'மயிர்' இதழ் - அஜிதன் சிறுகதை

                                                 

'மயிர்' இணைய இதழில் அஜிதன் எழுதிய 'ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்' எனும் தலைப்பில் எழுதிய சிறுகதையை ஒட்டி ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்,

ஆசிரியருக்கு,

‘மயிர்’ இதழில் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்’ கதையை வாசித்தேன். மலம் குறித்த வர்ணனைகள் ‘விஷ்ணுபுரம்’ நாவலில் உள்ளது. ‘புறப்பாடு’ நூலின் ஒரு அத்தியாயத்தில் மும்பையின் சேரியில் உள்ள வீட்டின் சுவரில் மஞ்சளாக மலம் வழிந்து இறங்கிக்கொண்டிருக்கும், அருகில் தேவியின் படம் ஒன்றும் மாட்டப்பட்டிருக்கும். இன்னொரு அத்தியாயத்தில் வீட்டின் வயதான பெண் ஒருவர் ஆன்மீகம் குறித்து பேசுபவனின் ‘இலையில் கொஞ்சம் அள்ளி வைடா திங்கட்டும்’ என்று சொல்லும் தருணமும் நினைவுக்கு வருகிறது. ’ஏழாம் உலகம்’ நாவல் தொடும் உச்சத்தையும் எண்ணிப் பார்க்கலாம்.

இந்த கதையின் கதைசொல்லி அவன் செல்லும் இடத்தை அறிந்துவைத்திருக்கிறான். எல்லோரும் செல்லும் பாதையை விட்டு விலகி அந்த இடத்திற்கு வருகிறான். தன்னை மனதளவில் திடமானவனாகவே விவரித்துக்கொள்கிறான். ஆனால் அந்த இடத்தின் தாக்கம் அவனை ஆட்கொள்கிறது.

மலமும் சிறுநீரும் குறித்த தீவிரமான வர்ணனைகள் கதைசொல்லியுடைய ஆழ்மனதின் அழுக்குகளுக்கான உருவகம் என்றே வாசிக்கிறேன். மேலும் ஆன்மீக அனுபவம் என்பது இத்தனை (மன)தடைகளையும் தாண்டி மட்டுமே அடையக்கூடுவது என்பதையும் கதை உணர்த்துகிறது.

கதையின் இன்னொரு பாத்திரமான அந்த பைத்தியம் தன் குறி வெளிதெரிவது கூட அறியாமல் அலைகிறான். ஆண் பெண் போன்ற சுய அடையாளங்களை துறந்தவன் என்பதையே அவனுடைய நிர்வாணம் உணர்த்துகிறது. அவன் அந்த இடதில் இயல்பாக பொருதிக்கொண்டு ஏகாந்தமாக இருக்கிறான். அவனுடைய உள்ளம் அந்த சூழலைத் தாண்டி வாழ்கிறது. அவனை துறவி என்றே கதை உணரவைக்கிறது.

ஆன்மீகம் புனிதம் போன்ற சொற்களின் மெய்யான அர்த்தத்தையும் கதை மறுபரிசீலனை செய்யவைக்கிறது. எதை அருவருக்கிறோமோ அது நமக்குள்தான் இருக்கிறது. குறிப்பிடத்தக்க சிறுகதையை எழுதியிருக்கிறார்.

அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை