ஐன்ஸ்டீனின் கனவுகள், நாவல் - ஒரு பார்வை
காலத்திற்கும் நமக்குமான பிணைப்பு என்ன? காலத்தை நாம் என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்? ஒரு உருவகமாகவா? காலமும் இடமும் இணைந்த ஒன்று என விளக்கும் சார்பியல் கொள்கை வாயிலாகவா? காலம் நம்முடைய பிரக்ஞையில் ஆழமாகப் பிணைந்துவிட்ட ஒன்று. நம்முடைய ஆழமனதில் அருவமாக அமைந்துவிட்ட ஒன்று என்பதால் அதை தர்க்கப்படுத்திப் புரிந்துகொள்வது நம்முடைய அறிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது.
காலத்தை அறிவியலின் சமன்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். ஒரு ஆறிதல் எனும் வகையில் அறிவியல் வாயிலாக புரிந்துகொள்வது நமக்கு நிறைவளிக்கலாம். ஆனால் அதன் அருவத்தன்மையால் நமக்குள் உள்ள ஆழமான கேள்விகளுக்கு பதில் தேட தத்துவத்தையும் குறிப்பாக மீபொருண்மைத் தளத்தையுமே நாம் இயல்பாக நாடுகிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஒரு காப்புரிமை குமாஸ்தாவக வேலைசெய்கிறார். அங்கு அவர் சார்பியல் கொள்கையை நிறுவ முயன்றுகொண்டிருக்கிறார். ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் காலம் குறித்த அவருடைய முப்பது கனவுகளை 'ஐன்ஸ்டீனின் கனவுகள்' நாவல் விவரிக்கிறது. காலம் குறித்த இந்த கனவுகள் வாயிலாக அதன் பல்வேறு முகங்களை பண்புகளை முப்பது அத்தியாயங்களாக நாவல் அணுகுகிறது.
முதல் அத்தியாயத்தில் காலம் ஒரு வட்டத்தைப் போல சுழலும் தன்மையுடன் உள்ளது, எந்த நிகழ்வும் தற்காலிகமானதல்ல; மீண்டும் நிகழும். காதலிக்கு அளிக்கும் முத்தமோ, குழந்தையின் முதல் புன்னகையை காணும் தருணமோ மீண்டும் நிகழும். நோயுற்ற கணவனுக்கு மனைவி தன்னுடைய கடைசி முத்தத்தை அளித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறாள். ஆனால் அவள் அவனை இளமையில் கண்டு காதலுற்ற தருணம் முதல் இன்று நோயுற்ற அவனுக்கு அளிக்கும் முத்தம் வரை காலம் அவளுடைய வாழ்வின் நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்தும்.
இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் காலத்தின் பல்வேறு பரிமாணங்களை நிகழ்வுகள் மூலமாக சொல்லி நம்மிடம் ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. சிலர் கடந்த காலத்திற்கு செல்கிறார்கள், காலம் பக்கவாட்டில் பயணிக்கிறது. ஒரு உலகில் இயந்திர நேரமும் உடல் நேரமும் இருக்கிறது. சிலர் இயந்திர நேரத்தையே பின் தொடர்கிறார்கள், சிலர் உடல் நேரத்தை வழியாகக் கொள்கிறார்கள்.
புவியீர்ப்பை விட்டு விலகி இருக்கையில் நேரம் மெல்ல நகர்கிறது என்பதால் சிலர் மலைத் தொடரில் வீடுகட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் கடைசியில் அவர்களும் காலத்தால் விழுங்கப்பட்டு மடிகிறார்கள். ஒரு உலகில் செயல் மற்று விளைவு எனும் கருத்து பொய்க்கிறது. விளைவு முன்னிலும் செயல் பின்னிலுமாகவும் நிகழ்கிறது. அறிவியலாளர்கள் திகைக்கிறார்கள், ஆனால் கலைஞர்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்.
ஒரு அத்தியாயத்தில் உலகம் முடிவுக்கு வருகிறது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். மகிழ்வுடனும் புன்னகையுடனும் வாழ்கிறார்கள். உலகம் முடிவுக்கு வரும் சில நிமிடங்களுக்கு முன் கூடி அமைதியாக இறுதித்தருணங்களை எதிர்நோக்குகிறார்கள். ஒரு உலகில் மக்கள் ஒருநாள் மட்டுமே உயிர்வாழ்கிறார்கள். ஒரு சூரியோதத்தையும் அஸ்தமனத்தையுமே அவர்களால் காணமுடிகிறது.
ஒரு உலகில் எல்லாமே இயல்பாக தன்னைத்தானே ஒருங்கமைத்துக்கொள்கிறது. அன்றாடத்தால் கலைக்கப்படும் பொருட்கள் தன்னைத்தானே அடுக்கிக்கொள்கின்றன. ஆனால் வசந்தகாலத்தில் மக்கள் இதை வெறுத்து அனைத்தையும் கலைத்துக்கொள்கிறார்கள். கோடையில் அனைத்தும் மீண்டும் ஒருங்கமைகிறது.
ஒரு நகரின் மையத்தில் காலம் உறைகிறது. அதன் அருகில் வாழ்பவர்கள் தங்களையும் உறைய வைத்துக்கொள்கிறார்கள். ஒரு குழந்தையின் புன்னகையை அப்படியே நீட்டித்துக்கொள்ள சிலர் மையத்தில் இருக்க விரும்புகிறார்கள். ஒரு சிலர் அதை வெறுத்து வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ள முனைகிறார்கள், மையத்தை விட்டு விலகி இருப்பதை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு உலகில் அனைத்தும் வெறும் காட்சிகளாக உறைந்துகிடக்கிறது. கடிதம் ஒன்றை வாசித்து கண்ணீர் சிந்தும் ஒரு பெண், வசந்தகால மெல்லிய மழை, கல்பாலத்தில் நகரும் ஒரு ரயில் என அற்புதமான காட்சிகளாக மட்டுமே உலகு அமைகிறது. ஒரு உலகில் மக்கள் கடந்தகாலத்தை மறக்கிறார்கள், தங்களுடைய முந்தைய வாழ்வின் வரலாற்றை தங்களுடைய வாழ்க்கைப் புத்தகம் வாயிலாக மட்டுமே தெரிந்துகொள்கிறார்கள். சிலர் அந்த புத்தகத்தின் இளமைக்கால பக்கங்களை மட்டுமே காண விரும்புகிறார்கள்.
ஒரு அத்தியாயத்தில் நகரமே நகர்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் நகர்கின்றன. விரைவாக நகர்வதால் காலத்தை வெல்ல இயலும் என நம்புகிறார்கள். சிலர் தங்கள் வீடுகள் நகர்ந்தாலும் சன்னலை மூடிவிட்டு தங்களுடைய போக்கில் வாழ முயல்கிறார்கள். ஒரு உலகில் மக்கள் பல்வேறு வாழ்க்கையை வாழும் இயல்பைப் பெறுகிறார்கள். ஒரு உலகில் எதிர்காலமே இல்லை, ஒவ்வொரு தருணமும் அது நிகழ்ந்தவுடன் முடிந்துவிடுகிறது.
ஒரு உலகில் காலம் நின்று நகர்கிறது. நிகழ்வுகளில் எந்த விசித்திரமும் இல்லாதது போல தெரிந்தாலும் காலத்தின் தடைகொண்ட இந்த பண்பு மெல்லிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ரோம் நகரில் காலக் கடிகாரத்தைக் காண மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். ஒரு நகருக்கும் மற்றொரு நகருக்கும் காலத்தில் மாற்றம் இருக்கிறது. ஒரு மழைத்துளி விழும் காலத்திற்குள் மற்றொரு நகரில் ஒருவர் தன் வாழ்நாளை வாழ்ந்துவிடுகிறார்.
ஒரு உலகில் கற்களை நகரத்திற்கு வாகனத்தில் கொண்டுவரும் ஒருவர் தன்னுடைய கசந்த கடந்தகாலத்தில் மூழ்கிக் குறுகுகிறார். ஆனால் கடந்தகாலம் என்பது ஒரு மாயம், ஒரு தருணத்தில் அனைத்தையும் மறந்து நம்பிக்கைவாய்ந்த வேறொருவராக திகழ்கிறார். ஒரு அறையில் மனிதன் வயலின் வாசிக்கிறான். அவனைப் போன்ற தோற்றம் கொண்ட ஆயிரம் மனிதர்களும் வயலின் வாசிக்கிறார்கள்.
கடைசி அத்தியாயத்தில் காலம் ஒரு நைட்டிங்கேல் பறவையாக இருக்கிறது. அதைப் பிடிக்க வயதானவர்கள் முயல்கிறார்கள், வேகம் அவர்களைத் தடுக்கிறது. சிறுவர்களுக்கு வேகம் உண்டு ஆனால் காலம் அவர்களுக்கு மெல்ல நகர்கிறது, அதைப் பிடிக்க அவர்கள் முயல்வதில்லை. அப்படியே முதியவர்கள் பறவையைப் பிடித்தாலும் அது தற்காலிகமாக காலத்தில் மறைகிறது.
நாவலில் வரும் பல்வேறு உலகுகளில் நம்மை நாம் என்னவாக அடையாளப்படுத்திக்கொள்கிறோம் எனும் கேள்வி எழுகிறது. காலத்தை வெல்ல முயன்று மலைகளில் வாழும் மேன்மை மனிதர்களாகவா, கடந்த காலத்தை மறந்து இன்றைய தருணங்களில் வாழும் மனிதர்களாகவா, சூரியோதத்தில் பிறந்தவர்களாகவா அஸ்தமனத்தில் உதித்தவர்களாகவா, பல்வேறு காலங்களில் வாழும் நகரங்களில் பயணிப்பவர்களாகவா, கடந்த காலத்திற்கு செலுத்தப்படுபவர்களாகவா, பல்வேறு வாழ்வை வாழும் தன்மை பெற்றாலும் விரைவாக அனைத்தையும் அடையும் விழைவுகொண்ட்வர்களாகவா, மெல்ல நகர்பவர்களாகவா, நகரும் உலகில் சன்னலை மூடிக்கொள்பவர்களாகவா, நாம் தேர்ந்தெடுப்பது நகரின் மையத்தில் உறைந்துவிடும் வாழ்வையா அல்லது இயல்பான ஒழுக்கில் நகரும் வாழ்வையா, நாம் விரும்புவது ஒழுக்கான கோடைக்காலத்தையா கலைந்த வசந்தகாலத்தையா, நாம் தேர்வது இயந்திர நேரத்தையா இயல்பான உடல் நேரத்தையா, சுழலும் வாழ்வில் நாம் மகிழ்வானவர்களா இரவில் பெருமூச்சுவிடும் ஆத்மாக்களா?
நாவலில் கவித்துவம்மான கட்சிகளாக மட்டுமே விரியும் அத்தியாயத்தில் இருந்தே மையத்தை அடையலாம். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நம்முடைய தனிப்பட்ட இருப்பு என்பது முப்பதாயிரம் அடி விமானத்தில் அமர்ந்துகொண்டு தரையில் அசையும் ஒரு புல்லின் அசைவு எத்தனை சிறிய புள்ளியோ அதற்கு ஒப்பானது. நம் வாழ்வை பிரதிநிதிப்படுத்தும் ஒரே ஒரு காட்சி ஒரே ஒரு பிம்பம் என்னவாக இருக்கும்?
இந்த நாவலின் வடிவம் இதை பின்நவீனத்துவப் படைப்பு என்றும், ஒரு மீபுனைவு என்றும் சொல்லவைக்கிறது. ஒட்டுமொத்தமாக இது ஒரு கொண்டாட்டமான நாவல்தான், எந்தவித மிகை உணர்ச்சிகளும் இல்லாமல், ஏன் உணர்ச்சிகளே அற்ற நாவல்தான். ஆனால் பல அத்தியாயங்கள் கவித்துவம் மிக்கவை. ஆழமாக மனதில் ஒரு சலனத்தை வலியை ஏற்படுத்தும் படைப்பு இது.
Comments
Post a Comment