On the Move: A Life - Oliver Sacks

                                                

சுய வரலாற்று புத்தகங்களை ஏன் வாசிக்கிறோம்? நவீன வாழ்வின் மனிதர்களுக்கு ஆர்ப்பாட்டமற்ற மாறாச் சுழல் போன்ற வாழ்வு அமைந்துள்ளது. அத்தகைய வாழ்வின் மிகவும் கணிக்கக்கூடிய நகர்வு விருப்பத்துக்குரியதாக இருந்தாலும் நாளடைவில் சிறிய சலிப்பு உருவாகிவிடுகிறது. இதில் சிலர் பயணம், கலை என புதிய பாதைகளில் பயணித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமாவதில்லை. மன அமைப்பு குடும்ப சூழல் என பல காரணிகள் இருக்கலாம்.

ஒரு புத்தக வாசகனும் மேற்குறிப்பிட்ட நவீன வாழ்வின் கட்டுக்களில் அகப்பட்டவனாகவே இருக்கிறான். சுய வரலாற்று நூல்கள் அத்தகைய கட்டுக்களில் இருந்து வெளியேற வாழ்வை மாற்றுக்கோணத்தில் அணுக பல பாதைகளை அளிக்கின்றன. சரி, யாருடைய சுய வரலாற்று அனுபவங்களை வாசிக்க விரும்புகிறோம்? நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் விலகிய புதிய பாதைகளில் பயணிக்கும், பித்தும் அதி உத்வேகமும் அமைந்த மனிதர்களின் வாழ்வையே புத்தங்களின் வாயிலாக அறிந்துகொள்ள எண்ணுகிறோம். 

ஆலிவர் சாக்ஸ் எத்தகையவர்? நரம்பியல் நிபுணர், யூதர், எடைதூக்கும் வீரர், ஓரினச் சேர்க்கையாளர், அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர், தந்தை தாய் என பெரும்பாலான சுற்றத்தினரை மருத்துவர்களாகப் பெற்றவர், schizophrenia எனும் மனப் பிறழ்வு அமைந்த சகோதரரை கடைசிவரை பேணியவர், மோட்டார் சைக்கிள் ஆர்வலர், பல வகையான போதை வஸ்துக்களை எடுத்துக்கொண்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையானவர், தன் வாழ்வு முழுக்க தீவிரமாக எழுத்தில் ஈடுபட்டவர், புகழ்பெற்ற நூல்களை எழுதிய எழுத்தாளர், இலக்கியவாதிகளுடன் தொடர்பிலிருந்தவர், வாழ்வில் பலவேறு கட்டங்களில் காதலில் வீழ்ந்தவர்.

மரபான பிரிட்டிஷ் யூதக் குடும்பத்தில் நான்கு சகோதரர்களில் இளையவராக பிறக்கிறார். பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். பள்ளி நாட்களில் வேதியல் துறையிலும் பின் உயிரியலிலும் ஆர்வமாக இருந்து ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரியில் நரம்பியல் துறையை தேர்ந்தெடுக்கிறார். அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிந்துகொள்ளும் பெற்றோர் அவரை வெறுக்கின்றனர், குறிப்பாக தாய். 

ஐம்பதுகளில் பிரிடிஷ் தேசம் ஓரினச் சேர்க்கையாளர்களை கடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுத்துகிறது. குடும்ப மற்றும் தேசத்தின் சூழல் காரணமாக அறுபதுகளில் கனடாவுக்கு குடிபெயர்ந்து ராக்கி மலைகளில் பயணித்து அதன் அனுபவங்களை பெற்றோருக்கு எழுதிய வண்ணமிருக்கிறார். பிறகு அறுபதுகளில் அமெரிக்காவில் சான் ஃபிரன்ஸிஸ்கோவில் குடியேறி மருத்துவ பயிற்சி வகுப்புகளை முடித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார்.

மோட்டார் சைக்கிள் பயணங்களை மிகவும் விரும்புகிறார். கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதிகளில் அதிகமும் பயணம் செய்கிறார். லாஸ் ஏஞ்சள்ஸ் நகரில் இருக்கையில் வெனிஸ் கடற்கரையில் தீவிர உடற் பயிற்சிகளில் ஈடுபடுகிறார். பளுதூக்குவதில் இருநூற்று எழுபது கிலோக்கள் வரை தூக்கி ஒரு கட்டத்தில் கலிஃபோர்னிய நகரின் உச்ச சாதனையாளராக இருக்கிறார், தனக்கே உரிய ஒரு சுற்றத்தைப் பெறுகிறார்.

எம்ஃபெடமைன், ஆஸிட், கஞ்சா, ஆல்கஹால், LSD, Speed என எல்லா போதைப் பொருட்களையும் பயன்படுத்தி அவற்றின் ஆதிக்கத்தில் இருக்கையில் தன்னுடைய மனதையும் எண்ணங்களையும் தீவிரமாக அவதானிக்கிறார், இவற்றை குறிப்புகளாகவும் எழுதிக்கொள்கிறார். பிற்காலத்தில் இந்த அனுபவங்களை 'Hallucinations' என்ற நூலாகவும் எழுதுகிறார். ஒரு கட்டத்தில் எம்ஃபெடமைன் எனும் வஸ்துவுக்கு அடிமையாகி வெளிவர போராடுகிறார்.

நியூ யார்க் நகருக்கு குடிபெயர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார். Post-encephalitic எனப்படும் உடலை இயக்கமுடியாத நிலைகொண்டவர்கள், Tourette Syndrome எனப்படும் நரம்பியல் கோளாரால் தன்னியல்பான உடல் அதிர்வுகளை உணர்பவர்கள், Parkinson எனப்படும் நரம்பியல் பாதிப்பு அமைந்தவர்கள் என பல்வேறு மூளை மற்றும் நரம்பியல் நோயாளிகளுடன் நாற்பது வருடங்கள் செலவிடுகிறார்.

அவர்களுடனான அனுபவங்களை புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும், ஆவணப்படங்களாகவும் பதிவுசெய்கிறார். இந்த அனுபவங்களை அன்றாட குறிப்புகளாகவும் எழுதிக்கொள்கிறார் பல புத்தங்களாகவும் எழுதுகிறார். தன்னுடைய எழுத்திற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டு செவ்வியல் படைப்புகள் உந்துதலாக இருந்ததை விவரிக்கிறார். அன்றைய மருத்துவச் சூழல் பிறழ் மனநிலை அமைந்த நோயாளிகளை அணுகிய விதம் குறித்த கடும் விமர்சனப் பார்வைகொண்டிருக்கிறார்.

தன்னுடைய சகோதரர் மைக்கேல் இளம் வயதிலேயே மனநோய்க்கு உட்பட்டு மின்சார அதிர்வு போன்ற கடுமையான சிகிழ்ச்சை முறைகளில் ஈடுபடுத்தப்படுவதை செய்வதறியாது காண்கிறார். மைக்கேல் மறையும் வரை தன் பெற்றோருடன் வாழ்கிறார். ஆலிவர் தன் சகோதரரை இளம் வயதில் சரியாக புரிந்துகொள்ளாமல் இருந்ததை எண்ணி வருந்துகிறார். தன் சகோதரரின் கடைசிக் காலத்தில் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து பயணித்து கவனித்து வருகிறார். பெற்றோர் இருவரும் தேர்ந்த மருத்துவர்களாக இருந்தும் மைக்கேலுடைய மனநோய் கூறுகளை அவர்கள் எதிர்கொண்ட விதத்தின் முரண் புத்தகத்தில் வெளிப்படுகிறது.

பால்யம் முதல் முதிய வயது வரை பலமுறை காதலில் வீழ்கிறார். ஆனால் பல்வேறு காரணங்களால் உறவுகள் முறிந்து தனிமையில் வாடுகிறார். முழுமையாக தன்னுடைய விருப்பங்களைத் தெரிவிக்க இயலாமல் உள்ளொடுங்கியவராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக ஒரு துணையுடன் உடல்சுகம் காணாது இருந்ததை பதிவுசெய்கிறார். தன்னுடைய முதிய வயதில் பில் ஹேய்ஸ் என்ற எழுத்தாளருடன் காதலில் வீழ்கிறார், இறக்கும் வரை அவர்களுடைய உறவு தொடர்கிறது.

ஆலிவர் சாக்ஸ் சராசரிகளிலிருந்து இளவயது முதலே விலகிய ஆனால் இயல்பிலேயே அபார மூளைத் திறனும் உடல் தகுதியும் பெற்றவராக இருக்கிறார். பிரிட்டிஷ் வளர்ப்பு உள்ளூர தனியனாக இருக்கும் இயல்பு மனப் பிறழ்வு என அவரை வாழ்வு முழுக்க தனியனாக இருக்கவைத்த இயல்புகளை புத்தகம் வாயிலாக புரிந்துகொள்ளமுடிகிறது. புத்தகத்தில் ஐம்பதுகளிலிருந்து எண்பது வரை இருந்த பிரிட்டிஷ் அமெரிக்க வரலாற்று சித்திரம் ஒன்று நம் பார்வைக்கு விரிந்துகொண்டே இருக்கிறது.

பல்வேறு மன மற்றும் விசித்திர உடல் குறைபாடுகொண்டவர்கள் மீது அனுதாபத்துடன் நடந்துகொள்கிறார். குடும்பத்தில் தன்னுடைய தாய் மற்றும் தந்தையின் இயல்புகளை மிகவும் பிந்தியே புரிந்துகொள்கிறார். அவர் ஓரினச் சேர்க்கையாளராக இருந்ததை விரும்பாத தாயின் இயல்பையும் ஏற்றுக்கொள்கிறார். தன்னுடைய அத்தையிடம் மிகவும் அன்பு நிறைந்த ஒரு உறவைப் பேணுகிறார். அவருக்கு தன்னுடைய பலதரப்பட்ட அனுபவங்களை கடிதங்களாக எழுதியவண்ணமிருக்கிறார். 

எழுதுவதை ஒரு தவம் போல வாழ்வு முழுக்க தொடர்கிறார். நாற்பது வருடங்களாக ஆயிரம் குறிப்புகள் வரை எழுதியாதாக பதிவு செய்கிறார். ஒவ்வொரு முறையும் எழுதுவதற்காக தாய்நாடான பிரிட்டனுக்கே செல்கிறார். 2008ல் நரம்பியல் துறையில் அளித்த பங்களிப்பிற்காக பிரிட்டிஷ் ராணியின் பிறந்த நாளில் வழங்கப்படும் Commander of the Order of the British Empire (CBE) எனும் உயரிய விருதைப் பெறுகிறார்.

புத்தகத்தின் இறுதியில் தன் வாழ்வின் பல்வேறு அலைபாய்தல்களுக்கு தீவிர காதலும் ஒரு உற்ற துணையும் அமையாததே காரணம் என்று ஏக்கமாக சொல்கிறார். ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்றுக்கொள்ள மறுத்த அதை இயல்பான ஒன்றாகக் கருதாத கருணையற்ற அன்றைய சமூக சூழலை எண்ணி திகைக்கவே முடிகிறது. ஆலிவர் தன்னுடைய தன்பால் ஈர்ப்பை 2015ல் இந்த புத்தக வெளிவரும் வரை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். பார்வைக்கோளாறு மற்றும் புற்று நோய் காரணமாக 2015ல் எண்பத்து இரண்டு வயதில் இறக்கிறார்.

புத்தகம் முழுக்க விசித்திரமான அனுபவங்கள் மட்டுமல்லாமல், அளவற்ற கருணை, அறம், பயணம், காதல், சிக்கலான தருணங்களில் வெளிப்படும் மனித ஆற்றல் என பல்வேறு இயல்புகள் நிறைந்துள்ளன. ஆலிவருடைய அத்தை தன் வாழ்வு முழுக்க ஆட்டிசம் குறைபாடுகொண்டவர்களை அரவணைக்கும் அமைப்பிற்காக அற்பணித்துக்கொண்டவர். தன்னுடைய எழுத்துப் பயணத்திற்கு அத்தையின் ஊக்கம் பெரும் துணையாக இருந்ததை ஆலிவர் பதிவுசெய்கிறார். புனைவுக்கு இணையான பல தருணங்கள் நூலில் வெளிப்படுகின்றன. ஒரு வாசகனாக எழுதுவதற்கும் பயணம் செய்வதற்கும் சூழலை கூர்ந்து கவனிக்கவும் தீவிரமாக செயல்களில் ஈடுபடுவதற்கும் மனதில் கருணையை பேணுவதற்கும் மிகுந்த உத்வேகம் அளிக்கும் ஒரு ஆக்கம் இது.

ஆலிவர் சாக்ஸ் நாற்பது வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் கிரீன் கார்ட் தகுதியை மட்டுமே பேணியிருக்கிறார். இறுதிவரை அமெரிக்க குடிக்காக அவர் விண்ணப்பிக்கவில்லை. Resident Alien என்ற பதம் தன்னுடைய அமெரிக்க வாழ்வின் இயல்பிற்கு பொருத்துவதாக கூறுகிறார். அமெரிக்க மண்ணில் ஒரு நிரந்தர அந்நியனாக வாழ்ந்த வியத்தகு மனிதன் ஒருவனின் வாழ்வை இந்த புத்தகம் வழியாக அறிந்துகொள்ளமுடிகிறது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை