Leo - பொழுதுபோக்கு சினிமா எனும் கவனச் சிதைப்பின் கலை
Leo திரைப்படத்தை Netflix தளத்தில் தொடர்ச்சியாக இரண்டே முக்கால் மணிநேரம் பார்த்தேன். இது போன்ற பொழுதுபோக்கு படங்கள் ஏன் இத்தனை பிரபலமடைகின்றன என்று சிந்திக்கையில் தோன்றியவற்றை தொகுத்துக்கொள்ளவே இந்த பதிவு -
முதலில் பொழுதுபோக்கு திரைப்படங்களை பார்க்க எனக்கு நானே விதித்துக்கொள்ளும் விதிகள் உள்ளன,
1. 'லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்' போன்ற அபத்தங்களை அறிந்துவைத்திருப்பதில் குற்றவுணர்வு கூடாது.
2. நமக்குள் வாழும் இலக்கிய வாசகன், கலைப்படங்கள் மட்டுமே பார்ப்பவன் போன்ற இறுக்கதாரிகளை கர்வகொழுந்துகளை சில மணிநேரங்கள் 'எங்காவது சென்று தொலை எழவே' என்று அவிழ்த்துவிடவேண்டும்.
3. படம் பார்த்து முடிந்ததும் மூன்று மணிநேரத்தை விரயம் செய்துவிட்டோமே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை.
4. பொழுதுபோக்கு திரைப்படங்கள் அளிக்கும் Hangover மனதில் பல நாட்கள் தொடரும். அதை முழுமையாக கழுவ கலை போன்ற நமக்கே உரிய சுழற்சிகளில் சில நாட்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்.
பெரும் செலவில் எடுக்கப்படும் பொழுதுபோக்கு படங்கள் மிக துல்லியமாக திட்டமிடப்படுகின்றன. படத் தயாரிப்பு எனும் எந்திரம் மிகச் சிக்கலான இணைப்புகள் கொண்டது. அதை விரித்தெடுத்தால் தத்துவம், உளவியல் என பல தளங்களில் ஆழமாக நுழையும். இந்திய பொழுதுபோக்கு படங்கள், குறிப்பாக பெரிய நடிகர்கள் பங்குபெரும் படங்கள், ஹாலிவுட்டில் வெளிவரும் மார்வெல் போன்ற குப்பைகளின் மாதிரிகளே. சில சமயங்களில் இந்திய படங்கள் ஹாலிவுட் குப்பைகளைவிட நன்றாகவும் இருப்பதுண்டு (K.G.F. இரண்டு பாகங்கள்).
படத்தில் நம்முடைய தர்க்கங்களை உடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக பிரம்மாண்டமாக காட்சிகளை ஒன்றிலிருந்து ஒன்றாக வெட்டிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் ஒன்றைச் சிந்திக்கையில் இன்னொரு காட்சி வந்து நம் கவனத்தை சிதறடிக்கும், சிதறடித்தே ஆகவேண்டும். காட்சிகளினூடாக உடைக்கப்படும் தர்க்கம் மெல்ல திரைப்படத்தின் முடிவுநோக்கிய எதிர்பார்ப்பாக மாறுகிறது. அப்புறம் எங்கோ தொடக்கத்தில் போடப்படும் சில முடிச்சுகளை இறுதிக் காட்சிகளில் மெல்ல அவிழ்க்கிறார்கள். Leo திரைப்படத்தில் இறுதியில் சுப்பிரமணி என்ற பெயரில் வரும் கழுதைப்புலி ஒரு எடுத்துக்காட்டு. கடைசியாக ஒரு பெரும் காட்சித் தொகுப்பை தாங்கிக்கொண்டிருக்கும் நம் மூளை அயர்ந்து ஒற்றைப்படையாக நல்ல படம், மோசம், பார்க்கலாம் என்ற எளிய முடிவுகளுக்கு தள்ளப்படுகிறது.
தமிழ் திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் குறித்த சட்டகங்கள் ஆண்டுகளாக நம் மனதில் வளர்ந்து சேகரமாகியுள்ளது - முக்கியமாக படங்களில் லாஜிக் போன்ற வஸ்துக்களை எதிர்பார்க்கக்கூடாது என்ற பொது புரிதல். அடிப்படையில் திரைப்படம் குறித்த ஊகங்களில் நாம் முன்னரே ஈடுபடுகிறோம். அதை வளர்க்க விளம்பர உத்திகள் என்றும் இல்லாத அளவில் இன்று பயன்படுத்தப்படுகின்றன. நாம் 'இங்கு பார், எனக்கு படம் குறித்து ஏற்கனவே புரிந்துவிட்டது. நான் எதிர்பார்ப்பவை தாண்டி நீ என்ன காண்பிக்கப்போகிறாய்?' என்ற மனநிலையிலேயே இருக்கிறோம்.
Leo போன்ற படங்களில் நம் ஈகோ, ஊகம் எல்லாம் ஓரளவு நன்றாகவே முறியடிக்கப்படுகிறது. அது நிகழ்கையில் நாம் 'ஆம், என்னையே ஏமாற்றிவிட்டாயே' என்று எண்ணுகிறோம், அதுவே படத்தின் வெற்றியாகவும் மாறுகிறது. திரைப்படம் குறித்து நம்மில் வெகு முன்னரே விதைக்கபடும் செய்திகள் தம்முடைய வேலையை மறைமுகமாக நிகழ்த்தியும்விடுகின்றன. அதற்காக இதுபோன்ற படங்களில் உழைப்பில்லை, சாம்ர்த்தியம் இல்லை என்று நான் சொல்லவில்லை. வெளிவரும் எல்லா திரைப்படங்களிலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ளவை கூட்டாக நிகழ்வதில்லை, பெரும்பாலும் தப்பிவிடுகின்றன, விதிவிலக்குகள் மட்டுமே வெற்றியடைகின்றன.
திரைப்படம் முடிந்ததும் Netflix கட்டைவிரல் குறியீடுகளைக் காட்டியது, நான் Like என்றே அழுத்தினேன். வேறென்ன செய்ய?
Comments
Post a Comment