சலூன் - சிறுகதை
அவன் சிறுவனாக இருக்கையில் வீட்டுக்கு வந்து முடி திருத்திவிட்டு, நெல்லை ஊதியமாகப் பெற்றுக்கொண்டிருந்த நாவிதர் பொன்னம்பலம் கடைவீதியில் தனியாக ஒரு சலூன் தொடங்கியிருந்தார். இனிய வாசனைகளுடனும், சிதறிய ரோமங்களுடனும், மடிப்புகளை மறக்காத நாளிதழ்களுடனும் இருந்த அந்த சலூன் அவனுக்கு ஒரு அதிசய இடமாக அமைந்தது. சலூனின் சுவர்களில் ஏதிரெதிராக மிக நீண்ட இரு கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. இவ்வளவு பெரிய கண்ணாடியை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. கண்ணாடிகளில் தன்னுடைய உருவம் பல நூறாக பெருகிப் பிரதிபலிப்பதை அவன் வியந்து பார்த்துக்கொண்டிருப்பான். சலூனின் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு சுழல்வதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். நாற்காலிகள் முழுக்க பொன்னம்பலத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. நாற்காலிகளை உயர்த்தியும் தாழ்த்தியும் விரித்தும் அவர் மந்திர வித்தை காட்டிக்கொண்டிருந்தார். அவனுடைய நைனா வ...