இடம்பெயர்ந்த என் அமெரிக்க வீடு
மனைவியின் பிரசவத்திற்கு அவளுடைய பெற்றோர்களை அழைத்துவர முடிவுசெய்தோம். விசாவுக்கு விண்ணப்பித்தால் ஒருவருடம் காத்திருக்கவேண்டிய சூழல். முகவர் ஒருவர் மூலம் அக்டோபர் மாதமே விசா கிடைத்தது. ஒரு பாஸ்போட்டிற்கு பன்னிரண்டு ஆயிரம் இந்தியப் பணம் என்பது கணக்கு, வேறு வழியில்லை எடுத்தாகிவிட்டது.
டிசம்பர் மாதம் ஏழாம் தேதி நியூ யார்க் வழியாக கொலம்பஸ் நகருக்கு வருகை. விமான நிலையத்தில் டிசம்பர் மாதக் குளிரை சற்றும் பொருட்படுத்தாது மிதகுளிர் ஆடைகளில் அவர்கள் வந்திருந்ததைக் கண்டு சற்று திகைத்தேன். "மாமா இங்க குளிர் மைனஸ்ல இருக்கும், கவனம்" என்ற வார்த்தைகள் அவர்களுக்கு புரிந்ததாக தெரியவில்லை.
மனைவியின் அக்கா ஆஸ்திரேலியாவிலிருக்கையில் பிரசவத்திற்காக அத்தை வெளிநாடு சென்ற அனுபவம் கொண்டவர். அதே போல ஒரு பயணமாக இருக்கும் என்று எண்ணியிருக்கலாம். மூன்று விமானங்களும் இருபத்து நான்கு மணிநேர பயணமும் காத்திருப்பும் சற்று திகைப்பை அளித்திருக்கலாம். பயணம் குறித்த சலிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தகிருந்தேன். இருவருமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இங்கு வந்திருப்பதான் எதிர்பார்ப்பு காரணமாக அது அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்று எண்ணுகிறேன்.
இரண்டு படுக்கைகள் இரண்டு குளியறைகள் கொண்ட குடியிருப்பு என்பதால் அவர்களுக்கு ஒரு அறையில் புதிய மெத்தை அலமாரி என்ற ஒரு அமைவிடம். அந்த அறையிலேயே எனது அலுவலக மேசை ஒரு ஓரமாக இருந்தது. அந்த மேசை என்னுடைய அடுத்த மூன்று மாத இருப்பிற்கான உருவகமாக மாறியது. உறக்கம் தவிர பெரும்பாலான வேளைகளில் சமையலறை மற்றும் வாழ்விடத்தில் தொலைக்காட்சியை ஒட்டிய சோபா என்று அவர்களுடைய இருப்பு.
அயல்நாட்டில் பத்தாண்டுகள் வாழ்ந்த காரணத்தால் முக்கிய சில குடும்ப நிகழ்வுகளை ஒட்டிய அனுபவங்களை மனைவி இழந்திருந்தாள். ஐந்து பிள்ளைகள் கொண்ட நெருங்கிய கலகலப்பான ஒரு குடும்பம். இந்தமுறை அவளுக்கு பெற்றோர் அருகாமையில் பிரசவ அனுபவம் அளிப்பதை நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.
"இன்னும் மூணுநாள் நீங்க பகல்ல தூங்காம இருக்கணும் பாத்துக்கங்க" என்று நான் கூறிய வார்த்தைகளை மதிய உணவுக்குப் பிறகு உறங்கிய அவர்களது கூட்டு குறட்டையொலி விழுங்கிவிட்டது. முதல் இரண்டு வாரங்கள் இரவில் உறக்கம் வராமல் ஊருக்கு அலைபேசிக்கொண்டிருந்தார்கள். "இங்க எல்லாமே கெடைக்குது. ஆமா நம்ம ஊரு சாப்பாடுதான். என்ன ஒரே சாரக்காத்தா அடிக்குது வெளிய போக முடியல".
அவர்கள் வந்த இருநாட்களில் வீடு வேறொன்றாக மாறியது. எப்போதும் இருக்கும் ஒரு அமைதி விலகி மனிதர்களின் இருப்பு மட்டுமே அளிக்கும் ஒரு இயங்குநிலை. என்னுடைய தேவை கணிப்பொறியும் அலைபேசியும் சில புத்தகங்களும் என்பதால் அவர்களுக்கு பெரிய சங்கடங்கள் இல்லை, எனக்கும். ஊருக்கு செல்கையில் எண்ணூறு சதுரடி அடுக்ககங்களில் பத்துபேர் வரை தங்கியிருக்கிறோம் என்பதால் தனிமையை எதிர்பார்க்கும் நிலைப்பாடுகள் எல்லாம் இல்லை.
மூன்று வேளையும் சமையலறையில் சுடச்சுட சமையல் என்பது நாங்கள் அமெரிக்கா குடிபெயர்ந்தவுடன் மறந்துவிட்ட ஒன்று, அது மாறியது. மூன்று உணவு நேரங்களுக்கு இடையில் தேநீர் மற்றும் சிறு பதார்த்தங்கள் வேண்டும் அவர்களுக்கு. நூண்ணலை அடுப்பை இயக்குவதில் இருந்த தொடக்க சிக்கல்களை இயல்பாக கடந்துவிட்டார்கள். வீடே ஒரு கொண்டாட்டமாக குதூகலாமாக மாறியது.
எனக்கு தமிழில் நீள்தொடர்களின் பெயர்கள் பரிச்சயமாகின. "பிரியமானவளே", "எதிர்நீச்சல்", "கயல்" போனற தொடர்களின் கதாப்பாத்திரங்களுடன் ஆவேசமாக உரையாடும் அவர்களை முதலில் விசித்திரமாக நோக்கினேன், பிறகு பழகிவிட்டது. "மருமவள இப்படி சாட பேசறாளே இவ பொண்ண இன்னொரு குடம்பத்துக்கு குடுத்திருக்காளே நெனச்சு பாக்கமாட்டா?" போன்ற இடையீடுகளை மீறி வெண்முரசை வாசிக்கப்பழகினேன். தொலைக்காட்சி இயக்கியில் உள்ள ஒலி வரிசைகளை அதன் முழுமைக்கும் பயன்படுத்தலாம் என்பது நான் இதுவரை எண்ணிப்பாராதது.
சர்க்கரை தொந்தரவு உள்ள மாமா தேநீரில் சர்க்கரையை குறைக்க அதிகம் மெனக்கெடுவதில்லை. ரத்த அழுத்தம் கொண்டவர்கள் ஊறுகாயும் மோர் வற்றலும் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கலாம் எனும் செய்தியை மருத்துவர் சிவராமன் இன்னும் யூடியூபில் சொல்லவில்லை என்றே அத்தை எண்ணுகிறார்.
சர்க்கரைப் பொங்கல் என்பதை நெய்யுடன் சுடவைத்து மாலை பதார்த்தமாக உண்ணலாம் என்பது எனக்கு புதிது. என்னுடைய அலுவலக அழைப்புகளில் பிண்ணனியாக "தேங்காவுக்கு காசு குடுத்தானா இல்லையா?", "வாடாக காச மறக்காக வாங்கிரு" போன்ற ஒலிகளுக்கு அலுவலக தோழர்கள் பழகியிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
"நீங்க கொறட்ட விடரதனாலதான் எனக்கு தூக்கம் போகுது" போன்ற பரஸ்பர முறையிடல்கள் அவர்களுடைய வாழ்விலும் உண்டு என்பதை அறிந்துகொண்டேன். இரவு உணவுக்குப் பிறகு அவர்களுடன் ஊர் பற்றிய உரையாடல்களை வழக்கமாக்கிக்கொண்டேன். "நாங்கிறதனால இதுவரைக்கும் சமாளிச்சிருக்கேன். வேறொருத்தியா இருந்தா?" என்ற வசனத்தை என் மனைவியின் சொந்த சிந்தனை என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன், அந்த நம்பிக்கை பொய்த்தது.
வாங்கி வைத்திருந்த ஒயின் போத்தல் மூன்று மாதங்கள் என் கைபடாமல் இருந்தது. பாத்திரம் கழுவுகையில் இலக்கிய உரைகளை கேட்பவன் என்பதால், அவற்றை இனிவரும் மாதங்களில்தான் கேட்டுமுடிக்கவேண்டும், நிறைய சேர்ந்துவிட்டது. இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்பதை கூட்டாக சிந்திக்கலாம் என்று கற்றுக்கொண்டேன்.
மூன்று மாதங்கள் கடந்ததே தெரியவில்லை. கொலம்பஸ் விமான நிலையத்தில் அவர்களை விட்டுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்ததும் நான் கண்ட வெற்றிடம் மனதில் காட்டமாக இறங்கியது. அணைத்துவைக்கப்பட்ட தொலைக்காட்சியும் மனித இருப்பற்ற சமையலறையும் இத்தனை வெறுமையை அளிக்கவல்லதா?
Comments
Post a Comment