கரூர் டைரீஸ், ஒரு நீண்டநாள் உறவு - 6
நகுல்சாமி அண்ணனை இருபது வருடங்கள் கழித்து சந்தித்தேன். திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் புலியூர் அருகில் துவங்கப்பட்ட புதிய பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினேன். நைனா கைகளை காட்டி "உன்ன எப்பவுமே கேப்பாப்ள" என்று சொன்னார். வேறொரு பெண் பெட்ரோல் போட ஆயத்தமாகையில் "விடும்மா, நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு, "ஒரு நல்லது கெட்டதுனா ஃபோன் பன்றா" என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டார். அவர் அப்படி நேரடியாகக் கேட்டதை நான் எதிர்பார்க்கவில்லை, "எப்படிணா இருக்கீங்க?". ஐம்பது வயது கடந்த தோற்றம், தலையில் முடிகள் அகன்று பரவலான வழுக்கை, அங்காங்கே நரைமுடிகள் படர்ந்திருந்தன, கண்களில் நிலையான ஒரு வருத்தம் ஒளிந்துகொண்டிருந்தது, ஒரு முறை என் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டார். நான் இதுபோன்ற தருணங்களில் சலனப்பட்டுவிடுவேன...