'சங்கிலிப் பூதத்தான்' சிறுகதைத் தொகுப்பு, நாஞ்சில் நாடன்

                                                

நாஞ்சில் நாடனின் நாவல்களில் தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை, மிதவை, கட்டுரைத் தொகுப்புகளில் தீதும் நன்றும், எப்படிப் பாடுவேனோ, சிறுகதைத் தொகுப்புகளில் சூடிய பூ சூடற்க, கொங்குதேர் வாழ்க்கை ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். அவருடைய நாவல்கள் யதார்த்தவாத இலக்கிய வகைமையைச் சார்ந்தவை. குறிப்பாக மிதவை, சதுரங்கக் குதிரை நாவல்கள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை. பிழைப்பிற்காக மும்பை சென்று வாழும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்வை அந்த சூழலின் பிண்ணனியில் உயிர்ப்போடு எழுதியிருப்பார்.

சங்கிலிப் பூதத்தான் தொகுப்பிலிருக்கும் பதினேழு சிறுகதைகளும் ஆனந்த விகடன் இதழில் வெளியானவை. இவற்றின் பெரும்பாலான கதைகளை மற்ற தொகுப்புகளிலும் விகடனிலும் முன்னரே வாசித்திருந்தேன். சிறுகதைகளை சில ஆண்டுகள் இடைவெளியில் மறு வாசிப்பு செய்கையில் முந்தைய வாசிப்பில் அடையாதவை இன்னும் துலக்கமாகின்றன. இலக்கிய வாசகனாக சில ஆண்டுகள் நாமும் பயணித்திருப்போம் என்பதால் ஒரு ஆசிரியனின் படைப்புலகு குறித்த நம்முடைய அவதானிப்புகளும் மாற வாய்ப்புகளுண்டு. சில ஆசிரியர்கள் நெருக்கமாகின்றனர். நாஞ்சில் நாடன் அதில் ஒருவர்.

இவற்றின் சிறுகதைகளை மும்பை சூழலில் அமைந்த கதைகள், கோவையைப் பிண்ணனியாகக் கொண்டு அமைந்தவை, நாஞ்சில் நாட்டு கதைமாந்தர் மற்றும் நாட்டார் தெய்வங்களை களமாகக் கொண்டவை என்று வகைப்படுத்தலாம். பாம்பு போன்ற முழுமையான யதார்த்தம் மீறிய நகையுணர்வும் சமூக விமர்சனமும் ஓங்கிய கதைகளும் உள்ளன. 

சிறுகதைகளில் கதையோட்டத்தின் இடையே தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சார்ந்த அவதானிப்புகளும், இன்றைய கால மனிதர்களின் சமூக அரசியல் யதார்த்தம் சார்ந்த கிண்டலும் ஆசிரியரின் குரலாக ஓங்கி ஒலித்து வாசிப்பிற்கான இடையீடாகத் தோன்றினாலும், இது கலைஞனின் தனிப்பட்ட நடை சார்ந்த ஒரு இயல்பு என்று எடுத்துக்கொள்ளமுடிகிறது, அதற்கு நம் அகம் பழகியும் விடுகிறது. நாஞ்சில் நாடனின் இந்த இயல்பு பிந்தைய சிறுகதைகளில் கும்பமுனியாக அவதாரம் எடுத்திருப்பதை தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

தொகுப்பில் எனக்கு மிகவும் நெருக்கமான சிறுகதைகள் என 'தன்ராம் சிங்', 'கான்சாகிப்', 'ஆத்மா', 'பேச்சியம்மை'  ஆகிவற்றைச் சொல்வேன். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் திபேத் செல்லும், நேபாளிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும், பஸ் ரயில் நடை என பதினைந்து நாட்கள் வரை நீளும் ஒரு பயணத்தை விவரிக்கும் 'தன்ராம் சிங்' நாமறியா நேபாளிகளின் வாழ்வை காத்திரமாக கண்முன் நிறுவுகிறது.

'கான்சாகிப்' ஒரு முஸ்லிம் நண்பரின் நீண்ட கால நட்பையும் அவருடைய மறைவையும் சொல்லும் அழுத்தமான படைப்பு. 'ஆத்மா', 'பேச்சியம்மை' இரண்டு கதைகளும் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் தனிமையைச் சொல்லும் படைப்புகள். 'ஆத்மா' மும்பையில் நடக்கும் கதை, 'பேச்சியம்மை' நாஞ்சில் நாட்டில் நிகழ்கிறது. முந்தையவர் பீதாம்பர் பாண்டுரங்க் எனும் நோய்வாய்ப்பட்ட மனைவியை தனியாகப் பேணும் அநாதையாக அடுக்ககத்தில் இறந்து கிடக்கும் ஆண், பின்னதில் 'பேச்சியம்மை' எனும் அமெரிக்கா சென்று பத்தாண்டுகளாக ஊர் திரும்பாத மகன் அனுப்பும் பணத்தை மறுத்துவிடும், அவனுடைய கடிதங்களை உதாசிக்கும் பெண்மணி. இரண்டு கதைகளிலுமே கைவிடப்பட்ட முதியவர்கள் தங்களுடைய சுயமரியாதையை பேணுபவர்களாக மன வலிமை மிக்கவர்களாக வெளிப்படுகிறார்கள்.

'கொங்குதேர் வாழ்க்கை' சிறுகதை லைன் வீடுகள் எனப்படும் பத்துக்கு பத்து அளவில் வரிசையாக அமைந்த வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் வாழ்வைச் சொல்கிறது. சிறுகதையின் பெரும்பகுதி லைன் வீடுகளின் வடிவங்களை அதன் அமைப்புகளைச் சொல்லி அதன் மூலம் நம் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கதையின் முடிவில் மனைவியை இழந்த ஒரு கிழவரின் நாதசுவர இசை கேட்கிறது. இத்தனை நெருக்கமான இடைவெளிகளில் பிற மனிதர்களுடன் வாழ்ந்தாலும், ஒருவருடைய தனிப்பட்ட துக்கம் என்பது அவருக்கு மெட்டுமேயானது எனும் பிரபஞ்ச நிகர்சனத்தை ஆணித்தரமாக சொல்லும் ஒரு கதை இது.

'பரிசில் வாழ்க்கை' சிறுகதை தென் தமிழகத்தில் ஊரை விட்டு விலகி கோவில்கொண்டிருக்கும் சாஸ்தா எனும் நாட்டார் தெய்வத்தை பேணும் கோவில் நம்பி ஒருவரின் கதை. சாஸ்தாவுக்கு பூசை செய்ய பச்சரிசி இல்லாத நிலையில் ஒரு பிஞ்சு மாம்பழத்தை துணியில் மூடி வைத்து பூசை செய்து, ஊர் பண்ணையாரின் முன் குறுகி நிற்கும் நம்பியாரின் அவலமான வாழ்வைச் சொல்கிறது.

'அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது', 'கறங்கு', 'ஏவல்', 'சங்கிலிப் பூதத்தான்' ஆகிய கதைகளில் கைவிடப்பட்ட தெய்வங்கள் பாத்திரங்களாக வருகின்றன. கடவுளரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் நகை ஓங்கிய கதைகள் இவை. தொகுப்பின் கடைசி மூன்று கதைகளும் ஒரே தொணியில் இருப்பதால் வாசிக்கையில் ஒரே கதையின் பல வடிவங்களை வாசிப்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது.

நாஞ்சில் நாடன் வாசகனுக்கு அவனுடைய மனதில் என்றும் நீங்காத சில கதைமாந்தர்களை இந்த சிறுகதைகள் மூலம் அளிக்கிறார். கான் சாகிப்பும் தன்ராம் சிங்கும் பீதாம்பர் பாண்டுரங்கும் பேச்சியம்மையும் நம்பியும் அத்தகையவர்கள். அசோகமித்ரனின் புலிக் கலைஞனும், ஜெயமோகனின் கொத்தேல் சாகிப்பும், நாஞ்சில் நாடனின் இந்த சிறுகதைகளின் கதைமாந்தரும் தமிழ் இலக்கியம் உள்ளவரை மறையாமல் வாழ்பவர்கள். 

ஒரு இலக்கியவாதி தன் கதைகள் வழியாக மொழிக்கு அளிக்கும் கொடை என வேறெதைச் சுட்ட இயலும்?

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை