ஒரு நெடிய பயணத்துக்குப் பின் பகல் நேரத்தில் ஒரு சிற்றுந்தில் ஊர் திரும்புகிறீர்கள். உங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு நிலத்தினூடாக அந்தப் பயணம் அமைகிறது. பயணக் களைப்பு, சற்று கண்ணயர்கிறோம். கணநேர உறக்கமாக இருந்தாலும், விசித்திரக் கனவுகள் தோன்றி நம்மைத் திகைக்கவைக்கின்றன. அல்லது இப்படி எடுத்துக்கொள்வோம் - பயணங்களில் நாம் காணும் நிலப்பகுதியோ, விலங்குகளோ, மனிதர்களோ நம்முடைய அறிதலுக்கும் அனுபவத்துக்குமான எல்லைகளுக்கு அப்பாலுள்ளவை. அந்த அனுபவங்கள் நமக்கு ஒரு வியப்பையும், புதிய அறிதல்களையும் அளிக்கின்றன. அதன் நீட்சியாக நாம் பயணங்களில் கடக்கும் மனிதர்களின் இருப்பிடத்தை, வாழ்வை, எண்ணங்களை கற்பனைகளில் வாழ்ந்துபார்க்கிறோம். இலக்கிய வடிவங்களில் ஒரு சிறுகதையாகவோ, நாவலாகவோ அல்லது ஒரு கவிதையாகவோ வடிவமெடுத்திருக்கவேண்டிய ஒரு அனுபவம் அல்லது கருதுகோள் இது. அனால், இதையே ஒரு உயர்ந்த செவ்வியல் படைப்...