ரம்யா மனோகரன் கவிதைகள் - ஒரு கடிதம்
ரம்யா நலமா?
முதலில் மன்னிப்பு கோருகிறேன். என்னிடம் வரும் படைப்புகளை முடிந்தளவு விரைவாக வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்துகொள்பவனாகவே இருந்திருக்கிறேன். உங்களுடைய கவிதைகளை வாசிக்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது முதல் முறை, எனக்கே சற்று உறுத்துகிறது. முன்னரே குறிப்பிட்டது போல சில பயணங்கள், அலைச்சல்கள். அப்புறம் எப்போதும் போல மனம் கவிதைகளை விட்டு முற்றாக விலகியிருந்த நாட்கள். எவ்வளவு விலகி இருக்கிறேனோ அதே அளவு வாஞ்சையோடு மீண்டும் ஈடுபடுபவனாகவும் இருக்கிறேன். என்னுடைய மனநிலை அப்படி, வேறொன்றும் பிரத்யேக காரணங்கள் இல்லை. சரி, சுய பிலாக்கணம் போதும் உங்கள் கவிதைகளுக்கு வருவோம்.
எண்ணிக்கையில் நான் நிறைய கவிதைகளை எதிர்பார்த்தேன், பதிநான்கு கவிதைகள் மட்டும் சுட்டியில் இருந்தன. மிகுந்த பிரக்ஞையோடு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நிறைய கவிதைகள் நீங்கள் எழுதியிருக்கக்கூடும்.
‘ஒத்திசைவு’ கவிதையை முதலில் வாசித்தேன். மிக உருக்கமான கவிதை. வெட்டப்பட்ட கிளை நல்ல படிமமாக விரிந்திருக்கிறது. தாய்மை, இயற்கையின் இன்றியமையாத தன்மை, இன்பம் துன்பம் ஆகியவற்றை உணராத ஒரு தூய இருப்பின் அற்புத நிலை என நன்றாக வந்திருக்கிறது கவிதை.
‘தொடர்ச்சி’ குறியீட்டுத்தன்மை மிகுந்த ஒரு கவிதை. கருப்பு வாகனத்தில் வருபவனை மரணத்தின் தூதன் என்று வாசிக்கலாமா? இறப்பு குறித்த எண்ணங்கள் இயற்கையில், குறிப்பாக தண்ணீர் உயரம் ஆகிவற்றை நோக்கியிருக்கையில் மின்னலைப் போல எழுந்து மறைபவை. கவிதைகள் வாழ்வின் தருணங்களில் இருந்து எழுபவைதான். இது உங்களுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்திலிருந்து எழுந்து மரணம் அல்லது வேறொன்றைச் சுட்டும் கவிதையாக எழுந்து நிற்கிறது என்று எண்ணுகிறேன். அப்பாயியின் தொடர்ச்சி நீங்கள், அந்த மக்கள் திரள் அவர்களுக்குரிய முன்னோர்களின் தொடர்ச்சி என்று விரித்துப் பார்க்கிறேன். பேருந்து மரணத்திலிருந்து மீள்தலுக்கான குறியீடா? பல படிமங்களைச் சுமந்திருக்கும் கவிதை. சுய அனுபவத்தை கவிதைக்குரிய இரசாயனங்களோடு அளிப்பதில்தான் எழுத்தின் இரகசியம் இருக்கிறது, அது இதில் நிகழ்ந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.
‘வருகை’ ஒரு நினைவை அதன் மறைவை சுட்டி நின்ற அழகிய கவிதை. சிறிய கவிதைகளுக்கே உரிய அழுத்தம் இதில் இருக்கிறது.
‘பறவை பார்த்தல்’ தனிமையின் சுதந்திரத்தை தன்னை மறந்து செயலில் இருப்பதை சொல்கிறது. கவிதையில் அர்த்தப் பிழை என்றுமே அழகியது. இதில் யார் யாரைப் பார்க்கிறார்கள் என்று சொல்வதில்தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது. ‘இயற்கையின் கண்’ என்றொரு பதத்தை மனதில் ஓட்டிப் பார்த்தேன், இந்தக் கவிதைக்கு பொருந்தி வருகிறது.
‘தரிசனம்’ - கண்ணாடி எப்படியாவது கவிதைகளில் முண்டி இடம்பிடித்துவிடுகிறது இல்லையா? கண்ணாடி, நிழல் ஆகிய படிமங்களைத் தொடாத கவிதைகள் இல்லை. இந்தக் கவிதை கண்ணாடியின் விரிசலைப் பேசுகிறது. ஒருவகையில் நம் சுயம் உடைந்த கணம், நாம் யாரென்று நாமே அறிந்துகொள்ளும் ஒரு தருணம். நல்ல கவிதை.
‘காட்சி’ - முழுக்க குறியீட்டுத்தன்மை பொருந்திய கவிதை இது. நாம் காணும் எளிய காட்சிகள் அர்த்தங்களாகப் பரிணமிப்பதை உணராமல் கவிதை எழுத முடியாது. இந்தக் கவிதைக்கான உந்துதலை நன்றாகப் புரிந்துகொள்கிறேன். நானும் இதுபோல சில கவிதைகளை எழுதியிருக்கிறேன் என்பதால் ஒரு புன்னகை எழுகிறது.
‘வீடு’ - வெறுமையை தனிமையை ஏக்கத்தை பிரிவைச் சுட்டும் கவிதையாக சட்டென மனதில் அமர்ந்துகொள்கிறது.
‘அதற்கு பதிலாக’ - ‘எழுத்தில் உருக்கிய வலியை’ எனும் வரிகளை வாசித்தவுடன் ‘ஆம் இது கவிதை’ என்று மனம் கூப்பாடு போட்டுவிடுகிறது. ஒருவரில் கவிதை என்னவாக திகழ்கிறது என்று சுட்டிய கவிதை. நிறைய கவிதைகளை வாசிக்காமல் இதுபோன்ற ஒரு கவிதையை எழுதிவிட முடியாது.
‘மனம்’ - தலைப்பே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. வெளிச்சம் இருள் என காட்சிகள் மாறுவதைப் போல மனதின் அலைவுகளை சொல்கிறது இந்தக் கவிதை. தொடர்ந்து ஒருவருடைய கவிதைகளை வாசிக்கையில் நம்மையறியாமல் அந்த கவிதைகளின் சாயம் நம் மனதிலும் படிந்துவிடுகிறது.
‘இயல்பு’ - சட்டென மனதில் அமர்ந்துகொள்ளும் கவிதை. நானும் ‘மின்தூக்கிகளை’ பல வகைமைகளில் சொற்களில் அடைக்க முற்பட்டிருக்கிறேன். மறுமுறை வாசிக்கையில் இன்னும் அடர்த்தியாக மாறுகிறது கவிதை.
‘காத்திருப்பு’ - நகுலனின் சில கவிதைகளை வாசித்திருக்கிறேன். ஏனோ அவருடைய கவிதைகளை நினைவுபடுத்தியது.
‘கதிர் அவன்’ - இயற்கையை என்னவாகக் காண்பது என்று வினவும் இன்னொரு கவிதை, ‘பார்வை’ - இயற்கையின் தூய்மையை கொண்டாட்டத்தைச் சொல்லும் இன்னொரு கவிதை.
‘தவிப்பு’ - படிமமாக நின்றுவிடும் கவிதை.
உங்களுடைய கவிதைகளை பலமுறை வாசித்துவிட்டேன். இதில் சில கவிதைகளை மட்டும் குறிப்பிட்டு தேர்ந்தெடு என்று சொன்னால், ‘தொடர்ச்சி’, ‘பறவை பார்த்தல்’, ‘தரிசனம்’, ‘அதற்கு பதிலாக’, ‘இயல்பு’ ஆகிய கவிதைகளை குறிப்பிடுவேன்.
உங்களுக்கு தருணங்களை உந்துதல்களை கவிதைகளாக மாற்றும் மன அமைப்பு நிச்சயம் இருக்கிறது. அதன் பல நிறங்களை இந்தக் கவிதைகளில் காண்கிறேன். கவிதைகள் வாசிப்பு கவிஞனின் ஆளுமையின் மீதுதான் நிகழ்கிறது. அந்த ஆளுமை எனும் அடித்தளத்தை நிறுவ அதிக எண்ணிக்கையில் எழுதுவதனால் மட்டுமே இயலும்.
நீங்கள் நிச்சயம் கவிஞர்தான், அதற்கான தாது உங்களுக்கு இருக்கிறது. (‘தாது’ யுவன் சந்திரசேகர் பயன்படுத்தும் வார்த்தை). நான் கவிஞர் எனும் வார்த்தையை மிகவும் சங்கோஜத்தோடு பயன்படுத்துவேன். அது ஒருவகை சுமை.
விருப்பமிருந்தால் இதில் சில கவிதைகளை, உங்களுக்கு சரி என்று தோன்றுபவற்றை சொல்வனம் இதழுக்கு அனுப்பலாம். நான் குறிப்பிட்ட கவிதைகள் நிச்சயம் பிரசுரத் தகுதிகொண்டவைதான், என்னுடைய தனிப்பட்ட ரசனை மற்றும் வாசிப்பு சார்ந்து இதைச் சொல்கிறேன்.
அனுப்பும்போது எட்டிலிருந்து பத்து கவிதைகளுக்கு குறையாமல் அனுப்புங்கள், அதில் சிலவற்றை அவர்கள் பிரசுரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன் உங்களுடைய கவிதைகள் வேறுங்கும் வெளிவந்துள்ளனவா என்றும் தெரியவில்லை.
சில கவிதைள் வெறும் படிமங்களாக நின்றுவிடுகின்றன. படிமங்களை ஒரு சூழலில் வரிகளில் புதைத்து வாசகனை ஈர்பதுதான் நல்ல கவிதைகளில் நிகழ்கின்றன. படிமங்களைக் கண்டவுடன் மனம் குதூகலித்து எழுதத்தொடங்கிவிடும், அதை நானும் உணர்ந்திருக்கிறேன். கொஞ்சம் அவற்றை ஆறவிட்டு மனதில் என்னவாக மாறுகிறது என்று பார்க்கலாம். நாமே அறியாத சமயத்தில் வேறொன்றில் தொற்றிக்கொண்டு வெளிவரும்.
இன்னொன்று கவிதைகளில் தலைப்புகள். வலைத்தளம் என்பதால் தலைப்பு ஒருவகை கட்டாயமாகிறது. எல்லா கவிதைகளுக்கும் தலைப்புகள் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பல தலைப்புகள் மிக எளிய ஒற்றைப்படையானவையாக தெரிகின்றன. இதெல்லாம் நான் எனக்கும் சொல்லிக்கொள்வதுதான், என்னுடைய கவிதைகளும் நீங்கள் வைப்பதுபோல தலைப்புகளைத் தாங்கியவைதான். இதை நீங்கள் யோசிக்கலாம்.
இப்போதைக்கு வேறொன்றும் தோன்றவில்லை, இன்னும் சற்று காத்திருந்தால் சில அவதானங்கள் தோன்றலாம். ஆனால், பதில் எழுத இன்னும் நேரம் எடுத்துக்கொண்டு தாமதிக்கவேண்டாம் என்பதால் இவற்றை உடனே அனுப்புகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள் ரம்யா, எழுதுபவற்றை விருப்பமிருந்தால் பகிருங்கள், கவிதை உங்களில் திகழட்டும்.
Comments
Post a Comment