மதார், இரு கவிதைகள் - பதில்கள்
ஓசை மட்டும் கேட்டால் அதிகாலைக் குயிலின் குரலை துடைப்பம் பெருக்குகிறது கடவுள் பாடலுடன் வந்து பால்பாக்கெட் வீசுகிறார் காகமும் வாசல் தெளிக்கிறது தூரத்து ஹாரன் ஒலி பறவையின் குரலாகிவிட்டது சமையலறையில் தாளிக்கும் சத்தம் வானத்திலிருந்து இறங்கி வந்ததுதான் குக்கரின் நான்காவது விசிலில் உலகத்தின் உணவு வேகிறது. சங்கர் நலமா? மதார் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘ஓசை மட்டும் கேட்டால்’ அதி காலையில் உறக்கத்தில் இருக்கிறோம், விழிப்பு வந்தும் வராமலும் இருக்கும் நிலை. நம் பிரக்ஞை விழிப்பில் இருக்கிறது, அனால் கண்கள் மூடியிருக்கிறது. ஓசைகளை மட்டும் கேட்கிறோம் அல்லவா, அப்போது நாம் கேட்கும் ஓசைகள் ஒரு கவிஞனுக்கு எப்படிப் பொருள்படுகின்றன என்பதாக ஒரு கோணத்தை இந்தக் கவிதைக்கு அளிக்கலாம். ...