சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ் - தலையங்கக் குறிப்பு

                                                


இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.


ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை தேசிய கவிதைகள் மாதமாக அமெரிக்க கவிஞர்களின் அமைப்பு கொண்டாடுகிறது. 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி கவிதைகளின் மேன்மையையும் கவிதைகள் குறித்த விழிப்புணர்வையும் அமெரிக்க சமூகத்தில் மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது. எமர்சனும், வால்ட் விட்மனும் பிறந்த மண் இது.


“ஏப்ரல் மாதம் சொல்வனம் இதழின் இரு வெளியீடுகளை கவிதைகள் சிறப்பிதழாக கொண்டுவர விரும்புகிறோம், அதை ஒருங்கிணைப்பதில் உதவ உங்களுக்கு விருப்பமா?” என்று சொல்வனம் குழுவினர் சார்பாக பாஸ்டன் பாலா கேட்டவுடன் சிந்தனை உதிக்கும் முன்னரே சரி என்று சொல்லிவிட்டேன். அப்படி சிந்தனை செய்யாமல் ஒப்புக்கொண்டவன் எனக்குள் இருக்கும் கவிதை வாசகன்தான். நண்பர்களிடம் கவிதைகளை கேட்டுப் பெறுவது, இதழுக்கு வரும் கவிதைகளை வாசிப்பது, எழுத எண்ணிய கட்டுரைகளுக்காக கவிதை தொகுப்புகளின் பக்கங்களை முன்னும் பின்னுமாக புரட்டுவது என கவிதைகள் தவிர எதிலும் ஈடுபடமால் இனிமையாகக் கழிகிறது குளிரும் மென் வெம்மையுமாக ஊடாடும் இந்த ஏப்ரல் மாதம்.


படைப்பாளிகளின் கவிதைகளை படைப்பின் சூடு தணியும் முன்னரே வாசிக்கும் அனுபவம் எனக்கு முற்றிலும் புதியது.


“இதை ஒரு மனநிலையில் எழுதினேன், வாசித்துவிட்டு சொல்லுங்கள்” என்று சொன்ன நண்பர் ஆனந்த் குமாரும், “கவிதைகள் தேறுமா என்று சொல்லுங்கள் ணா” என்று அனுப்பிய சதீஷ்குமார் சீனிவாசனும், “இப்போதுதான் திணைகள் இதழுக்கு கேட்டார்கள் என்று கொடுத்தேன், வேறு கவிதைகள் எழுதி அனுப்புகிறேன்” என்று சொன்ன மதாரும், புதிதாக எழுதத் தொடங்கியவனின் குதூகலத்துடன் “இதோ கவிதைகள்” என்று அனுப்பிய கவிஞர் ரவிசுப்பிரமணியனும், “புதன் கிழமை ஏப்ரல் 9, 2025 அன்று எழுதியவை” என்று அனுப்பிய கவிஞர் சேரனும் நினைவுக்கு வருகிறார்கள். இதை எழுதும் அதிகாலை நேரம் நான் இதுவரை வாசித்திராத  படைப்பாளிகளின் கவிதைகளும் என் மின்னஞ்சலில் காத்திருக்கின்றன.


சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இருந்த ‘படர்க தாவரமே’, ‘அலைக்கழிகின்றன எறும்புகள்’ எனும் வரிகள் ஏற்படுத்திய அக எழுச்சியை என்னால் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. மனம் முழுக்க இது போன்ற வரிகளுடன் நாட்களுக்குள் அலையாடுவது கவிதை வாசகனாக இருப்பதன் பேரின்பங்களில் ஒன்று. இத்தகைய அரிய வரிகள் நம் புத்தக அடுக்குகளில் உள்ள கவிதை தொகுப்புகளிலும், இணைய வெளியில் குவிந்திருக்கும் கவிதைகளிலும் எங்கோ நமக்காக காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. 


தேடுபவனுக்குத்தான் பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. கவிஞனும் கவிதை வாசகனும் கவிதை எனும் இந்த பொக்கிஷத்தின் இணை பங்குதாரர்கள்தான்.


நண்பர்களிடமும் வாசகர்களிடமும் சொல்வனத்தின் இந்த முயற்சியில் பங்கெடுக்குமாறு வேண்டுகிறேன். கவிதைகளை வாசிப்போம், கவிஞர்களையும் கவிதைகளையும் கொண்டாடுவோம்.


சொல்வனம் குழுவினர் சார்பாக பிரியமுடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை