ஒலி வடிவ புத்தகங்கள்

                                                        

புத்தகங்களை ஒலி வடிவில் கேட்பதை நான் அதிகம் சிந்தித்ததில்லை. வாசிப்பு என்பது புத்தகங்களின் சொற்றொடர்களை கண்களால் மூளைக்கு அனுப்பி உள்வாங்குவது என்று மட்டுமே நான் எண்ணியிருந்தேன். அவ்வப்போது நண்பர்கள் பயணங்களில் ஒலிவடிவில் உரைகளையோ புத்தங்களையோ கேட்கும் வழக்கத்தை சொல்லியிருக்கிறார்கள். 

குளிர்காலத்தில் ஒன்றரை மணிநேரம் மாலையில் நடைப்பயிற்சி செல்லும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறேன். வழக்கமாக நடைக்கு நான் அலைபேசியை எடுத்துச்செல்வதில்லை. ஒன்று அதன் ஆகீத எடை, இன்னொன்று அலைபேசியிடமிருந்து ஒரு இடவெளியைக் கோரும் மனநிலை.

கடந்த இருவாரங்களில் என் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வந்தன. நடைப் பயிற்சிக்கு செல்கையில் ஒரு சலிப்பு வருவதை தடுக்க இசை கேட்கலாம் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். Spotify Amazon Music என்று எல்லா தளங்களும் மாதக் கட்டணம் கேட்கின்றன. பிறகு ஏன் புத்தகங்களை ஒலிவடிவில் கேட்கக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. 

உடனே Libby செயலியை தரவிறக்கினேன். வீட்டின் அருகாமை நூலகத்தின் உறுப்பினர் அட்டையை வைத்து அதில் புத்தகங்களை வாசிக்கவும் கேட்கவும் வசதிகள் இருப்பதை அறிந்துகொண்டேன். கணிணித் துறையில் இருந்தாலும் இதுபோன்ற செயல்களில் நான் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறேன். நண்பர்கள் சிலர் இந்த செயலியை பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது நடை பயில்கையில் மட்டுமல்ல வீட்டிலும் பல வேலைகளுக்கு இடையில் புத்தகங்களை ஒலிவடிவில் கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். குழந்தைகளை உறங்க வைக்கையில் இது மிகவும் பயன்படுகிறது. முதலில் வாசித்த(கேட்ட) புத்தகம் What I Talk About When I Talk About Running. தற்போது Sepiens மற்றும் Why Zebras Don't Get Ulcer புத்தங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். 

புத்தகங்களை ஒலிவடிவில் கேட்பது வாசிப்பில் வருமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது. வாசிப்பதைப் போல புத்தகங்களை கேட்கையில் உள்வாங்க இயலுமா என்பதிலிருந்து தோன்றிய கேள்விதான் இது. வாசிக்கையில் நமக்கு ஏற்ற வேகத்தில் புத்தகங்களை கடக்கிறோம். ஒலி வடிவில் பேசுபவரின் உச்சரிப்பு வேகத்திற்கு ஈடுகொடுக்கவேண்டியிருக்கிறது. மிகக் கூரிய அல்லது நம்மை மிகவும் கவர்ந்த பகுதிகளை மீண்டும் கேட்க சற்று பின்னோக்கவேண்டியுள்ளது. 

ஆனால் புத்தகங்களை கேட்பது நடைமுறையாக மிகவும் நிறைவளிப்பதாகவே உள்ளது. குறிப்பாக ஆங்கில புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு உள்ள தயக்கத்தை இது பூர்த்திசெய்கிறது. இந்த வகையிலாவது புத்தகங்களை உள்வாங்கமுடிகிறதே என்ற நிம்மதி வருகிறது. நடை வீட்டுவேலைகள் போன்ற சலிப்பூட்டும் செயல்களுக்கு ஒரு அர்த்தம் வருகிறது. எப்போதும் புத்தங்களுக்கு அருகிலேயே இருப்பது நிறைவாக இருக்கிறது. 

முதன் முதலில் கிண்டில் செயலியில் புத்தகங்களை வாசிக்கையில் மனது இதே தயக்கங்களை எதிர்கொண்டது, இப்போது மின்வடிவில் வாசிப்பது குறிப்பிடத்தக்க பழக்கமாகிவிட்டது. அதே போல ஒலிவடிவ புத்தகங்களுக்கும் வாசகனாக நம் வாழ்வில் பெரிய இடம் உள்ளது என்றே எண்ணுகிறேன். தொடக்க தயக்கங்கள் நீங்கி அதன் வடிவத்திற்கும் வேகத்திற்கும் மனம் ஈடுகொடுக்கத்தொடங்கிவிடும் என்றே தோன்றுகிறது. இன்றைய வாழ்வியல் சூழலுக்கு அது தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கே வருகிறேன்.

Comments

  1. நன்று பாலாஜி அவர்களே. நானும் கடந்த ஒரு வருடமாக புத்தகங்களை ஒலி வடிவில் கேட்டு வருகிறேன். ஆங்கில அபுனைவு புத்தகங்கள்தான் பெரும்பாலும். ஒலி வடிவில் கேட்பதால் நிறைய புத்தகங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள‌ முடிகிறது :-) ஒலி வடிவில் கேட்டாலும் நான் அப்புத்தகங்களை கிண்டிலில் மின்புத்த்கமாகவும் Libby செயலியில் தரவிறக்கிக் கொள்வேன். கிண்டலில் ஆங்கில புத்தகங்களில் popular highlights, x-ray போன்ற சில வசதிகள் புத்தகத்தை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கின்றன. சமீபத்தில் நான் ஒலிப்புத்தகங்கள் கேட்கும் போது நான் கூடவே மனதிற்குள் வாசிக்க முற்படுவேன். கொஞ்சம் அவதானிப்பை அதிகரிப்பதாகப் படுகிறது :P தொடர்ந்து வாசியுங்கள்!
    பிரேம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை