'நித்தியம்' சிறுகதை – ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம்

                                                     


'அகழ்' இதழில் வெளியான 'நித்தியம்' சிறுகதை குறித்து எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம். 

கடிதம் எழுதப்பட்ட நாள் ஜூலை 13, 2021.

அன்புள்ள நவீன்,

வரலாற்றின் பிண்ணனியில் சதி எனும் உடன்கட்டை ஏறும் சடங்கை மையமாக வைத்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். உடன்கட்டை ஏறுதல் எனும் சடங்கு பற்றி பள்ளியில் பாடப்புத்தகங்களில் படித்த நினைவுகள் உண்டு.

வரலாற்றில் புனிதப்படுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய களத்தை அழகாக கதைப்படுத்தியதற்கு முதலில் பாராட்டுகள். கடந்த காலம் ஒன்றில் நிகழும் கதைதான் என்றாலும் அடிப்படை மனித உணர்வுகள் என்றும் உள்ளவைதான்.

அதிகாரத்தின் கரங்களில் என்றும் மறையாத இரத்தக்கரைகளுண்டு. தாம் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளை மூர்க்கமாகக் கடைப்பிடிக்கும் அரசன் மற்றும் அதன் மக்கள், பெண்களை வெறும் எண்ணிக்கைகளாகப் பார்க்கும் அரசன், புனிதச் சடங்கு என பயிற்றுவிக்கப்பட்டாலும் உயிரின் ஆதார விருப்பமான வாழ்தலை விட மனமில்லாமல் தவிக்கும் சுப்புலட்சுமி, இக்கட்டான சூழலிலும் சக மனித உயிரை காப்பாற்றத் துணியும் பிரிட்டோ, கையறு நிலையில் நிலைகொள்ளாது தவிக்கும் பாதர் மார்டின் என கதைப்பாத்திரங்கள் உயிர்ப்புடன் என் நினைவுகளில் நிலைகொள்கிறார்கள்.

முன்மாலையில் மின்னும் பாதர் மார்டினின் கண்ணீர், காலை வெயிலிலும் பிரதிபலிக்கிறது. அவருடைய போதாமை, கையறு நிலை இரண்டும் காலத்தில் என்றும் நிலைப்பவை, கவித்துவமாகத் துவங்கும் கதை கவித்துவமாகவே நிறைகிறது.

சுப்பு லட்சுமி தம் உயிரைக் காப்பாற்றச் சொல்லித் தவிக்கும் பகுதி காட்டமாகப் பதிவாகியிருந்தது. அந்த நொடியில் பிரிட்டோவை இயக்கியது என்ன உணர்வு, காதலா? கருணை ன்று என் மனம் எடுத்துக்கொள்கிறது. பிறகு ஏன் பாதர் மார்டின் 'காதல் எனும் வார்த்தை அபத்தமானது' என்கிறார்? ஒருவேளை நான் கதையின் நாடியை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா? கதை உங்களை விட்டு அகன்றுவிட்டது, இந்த வினவல்கள் வாசகனான எனக்கானவை

கிறிஸ்தவ மதப்பரப்பு, இராமநாதபுர சேதுபதிகளின் வரலாறு, பஞ்சம் அஞ்சி பசிபோக்கிக்கொள்ள வேறுமதத்தில் தஞ்சமடையும் மக்கள், உடன்கட்டை எனும் தொன்மமாக நிறுவப்பட்ட சடங்கு என வரலாற்றின் பல அம்சங்களை கதைக்குள் அழகாகப் பிண்ணியிருக்கிறீர்கள்.

ஒரு ஆழ்ந்த வாசிப்பனுபவம் தந்த கதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், நன்றி.


Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை