கரூர் பயணம் 2024
அமெரிக்காவில் இதுவரை பத்து குளிர்காலங்களை கழித்திருக்கிறேன். கோவிட் தொற்று வருடங்களான 2020 2021ம் ஆண்டுகள் தவிர ஒன்பது முறை கரூர் பயணம் செய்திருக்கிறேன். ஊர் குறித்த எண்ணங்கள் மெல்ல ஒரு ஏக்கமாக தொடங்கி இயல்பான பயணத் திட்டமாக உருமாறிவிடும். பொதுவாக பத்து வருடங்கள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை தருவதை பல வருட இடைவெளில் மட்டுமே நிகழ்த்துவார்கள், சிலர் அதை முழுமையாகவே தவிர்ப்பார்கள். அகம் புறம் என அதற்கான காரணங்களும் தர்க்கங்களும் நிறையவே உண்டு.
இந்த முறை என்னைவிட மனைவி ஊருக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டினாள். நான் அடுத்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அதை திட்டமிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய தம்பியின் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை, வளைகாப்பு சடங்கிற்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். எனக்கு ஊருக்கு செல்வதில் ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. மற்றவர்களைப் போல ஊரையும் அது குறித்த எண்ணங்களையும் கடந்துவிட்டேன் என கற்பிதம்கொள்ளத் தொடங்கினேன்.
Nostalgia என்பதற்கு சரியான தமிழ் அர்த்தம் தெரியவில்லை. ஒரு சில மனித மனங்கள் அதில் தீவிரமாக பீடிக்கப்படுகின்றன என்று எண்ணுகிறேன். நான் ஊர் குறித்த ஏக்கங்களை கிரிக்கெட், மது, இலக்கியம், பயணங்கள் என முடிந்தவரை மட்டுப்படுத்திக்கொள்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த முறைகளையெல்லாம் மீறி மனம் நிர்வாணம் கொள்கிறது, தன்னுடைய இயல்பான நிலைக்கு திரும்புகிறது.
இந்த முறை அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்து தேதிகளுக்காக காத்திருந்தேன். வழக்கம்போல ஒரு முகவருக்கு இருபதாயிரம் செலுத்தி நவம்பர் இரண்டாம் வாரத்தில் விசாவிற்கான தேதி அமைந்தது. இந்த முறை நான்குபேராக பயணம் மேற்கொள்கிறோம், மகளுக்கு முதல் இந்தியப் பயணம். கொலம்பஸ் நகரிலிருந்து காரில் சிகாகோ சென்று அங்கிருந்து எத்திகாட் விமானத்தில் அபுதாபி வழியாக சென்னை பயணம். சிகாகோ விமான நிலையத்திற்கு அருகாமையில் ஒரு இரவை விடுதியில் கழித்து நவம்பர் ஐந்தாம் தேதி மதியம் ஒன்றரை மணிக்கு விமானத்தில் ஏறினோம்.
ஐந்து பெரிய பெட்டிகள் நான்கு மனிதர்கள் என ஒரு பயணம். மகன் சற்று உடல்நலம் குன்றியிருந்தான் என்பதாலோ என்னவோ பதிமூன்று மணிநேரத்தில் ஆறு மணிநேரம் உறங்கிவிட்டான். மகளை நானும் மனைவியும் மாறி மாறி கைகளில் வைத்துக்கொண்டும் விமனத்தில் நடந்துகொண்டும் சமாளித்தோம். ஒன்பது மாதக் குழந்தை தரையில் இறங்கி விளையாட துடித்தது. சென்னையில் நவம்பர் ஆறாம் தேதி இரவு எட்டரை அளவில் விமானம் தரையிறங்கியது.
மனைவியின் தம்பி காரில் வந்து எங்களை அழைத்துச் சென்றான். ஐந்து பெரிய பெட்டிகளை தாங்கும் வசதியில்லாத சிறிய கார். ஆனாலும் எப்படியோ பெட்டிகளை அடுக்கி பயணித்தோம். விமான நிலையத்திலிருந்து கேளம்பாக்கம் செல்ல ஒன்றரை மணிநேரம். மெல்லிய தூரல் மற்றும் எங்கும் மழையின் ஈரம், சாலைகள் மின்னிக்கொண்டிருந்தன. இதே பெட்டிகளை அடக்க மினிவேன் எனும் பெரிய வண்டியை முன்பதிவுசெய்து கொலம்பஸிலிருந்து சிகாகோ பயணித்தோம் என்பதை வெறும் முரணாக மட்டுமே எண்ணமுடியவில்லை.
மனைவியின் அக்கா குடும்பத்துடன் கேளம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினோம். அனைவரும் இரவு உணவு முடித்து பேசி உறங்க ஒரு மணி ஆகிவிட்டது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் உறக்கமில்லை என்பதால் இரண்டு மணிநேரங்கள் பலவித எண்ணஓட்டங்களுடன் ஒரு மெல்லிய உறக்கம் வாய்த்தது. அதிகாலை எழுந்து பன்னிரண்டாவது மாடியிலிருந்து கீழ் நோக்கினேன். சாலைகளில் வாகனங்கள் ஹார்ன் சப்தத்துடன் தென்பட்டன, காகங்களும் சிறு பறவைகளும் தம்முடைய நாளை உற்சாகமாக தொடங்கியிருந்தன.
வழக்கமாக நான் ஆறு வாரங்களிலிருந்து எட்டு வாரங்கள் வரை என்னுடைய இந்திய பயணங்களை அமைத்துக்கொள்வேன், இந்த முறை நான்கு வாரங்கள் மட்டுமே பயணம். அதிகாலை காற்றில் மழையின் ஈரமும் வெக்கையும் ஒன்றாக கலந்திருந்தது, உடலில் வியர்வை ஊறியது. இன்னும் சில வாரங்கள் சேர்த்து திட்டமிட்டிருகலாம் எனும் எண்ணம் தீவிரமாக எழுந்தது.
மனதின் நிர்வாணம்!
Comments
Post a Comment