'Room in New York' ஓவியம் - அகழ் இதழ்

                                                  

ஆசிரியர் ஜெயமோகன் புனைவு எழுதுபவர்கள் அகத்தூண்டுதலுக்கு காணொளிக் காட்சிகளைத் தவிர்த்து ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

அகழ் இதழின் கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறேன். இந்த கட்டுரையில் எட்வர்ட் ஹாப்பர் என்ற ஓவியரின் ‘Room in New York’ ஓவியம் சார்ந்த குறிப்புகள் வருகிறது.

இதில் நியூயார்க் நகருக்கே உரிய சிறிய அறை ஒன்று உள்ளது. அறையின் அளவுக்கேயான பெரிய சாளரத்தின் பின்ணணியில் ஒரு இணை தெரிகிறார்கள். மஞ்சள் நிற சுவர்களில் சில ஓவியச் சட்டகங்கள் மாட்டப்பட்டுள்ளன. அந்த ஆணின் உடை அவனை நடுத்தரவர்க்க அல்லது கணவான் என்று சொல்கிறது. எதிரில் இருக்கும் தன் துணையை தவிர்த்து நாளிதழில் மூழ்கியிருக்கிறான்.

இந்த ஓவியத்தில் குறிப்பிடத்தக்க காட்சியாக தெரிவது அந்த பெண்ணின் உடல்மொழி. எதிரில் இருப்பவன் தன்னில் மூழ்கியிருக்கையில் அவள் பக்கவாட்டில் திரும்பி பியானோவில் விரல்களை ஓடவிடுகிறாள். அவள் முழுதாக திரும்பி அதில் ஈடுபடவில்லை, அரைமனதாக தன்னுடைய சலிப்பை போக்கிக்கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள்.

சிறிய அறைக்குள் இருவரின் தனிமையும் மோதிக்கொள்கிறது. சாளரத்தின் வெளியே பழைய நியூயார்க் நகரின் குதிரைவண்டிகளின் காலடிகளையும், மழை பெய்து ஓய்ந்த தரையில் நடக்கும் மனிதர்களையும், வீதிகளில் எதையாவது விற்கும் வியாபாரிகளின் ஓசைகளையும் கூட கேட்கமுடிகிறது. (இந்த நியூயார்க் நகரின் காட்சிகள் கூட செவ்வியல் ஹாலிவுட் படங்கள் மனதில் ஏற்றியவையே என்று எண்ணுகையில் சிறு சலிப்பு உருவாகிறது. இவற்றை எப்படி அழிப்பது என்று தெரியவில்லை).

மிகுந்த மனஎழுச்சி தந்த ஓவியம். கட்டுரையில் இந்த ஓவியம் குறித்து வேறு வகையில் சித்தரிக்கிறார்கள். ஓவியங்கள் ஒரு நல்ல கவிதையைப் போல மனதில் எழுப்பும் அலைகளுக்கு இது சிறிய சான்று. காட்சிகளுக்குள் காட்சிகளாய் எண்ணங்களின் மேல் எண்ணங்களாய் விதைத்து விரிந்துகொண்டே செல்கிறது.

அருண் வரைந்திருந்த ‘பால்வீதி’ ஓவியமும் அவர் பகிர்ந்திருந்த ‘The Strongest’ ஓவியமும், நிர்மல் பகிர்ந்திருந்த ‘ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுது’ ஓவியமும் அளித்த தாக்கம் இன்னும் குறையாமலிருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை