மனம் என்னும் பசித்த வனமிருகம்
இன்னொரு திங்கட்கிழமையினுள் வெறுமையோடு என்னைச் செலுத்திக்கொண்டு கணினியைத் திறந்தேன். அமீர் தகவல் பரிமாற்றச் செயலியில் "இருக்கிறாயா?" என்றொரு செய்தியை அரைமணி முன்னரே அனுப்பியிருந்தது சற்று அசாதாரணமாக இருந்தது. தன் பதிமூன்று வயது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த வாரம் ஒருநாள் நோய்மைகான விடுப்பில் இருந்தான். நான் "ஆம் அமீர்" என்று செய்தியை அனுப்பிவிட்டு அவன் செய்திக்காகக் காத்திருந்தேன், பதிலில்லை. பின் இன்றைய நாளுக்கான முன் நிர்ணயிக்கப்பட்ட கூட்டு அழைப்புகளில் என்னை ஆட்படுத்திக்கொண்டிருந்தேன். அதில் ஒரு அழைப்பில் என் போலந்து மேலாளர் ஆர்கா "அமீர் இன்னும் சில நாட்கள் விடுப்பிலிருப்பான், அவனுடைய வேலையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்" என்று அறிவித்தார். தன் மகனுடைய ஆரம்பகால வருடங்களில் சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருந்ததென்றும், பாகிஸ்தானாக இருந்தா...