இருபது ரூபாய், சிறுகதை - சொல்வனம் இதழ்

                                                    


இருபது ரூபாய் – சொல்வனம் | இதழ் 338 | 8 மார்ச் 2025

                        (1)

கரூர் செல்லும் மூன்றாம் எண் நகரப் பேருந்தில் காற்றும் நுழையாத அடர்த்தியான நெரிசலில் குணசேகரன் நின்றுகொண்டிருந்தான். பெரு மிருகத்தால் விழுங்கப்பட்டு செரிக்கப்படாமல் நொதிக்கும் இரைகளாய் உடலின் ஒவ்வொரு முனையிலும் இன்னொருவரை அழுத்திக்கொண்டு பிற மனிதர்கள். குணசேகரனுக்கு இது அன்றாடம் பழகிய சூழல். திரையரங்கில் ஒரே திரைப்படத்தின் சில காட்சிகளை ஆண்டாண்டுகளாய் தொடர்ந்து காணும் பார்வையாளன் என தன்னை எண்ணிக்கொண்டான்.

கலவையான வியர்வை நெடி, ஈரம் காய்ந்திராத தலைமுடியில் இருந்து எழும் தேங்காய் எண்ணையின் மணம், சாலையின் மேடுபள்ளங்களில் அசையும் பேருந்தின் இசைவுகளுக்கேற்ப ஆடும் தன் உடல், யாரோ ஒருவன் அலைபேசியில் ஒலிக்கவிட்ட மலினமான திரைப்பாடல் இவற்றுக்கிடையில் கரூர் பேருந்துநிலையத்துக்கு இன்னும் எத்தனை நிறுத்தங்கள் என துல்லியமாய் கணித்திருந்தான். புலியூர், காந்தி கிராமம், தெரஸா ஸ்கூல், சுங்க கேட், திருமாநிலையூர், லைட் ஹவுஸ், உழவர் சந்தை கடந்து கடைசியாக அவனுடைய நிறுத்தம்.

பேருந்து திருமாநிலையூர் ரவுண்டானாவை ஒட்டி நிறுத்தி இன்னும் சில படியோரப் பயணிகளை ஏற்றிக்கொண்டது. குணசேகரன் அன்று வேறொருவனாய் உணர்ந்தான். பயணத்தின் கசப்பை அவன் மனம்  விரும்பியது. புற அசைவுகளை தடுத்துக்கொண்டு சிலைபோல கூட்டத்துக்குள் நின்றிருந்தான். பார்வையை தன் முகத்தின் அருகாமையில் இருந்த பயணியின் முதுகில் குவித்திருந்தான். தான் அங்கு இல்லை என்பதைப் போல, இன்னும் நூறு மனிதர்களின் எடையையும் இறுக்கத்தையும் தாங்கிக்கொள்பவனைப் போல.

புலியூரிலிருந்து கரூர் செல்ல இருபது நிமிட அசவுகரியம். இதைக் கடந்துவிட்டால் அன்றைய நாளின் எந்த சூழலையும் எதிர்கொள்வதற்கான திண்ணம் வாய்க்கும்.

இன்னைக்காவது ஓனருகிட்ட கேட்ருங்க. சின்னவம் பள்ளிக்கூடத்துல இருந்து மூணு லெட்டரு வந்திருச்சு”, என மீண்டும் நினைவுபடுத்தினாள்.

அவள் மீது அமிலமாய் சொற்களை எரித்து வீசினான்.

காலம் சூறாவளிக் காற்றாய் அவனை சுழற்றி வீசிவிட்டது. நண்பர்களால்குணாஎன்று ஆசையாய் அழைக்கப்பட்ட நாட்கள் வெகுதொலைவில் சென்றுவிட்டன. அவன் வாழ்வின் மீதான வெகுளித்தனமான நம்பிக்கைகளுடன் அலைந்த காலம் ஒன்று இருந்தது.

தந்தை புலியூர் சிமெண்ட் ஆலையில் இயந்திரப் பராமரிப்பாளராக வேலை செய்தார். ஆலையை ஒட்டிய சிற்றூர்வாசிகளுக்கு சிமெண்ட் ஆலை விவசாயத்துக்கு மாற்றாய் வசதியான வாழ்வாதாரத்தை அளித்தது. எட்டு மணிநேர வேலை, குறிப்பிடத்தக்க மாத ஊதியம், வருடாந்திர ஊக்கத்தொகை, பிள்ளைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்புவரை இலவச பள்ளி, வேலைக்கு ஆலைத் தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை என பலவகையான சலுகைகள்.

கரூர் பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் டிப்ளமோ வாங்கி ஆலையில் வேலைக்கு விண்ணப்பித்து சில வருடங்கள் காத்திருந்தான். சிமெண்ட் ஆலையின் உச்ச மேலாண்மை குழுவில் நிறைய மாற்றங்கள் குழப்பங்கள். ஆலைத் தொழில் சூம்பியது. ஏற்கனவே வேலையில் இருந்த ஆட்களையும் குறைத்தார்கள்.

சிமெண்ட் ஆலையில் வேலை என்பது தொலைதூரக் கனவாக மாறியது. சில வருடங்களை தந்தையின் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயத்துக்கு உதவியவாறு கழித்தான். நிதர்சனத்தை உணர்ந்து கரூரில் ஃபைனான்ஸ் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். பதினைந்து வருடங்களாக அதே இடத்தில் வேலைக்கு செல்கிறான்.

(2)

குணசேகரன் கடைக்குள் நுழைந்தபோது மணி ஒன்பதேகால் ஆகிவிட்டது. கண்களை சுருக்கி பேரேட்டில் குவித்திருந்த உரிமையாளர் தலையைத் தூக்கி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு குனிந்தார். அதில்ஏன் தாமதம்?’ என்ற மௌன விசாரிப்பு இருந்தது.

ஃபைனான்ஸ் கடை என்றால் சிறிய செவ்வக வடிவ அறை. மெத்தை உறைகள் தயாரிக்கும் சிறு நிறுவனம் ஒன்றின் கீழ்தளத்தில் அமைந்திருந்தது.

கரூர் நகரில் செங்குந்தபுரம் சாலையின் குறுகிய தெரு ஒன்றை கட்டிடத்தின் முகப்பு தொட்டுக்கொண்டிருந்தது. வாசலை ஒட்டி ஓடும் சாக்கடையின் மேல் அமைந்த சிமெண்ட் தளத்தில் இருசக்கர வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன

வாகனங்களின் பல்வேறு ஒலிகள் சாலை தாண்டி கட்டிடத்துக்குள் உரிமையாக நுழைந்து வெளியேறியது. கடையை மூடப் பயன்படும் எட்டு நீள்சதுர பலகைகள் பக்கவாட்டில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பலகையிலும் சிவப்பு பெயிண்டால் ஒன்றிலிருந்து எட்டு என எண்கள் எழுதப்பட்டிருந்தது. கடை வாசலின் சிறிய நிலையை ஒட்டி சில ஜோடி செருப்புகள் கலைந்து கிடந்தன. கடை முகப்பின் மேற்பகுதியில்அடஞ்சாரம்மன் துணைஎன்று கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது.

தாழ்வான மேள்தளம் கொண்ட அந்த சிறிய கட்டிடத்துக்குள் தரையில் இரண்டு வழுவழுப்பான மரமேசைகள் வீற்றிருந்தன. மேசைகளுக்கு பின்னால் உரிமையாளரும் கணக்குபிள்ளையும் அமர்ந்திருந்தார்கள். சீலிங் ஃபேன் ஒன்று பலவருட தூசியை தன் விசிறிகளில் சரடுகளாய் கோர்த்து சுழன்றுகொண்டிருந்தது.

பணம் எண்ணுவதற்கான கருவி ஒன்று கணக்குபிள்ளையின் மேசைக்கு அருகில் இருந்தது. பழைய கால்குலேட்டர் ஒன்றும் அவருடைய மேசையில் இருந்தது. அழிந்திருந்த எண்களைப் பொருட்படுத்தாமல் அவருடைய விரல்கள் அதில் அலையும்.

மேசைகளுக்கு எதிரில் இருந்த ஐந்தடி இடத்தில் துறுவேறிய இரும்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. கட்டிடத்தின் பிற்பகுதியில் அமைந்த சிறு அறையில் உறுதியான இரும்பு பெட்டகத்தில் கட்டுகளாக பணம் அடுக்கப்பட்டிருந்தது. அன்றைய தேவைக்கு ஏற்ப அதிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

கரூரில் உள்ள பலவகையான தொழிற்கூடங்களுக்கு நேரடியாக உயிரளிக்கும் பலநூறு ஃபைனான்ஸ் கடைகளில் ஒன்று அது.

நகரில் புழங்கும் பணத்திற்கான மூலாதாரத்தை தேடினால் குறுக்கும் நெடுக்குமான கோடுகளாக இது போன்ற சிறிய கடைகளைத் தொட்டு நிற்கும். சிக்கலான சிலந்தி வலை போன்றவை அந்த கோடுகள். தனக்கே உரிய உள்ளார்ந்த ஒழுங்கையும் வெளித்தெரியும் ஒழுங்கின்மையும் கொண்டவை.

தொழில் எனும் தெய்வத்தின் வெறியாட்டிற்கு ஈடுகொடுத்து நாசூக்காய் நடனமாடத் தெரிந்தவர்கள் உரிமையாளர்கள். வெறியாடும் தெய்வம் பழிகொள்ளாமல் இருப்பதில்லை. இந்த ஆடலில் வீழ்ந்து சிலருடைய வாழ்வு நசுக்கப்பட்டிருக்கும். பலர் நசுக்கப்படுவது தெரியாமல் இயங்கிக்கொண்டிருப்பார்கள்

ஃபைனான்ஸ் கடைகளில் உள்ள பணம் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வைப்பில் இருந்துவிட்டு மறைபவை, மீண்டும் தோன்றுபவை. இங்கு மறைதலுக்கும் தோன்றுதலுக்குமான ஊடாட்டத்தில் உரிமையாளர்களின் செல்வம் சற்று கூடியிருக்கும். தோன்றுதல் மறைதல் வெறியாடல் என நகரும் மாறாச் சுழல் அது.

கடையின் கொடுக்கல் வாங்கல் கணக்குகள் பேரேடுகளில் தொடங்கி பேரேடுகளிலேயே முடிபவை. உரிமையாளர்களின் வசதிக்கேற்ப அடக்கமாக கணக்கியல் மென்பெருளில் ஏற்றப்பட்டு ஏப்ரல் மாதம் வருடாந்தர தணிக்கை செய்யப்படும்.

குணசேகரனுக்கு பணத்தை தேவையான இடங்களுக்கு விநியோகம் செய்யும் வேலை. தோன்றுதலுக்கும் மறைதலுக்குமான இணைப்பை அதன் விளைவுகள் அறியாமல் சுமந்து அலையும் சுமை எந்திரம். சுமப்பவற்றின் மேல் எந்தவித உரிமையும் அற்ற எந்திரம்.

கடையின் வணிகத் தொடர்புகள் கரூர் நகரம் தாண்டி அரவக்குறிச்சி, பழனி, வெள்ளகோவில், காங்கேயம், திருப்பூர், கோவை என பல திசைகளில் விரிந்திருந்தது

இன்னக்கி மேக்கால லைனுக்கு போவனும்டா. இருவது ருவா வாங்கிக்க, காங்கேயம் தனஶ்ரீ பைனான்ஸ்ல குடுத்துட்டு வர்ர வலீல வெள்ளகோயில்ல முத்துவேலங் கடைக்கு போயிட்டு வந்திரு”, என்று சொன்னார் உரிமையாளர்.

இருபது ரூபாய் என்றால் இருபது லட்சம். இருபது லட்சம் என்று உச்சரித்தால் அதன் வீச்சு அதிகமாக தெரிகிறது. உரத்து பேசப்படும் இரகசியம் அளிக்கும் சங்கடம் போல. அளிக்கப்படும் பணம் சென்றடைந்து திரும்ப வரும்வரை ஏற்படும் தத்தளிப்பு அதை இருபது ரூபாய் என்று சுருக்கிச் சொல்வதால் இலகுவாகிவிடுகிறது.

குணசேகரனின் மனதில் அலை அலையாக எண்ணங்கள் எழுந்து அடங்கின. இந்த பதினைந்து வருடங்களில் அவன் மூலமாக பயணம் செய்த பணத்தின் தொகையைக் கூட்டினால் எத்தனை கோடிகளில் வரும் என்று சிந்தனை செய்தான்.

கணக்குபிள்ளையிடமிருந்து ஐநூறு ரூபாய் கட்டுகள் நாற்பதை வாங்கி வழக்கமாக எடுத்துச் செல்லும் பையில் அடுக்கினான். முனைகள் மழுங்கி அழுக்கேறிய காடா துணியால் ஆன நிறம் மழுங்கிய பை. ஆங்காங்கே முனைகளில் நூல் பிரிந்து, ஆனால் உறுதியாக இருந்தது.

                        (3)

இந்த பணத்தை எடுத்துக்கொண்டு எங்காவது ஓடிவிட்டால் என்ன?’, எனும் கேள்வி அவனில் எழுந்தது

காங்கேயம் செல்ல கோவை பேருந்தில் கடைசி வரிசைகள் ஒன்றில் சன்னலை ஒட்டி அமர்ந்திருந்தான் குணசேகரன். பேருந்தில் அதிக நெரிசல் இல்லை. பணப் பை உறங்கும் குழந்தை போல அவன் மடியில் அமைதியாக கிடந்தது

அவன் அவ்வப்போது எதிர்கொள்ளும் கேள்விதான். ஆனால் வெளியில் கரையும் புகை போல வந்த திசை தெரியாமல் அமுங்கிவிடும் கேள்வி.

ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்களுக்கென்று ஒரு இரகசிய அமைப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் பணம் சென்று சேரவில்லை எனும் தகவல் தெரிந்தால் அடுத்த சில நாட்களில் ஆட்களை விட்டு கண்டுபிடித்துவிடுவார்கள்.

முறையான கணக்குகள் இல்லாதவை என்பதால் தொலைந்த பணத்தை மீட்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கமுடியாது. மேலும் காவல் நிலையங்கள் குருதிச் சுவை அறிந்த மிருகங்கள் இயங்கும் கானகங்கள் போன்றவை. ஆனால் பணத்தை மீட்க அங்கிருக்கும் சில மிருகங்களின் துணையையே நாடுவார்கள். இதற்கென்றே பழக்கப்பட்டு கானகத்திற்கு வெளியே இயங்கும் மிருகங்கள் அவை. சில துண்டுகள் மாமிசம் கேட்பவை. தொலைந்த பணம் செல்லும் பாதையை மோப்பமிட்டு தம்மைப் போன்ற பிற மிருகங்களுக்கு அறிவித்து வேட்டையாடுவார்கள். தேவைப்பட்டால் பாதாள சாக்கடையில் உழலும் பெருச்சாளிகளையும் நாடுவார்கள்.

பையில் வைத்திருக்கும் இருபது லட்சம் அவனுடைய வாழ்வின் நெருக்கடிகளை கலைக்க வல்லது. மகனுடைய பள்ளிக்கட்டணம் செலுத்திவிடலாம். வீரராக்கியம் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருக்கும் மனைவியின் நகைகளை மீட்டுவிடலாம். மிச்சத்தை வயதுக்கு வந்துவிட்ட பெண்ணின் திருமணத்திற்காக சேகரிக்கலாம்.

சில நொடிகள் அந்த பையின் உரிமையாளனாக தன்னை கற்பனை செய்துகொண்டான். சொந்தங்களின் விஷேசங்களுக்கு எப்போதும் பணிவுடன் தயக்கமாக செல்பவன் சிரித்த முகமும் நம்பிக்கையுமாக செல்வதைப் போல ஒரு காட்சி விரிந்தது.

இது என்ன முட்டாள்தனம். ஒருவேளை இந்த எண்ணம் இருப்பதுகூட உரிமையாளருக்கு தெரிந்தால் வேலை போய்விடும். அதற்கு பிறகு இந்த நகரில் எங்கும் வேலைக்கு செல்ல முடியாது’, எண்ணங்களை மறுத்துவிட்டு உடனடியாக சன்னலுக்கு வெளியில் தெரிந்த காட்சிகளில் மனதைக் குவித்தான்.

நான் நேர்மையானவனா? இல்லை ஒரு பயந்தாங்கொள்ளி. விளைவுகளுக்கு அஞ்சும் கோழை. பணத்தை எடுத்துக்கொண்டு மறையும் எண்ணம் கூட எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது’, குணசேகரனுக்கு தன்மேல் சுயவெறுப்பு ஏற்பட்டது. அது கழிவிரக்கமாக மாறி பெருமூச்சு விட்டான்

என்னைப் போன்றவர்கள் இதுபோன்ற சூழல்களில் உழன்றுகொண்டிருக்கவே பிறந்தவர்கள். அதுவே இந்த உலகின் நியதி’, என்று ஆறுதல் அடைய முயன்றான்.

நம் வாழ்வின் தேர்வுகள் நம்முடையவை. நான் சிமெண்ட் ஆலையின் வேலையை நம்பிக்கொண்டு காத்திருந்ததற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. ஏதாவது ஒரு மாநகரில் வேலைக்கு சென்றிருந்தால் வாழ்வு இன்னும் மேம்பட்டிருக்கலாம்’.

பேருந்து பரமத்தியில் நின்று சில பயணிகளை ஏற்றிக்கொண்டது. அவர்கள் காலியாக இருந்த இருக்கைகளில் சென்று தங்களை பொருத்திக்கொண்டார்கள். குணசேகரன் காலியான பேருந்தின் இடைவெளியை வெறுத்தான். உடலை நசுக்கும் நெரிசலுக்கு அவன் மனம் ஏங்கியது, சங்கடமாய் நெளிந்தான்.

பணப் பையை ஒளித்துவைத்து தொலைந்துவிட்டதாக பொய் சொன்னால் என்ன? இல்லை யாரோ களவாடிச் சென்றுவிட்டார்கள் என்று சொல்லிப் பார்க்கலாமா?’, இந்த யோசனையின் அபத்தத்தை உணர்ந்து தன்னை அறியாமல் தலையை இடவலமாக ஆட்டி மறுத்தான்.

என்னை நம்பி அளிக்கப்பட்ட பணம் இது. இப்படி யோசனைகளில் ஆழ்வது உரிமையாளர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிரானது. என்னிடம் இதைவிட பெரிய தொகையைக் கூட கொடுத்திருக்கிறார்’.

மகன் பள்ளிக்கு செல்ல முடியாது என்று மறுக்கும் காட்சியை எண்ணிப்பார்த்தான். கட்டணம் செலுத்துமாறு வகுப்புகளிலேயே ஆசிரியர்கள் மூலம் அவனுக்கு பள்ளி நிர்வாகம் நினைவுபடுத்துகிறார்கள், இரக்கமற்றவர்கள்

தன்னுடைய பிழையற்ற நடத்தையால் தனிப்பட்ட வாழ்விற்கு எந்தவித பயனும் இல்லை என்ற எண்ணம் அவனுக்குள் வன்ம உணர்வைத் தூண்டியது

கடையின் உரிமையாளர் கணக்குபிள்ளை மனைவி குழந்தைகள் போன்ற தெரிந்த முகங்களையும், அரசாங்கம் சிமெண்ட் ஆலையின் மேலாண்மை குழு என மனதில் உருவாகியிருந்த கருத்துருவங்களையும் வெறுத்தான். அவர்களுடன் உக்கிரமாக வாதிடுவதாக கற்பனை செய்தான். தனிப்பட்ட உருவங்களும் அமைப்புகளும் அவனுடைய நியாயங்களை எதிர்த்து பேச இயலாமல் தலைகுனிவதாக கற்பனை செய்தான். சற்று ஆசுவாசம் கிடைத்தது.

பேருந்தின் சக்கரங்கள் சாலையில் உராயும் சப்தத்தை கேட்டவாறு அமர்ந்திருந்தான். அவனுடைய கைகள் மடியிலிருந்த பையை விட்டு அகலவே இல்லை.

                            (4)

கடைக்கு குணசேகரன் திரும்புகையில் மணி ஆறரை ஆகியிருந்தது. பகல் மாலையின் இருளுக்குள் மறையத் தொடங்கியிருந்தது. விளக்குகளின் ஒளி இருளைக் கலைத்துக்கொண்டிருந்தது.

இன்று தவறாமல் உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். கேட்டுப் பெறுவது தன்னுடைய உரிமை, தயங்குவதில் அர்த்தமில்லை என்று தனக்கே சொல்லிக்கொண்டு நடந்தான்.

உடலும் மனமும் தளர்ந்திருந்தது. அன்றைய நாளின் சுமையை இதற்குமேல் தாங்கும் வலிமை தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான்.

ரசீதுகளை கணக்குபிள்ளையிடம் கொடுத்துவிட்டு காலியான பையை ஒரு மூலையில் வைத்துவிட்டு கடையின் வாசலை ஒட்டி நின்றான். சாலையில் கடந்துகொண்டிருக்கும் வாகனங்களின் ஒலிகளைக் கேட்டவாறே தன் அகஓட்டத்தை தெளிவுபடுத்திக்கொண்டான்.

உரிமையாளர் மேசைக்கு பின்னால் பேரேட்டை புரட்டிக்கொண்டிருந்தார்.

ன்னா நாங் கெளம்பரங்க”.

சரிடா, காலைல நேரத்துக்கு வந்திரு. லோகல்ல வேலையிருக்கும்”.

செரிங்னா”.

சில நொடிகள் தாங்கவியலாத அமைதி நிலவியது.

பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்னுங்க. ஒரு இருவதுருவா அட்வான்ஸ் வேனுங்னா”, குணசேகரனுடைய குரல் அவனுக்கே கேட்காமல் ஒடுங்கி ஒலித்தது.

உரிமையாளரின் புலன்கள் கூர்ந்தன.

எந்த ஸ்கூல்ல படிக்கறான்?”.

தனியார் பள்ளியின் பெயர் ஒன்றை சொன்னான்.

அது சிபிஎஸ்சி ஸ்கூலாச்சே. அநியாயமா பீஸ் வாங்குவானுகளே”.

அவருடைய வார்த்தைகளில் பொதிந்திருந்த உட்செய்தியின் வன்முறை குணசேகரனை சாட்டையின் கயிறாய் தீண்டியது. உள்ளுக்குள் சினந்தான்

நீயெல்லாம் ஏன் இதுபோன்ற வசதியான பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் உன் மகனை சேர்த்தாய்?’ என்பதுதான் அது. பதில் சொல்லாமல் அவருடைய கண்களை சில நொடிகள் தீர்க்கமாக பார்த்துவிட்டு பார்வையை திசைமாற்றினான்.

முன்னாடி வாங்குன கணக்குவேர முடிக்காம கெடக்குது?”.

“............”.

அவனிடம் பதில் வராது என்பதை உணர்ந்தே இந்த கேள்வியை கேட்கிறார்.

சரி வாங்கிக்க”.

பணத்தை மறுத்துவிட்டு வீம்பாக வெளியேறிவிடலாம் என்று தோன்றிய எண்ணம் மறைந்த வேகத்தை திகைப்புடன் எண்ணிப்பார்த்தான்.

செரிங்னா”, என்று சொல்லி கணக்குபிள்ளை அளித்த தொகையை கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக இருந்தது. வழக்கமாக நகர பேருந்தில் ஏறிக்கொள்பவன் இன்று திருச்சி செல்லும் விரைவு வண்டியில் பின்வாசலை ஒட்டி அமர்ந்துகொண்டான்.

விரைவு வண்டிகளில் தொலைதூரப் பயணிகளுக்கு முன்னுரிமை அளித்துவிட்டே அருகாமை ஊர்களுக்கு செல்பவர்களை அனுமதிப்பார்கள். அதை மீறி ஏறும் பயணிகள் புழுவைப்போல பார்க்கப்படுவார்கள், நடத்துனரால் பலசமயங்களில் வசைச்சொல்லுடன் கீழிறக்கப்படுவார்கள்.

நடத்துனர் கேட்டால்ஆமா, புலியூர்லதான் எறங்கனும். என்ன இப்ப?’ என்று உறுதியாக சொல்வதை ஒத்திகை செய்தான்.

அருகில் இருந்த சாலையோர உணவகத்திலிருந்து வாணலியில் சோறு வறுபடும் மணம் எழுந்து பசியைக் கிளப்பியது.

குணசேகரனுடைய அலைபேசி ஒலித்தது.

கெளம்பிட்டீங்களா?”.

ம்ம்ம், அரமணிநேரத்தில வந்திருவேன்”.

செரி. பணியாரஞ்சுட்டு வெச்சிருக்கென்”.

ம்ம்ம்…”.

ஒனர்ட கேட்டீங்களா?”.

ம்ம்”.

என்ன சொன்னாரு?”.

வாங்கீட்டென்”.

எவ்வளவு?”.

இருவதுருவ்……. இருவதாயிரம்”, என்று உரக்கச் சொன்னான்.

_ _ _ _ _

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை