ஏசுவின் காதலி - சிறுகதை

                                                


கொலம்பஸ் நகரில் மெக்ஸிகோ தேசத்தவர்களை எங்கும் காணலாம். பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் புல் வெட்டுபவர்களாக, அவர்களுக்கே உரிய சிறிய தெருக்களில் அமைந்த வீடுகளிலும் தெருக்களின் ஓரத்திலும் கால்பந்தாடுபவர்களாக, டெக்கரியா என்று அழைக்கப்படும் மெக்ஸிகோ தேசத்தின் பிரத்யேக உணவகங்களில் உண்பவர்களாக பரிமாறுபவர்களாக, தூசு பொதிந்த பழைய ட்ரக்குகளில் சாலைகளைக் கடப்பவர்களாக அவர்கள் தென்படுவார்கள்.

இந்தக் கதையின் மையமாக மெக்ஸிகோ தேசத்தின் அழகி ஒருவள் இருக்கிறாள். கோடைக்கால ஜூலை மாதத்தின் வெப்ப அலை பரவிய மாலையில் அவள் எங்கள் குடியிருப்பின் இரண்டடுக்கு வீடுகளில் பக்கவாட்டு கட்டிடத்தில் அண்டைவீட்டுக்காரியாக வந்து சேர்ந்தாள். டெக்ஸாஸ் என்ற பெயர் தாங்கிய மினி வேனில் தம் பெற்றோருடனும் ஒல்லியான தம்பியுடனும் வந்து இறங்கினாள்.

அவளுக்கு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிருக்கலாம். பொதுவாக பிற நாட்டைச் சார்ந்த மனிதர்களின் வயதைக் கணிப்பதில் எல்லோருக்கும் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கவே செய்கிறது, அதன் பொருட்டே இருபதிலிருந்து இருபத்தைந்து வயது என்று எண்ணுகிறேன். ஒய்யாரமாக கருப்புக் கண்ணாடியைக் கழட்டி சூழலை உள்வாங்கிவிட்டு தன்னுடைய வீட்டிற்குள் சென்று மறைந்தாள் அழகி.

அவள் எப்போதுமே தொடைகளை இறுகப் பற்றும் சிறிய ஆடைகளையே அணிகிறாள். அவளுடைய தொடைகள் இரண்டும் உடலின் ஆளவுக்கு சரியான விகிதத்தில் அமைந்த வெண்ணிற அதிசயங்கள். நான் பெண்களின் கண்களை மட்டுமே பார்க்கும் கண்ணியவான் அல்ல என்பதால் அவளைப் பற்றிய வர்ணனைகளில் தொடைகளை முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஐந்தரை அடிக்குள்தான் அவளுடைய உயரம். முகம் அவளுடைய அன்னையின் சிறிய வயது தோற்றத்தைப் பிரதிபலிப்பது, கொஞ்சம் ஏறு நெற்றி, அழகாக நறுக்கப்பட்ட கரிய கேசம், எப்போதும் காதில் பொருத்தப்பட்ட இசைக்கருவி. அவள் தன்னுடைய அழகில் மூழ்கியிருக்கும், அதனால் ஏற்படும் செறுக்கை மறைக்கத் தடுமாறும் ஒரு ஆளுமை கொண்டவள். வழியில் எதிர்கொண்டால் கால் புன்னகை ஒன்றை உதிர்ப்பாள்.

நேரில் காண நேர்ந்தால் இந்தக் கதையின் பெரும்பாலான வாசர்கர்கள் அவளை அழகி என்று வர்ணிப்பதில் முரண்படமாட்டார்கள். ஆனால் ஒரு சிறிய சாரர் அவள் அப்படி ஒன்றும் பேரழகி அல்ல என்று சொல்லவும் வாய்ப்புண்டு. அழகுக்கும் சராசரிக்கும் இடையில் ஊசலாடும் பெண்களுக்கே உரிய வசீகரம் கொண்டவள் அவள்.

ஒரு இரவில் மேகங்கள் கலைந்த வானையும் சிதறிய வைரங்களாக தென்பட்ட நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருக்கையில் கரிய நிற கார் ஒன்று எங்கள் குடியிருப்பில் வந்து நின்றது. காரில் வந்தவன் தன்னுடைய அலைபேசியில் அதிவேகமாக செய்தி அனுப்பிக்கொண்டிருந்தான், அவ்வப்போது புன்னகைக்கவும் செய்தான். காரின் உள்ளே எரிந்த விளக்கு அவனுடைய முகத்தை முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று காட்டியது. 

சில நிமிடங்களுக்குப் பிறகு காரில் இருந்த வெளிவந்த இளைஞன் அந்த மெக்ஸிகோ தேசத்தவர்களின் வீட்டு வாசலை நோக்கிக்கொண்டிருந்தான். எதிர்பாராத ஒரு வேளையில் அழகி வீட்டிலிருந்து வெளியேறி துள்ளியோடி அந்த இளைஞன் மீது தொற்றிக்கொண்டாள். அவர்கள் இருவரும் சில நொடிகள் உதடு பதித்து முத்தமிட்டனர். இளைஞன் அவளுக்கு காரின் கதவைத் திறந்து மரியாதை செய்து அழைத்துச் சென்றான்.

ஒரு நாள் மாலை நேர வெளிச்சத்தில் அந்த இளைஞனை ஆழமாக நோக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆறடியை நெருங்கும் உயரமும் உடற்பயிற்சியால் திரண்ட கைகளும் அகன்ற தோளும் கொண்ட விளையாட்டு வீரனை ஒட்டிய உடல்கொண்ட வெள்ளை நிற இளைஞன். எந்த தேசத்தவன் என்று கணிப்பதில் நம்மைத் தடுமாற வைக்கும் வசீகரமான முகம், ஆனால் வட அமெரிக்கனல்ல.

கரிய கேசமும் கவனமாகப் பேணப்பட்ட தாடியும் அவன் தென்னமெரிக்கன் என்ற எண்ணத்தை அளிக்கிறது. மெக்ஸிகோ தேசத்தவனாக இருக்கலாம், ஆனால் உயரம் அவனை ப்ரேஸில் போன்ற ஒரு நாட்டைச் சார்ந்தவன் என்றே வரையறுக்க வைக்கிறது, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றைச் சார்ந்தவனாகவும் இருக்க்கூடும். ஆப்ரிக்க மூதாதைகளின் சாயலிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டன மனித முகங்கள்.

இளைஞனுடைய முகம் பெண்ணுக்கு ஆண் வேடமிட்டால் உருவாகும் ஒரு சாந்தம் கொண்டது, சிறிய அழகிய கண்கள். அண்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளுக்குமான விளம்பரங்களிலும் தோன்றும் மாடல் என்று அவனை கற்பனை செய்யலாம். எந்த தேசத்தவனாக இருக்கக்கூடும் என்ற ஆர்வத்தில் கூர்ந்து கவனிக்கையில் மின்னல் வெட்டைப் போன்ற ஒரு எண்ணம் தோன்றியது. பளபளப்பான ஒரு ஓவியத்திலிருந்து கணிவான கண்களுடன் நம்மை நோக்கும் ஜீஸஸ் கிரைஸ்டை ஒட்டிய முகம். 

அவனைக் காணும் தருணங்களில் எல்லாம் ஜீசஸ் கிரைஸ்ட் என்றே மனதிற்குள் சொல்லிக்கொள்கிறேன். இத்தனை அமைதியான தோற்றம் பெற்றவன் அந்த அழகியுடன் உடல்கூடுகையில் மிருகம் போல இயங்கக்கூடும். அவனுடைய தோற்றம் ஓரினச் சேர்க்கையாளர்களை தன்னின்பக் காமத்தில் ஆழ்த்த வல்லது.

அவளுக்காக இளைஞன் காத்துக்கொண்டிருப்பதும் அவள் துள்ளியோடி அவனை முத்தமிடுவதும் அவர்கள் காரில் கிளம்புவதும் பலமுறை நிகழ்ந்தது. ஆனால் இளைஞன் அவர்களுடைய வீட்டுக்குள் என்றுமே சென்றதில்லை. அவளை வீட்டிற்கு அழைத்து வருகையில் அவர்கள் இருவரும் காரில் அமர்ந்துகொண்டு தங்கள் அலைபேசியைப் பார்த்தவாறு ஒருமணிநேரம் வரைகூட பேசாமல் அமர்ந்திருப்பார்கள். பிரிந்து செல்கையில் இருவரும் மீண்டும் முத்தமிட்டுக்கொள்வார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு அந்த அழகியை வேறொருவனுடன் ஒரு வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் பார்த்தேன். அவன் ஒரு சுருள்முடிக் கரியன். ஆப்ரிக்க தேசத்தவன், அமெரிக்க ஆப்ரிகன் அல்ல, ஆப்ரிக்கன். இருவரும் கடைக்குள் ஒருவரை ஒருவர் தீண்டிக்கொண்டும் துரத்திக்கொண்டும் இருந்தார்கள். இந்தக் கரிய அப்ரிக்கனும் மெல்லிய உடலும் நரம்புகள் புடைக்கும் கைகளும் கொண்டவன். 

மேகங்கள் திரண்டு நின்ற தெளிவான வானம் அமைந்த ஒரு இரவில் கரிய நிற கார் வந்தது. ஜீஸஸ் கிரைஸ்டும் அவளும் அலைபேசியை நோக்கிய மௌனத்தில் உறைந்து அரைமணிநேரம் காருக்குள் அமர்ந்திருந்தார்கள். மெக்ஸிகோ தேச அழகி காரிலிருந்து இறங்கி தன் வீட்டிற்குள் நுழைந்தாள். பிரிவிற்கான முத்தம் அவர்கள் இருவரையும் விட்டு விலகி எங்கோ கரைந்திருந்தது.

ஒரு நாள் அதிகாலை நேரம் காவல் துறையின் இரு வாகனங்கள் அமைதியாக எங்கள் குடியிருப்பில் நுழைந்தன. அழகியின் பெற்றோரும் தம்பியும் அழுகையும் கதறலுமாக வெளியேறி காவல் துறையினரை எதிர்கொண்டனர். காவல் துறையினர் அமைதியாக அவர்களுடன் உரையாடினர். அழகியின் தந்தை சிலுவையின் வடிவத்தை கைகளால் வரைந்து அழுதுகொண்டிருந்தார்.

முந்தைய இரவு ஜீஸஸ் கிரைஸ்ட் மெக்ஸிகோ தேசத்து அழகியை தன் வீட்டில் வைத்து சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்டான் என்ற செய்தியை அறிந்துகொண்டேன். எனக்கு கரிய நிற கார்களும் ஜீஸஸ் கிரைஸ்டின் ஓவியங்களும் அந்த இளைஞனை நினைவுபடுத்துகின்றன. அழகியின் குடும்பம் எங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறியது. அவர்கள் டெக்ஸாஸ் நகருக்கே சென்றிருக்கலாம். 

நானும் அந்த அழகியை மறந்திருந்தேன், இந்தக் கதையை எழுதும் வரை.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை