ஆந்மாநாம் என்றொரு கவிஞன் - கவிதைகள் இதழ்

                                             

செப்டம்பர் மாத கவிதைகள் இதழில் கவிஞர் ஆத்மாநாம் கவிதைகள் குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது, அதன் பிரதி கீழே - 

ஆத்மாநாம் என்றொரு கவிஞன் –

கவிஞர் ஆத்மாநாம் குறுகிய காலத்தில் தமிழ் நவீனக் கவிதைகளின் மீது ஆழமான தாக்கத்தைச் செலுத்தியவர். ஆத்மாநாம் மறைந்து நாற்பதாண்டுகளாகியும் அவருடைய கவிதைகள் இன்றைய நவீனக் கவிஞர்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. இளங்கோ கிருஷ்ணன், பெருந்தேவி இருவரும் ஆத்மாநாமை தம் கவிதைகளில் நேரடியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள், இன்னும் பல கவிஞர்களும் இந்த வரிசையில் இருக்கலாம்.

ஆத்மாநாம் ஒரு நகரவாசி. சென்னை போன்ற ஒரு நகரம் அவர்மீது செலுத்திய ஆழ்ந்த தாக்கத்தையும், ஒரு பெருநகரச் சூழலின் மீதான அவருடைய எதிர்வினைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். ஒரு புரிதலுக்காக அவருடைய கவிதைகளை ஓவியம் இசை இலக்கியம் ஆகிய நுண்ணிய கலைகளில் பரிச்சயம் கொண்ட, மெல்லுணர்வும் கூர்மையும் அமைந்த ஒரு நகரத்து மனிதனின் அகச்சித்திரங்கள் என்று வகைப்படுத்தலாம்.

ஆத்மாநாம் சமூக அவலங்களை நோக்கி குரல்கொடுக்கும், சராசரி மனிதர்களின் கையறு நிலைகளைப் பிரதிபலிக்கும், அரசியல் சரி தவறுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் கவிதைகளையே கணிசமாக எழுதியிருக்கிறார். பூடகமாக அக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் அவ்வப்போது வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் ஆத்மாநாமின் கவியுலகம் புறத்தை நோக்கி தன்னை நிறுத்திக்கொண்டு அதனுடன் உரையாடும் ஒரு கவிஞனின் பல்வேறு உணர்வுநிலைகளால் கட்டமைக்கப்பட்டது.

கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதைகளை ஒட்டியது ஆத்மாநாமின் கவியுலகம் என்றும் சொல்லலாம் (இருவருமே கன்னடப் பூர்வீகம் கொண்டவர்கள்). அவர்கள் இருவருமே சமூகத்தின் பல்வேறு அம்சங்களான சாதாரண மக்களின் வாழ்வு, அரசியல் அதிகாரம் போன்றவற்றை கவிதைகளாக்கியவர்கள் என்றாலும், ஞானக்கூத்தன் தன்னுடைய கவிதைகளின் வெளிப்பாட்டு முறையாக எள்ளல் தொனியைப் பயன்படுத்தினார் - மாறாக ஆத்மாநாமின் கவிதைகள் தீவிரமான மனநிலைகளைப் பிரதிபலிப்பவை.

ஆத்மாநாமின் கவிதைகளைத் தொகுத்த அவரது நண்பர் கவிஞர் பிரம்மராஜனின் குறிப்புகளை வாசிக்கையில், டபிள்யூ. பி. யேட்ஸ் போன்ற ஐரோப்பிய கவிஞர்களும், பப்லோ நெருதா போன்ற கவிஞர்களும் அவர் மீது செலுத்திய தாக்கத்தை உணரமுடிகிறது. ஓவியம் இசை ஆகியவற்றில் ஆத்மாநாமுக்கு இருந்த ஆழ்ந்த புரிதலையும் ஈடுபாட்டையும் பிரம்மராஜன் ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆத்மாநாம் சில பிறமொழிக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார், ஓவியம் குறித்த சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.

ஆத்மாநாம் படிமங்கள் போன்ற கவிதைகளின் வழமையான போக்குகளை உதறி பிரக்ஞைபூர்வமான மொழியில் நேரடியான சொற்களில் தனது கவிதைகளை அமைத்திருக்கிறார். கவிஞனை மீறி கவிதைகளில் வந்தமர்ந்துகொள்ளும் குறியீட்டுத்தன்மைகள் அவருடைய கவிதைகளிலும் உண்டு. எலும்புக்கூடு, திருஷ்டி பொம்மை, மேசை, விளையாட்டு அரங்கம், புளியமரம், வேலி என அவர் கவிதைகளில் காட்சிப்படுத்தியவை இதற்கான சான்றுகள். ஆத்மாநாமின் கவிதைகளில் காலவரிசைக்கான தகவல்கள் இல்லை என்பதால் ஒரு வாசகனாக அவர் கவிதைகளில் அடைந்த பரிணாமங்களையும் அறியமுடிவதில்லை.

மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டவர், தன்னை இளவயதிலேயே மாய்த்துக்கொண்டவர் போன்ற பிம்பங்களை ஆத்மாநாம் வரலாற்றில் விட்டுச்சென்றிருந்தாலும், குறுகிய காலமே இயங்கியவர் என்றாலும், அவருடைய நூற்றைம்பதுக்கும் சற்று அதிகமான கவிதைகளை வாசிக்கையில், மிகச் சிறந்த உச்சங்களை அடைந்திருக்ககூடிய விழைவையும், தமிழ் நவீனக் கவிதைகளில் தனக்குரிய பிரத்யேக இடத்தை இன்னும் விரிவுபடுத்தியிருக்கக்கூடியவர் என்பதையும் ஊகிக்க முடிகிறது.

ஆனால், இன்று ‘ஆத்மாநாம்’ எனும் பெயரே ஒரு படிமமாக மாறியிருப்பதை மட்டும் மறுக்கவே முடியாது.

சுழற்சி –

கவிஞனில் கவிதைக்கான உந்துகணம் ஒரு காட்சியாகவோ, அனுபவமாகவோ, நினைவாகவோ, ஒரு சொல்லாகவோ இருக்கலாம். ஒரு மின்னல் வெட்டாய்த் தோன்றும் அந்த கணத்தை எதிர்கொள்ளும் கவிஞனின் விழிப்புணர்வு, மொழிப் பிரக்ஞை இரண்டும், அதை ஒரு வடிவத்துக்குள் அடக்கி கவிதையாக மாற்ற முயல்கிறது (கவிஞர் அபி இதை ‘மனப் புழுக்கம்’ என்ற வார்த்தையால் சுட்டுகிறார்).

ஆனால் கவிதை அதன் உச்ச தருணத்தில் அர்த்தமற்ற உளறலாகவும் தோற்றமளிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கவிதையில் கொலாஜ் போல தொடர்பற்ற காட்சிகள் வருகின்றன, பிறகு ஒரு ‘நான் (எனக்காக)’ இந்த காட்சிகளை இணைக்க முயல்கிறது. இந்த ‘நானைக்’ கடந்து கவிதையின் காட்சிகளை மெல்லிய சரடால் இணைக்கும் ஒன்று ஒளிந்திருக்கிறது. ஒரு வாசகன் தன்னுடைய சுய வாசிப்பில் விரித்தெடுத்துக்கொள்ளவேண்டிய சவாலையும் கோருகிறது. ஆத்மாநாம் கவிதைகளில் உள்நோக்கிய தன்மை கொண்டவற்றில் மிகச் சிறந்த ஒன்று என இதைச் சொல்லலாம்.

மீன்களின் கண்கள்

நடுச் சாலையில்

கொட்டிக் கிடக்கின்றன

சூரியனின் கூர் கதிர்கள்

நாற்புறமும் சிதறுகின்றன

முற்றிய திராட்சைகளின்

மிருதுத் தன்மை

நோயுற்ற மூதாட்டி

ரிக்ஷாவில் செல்லப்படுகிறாள்

ஹூங்கார ரயில் வருகிறது

எனக்காக.

--------

புறநகர் –

இந்தக் கவிதையின் புறநகர் நாம் எல்லோரும் எதிர்கொள்வது, மிக அழகானது, ஆழமானது. ஆனால் எனக்குள் இந்தக் கவிதை மிகக் கொந்தளிப்பான உணர்வுநிலைகளைக் கிளர்த்துகிறது. ஒரு பெருவெடிப்புக்கு முந்தைய எரிமலையின் காத்திருப்பாக, பேரலைகளைத் தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் ஆழியின் பொறுமையாக இந்த புறநகரின் அமைதி எனக்குள் விரிகிறது. இந்தக் கவிதையின் சொற்களில் உள்ள இடைவெளியில் ஒளிந்துகொண்டிருப்பது வன்முறையெனும் காமமெனும் குரோதமெனும் பெருவிசை.

யாரையும் எதிர்பார்க்காத நாள்

பெரிதாய் வேலை ஏதுமில்லை

சில பக்கங்களைப் புரட்ட முடிந்தது

இசைப்பெட்டி இயங்கிற்று

பொழுது நகர்ந்துவிட்டது

மாலை

படிக்கட்டில் அமர

உலகம் வியர்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தது

எரிபொருள் பொறுக்கும் குறத்தி

பள்ளிப் பெண்கள் சீருடையின்றி

காகிதம் தின்னும் ஆவினங்கள்

வேலையில் கசங்கி முகம் கோணிய மனிதர்கள்

திரும்பும் பேருந்துகளில்

சற்றே தெளிந்த முகங்கள்

புறப்படும் பேருந்துகளில்

என் வானொலித்துக்கொண்டிருக்கிறது

சிறிய நிறுவனங்களில் அமைதி நிலவுகிறது

மாலை இதழ்கள்

பரபரப்புடன்

திரிந்துகொண்டிருந்தன

தேனீர்க் கடைகளில்

அரசியல்

சூடாகக் கிடைக்கிறது

கட்சி வேறுபாடின்றிப்

பொது மக்கள்

திருப்தியாயிருக்கிறார்கள்

வெளிப்படையான

கலவரம்

குழப்பம்

தெளிவின்மை

எதுவுமின்றி

நகர்ப்புறம்

அமைதியாகவே

ஊர்கிறது.

------------------

திருஷ்டி –

ஆத்மாநாம் கவிதைகளில் அடித்தட்டு மனிதனுக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் கவிதையில் திருஷ்டி பொம்மையை ஒரு விளிம்புநிலை மனிதனுடன் தொடர்புபடுத்தி எளிதாக வாசிக்கமுடிகிறது. மிக நேரடியான ஒரு கவிதை, ஆனால் முழுமையான ஒன்று.

பானைத்தலை சாய்த்து

புல் பிதுங்கும் கைகளோடு

சட்டைப் பொத்தான் வெடிக்க

தொப்பையில் புல் தெரிய தனியாய்

யாருன்னைத் தூக்கில் போட்டார்

சணற் கயிற்றால் கட்டிப் போட்டு

உன் காற்சட்டை தருவேன்

சென்றுன் எதிரியைத் தேடு.

-----------

ஒரு குதிரைச் சவாரி –

ஒரு கவிஞனுடைய சொற்களில் அவன் வாழ்வின் மெல்லிய தீற்றல் மறைமுகமாகவேனும் வெளிப்பட்டுவிடுகிறது. இது ஆத்மாநாமின் அகச் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் கவிதை. இங்கு ஒரு மனம் தன்னுடைய சிக்கல்களிலிருந்து வெளிவர முடியாமல் எப்படி தவிக்கிறது என்பதும், அதற்கான ஏக்கமும் தீவிரமாகவே வெளிப்படுகிறது.

எல்லா மனிதரும் வாழ்வின் ஒரு தருணத்தில் இந்த வகை சிக்கல்களுக்குள் செல்கிறார்கள், பலரால் வெளிவரமுடிகிறது, எல்லோராலும் முடிவதில்லை. இது கவிஞனின் ஒரு தனி அனுபவமாக வாசிக்கப்பட்டாலும், அதை பொது அனுபவமாக விரித்துக்கொள்ளவும் முடிகிறது.

நரம்பியலாளர் வாகனம் ஓட்ட

பின்னால் நான் அமர

வாகனத்தின் சத்தம்

அவரை ஒன்றும் செய்யவில்லை

படபடத்துக்கொண்டிருக்கும்

மூளையின் மேல் நான்

சீராய்ச் சாலையில் செல்கிறது

அவர் ஓட்டம்

சிவப்பு நட்சத்திரங்களைக்

கடந்து வாகனத்தை நிறுத்தும் அவர்

சாலையிலேயே நான்

காப்பியை வேகமாய் உறிஞ்சுகிறார்

நானோ மெல்லத் துளித்துளியாக

வீட்டை அடைந்துவிட்டோம்

படிக்கட்டுகளைத்

தாவிக் கடக்கிறார்

படிக்கட்டுகளை

இன்னும் எண்ணிக்கொண்டிருக்கும் நான்.

----------

கவிதைகள் எடுத்தாளப்பட்டிருப்பது கவிஞர் பிரம்மராஜன் முயற்சியில் வெளியான ‘ஆத்மாநாம் கவிதைகள்’ முழுத் தொகுப்பிலிருந்து (மின்வடிவம்).

கவிஞர் ஆத்மாநாம் – தமிழ் விக்கி

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை