'மாற்றுச் சொற்கள்' கட்டுரை - மதார்

                                                    

'Kavithaigal.in' இதழில் கவிஞர் மதார் 'மாற்றுச் சொற்கள்' எனும் தலைப்பில் இரு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கட்டுரை குறித்தும் அதில் உள்ள கவிதைகள் குறித்தும் அவருக்கு எழுதிய கடிதம்,

அன்புள்ள மதார்,

‘மாற்றுச் சொற்கள்’ கட்டுரையில் இருந்த மலையாள மொழிபெயர்ப்புக் கவிதைகளை மறுபடியும் வாசித்தேன். ‘அம்மு தீபா’ வுடைய இந்த கவிதை மிகவும் பிடித்திருந்தது.

மிளாவின் கொம்பிலேறி

நிலாவொன்று

மலையை கடப்பதைக் கண்டாள்’

என்று முடியும் கவிதையின் வரிகளை,

‘மிளாவின் கொம்பிலேறி

மலையை கடக்கும்

நிலா

என்று வாசித்தால் அப்படியே ஹைக்கூ கவிதையை நெருங்குகிறது. உங்களுடைய ‘வெயில் பறந்தது’ தொகுப்பில் உள்ள ‘நிலவொளியில் திருடன்’ கவிதை உடனே நினைவுக்கு வந்தது. கவிதைகளில் சொற்களை மீறி நிற்கும் காட்சிகள் இத்தனை வசீகரமாய் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

ஒரு நல்ல கவிதை சிந்தனையைக் கிளறுவதுடன் வாசகனுக்குள் இருக்கும்
அழகுணர்வையும் தூண்டுகிறது என்றே இந்த இரு கவிதைகளும் சொல்கின்றன.

விடுமுறை நாளின் வெயில்

ஒரு மஞ்சள் ஆட்டோவாக

பாலத்தின் மீது செல்கிறது


என்ற போகன் சங்கருடைய கவிதையும் நினைவுக்கு வருகிறது.

அபிராமுடைய ‘வரைபடம்’ கவிதை அபாரமான படிமங்களால் ஆனது.

மெருகேற்றி மெருகேற்றி

பெருகிவரும் மரச்சுருள்கள்

ஒரு கடல் போலாகுகையில்


என்று எழுதப்படும் பிரத்யேகமான வரிகளுக்காகவே திரும்பத் திரும்ப கவிதைகளை வாசிக்கலாம், அபாரமான மொழிபெயர்ப்பு.

உங்களுடைய தோழி நித்ய கௌசல்யாவின் கவிதைகள் பேசுபொருள் காட்சிகள் என ஆழம் கொண்டிருந்தாலும், கவிதை எழுதிய கைகள் தொடுகையில் மெருகேறிவிடுகிறது. அவருடைய வடிவம் கொஞ்சம் ‘Raw’ என்று தோன்றச் செய்தது. கவிதையை உங்கள் வடிவத்தில் வாசிப்பதே எனக்கு பிடித்திருந்தது.

‘மாற்றுச் சொற்கள்’ என்பதை மொழிபெயர்ப்பு எனும் தளத்தில் மட்டுமல்லாமல், மனதில் தோன்றியவற்றை இன்னும் இன்னும் என மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம் என்றே மேற்குறிப்பிட்ட கவிதைப் பரிணாமம் சொல்கிறது.

ஆனந்த்குமார் மொழிபெயர்த்த கார்த்திக்.கே வின் ‘கடைசியாக வயிறு நிறைந்தது’ கவிதை கவர்ந்தது. சில நல்ல கவிதைகளை விளக்கமுடிவதில்லை. அர்த்தம் அர்த்தப் பிழை என்ற வரையறைகளுக்கு இடையில் நடமாடும் கவிதைகள் இவை,

நீங்கள் இதிலல்ல

அடுத்த காட்சியில்தான் நடிக்கிறீர்கள்

கோபம் கொண்டு நான்

பேப்பரிலுள்ள இளைஞனோடு

மேடையிலிருந்து இறங்கிப் போகிறேன்


எனும் கடைசி சில வரிகள் இதுவரை வாசித்த வரிகளை கலைத்துப்போடுகிறது. பிரபஞ்சத்தில் மொத்த வாழ்வின் அசைவுகளும் பாத்திரத்தை மறந்தவற்றின் வெளிப்பாடுதானோ எனும் எண்ணம் தோன்றுகிறது.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை