The Ones Who Walk Away From Omelas – ஒரு மாய நகரத்தின் கதை

 


அமெரிக்க எழுத்தாளர் Ursula K. Le Guin எழுதிய 'The Ones Who Walk Away From Omelas' சிறுகதை குறித்த என் பார்வை.

சிறுகதையின் தொடக்கத்தில் 'ஓமிலாஸ்' என்ற கற்பனை நகரம் ஒன்றின் பண்புகள் விவரிக்கப்படுகின்றன. ஒரு கோடைக்காலத்தின் துவக்க நாளில் அந்த நகரின் மக்கள் திருவிழாவுக்கான ஆயத்தங்களில் இருக்கிறார்கள், மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'ஓமிலாஸ்' நகரில் மன்னர்கள், போர் வீரர்கள், மதத் தலைவர்கள், அடிமைகள் என யாருமில்லை. ஒருமித்த வாழ்வுண்டு, ஆனால் யாருடைய தலைமையும் இல்லை. நம்பிக்கைகள் உண்டு, ஆனால் மதத்தின் இறுக்கங்களில்லை. பரவசங்கள் உண்டு, ஆனால் போதைப் பொருட்களுக்கான தேவைகள் இல்லை.

ஆசிரியர் 'ஓமிலாஸ்' நகரத்தின் நிலக்காட்சிகளையும், மக்களின் மனநிலைகளையும் சொல்லிச் சென்று, தோற்று, மீண்டும் வாசகனின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார். இங்கு 'தோற்று' என்கிற பதத்தை ஆசிரியரின் எழுத்து உத்தியாகவும் கருதலாம். அந்த நகரின் ஒட்டுமொத்த சூழலை விவரிக்கும் அதே வேளையில், அது வாசகனின் மனதில் ஒற்றைப்படையான ஒரு பிம்பத்தை உருவாக்கிவிடுவதைத் தவிர்க்கவும் முயல்கிறார். ஒரு வகையான பூடகத்தன்மையை அந்த நகரத்தின் மீதும், அதன் மக்களின் மனநிலைகள் மீதும் ஏற்றி, அந்த நகரத்தின் ஒட்டு மொத்த பிம்பத்தையும் வாசகனின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறார். அந்த நகரம் குறித்த பீடிகைகளையும், மர்மங்களையும் நம்முள் வளர்க்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அந்த நகரத்தின் மையத்தில், பாதாள அறையில், அடைத்துவைக்கப்பட்ட குழந்தை ஒன்றின் சித்தரிப்பு வருகிறது. மிகவும் குறுகிய அழுக்கான சூரிய ஓளியே உள்வராத அறையில் அடைபட்டிருக்கும் அந்தக் குழந்தையின் வயது பத்து. போதிய உணவு கிடைக்காமல், இளைத்த உடலுடன், வார்த்தைகளுக்கு பதிலாக பலஹீனமான சப்தங்களை எழுப்பிக்கொண்டே உள்ள அந்தக் குழந்தை, ஆறு வயது மதிக்கத்தக்க உடல் வளர்ச்சியையே அடைந்துள்ளது. ஒரு காலத்தில் சூரிய ஒளியின் வெம்மையையும், தாயின் மெல்லிய குரலையும் அறிந்திருந்த அந்தக் குழந்தை, 'நான் ஒழுங்காக இருப்பேன்' என அரற்றிக்கொண்டிருந்தது. 'ஓமிலாஸ்' நகரின் மக்கள் அனைவரும் அந்தக் குழைந்தையின் இருப்பை நன்றாக உணர்ந்தவர்கள். இந்தக் கனவு நகரத்தின் ஒட்டுமொத்த மகிழ்வும், கொண்டாட்டங்களும், பரவசங்களும், ஒருமையும் வெளிவரவே முடியாத அந்தக் குழந்தையின் துயரம் நிறைந்த வாழ்வின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட அந்தக் குழந்தையை அறிந்த அவர்கள், திருவிழாவில் அழகாக ஃபுளூட் இசைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையின் மேன்மையை ரசிக்கவும் தயங்குவதில்லை.

ஆவ்வப்போது அந்தக் குழந்தையைப் பார்க்க வயதடைந்தவர்களும் மற்ற குழந்தைகளும் செல்கிறார்கள். அந்தக் குழந்தையின் அவல நிலை, பார்த்த சிலருடைய மனதில் மட்டும் நீங்காத குற்ற உணர்வுகளையும், குழப்பங்களையும் தோற்றுவிக்கிறது. அந்த சிலர் ஓமிலாஸ் நகரத்தை விட்டு அமைதியாக வெளியேறுகிறார்கள். முடிவே இல்லாத ஒரு வெளியை நோக்கி அவர்கள் மெல்ல நகர்கிறார்கள்!!

ஆடைக்கப்பட்ட அந்தக் குழந்தை எதற்கான குறியீடு? நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு மகிழ்வான தருணத்திற்கும், அதன் பிண்ணனியில் நசுக்கப்பட்ட சில மனிதர்களின் இருப்பிற்கும் உள்ள பிணைப்புகளின் பிம்பமா?  அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் மீது நாம் செலுத்தும் மித வன்முறைக்கான சாட்சியா? அழிக்கப்பட்ட இயற்கையின் மீது அமர்ந்துகொண்டு நாம் புசிக்கும் நவீன வாழ்வின் சௌகர்யங்களின் இன்னொரு வடிவமா? ஒட்டுமொத்தமாக மனித மனங்களின் முரண்பாடுகளையும், கபடங்களையும், குரூரங்களையும் திரட்டிய ஒரு பேருருவத்தின் விளைவா?

இந்தக் கதை வாசித்தபின் நம் மனதில் ஆழமான சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் அந்த நகரிலிருந்து வெளியேருபவர்களா? அந்த அற்புத  நகரத்தின் அடைக்கப்பட்ட குழந்தையின் இருப்பை நன்றாக உணர்ந்த நிரந்தரவாசிகளா? இல்லை, நாம்தான் அடைத்துவைக்கப்பட்டுள்ள அந்தக் குழந்தையா? நம் எல்லோருடைய தலைக்கு மேலும் ஒரு 'ஓமிலாஸ்' நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறதா?

நல்ல ஒரு சிறுகதை வாசகனின் மனதில் நிரந்தரமாகக் குடியேறிவிடும். அத்தகைய இயல்புடன், மனதை அதிரவைத்துவிடும், மறக்கவே முடியாத ஒரு சிறுகதை இது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை