கி. ராஜநாராயணன் இசையினூடாக - ஒரு குரல் முயற்சி

                                     

ஒவ்வொரு முறை என்னுடைய குரலைக் கேட்கும் போதும் சிறு திகைப்பு ஏற்படும். எனக்கு தொடர்பே இல்லாத ஒரு அந்நியனின் குரல் போல அது ஒலிக்கும், ஒருவகை முரட்டுக் குரல்.

செப்டம்பர் 5, மாலை ஆறுமணி அளவில் இசையமைப்பாளரும் அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் உறுபினருமான ராஜன் சோமசுந்தரம் 'நேரமிருக்கையில் அழைக்கவும்' என ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரிடம் சென்ற ஆண்டு பூன் காவிய முகாமில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராஜன் என்னுடைய குரல் மிக வலுவான ஒன்று என ஒரு உரையாடலில் சொல்லியிருந்தார் (Strong Base Voice). 

பத்து நிமிடங்களில் அவரை அழைத்தேன், "உங்கள் குரலுக்கு ஒரு வேலை வந்திருக்கிறது" என்றார்.

'என்னுடைய குரலுக்கு ஒரு வேலையா!' என்று சற்று துணுக்குற்று அவர் மேலும் பேசக் காத்திருந்தேன். எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பிக்க, 'கோபல்ல கிராமம்' நாவலில் இருந்து ஒரு கும்மிப்பாட்டை எடுத்து இசையமைத்து வெளியிடும் முயற்சியில் இருப்பதாகவும், அதற்கு ஒரு முன்னோட்ட காணொளி தயாரிப்பதாகவும் சொன்னார். 

அன்று இரவு எட்டரை மணி அளவில் அமெரிக்க விஷ்ணுபுரம் அமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆஸ்டின் சௌந்தர் அண்ணனும், ராஜனும் கூட்டு அழைப்பில் வந்தார்கள். அந்த காணொளியின் தொடக்கத்தில் இந்த இசை முயற்சியை ஒரு முப்பது நொடிகளில் விவரிக்க என்னுடைய குரலை முயன்று பார்க்கும் விருப்பத்தை தெரிவித்தார்கள். காணொளியின் தொடக்க காட்சிகளையும், யார் பேசவிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்தார்கள். செப்டம்பர் 16 சனிக்கிழமை கி. ராவின் நூறாவது பிறந்தநாளன்று முன்னோட்டக் காணொளியை வெளியிடுவதாகத் திட்டம்.

அடுத்த ஐந்து நாட்களுக்குள் குரல் பதிவுக்கான வேலையை முடித்துவிடும் எண்ணத்தையும் தெரிவித்தார்கள். இந்த பிண்ணனிக் குரலுக்கான குறிப்பையும் என்னையே எழுத ஊக்கப்படுத்தினார்கள். நான் அடுத்த அரை மணிநேரத்தில் ஒரு சிறு குறிப்பை எழுதி அவர்கள் இருவருக்கும் அனுப்பினேன். அதில் ஆஸ்டின் சௌந்தர் அண்ணன் சில மாற்றங்களைச் செய்தார்.

அமைதியான ஒரு அறையில் அமர்ந்துகொண்டு அலைபேசியில் குரல் பதிவைச் செய்து அனுப்பவேண்டும் என்பதே எனக்கான வேலை. நான் அடுத்தநாள் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, கலந்தாய்வு அறை ஒன்றில் அமர்ந்து சில பதிவுகளைச் செய்து ராஜனுக்கு அனுப்பினேன். மறுநாள் ராஜன் பேசவேண்டிய குறிப்பின் இறுதி வரைவையும், எப்படிப் பேசலாம் என்பதற்கான ஒரு குரல் மாதிரியையும் செய்து அனுப்பினார்.

சற்று ஆழமான குரலில், ஆனால் ஒரு நாடகத்தன்மையுடன் பேசிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். மாலை கிரிக்கெட் மைதானத்தில் சற்று முன்னதாகச் சென்று, என்னுடைய காரில் அமர்ந்துகொண்டு புதிய குரல் பதிவுகள் சிலவற்றைச் செய்து அனுப்பினேன். மிகச் சிறிய குறிப்பு, ஆனால் குரலில் ஏற்றத் தாழ்வுகளை சரியான இடத்தில் செய்வதும், தமிழ் உச்சரிப்பில் பிழையில்லாமல் இருப்பதும், சொற்களுக்கிடயில் இடைவெளிகளை விடுவதும் என எதிர்பார்த்ததை விட கடினமான முயற்சியாகவே இருந்தது.

அதிகமாக யோசிக்க வேண்டாம் என்றும், ஒருவேளை சரியாக வரவில்லை என்றால் தொழில்முறை பேச்சாளர்கள் (DJ) யாரையாவது வைத்து பேசிவிடலாம் என்றும் ஒரு ஒலிச்செய்தியை ராஜன் அனுப்பினார். கடைசி முயற்சியாக செப்டம்பர் 9, சனிக்கிழமை கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையில் மீண்டும் காரில் அமர்ந்துகொண்டு சில பதிவுகளைச் செய்து ராஜனுக்கு அனுப்பினேன். எதையும் எதிர்பார்க்கவில்லை, வேறு யாரையாவது வைத்து பதிவு செய்துகொள்வார்கள் என்று எண்ணி அதை மறந்துவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து செப்டம்பர் 11ம் தேதி ராஜன் அழைத்திருந்தார். என்னுடைய குரலை காணொளியில் முன்னோட்டம் செய்து பார்த்ததாகவும், அது நன்றாகவே வருவதாகவும் சொன்னார். கடைசி முயற்சியாக சற்று நாடகத்தன்மைகளை விடுத்து, இயல்பாகப் பேசி சில பதிவுகளைச் செய்து அனுப்பச் சொன்னார். குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் காரில் அமர்ந்து குரல் பதிவுகளைச் செய்து அனுப்பினேன். 

செப்டம்பர் 16 வியாழன் அன்று காலை அலுவலக கூட்டு அழைப்புகளில் இருந்தேன். ராஜன் ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். என்னுடைய குரலில் அந்த முன்னோட்டக் காணொளி தொடங்கியிருந்தது, சற்று திகைத்துவிட்டேன். குரலில் இருந்த சிறு பிசிறுகளையும், பிண்ணனி ஓசைகளையும் களைந்திருந்தார், காணொளியும் உயர்ந்த தரத்தில் வெளிவந்திருந்தது.

என்னுடைய குடும்பத்தாருக்கு அதை அனுப்பினேன். தம்பி "இது யாருடைய குரல்?" என்று கேட்டான். அம்மாவுக்கும் அது என் குரல் என்று தெரியவில்லை. நண்பர்கள் பலரும் என்னுடைய குரலை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மனைவி "என்ன எங்கயோ கேட்ட குரலா இருக்கு" என்று கிண்டல் செய்தாள்.

ஆனால் இந்த முரட்டுக் குரலுக்கும் ஒரு பயனிருப்பதை உணர்ந்துகொண்டேன். எப்படி வெளிவரும் என்று தெரியாமல், எதையும் எதிர்பார்க்காமல் செய்த முயற்சி. கடைசி வரை என்னுடைய குரலைத் தேர்வு செய்து பயன்படுத்துவார்கள் என்று எண்ணவில்லை. இந்த தருணத்தில் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தையும், ஆஸ்டின் சௌந்தர் அண்ணனையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். குரல் கலைஞர்களின் மீதும், அவர்களுடைய வேலையின் மீதும் பெரும் மரியாதை வந்துவிட்டது.

கி. ரா. போன்ற ஒரு ஆளுமைக்கான இந்த முயற்சியில் என்னுடைய பங்கை அளித்தது மனதுக்கு நிறைவாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கெல்லாம் உந்துதலாக இருக்கும் ஆசிரியர் ஜெயமோகனையும் நன்றியோடு எண்ணிக்கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை