தான்.

'உயரம் குறையக் குறைய

உயரம் கூடுவதைக்

காண்கிறது

கிணறு'

திருமண ஜோடி

இந்த உலகில் ஆண் பெண் உறவு, காதல் இரண்டும் சாசுவதமானது, இது பல்வேறு முரண்பாடுகளின் இணைவுகளால்தான் சாத்தியமாகிறது. இங்கு திருமண ஜோடிகள் இணைவது உயரம் எனும் முரண்பாட்டின் வழியாக, உயரம் எனும் வேறுபாடு சுட்டுவது தோற்றம், செல்வம், இனம் என அனைத்தையும்தான். 'ஏணிப்படியின் ஏறுபடிகள்' என்பது அழகிய ஒப்பீடு, மனதில் புன்முறுவல் பூத்துவிடுகிறது. கவிமனம் ஒன்றை வானமாகவும், ஒன்றை பூமியாகவும் பார்க்கிறது, மழை பறவை ஒளி இவற்றை இணைத்து ஒருமையை முழுமையை முன் வைக்கிறது.

'கட்டையாகவும் நெட்டையாகவும்

ஒரு திருமணப் பந்தல் ஜோடி

----

ஜோடியரின் உயரம்

ஏணிப்படியின் ஏறுபடிகள் போல் இருந்தது

----

ஒரு உயரம் இன்னொரு உயரத்தை

காதலோடு பார்த்தது

----

ஒரு உயரம் வானமாகவும்

இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது

மழையும் பறவைகளும் ஒளியும்

அதனை நிரப்பிக்கொண்டிருந்தன'


அன்புடன்,

பாலாஜி ராஜூ


Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை