Deadpool & Wolverine - ஒரு Deadpool ரசிகனின் புலம்பல்

                                                


இயக்குனர் மார்டின் ஸ்கார்செஸி (Martin Scorsese) மார்வெல் திரைப்படங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை (Amusement Park Films) என சொல்லியிருந்தார். அழமான உணர்வுகளோ கதைக்களங்களோ அற்ற திரைப்பட உருவாக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கும் மலிவான ஆக்கங்கள் என்பதே அவருடைய பார்வை. மார்வெலின் சில திரைப்படங்களைக் காண முயன்று ஆழ்ந்து செல்ல இயலாமல் வெளிவந்திருக்கிறார். மார்வெல் திரைப்படங்கள் குறித்த என்னுடைய அனுபவமும் பார்வையும் அதுவே.

என்னுடைய வாசிப்பை நான் காமிக்ஸ் புத்தங்களில் இருந்தே தொடங்கினேன். பெரும்பாலும் வன்மேற்கு நிலத்தைச் சார்ந்த கதைக்களம் அமைந்தவற்றையே அதிகமும் வாசித்தேன். சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் முகமூடி வீரார் மாயாவியையும் வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்களில் கூட அடிப்படையான கதைக்களமும் இயல்பான மனித உணர்வுகளும் அமைந்திருக்கும்.

சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் டெட்பூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. வயது முதிர்ந்தோருக்கான 'R' தரவரிசையைச் சார்ந்தவை டெல்பூல் படங்கள். மக்கள் முன் தன்னை ஒரு முன்மாதிரியாக நிறுவிக்கொள்ள முயலாத, அதீத வன்முறையில் ஈடுபடும், எப்போதும் பாலின்ப வசனங்கள் பேசும் ('I am going to touch myself today', 'I am so wet right now', 'I never said this, please don't swallow'), தன்னைத் தானே கேலி செய்துகொள்ளும் விசித்திரமான இந்த பாத்திரம், அதிரடியும் அதகளமும் துடிப்புமாக மற்ற அமெரிக்க சூப்பர் ஹீரோக்களில் இருந்து மாறுபாட்டு இருக்கும்.

டெட்பூல் வரிசைகளில் முதல் இரண்டு திரைப்படங்களை ஒருமுறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். சமயங்களில் நகைச்சுவைக்காக யூடியூபில் இந்த படங்களின் துணுக்குகளை அவ்வப்போது காண்பதை இன்றுவரை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு சூப்பர் ஹீரோ என்றால் மறுசிந்தனை இல்லாமல் டெட்பூல் என்றே சொல்வேன். ரெயன் ரெனல்ட்ஸ் டெட்பூல் வேடத்தில் அட்டகாசம் செய்கிறார்.

இதே எதிர்பார்ப்போடு Deadpool & Wolverine திரைப்படத்தை காணச் சென்றேன். திரைப்படம் முதல் பத்து நிமிடங்கள் அதே அதகளத்தோடும் ரகளையோடும் தொடங்கியது. இறந்த வோல்வரைனுடைய உடலைத் தோண்டி எடுக்கும் டெட்பூல் அங்கு தன்னை பிடித்துச் செல்லவரும் வீரர்களை பனிபெய்த நிலத்தின் பிண்ணனியில் ரத்தம் தெறிக்க வீழ்த்துகிறான். பாப் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டே வீரர்களை ரத்தக் களரியில் ஆழ்த்தும் முதல் பத்து நிமிடங்களை ஒரு கிளாசிக் என்றே சொல்வேன்.

ஆனால் அதற்கு பின் வந்த காட்சிகளும் மொத்த திரைப்படமும் என்னைக் கவரவில்லை. டெட்பூல் மார்வெல் வீரர்களுடன் சேர முயற்சி செய்கிறான் (எத்தனை அபத்தம்!), MCU என்றழைக்கப்படும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்சிலிருந்து நிறைய இடையீட்டுக் குறிப்புகள் வருகின்றன, ஹக் ஜாக்மென் மெலிந்து வயதானவராக காட்சியளிக்கிறார் - எவ்வளவுதான் Growth Harmone, Peptides எடுத்துக்கொண்டாலும் கண்களில் உறக்கமின்மை அப்பட்டமாகத் தெரிகிறது, ஒல்லிக்குச்சி பிரிட்டிஷ் வில்லி, எதிர்காலம் மற்றும் இணை பிரபஞ்ச அடித்தளம் கொண்ட காட்சிகள் என மிகவும் பழகிய வடிவம். மார்வெலின் எதிர்கால திரைப்படங்களுக்கு வழியமைக்க மட்டுமே திரைக்கதையமைத்து எடுக்கப்பட்ட முயற்சி என்றே எனக்கு தோன்றுகிறது.

டெட்பூல் திரைப்படங்களின் பலம் என்பது அதன் வசனங்கள்தான். பாலின்பத்தைக் குறிக்கும், சமகாலச் சூழலை பகடி செய்யும் வசனங்கள் தனித்துவமும் ரசனையும் கூடியவை, எழுத்தாளர்களின் உழைப்பு வெளிப்படையாகத் தெரியும். இந்த படத்திலும் டெட்பூலும் வோல்வரைனும் சண்டைபோட ஆயத்தமாகையில் சொல்லப்படும் "Get ready with your special socks, nerds", இருவரையும் இணைத்து கட்டி வில்லி கடத்திச் செல்கையில் ஹக் ஜாக்மென் சொல்லும் "Not all of him is completely asleep" போன்ற நகையூட்டும் பாலின்ப வசனங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் தாண்டி மார்வெல் யுனிவர்ஸின் தொடுப்புகள் நிறைய இருந்ததால் என்னால் படத்தில் அதிகமாக ஒட்டமுடியவில்லை. 

அமெரிக்கா இன்று கருக்கலைப்புத் தடை போன்ற கடந்தகால அடிப்படை நம்பிக்கைகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. டெட்பூல் போன்ற சூப்பர் ஹீரோ ஒரு அரோக்கியமான திறந்த மனம்கொண்ட சமூகத்தின் வெளிப்பாடு, இன்னும் குறிப்பாகச் சொன்னால் அதற்கான ஒரு உருவகம். தன்னைத்தானே கேலி செய்துகொள்ளுதல், வெளிப்படையான இருபாலின ஈர்ப்பு என இந்த கதாப்பாத்திரத்தின் அம்சங்கள் நாட்டார் தொன்மங்களில் வெளிப்படும் நகைச்சுவையின் இன்னொரு வடிவமே.

என்னுடைய அச்சம் அடுத்த மார்வெல் திரைப்படத்தில் டெட்பூலை ஒரு Cameo செய்ய வைத்து மக்களுக்காக உழைப்பதை வசனமாகப் பேசவைத்து, இல்லையென்றால் PG மதிப்பீட்டோடு ஒரு டெட்பூல் திரைப்படத்தை எடுத்து அந்த கதாப்பாத்திரத்தின் ஆன்மாவைச் சிதைத்துவிடுவார்களோ என்பதுதான். ஒரு சிறுத்தைக்கு காயடிப்பதைப் போன்றது இந்த செயல். டெட்பூல் தன்னுடைய தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் பேணிக்கொள்வான் என்றே நம்புகிறேன். 'R' தரவரிசை இல்லாத டெட்பூல் திரைப்படத்தை காண்பதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை, உப்பில்லாத உணவை உணபதைப் போன்றது அது.

Deadpool & Wolverine படம் பெரிய வரவேற்பை அடைந்த செய்திகளை பார்க்கிறேன், அது சற்று நம்பிக்கை தருகிறது. மார்வெல் யுனிவெர்ஸில் டெட்பூல் தனித்தே இருப்பான் என்றும் நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை