பனி நிலமும், தனித்த பறவைகளும் - சொல்வனம் கட்டுரை
பனி நிலமும், தனித்த பறவைகளும் - வேணு தயாநிதி கவிதைகள்
ஒரு கவிஞனின் முதல் தொகுப்பிற்கே உரிய பொதுப் பண்புகள் என எதையேனும் வகுத்துக்கொள்ள இயலுமா? தொகுப்பின் கால அளவு அவன் எழுதத் தொடங்கிய சில வருடங்களிலேயே நிகழ்ந்திருக்கும், வாசகனிடம் தன்னை நிறுவிக்கொள்ளவேண்டிய விழைவின் துடிப்பு வார்த்தைகளில் மின்னும், அவன் செல்லத் தொடங்கியிருக்கும் பாதையின் முந்தைய காலடி உதிர்மணல் கவிதைகளில் சிதறியிருக்கும், கவிதைகளில் இழையோடும் தத்துவநோக்கு கலங்கிய நீரடி மீன்களாகவே தென்படும்.
வேணு தயாநிதியின் முதல் தொகுப்பான ‘வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்’ இந்த பண்புகளில் எங்கு வேறுபடுகிறது? தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் சொல்வனம், பதாகை, கனலி, அகழ் என பத்தாண்டுகளுக்கு மேலாக இதழ்களில் வெளிவந்தவை - தொகுப்பின் மூத்த கவிதைக்கு பதினான்கு வயது. கவிதைகளில் தென்படும் நிதானமான பிரக்ஞைபூர்வமான மொழி துடிப்பு என்ற சொல்லை விட முதிர்வு என்ற சொல்லுக்கே நெருக்கமாக அமைகிறது. வேணு தயாநிதி எனும் கவிஞனை எந்த முன்னோடியின் வரிசையில் நிறுத்தலாம் என்று எண்ணினால் திகைப்பே எஞ்சுகிறது, கவிதைகளின் தத்துவநோக்கும் பார்வையும் இருதலியல் மற்றும் மீபொருண்மை என இரு தளங்களிலும் பயணிக்கிறது.
வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். கவிதைகளில் மொழியின் எளிமை வாசிப்பை இனிய அனுபவமாக மாற்றிவிடுகிறது. புதிதாக கவிதைகளை வாசிக்கத் தொடங்கும் வாசகன் கூட வேணுவின் கவிதைகளை நெருங்கிவிடலாம்.
தொகுப்பில் வட அமெரிக்காவின் குளிர் நிலக் கவிதைகளுக்கு இடையில் தென் தமிழக சூழல் குறித்த கவிதைகளை வாசிப்பது முற்றிலும் புதிய அனுபவமாக அமைகிறது. இரண்டு முரண்பட்ட நிலங்களுக்கு இடையிலான ஒரு பயணமும் வாசிப்பில் நிகழ்கிறது. புலம்பெயர்ந்த ஒரு கவிமனதின் அசைவுகள் என்றும் இவற்றை கருதலாம்.
வட அமெரிக்காவின் மைய மேற்கு மாகாணமான மின்னசோட்டவின் அடர்குளிர் நிலம், நதிகள், பூங்கா, மேப்பிள், பிர்ச், பைன் போன்ற மரங்கள், அணில், பறவைகள் போன்ற சிற்றுயிர்கள் என தொகுப்பில் பனி நிலம் சார்ந்த தீவிரமான கவிதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. வேணு தன் கவிதைகளில் இயற்கையை தேர்ந்த ஓவியனைப் போல தீட்டிவிட்டு விலகி நிற்கிறார், அதில் பற்றற்ற தன்மை ஒன்றும் வெளிப்படுகிறது. அவர் காட்சிப்படுத்தும் பனிநிலம் காலம் கடந்த ஒரு வெளியில் நிற்கிறது. அதுவே இந்த கவிதைகளுக்கு தனித்துவமான ஒரு குரலை அளிக்கிறது. இவை காட்சிகளாகத் தொடங்கி படிமங்களாகவும் மீபொருண்மை கூறுகளாகவும் விரிந்து நகர்வதை உணரமுடிகிறது.
‘விளையாடுவதற்கு
அணில்களும்
பறவைகளும் அற்ற
பைன் மரங்கள்
சோம்பி நிற்கின்றன குளிரில்
கூந்தலில் பனியை ஏந்தி’
என்று தனிமையை தொட்டுச் செல்லும் ‘தனித்த பறவையின் நிலப்பரப்பு’ என்ற கவிதை,
‘மறுமுனையில்
எங்கோ
மறைந்திருக்கும்
மீதி உலகம்.’
‘தன் ஞானத்தை கையளித்தபடி
தனிமையில்
யாருக்கோ
எதற்கோ
அசைவற்று காத்திருக்கும்
ஒரு
முதிய பறவை’
என முதிய பறவையை எல்லாவற்றையும் நோக்கும் ஒரு இருப்பின் குறியீடாக மாற்றிவிடுகிறது.
‘முதல் தூளியின் பனி’ கவிதை சுட்டும் பனி எண்ண எண்ண நம் கற்பனைகளில் விரிந்து மலைக்க வைக்கிறது,
‘விசும்பிலிருந்து
துளிர்த்துத் தெறிக்கிறது -
முதல் துளியின்
பனி’.
‘ராஜ கோபுரம்’ கவிதை சித்திரை வீதியையும் சூழ்ந்த காட்சிகளையும் நுணுக்கமாக விவரித்துச் சென்று மேளம் கொட்டும் சிற்பமாய் நிற்கும் ஒரு மனிதரின் மார்பில் உள்ள ஈயைச் சுட்டி திகைத்து நிற்கிறது. இந்தக் கவிதை காட்சிகளின் கூர்மை தவிர எதையுமே உத்தேசிப்பதில்லை எனும் தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் மிகச் சிறந்த கவிதைகளுக்குள் மட்டுமே நிகழும் ஒரு மாயம் இதில் வெளிப்படுகிறது,
‘மேலூர் சாலை குறுக்கே கடந்து
மேற்குச்சித்திரை வீதியில்
ரங்கநாயகித்தாயார் சன்னதி
தாண்டி நிமிர்ந்தால்’
‘கடவுளரின் சேவகர்கள்
சேவகரின் காவலர்கள்
காவலரின் ஏவலர்கள்’
‘நெஞ்சம் புடைத்த வீரர்கள்
வரிசையாய் வாத்துக்கள்
வளைவுகள் சரிவுகள்
மாலைகள் மனிதர்கள்’
‘ஏதோ ஒரு வரிசையின் இடுக்கில்
மேளம் கொட்டும் சிற்பமாய்
முறைத்து நிற்கும்
ஒரு மீசை மனிதர்
அவர் மார்பில்
மாலைகள்
நகைகள்
பூக்கள்
ஆங்
ஈ
!’
வேணு பல கவிதைகளில் நிகழ்காலக் காட்சிகள் மூலமாக கடந்த காலத்தின் தருணங்களுக்கு காலப் பயணம் நிகழ்த்துகிறார். ‘மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்’ கவிதை நினைவுகள் மனதில் உருவாக்கும் ஆழ்ந்த தாக்கத்தை உணர்த்துகிறது,
‘தனிமையின் சலிப்பில்
சிலிர்த்து குலுங்கி
அணில்களை விளையாட அழைக்கும்
மேப்பிள் மரத்திற்கு
ஆயிரம் ஆயிரம் கைகள்’
‘வெறுமை, ஒரு உலர்ந்த சருகு புழுதி
அல்லது ஏதோ ஒரு பழைய ஞாபகம் -
ஆகியவற்றை
வழக்கமாக
எரிந்து விட்டு செல்லும்
கோடையின் காற்று’
‘உனை நினைவுபடுத்த என்று
இந்த உலகத்தில்
எப்பவும்
ஏதோ ஒன்று
இருக்கத்தான் செய்கிறது’.
இதே உணர்வுநிலையைப் பிரதிபலிக்கும் இன்னொரு கவிதை ‘தூரதேசத்து ஓடையின் ஒரு துளி’,
‘எவர் சொன்னது?
தூய நீர் -
மணம் நிறம் சுவை
அற்றதென?’.
‘தூய வெண்மையின் பொருளின்மை’ கவிதை அசைவு மற்றும் அசைவின்மை எனும் இரு நிலைகளுக்குள் நிகழும் வாழ்வை பிரதிபலிக்கிறது,
‘இப்போது
எங்களுடன் -
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன
மலைகள் தியானிக்கின்றன
அணிலின் விழித்திரையில்
ஒரு புரதான ஓவியமாய்
அசைவின்றி
எஞ்சி ஒருங்கும்
இப்பிரபஞ்சம்’.
ஆழமான உணர்வுகளைப் பேசும் கவிதைகள் மட்டுமல்லாமல் மெல்லிய நகை தொனிக்கும் கவிதைகளும் தொகுப்பில் பரவலாக உள்ளன,
‘பற்பசை இரவல் கேட்டு
விடுதி அறையின்
கதவு தட்டி உள்ளே வந்து,
தெரிதாவை தெரியுமா?
அவர் சொல்வதாவது
என சொல்லாடிச் செல்வார்
நண்பர்
சென்றபின் -
தயவு செய்து என்னை திறந்து விடு
என கழிவறை உள்ளே
கதறுகிறார், பூக்கோ’.
இதுவே வேணு தயாநிதியின் முதல் தொகுப்பு எனும் செய்தி ஆச்சரியமளிக்கிறது. வாசகனாக இன்னும் எண்ணிக்கையில் நிறைய கவிதைகளை அவர் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சென்ற வருடம் நான் வாசித்த கவிதை தொகுப்புகளில் சிறந்தவற்றில் ஒன்று என்பதைச் சொல்வதில் எனக்கு தயக்கமே இல்லை.
‘வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்’ - வேணு தயாநிதி கவிதைகள், பதாகை யாவரும் பதிப்பகங்கள், இணை வெளியீடு.
Comments
Post a Comment