What I Talk About When I Talk About Running

                                                 

2023ம் வருடம் அறுநூறு மைல்கள் ஓடியிருந்தேன். எப்போதும் ஓடிக்கொண்டிருந்தவன்தான், உடல் மேன்மைக்காக என்பது மட்டுமல்ல காரணம். அமெரிக்காவின் திகைக்கவைக்கும் தனிமையும் சலிப்பும் மனதை அனைத்து எல்லைகளுக்கும் தள்ளிக்கொண்டிருப்பது, என்னைப் போன்ற மனநிலைகொண்டவனுக்கு. அதைக் களைய ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்பதால் ஓட்டப் பயிற்சியை வழக்கத்தைவிட சற்று தீவிரமாக தொடர்ந்தேன். அதனாலேயே ஹாருகி முராகமியின் ஓட்டப் பயிற்சி குறித்த இந்த புத்தகம் இயல்பாக கவர்ந்தது.

ஹாருகி முராகமி என்ற பெயரை முதலில் சாருவின் வலைத்தளத்தில்தான் வாசித்தேன். முராகமியின் சிறுகதை ஒன்றை மிகவும் புகழ்ந்து எழுதியிருந்தார். முராகமி உலகம் முழுக்க கோடிக்கணக்கான வாசகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றும் சொல்லியிருந்தார். பின்னர் சாரு தான் சாரு என்பதால் முராகமியை இலக்கியத் தகுதியற்ற எழுத்தாளர் என்று நிராகரித்தும்விட்டார். 

சில வருடங்கள் கழிந்தது. அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களின் மூலம் முராகமியின் பெயர் மறுபடியும் என் கவனத்திற்கு வந்தது. நண்பர் ஜெகதீஷ் குமாரும் மதனும் முராகமியின் சில நாவல்களை வாசித்திருந்ததை சொல்லியிருந்தனர். இதில் ஜெகதீஷ் குமார் குறிப்பிட்ட 'What I Talk About When I Talk About Running' புத்தகம் ஒலிவடிவில் லிபி செயலியில் வாசிக்க(கேட்க)க்கிடைத்தது. 

ஹாருகி முராகமி முப்பதாண்டுகளுக்கு மேலாக அன்றாடம் ஓடும் வழக்கம்கொண்டவர் என்பதை முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளானாக ஓட்டப்பயிற்சி குறித்த தன்னுடைய கூரிய அவதானங்களை சுவாரசியமாக முன்வைக்கிறார். தன்னுடைய எண்ணங்களை ஒரு நாட்குறிப்பின் வடிவில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் மாஸசூட்ஸ் மாகாண அனுபவங்கள் நோக்கி புத்தகம் முழுக்க ஊடாட்டுகிறார்.

முராகமி எழுதத் தொடங்கியது தன்னுடைய முப்பதாவது வயதை ஒட்டி. ஏதோ ஒரு உந்துதலில் எழுதத் தொடங்கியவர் தன்னை புத்துணர்வாக வைத்துக்கொள்ள ஓட்டம் பயிலத் தொடங்குகிறார். அவருடைய எழுத்தும் ஓட்டமும் இணைந்தே பயணித்திருக்கின்றன. எழுத்தையும் ஓட்டத்தையும் அவர் புத்தகம் முழுக்க ஒப்பிடுகிறார். இரண்டுமே தீவிரமான மனக்குவிப்பையும் உளஉறுதியையும் கோருவன என்று சொல்கிறார். 

எழுத்துவதற்கும் ஓட்டப்பயிற்சியைப் போன்றே உறுதியான உடல்தகுதி தேவை என்று சொல்கிறார். ஜப்பான் நியூ யார்க் ஏதென்ஸ் ஹவாய் என தான் மாரத்தான் பயிற்சி செய்த ஓடிய அனுபவங்கள் குறித்து விவரிக்கிறார். புகைக்கும் பழக்கம் கொண்டிருந்த முராகமியின் இதயத் துடிப்பு ஒரு தேர்ந்த ஓட்டக்காரனுக்கு உரிய ஒன்றாக இருக்கிறது. நிமிடத்திற்கு ஐம்பது துடிப்புகள் என்பது எல்லோருக்கும் சாத்தியமாகும் ஒரு அமைப்பு அல்ல.

ஓட்டப்பயிற்சி மட்டுமல்லாமல் டிரையலத்தான் எனப்படும் சைக்கிள் நீச்சல் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்றும் கலந்த போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஓட்டம் பயில்கையில் மனம் எதையும் எண்ணாது காலியாக இருக்கும் என்று சொல்கிறார். ஆனால் ஓடுகையில் தான் காணும் காட்சிகள் மனிதர்கள் என ஒரு எழுத்தாளனுக்கே உரிய பார்வைகளை முன்வைக்கிறார். 

ஏதென்ஸ் நகரின் சுட்டெரிக்கும் கோடைக்கால காலையில் வரலாற்றில் மாரத்தான் என்ற போட்டிக்கு வித்திட்ட பாதையை கடக்க முயல்கிறார். டிரையலத்தான் போட்டி ஒன்றில் நீச்சல் செய்ய கடலுக்குள் இறங்கும் முன் அடைந்த சலனத்தையும் அதன் மூலம் ஏற்பட்ட சுவாசக் கோளாறு குறித்தும் சொல்கிறார். சுய அனுபவக் கட்டுரைகளாக இருந்தாலும் நியூ யார்க் நகரின் மாரத்தான் ஓட்டம் நோக்கிய ஒரு பாதையாகவே புத்தகம் நகர்கிறது, அதுவே புத்தகத்திற்கு ஒரு மையத்தையும் அளிக்கிறது.

ஐம்பது வயது தாண்டியவராக தொடர்ச்சியான மாரத்தான் பந்தயங்களுக்குப் பிறகு ஏற்படும் வெறுமையை சொல்கிறார். 'இதற்கு பிறகு என்ன?' என்ற கேள்வி அவரை செயலின்மை நோக்கி தள்ளுகிறது. தன்னுடைய உறுதியான உள்ளத்தால் அதைக் களைகிறார், தொடர்ந்து ஓடுகிறார். வருடத்திற்கு ஒரு மாரத்தான் பந்தயம் ஓடியிருக்கிறார். தன்னுடைய வாழ்வில் முப்பதுக்கும் மேலான பந்தயங்களைக் கடந்திருக்கிறார்.

மாரத்தான் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஒரு விளையாட்டு வீரரிடம் உங்களுக்கு ஓட்டுவதில் சோர்வு ஏற்படாதா என்று கேட்கிறார். அந்த வீரரின் பதில் "இது என்ன அசட்டுத்தனமான கேள்வி, எல்லா நாட்களும் இது நிகழும்" என்பதே. ஓட்டப்பயிற்சி என்பது உடல்தாண்டி மனம் மூலம் இயங்கும் ஒன்றுதான். ஒரு கட்டத்திற்கு பிறகு உடலின் புலம்பல்களை கலைந்து மனம் தனபோக்கில் இயங்குவது என்பதை விவரிக்கிறார். 

முராகமி ஒரு இலக்கியவாதியாக ஓட்டப் பயிற்சியை தீவிரமாக தொடர்பவராக எனக்கு ஒரு இலக்கிய வாசகனாக ஓடும் ஆர்வம் உள்ளவனாக இந்த புத்தகம் மூலம் அளித்தது ஒரு தன்முனைப்பையும் உந்துதலையும். பொதுவாக இலக்கியவாதிகள் உடலைத் தீவிரமாக ஈடுபடுத்தும் எதிலும் ஈடுபடுவது அரிது. முராகமி இதில் விதிவிலக்காகவே இருக்கிறார். 

இளைஞனாக கண்ணாடியின் முன் நிர்வாணமாக நின்று தன்னுடைய உடலின் குறைகளை ஒவ்வொன்றாக நோக்கியிருக்கிறார். எழுத்தும் ஓட்டமும் அவருடய வாழ்விற்கு உத்வேகத்தையும் நோக்கத்தையும் அளித்திருக்கிறது. முராகமியின் ஜப்பானியப் பிண்ணனி செய்யும் செயலில் தீவிரம் கொண்டவாராக இருக்க அவருக்கு வழிவகைசெய்கிறது என்றே எண்ணுகிறேன். ஜப்பானியர்கள் நீண்ட ஆயுள் கொண்டவர்கள் என்ற செய்தியும் மனதில் தோன்றுகிறது.

குளிர்காலம் விலகிக்கொண்டிருக்கும் இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் கோடைக்காலத்தை முன்னோக்கியிருக்க முராகமியின் அனுபவங்கள் இந்த புத்தகம் மூலம் உந்துதல் தருகிறது. ஹாருகி முராகமியின் பிற நாவல்களையும் வாசிக்கவிருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை