ஐஸ்கிரீம் - சிறுகதை

வெள்ளையம்மாவுக்கு மூன்று நாட்களாகவே அதிகாலையில் விழிப்பு தட்டிவிடுகிறது. அட்டாலியில் அடையும் சேவல் கூவவில்லை, மணி இன்னும் மூன்றாகியிருக்காது என்று கணித்தாள். தனக்கே உரிய சீரான முனகலுடன் சுழன்றுகொண்டிருந்த சீலிங் ஃபேன் சித்திரை மாத வெக்கையை பத்துக்கு பத்து ஓட்டுக் கூரை அறைக்குள் இறைத்தது. 

சன்னலுக்கு வெளியில் இருந்த முருங்கைமரக் கிளைகளின் நிழல் உள்ளறைச் சுவற்றின் மீது மெல்ல அசைந்தது. வியர்த்திருந்த தன் கழுத்தை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே ஏறி இறங்கும் தன் மார்பகங்களைப் பார்த்தாள். அவளுடைய உடல் ஐம்பத்தைந்து என்ற கணக்குடன் அழுத்தமாக முரண்பட்டது.

'இதென்ன சனியன் ஐஸ்கிரீம் திங்கனும்னு மனசு தெனவெடுக்குது. பேரம் பேத்தி எடுத்த வயசுல ஏன் இந்த விசித்திரமான ஆச? அன்னாடம் ஜாமத்துல இதே நெனப்பா இருக்குது' என்று தன்னையே கடிந்துகொண்டாள். 

வெள்ளையம்மா இதுவரை ஐஸ்கிரீம் சாப்பிட்டதில்லை. பேரனும் பேத்தியும் ஊர் திருவிழாக்களில் மகன் ராஜேந்திரன் வாங்கித் தரும் ஐஸ்கிரீமை முகமெல்லாம் பரப்பித் தின்பதை பார்ப்பதோடு சரி. மகன் உனக்கு வேண்டுமா என்று கேட்டதுமில்லை, அது அப்படித்தான்.

'கோலீப்பட எந்திரிச்சி கோழிகள தொறந்துவிட்டு, கொட்டத்துல மாடுகளுக்கு செத்த போட்டு, கண்ணுகுட்டிக்கு மடியகாட்டி பாலக் கறந்து சொசைட்டில ஊத்தீட்டு, மேலுக்கு தண்ணிய ஊத்தி, அவுதியவுதியா சோத்த தின்னுட்டு கோயில் பாளயத்துக்கு சித்தாள் வேலைக்கு போகனும்' என அன்றைய நாளின் நடப்புகளை அசைபோட்டாள்.

அவளுடைய மனம் தொலைக்காட்சி விளம்பரத்தில் கண்கள் மூடி ஐஸ்கிரீம் சாப்பிட்டு மெய்மறக்கும் ஒரு பருவ மங்கையை நினைவில் மீட்டியது. அவளும் ஐஸ்கிரீமை தாடைகளில் வழிய விட்டுத்தான் தின்கிறாள். 

'எப்பத்தான் இந்தச் சேவ கூவித் தொலைக்குமோ' என்று எரிச்சல் எடுத்தது.

முப்பது வருடங்களுக்கு முன் சீக்கு வந்து இறந்த கணவனை நினைவுகளில் கொண்டுவர முயன்று தோற்றாள். சுவற்றில் மாட்டியிருக்கும் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் கணவனுடைய முகத்தை அறையின் மங்கிய இருட்டில் சலனமில்லாமல் பார்த்தாள். கணவனை அப்படியே வார்த்துப் பிறந்த ஒரே மகனில் அவ்வப்போது அந்தச் சாயல் எழுவதைக் கண்டு பெருமூச்சுவிடுவதுண்டு.

வெள்ளையம்மாவுக்கு தெற்கே உப்பிடமங்கலைத்தை ஒட்டி ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. தனக்கு அளிக்கப்படுபவற்றை பெருமனதுடன் விளைச்சலாக மாற்றித்தரும் உயிர்ப்பான செம்மண் நிலம், சொந்தக் கிணறும் உண்டு. குச்சிக் கிழங்கு விளைச்சல் முடிந்து நிலம் ஓய்வில் இருக்கிறது. இது போன்ற இடைவெளிகளில் நூறு நாள் வேலைத் திட்டம், வயல் வேலை, சித்தாள் வேலை என சுயமாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது அவளுடைய வழக்கம்.

வியர்வையின் ஈரம் போர்த்திக்கொண்ட சேலையின் பல இடங்களில் படர்ந்திருந்தது. இரண்டு காதுகளிலும் கொசுக்களின் ரீங்காரம் கேட்பதும் அதைக் கைகளால் விலக்கிவிடுவதுமாக இருந்தாள். கூட்டாக குரல் எழுப்பி அடங்கிக்கொண்டிருந்த சீவிடு வண்டுகள் இன்னும் இருளைப் பாடிக்கொண்டிருந்தன.

வீட்டுச் சேவல் வாசல்படியின் முன் நின்று கிழக்கு பார்த்து அகங்காரமாக கூவியது. பரபரவென வேலைகளை முடித்து சில்வர் துக்கு போவினியில் சோற்றை அள்ளிப் போட்டு சட்டியில் கொதித்துக்கொண்டிருந்த சூடான கத்தரிக்காய் குழம்பையும் ஊற்றி எடுத்துக்கொண்டாள். காலியான இரண்டு லிட்டர் குளிர்பான பிளாஸ்டிக் குவளையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டாள். வயர் கூடையில் சாப்பாடு தண்ணீர் செல்போனுடன் எப்போதும் அவளுக்கு துணையாக இருக்கும் மகனின் சட்டையையும் எடுத்து கூடைக்குள் துணித்துக்கொண்டாள்.

மருமகள் விஜயா பேரனையும் பேத்தியையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் முசுவில் இருந்தாள். மகன் எட்டு மணிக்கே மோகனூரில் இருக்கும் கோழிப்பண்ணைக்கு வேலைக்கு கிளம்பிவிட்டான். சூரியன் அதற்குள்ளாகவே பிரகாசமாக மேற்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் வெள்ளையம்மாவின் கழுத்தில் வியர்வை சொட்டுகளாக ஊறத்தொடங்கியிருந்தது.

"ஆயா டாட்டா" என்று வாயில் திணிக்கப்பட்ட சோறு தெறிப்பது தெரியாமல் சொன்ன ஐந்து வயது பேத்திக்கு "டாட்டா டாட்டா" என்று குரல் கொடுத்துவிட்டு, "விசயா வரட்டுமா" என்று மருமகளிடம் சொல்லிவிட்டு வீட்டு வாசல்படியைத் தாண்டி நடந்தாள்.

ஊரின் வடக்கில் தண்ணீர் டேங்க் வழியாக திருச்சி கரூர் தார்ச்சாலையைக் கடந்து இரயில் தண்டவாளம் தாண்டி மணியக்காரர் தோட்டத்தினூடாக குறுக்காக சென்றால் அரை மணியில் கோவில் பாளையம் மாரியம்மன் கோவிலை அடையலாம். அங்கிருந்து காவல்காரர் வீட்டுக்கு அகன்ற தெருக்களினூடாக சில நிமிடங்களில் சென்றுவிடலாம்.

வயலில் நுழைந்து வரப்பில் நடந்தாள். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனித நடமாட்டமே இல்லை. கதிர் அறுத்து முண்டமாக நிற்கும் நெல் வயல்களில் மஞ்சள் பரவி உலர்ந்த நெல்லின் வாசனை அடித்தது. கணநேரம் அந்த வாசனை வெள்ளையம்மாவின் மனதுக்கு இதமாக இருந்தது, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டாள். 'இங்கியே அப்படியே நின்னுக்கிட்டா என்ன?' என்ற எண்ணத்தை உடனடியாக உதறிவிட்டு நகர்ந்தாள். 

மாரியம்மன் கோவிலை அடைந்ததும் 'மகமாயி எனக்கு நல்ல புத்தியக்குடு' என்று வேண்டி கன்னங்களில் தட்டிக்கொண்டாள்.

'இன்னைக்கு வேலய முடிச்சுட்டு புலியூர் கடவீதி வழியா போனா எதாவது கடைல ஐஸ்கிரீம் வாங்கீரலாம்' என்று மனம் அவளை மீறி கணக்குப்போட்டது. 'இதென்னடா புது ரோதன' என எண்ணிக்கொண்டே கட்டிடத்தை அடைந்தாள்.

"என்னா ஒயிட்டீ குதிரையாட்டம் வார" என்று சீண்டினார் வேப்ப மரத்தின் அடியில் சைட் ஸ்டாண்டு போட்டிருந்த பழைய ஹோண்டா ஸ்பெலண்டரின் மீது சாய்ந்து கால்களை குறுக்காக வைத்துக்கொண்டிருந்த மேஸ்திரி ஐயப்பன். வெள்ளையம்மா இதுபோன்ற சீண்டல்களுக்கு ஆண்டாண்டுகளாக மனதைப் பழக்கி வைத்திருந்தாள். 

"நீ வேரண்ணா, நாம்படற பாடு எனக்கு. குதரையாம் குதர" என்று சலித்துக்கொண்டு வயர் கூடையை இன்னும் பக்கவாட்டுச் சுவர் எழுப்பியிருக்காத மச்சுத் திட்டின் அடியில் நிழல் பார்த்து வைத்தாள்.

'கப்பைஸாத்தான் வாங்கணும். ஒன்னுக்கு ரெண்டா வாங்கீட்டா பரவால்ல, பத்தலனா? சிந்தாம திங்கணும், எங்கயும் அப்பிக்கக்கூடாது. ஆனா எங்க வெச்சு திங்கறது?' என்று மனம் மீண்டும் அலைபாய்ந்த்து.

கடந்த சில நாட்களாகவே ஐஸ்கிரீம் ஆசை வெள்ளையம்மாவுக்குள் சூறாவளியாக அடங்காமல் சுழற்றியடித்தது. வேலை முடிந்து ஐஸ்கிரீம் வாங்கும் உந்துதலை எப்படியோ கட்டுப்படுத்திக்கொண்டு வயல்களூடாகவே குறுக்காக நடந்து விட்டுக்கு திரும்பிவிடுகிறாள். ஆனால் இன்று கடைவீதி வழியாக செல்வது குறித்த எண்ணங்கள் இன்னும் அதிக விசையோடு அவளிடம் விளையாடுகிறது.

"அந்த மணல நல்லா சலிச்சு வெச்சிரு. கலவயக் கலந்து தனியா குவிச்சுக்க. கேக்கரப்ப கொஞ்சம் பால மட்டும் எடுத்துக் குடு. சமயக்கட்டுச் சொவர மத்தியானத்துக்குள்ள பூசீரலாம்" என்று மேஸ்திரியிடமிருந்த வந்த ஆணைகளைக் கேட்டு வெள்ளையம்மாவின் மனம் கலைந்தது. 

வயர் கூடையிலிருந்த மகனின் சட்டையை எடுத்து அணிந்துகொண்டாள். சிமெண்ட் புழுதியோடு விருப்பமாகவே அழுக்கைத் தாங்கிக்கொண்டிருக்கும் அந்த மொடமொடப்பான சட்டை அவளுடைய முழங்கால் வரை நீண்டிருந்தது. வரிசைகளில் இன்னும் மிச்சமிருக்கும் பொத்தான்களை மட்டும் போட்டுக்கொண்டாள். பொத்தான்கள் இல்லாத இடங்களில் வெள்ளையம்மாவின் சேலை பிதுங்கிக் தெரிந்தது. சட்டை அவளுடைய திமிறும் உடல் வடிவத்தை தனக்குள் அடக்கிவைத்துக்கொண்டது. சட்டையை அணிந்ததும் மனம் அமைதியடைவதை உணர்ந்தாள்.

மச்சுக்கடியில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக் கிடந்த காரச்சட்டிகளில் இரண்டையும் மம்பட்டியையும் எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் முகப்பில் குவிக்கப்பட்டிருந்த காவிரியாற்று மணலை நோக்கிச் சென்றாள் வெள்ளையம்மா.

*******

புலியூர் சிமெண்ட் ஆலையின் ஐந்து மணி சங்கு கோவில் பாளையதிலும் ஒலித்து அடங்கியது. வெள்ளையம்மா வேலைகளை முடித்துவிட்டு தெருவில் இருந்த பொதுத் தண்ணீர் குழாயில் கைகால்களை அலசிக்கொண்டாள். முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவினாள். சிமெண்டும் புழுதியுமாக கரைந்து சென்ற தண்ணீரை ஒருகணம் பார்த்தாள். வெக்கை அடங்கியதாக இல்லை, சட்டைக்குள் உடல் நன்றாக வியர்த்திருந்தது.

சட்டையைக் கழற்றிச் சூருட்டி வயர் கூடைக்குள் திணித்துவிட்டு "அண்ணா வரட்டுமா" என்று ஐயப்பன் மேஸ்திரியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்ப ஆயத்தமானாள். மனம் மீண்டும் பதைத்தது.

'கடைவீதி வழியாவே போயிரலாமா? இன்னைக்கு எப்படியாவது ஐஸ்கிரீம் தின்னே ஆகனும்' என்ற உறுதியுடன் தன்னையறியாமல் புலியூர் கடைவீதி நோக்கி நடந்தாள்.

புலியூர் கடைவீதி ஒரு சிறிய புறநகருக்கே உரிய மாலைக்கான இயக்கங்களுடன் இருந்தது. சாலைகளின் இருபுறமும் தள்ளுவண்டிக் கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று கைகளில் ஏந்திய தட்டுகளில் திண்பண்டங்களுடன் தென்பட்டார்கள். சாலை இருசக்கர பலசக்கர வாகனங்களின் ஹாரன் ஒலிகளால் நிரம்பியிருந்தது. உணவுப் பண்டங்களின் வாசமும் சாக்கடை நெடியும் கலந்து புதிரான ஒரு கலவையாகக் கலந்திருந்தது. எங்கும் தெருநாய்கள் இலக்கற்று அலைந்துகொண்டிருந்தன. 

மாமிசக் கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த வாடிய ஆட்டின் பாகங்களையும், சாலையோரத்தில் சணல் சாக்கில் பரப்பி கூறுகளாக விற்கப்பட்ட காய்கறிகளையும் பார்த்துக்கொண்டே 'எந்தக் கடைக்கு போகலாம்?' என்று தனக்குள் கேட்டவாறே நடந்தாள் வெள்ளையம்மா.

ஜெகதாபி டவுன் பஸ் ஒன்று வந்து ஹீனமான ஒலியுடன் நிற்க அதிலிருந்து ஆணும் பெண்ணும் பள்ளிக் குழந்தைகளுமாக பெருவேட்கையுடன் மனிதக் கூட்டம் இறங்கியது. இறங்கியவர்களைச் சரிசெய்ய அதே அளவு கூட்டம் பஸ்ஸில் முண்டிக்கொண்டு ஏறியது. நடத்துனர் விசிலை ஊதி பஸ்ஸை முடுக்கும் வரை சாலையின் மறுமுனையில் நின்று எண்ணங்களைத் திரட்டிக்கொண்டிருந்த வெள்ளையம்மா ஒரு முடிவுக்கு வந்தவளாக சாலையைக் கடந்து 'ஐயங்கார் பேக்கரி' என்று சிவந்த நியான் விளக்குகளுடன் ஒளிர்ந்த தின்பண்டக் கடையின் முகப்பில் வந்து நின்றாள். 

கடைக்குள் கூட்டம் அதிகமாக இல்லை. ஒரே ஒரு பெரியவர் மட்டும் கண்ணாடி தம்ளரில் டீயை ஊதி ஊதி அருந்திக்கொண்டிருந்தார். காலியான சில டேபிள்களில் அன்றைய தினசரி கலைந்து கிடந்தது. அமர்வதற்கான நாற்காலிகள் ஒழுங்கற்று பரவிக் கிடந்தன.

'ஐயோ யாரவாது ஊர்க்காரங்க பாத்திருவாங்களோ? பொழைக்கற குடியானச்சி இப்படியா கடைவீதீல திரியறது' என பல எண்ணங்கள் அவளுள் எழுந்தன.

கண்ணாடி ஜாடிகளில் சீராக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பலவித பலகாரங்களைப் பார்த்தவாறே நின்றவள் "அக்கா என்னா வேணும்?" என்று கடைப்பையன் கேட்டதும் திடுக்கிட்டு "ஐஸ்கிரீம்" என்று முனகினாள். அவன் ஒரு நொடி அவளைக் கூர்ந்து நோக்கிவிட்டு "அங்க இருக்கு பாருங்க" என்று கடையின் நுழைவாயிலை ஒட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு குளிர்பதனப் பெட்டியைக் காட்டினான்.

அந்தப் பெட்டி கண்ணாடி முகப்புடன் இருந்தது. அதனுள் அவளை வதைத்துக்கொண்டிருந்த ஐஸ்கிரீம் பல அளவுகளில் வண்ணங்களில்  அசைவில்லாமல் குளிரில் உறைந்து கிடந்தது. 

வெள்ளையம்மாவுக்கு மூச்சு வேகமாக ஏறி இறங்கியது. 'என் தங்கங்களே, இனிப்பும் குளிருமா இருக்கற நீங்க படுத்தற பாடு இருக்கே' என்று பெட்டிக்குள்ளிருந்த ஐஸ்கிரீம் குப்பிகளைப் பார்த்து மௌனமாக இறைஞ்சினாள்.

'வாங்குனா எங்க வெச்சு திங்கறது? வீட்டுக்கு நேரா போவ முடியாது. மருமவ இருப்பா. பேரனும் பேத்தியும் ஸ்கூல் விட்டு வந்திருப்பாங்க. பேசாம வீட்ட விட்டு தள்ளியிருக்கற மாட்டுக்கொட்டத்துக்கு போயிரலாமா? அங்க வெச்சு மளமளனு தின்னுட்டா என்ன? தின்னுட்டு வாயத் தொடைக்கறத மட்டும் மறந்தரக்கூடாது' என்று செய்யவேண்டியவற்றை மனதில் அடுக்கிப் பார்த்தாள்.

ஆனால் ஐஸ்கிரீமை தின்றுவிட்டால் தன்னுடைய அவஸ்தை முடிந்துவிடுமா என்றும் ஒரு சந்தேகம் எழுந்தது. ஒருவேளை தான் இந்த ஏக்கத்தை இரகசியமாக விரும்புகிறோமோ என்றும் தோன்றியது. தன்னுடைய வாழ்விற்கு நீண்ட காலம் கழித்து இந்த ஐஸ்கிரீம் ஆசை ஏதோ ஒரு அர்த்தத்தை அளிப்பதாகவும் மனம் அரற்றியது. ஐஸ்கிரீம் குறித்த ஆசையை அப்படியே நீடித்துக்கொண்டால் என்ன என்றும் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.

'என்ன ஆச்சு எனக்கு?' என்று வெள்ளையம்மாவுக்கு தன்மீதே பரிதாபம் ஏற்பட்டது. ஒரு கணம் கண்களில் முட்டிய கண்ணீரை விழி மணிகளை விரித்துச் சுருக்கி உள்ளிழுத்துக்கொண்டாள்.

'கடவீதிக்கு வர்ரப்ப அந்தச் சட்டைய கழட்டீருக்கக்கூடாது' என்றும் ஒரு எண்ணம் எழுந்தது.

"என்னா ஐஸ்கிரீம்க்கா வேணும்" என்று கடைப்பையன் இடைமறித்தான். ஏதோ கனவிலிருந்து மீண்டவள் போல அதிர்ந்து பெட்டிக்குள்ளிருந்த சிறிய குப்பிகளை நோக்கி விரலை நீட்டினாள். "வெணிலாவா, எத்தன?" என்றான் மீண்டும். "ரெண்டு" என்று சொல்லிவிட்டு சேலையின் இடையில் சுருட்டி வைத்திருந்த பணத்தைக்கொடுத்தாள். 

கடையின் படிக்கட்டுகளை விட்டு இறங்கும் முன் வாங்கிய இரண்டு ஐஸ்கிரீம் குப்பிகளையும் தூக்கு போவினியில் கவனமாக வைத்தாள்.

வெள்ளையம்மாவுக்கு மனம் படபடத்தது. 'யாரும் தெரிஞ்சவங்க இருக்காங்களா' என்று ஒருமுறை கடைவீதியைச் சுற்றி நோட்டம் விட்டுவிட்டு நடக்க எத்தனிக்கையில் வயர் கூடையில் வைத்திருந்த செல்போன் ஒலித்தது.

"ஆயா, நீ எப்ப வருவ?" என்று மறுமுனையில் ஏழுவயது பேரனின் குரல் கேட்டது. "இந்தா வந்திருவேன். நீயும் தங்கச்சியும் பொட்டாட்ட உங்காந்து பாடத்த படிங்க" என்று பதில் கொடுத்தாள். "ஆயா, அம்மா திங்க தீனி எதும் குடுக்கமாட்டேங்குது" என்று சினுங்கினான் பேரன். "வாரேன் வாரேன்" என்று சொல்லிவிட்டு செல்போனை அணைத்தாள் வெள்ளையம்மா.

சிவந்த வானின் பிண்ணனியில் சூரியன் மேற்கில் அடங்குவதற்கான ஆயத்தங்களில் இருந்தது. கடைவீதியில் மனித எடை இன்னும் அதிகரித்திருந்தது. வெக்கை இன்னும் காட்டமாக இருந்தது. உடலில் வியர்வை கூடி நசநசத்தது. வீட்டை நோக்கி மூச்சு வாங்க வேகமாக நடந்தாள் வெள்ளையம்மா.

தூக்கு போவினியில் வைத்திருந்த ஐஸ்கிரீம் மெல்ல உருகத் தொடங்கியிருந்தது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை