2025 ம் ஆண்டு - பத்து சிறுகதைகளும், ஐம்பது விக்கெட்டுகளும்
2025ம் ஆண்டு உத்வேகத்துடன் தொடங்கியது. கரூர் சென்று திரும்பிய டிசம்பர் 2024, ஒருநாள் விடிகாலையில் 'ஐஸ்கிரீம்' சிறுகதைக்கான கரு மனதில் உதித்தது. ' ஐஸ்கிரீம் ' என்பதை ஒரு உருவகமாக வைத்து ஐம்பது வயதுப் பெண்ணின், உடல் மற்றும் மன அவசங்களைச் சொல்ல முனைந்த கதை. அதை என்னுடைய ஊரின் அண்டை வீட்டுப் பெண் ஒருவரின் பிம்பத்தை மையமாக வைத்து எழுதினேன். கொங்கு வட்டார வழக்கில் எழுதி 'சொல்வனம்' இதழுக்கு அனுப்பினேன், எந்த எதிர்வினையும் இல்லாமல் அவர்கள் பிரசுரித்தார்கள். ஜனவரி மாதமே ' இருபது ரூபாய் ' சிறுகதையை எழுதினேன். அதையும் ஊரில் வசிக்கும், பாலிடெக்னிக் முடித்துவிட்டு பைனான்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பள்ளி நண்பன் ஒருவனை மனதில் வைத்து எழுதினேன். அந்தக் கதையும் 'சொல்வனம்' இதழில் பிப்ரவரி மாதம் வெளிவந்தது. அதே மாதம், ' உறம்பரையான் ' சிறுகத...