சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - மறுவாசிப்பு

                                             

மரணத்தை எந்தவிதமான தத்துவ உதவியுமில்லாமல் எதிர்கொள்ளும் மனிதன் எத்தனை பரிதாபகரமானவன்’.

சுந்தர ராமசாமியை தன்னுடைய ஆசிரியராக ஆத்மார்த்தமாக உணரும், அவருடைய இறுதிக்காலத்தைப் பற்றி மிகுந்த அக்கரையோடு விசனப்படும் ஜெயமோகனின் மனதில் ஊறிய சொற்கள் இவை. சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் மாலைநடை செல்கிறார்கள். விழுது பரப்பி நிற்கும் ஒரு ஆலமரத்தின் அடியில் திகைத்து நிற்கும் சுந்தர ராமசாமி முடிவின்மை குறித்து ஜெயமோகனிடம் மனம் பொங்கிப் பேசுகிறார்,

‘பூமி முழுக்க நிறைஞ்சிருக்கிற உயிர் எவ்ளவு பயங்கரமா இருக்கு? மூர்க்கம்’. ‘சிருஷ்டி கொந்தளிச்சுண்டு இருக்கு’.

தன்னுடைய இறப்பு அந்த ஆலமரத்தின் அடியில் நிகழவிருப்பதாக எண்ணியதையும் ஆலமரத்திடம உயிர்பிச்சை கேட்டதாகவும் அதிர்வுடன் சொல்கிறார் சுந்தர ராமசாமி. இந்த நூலின் கவித்துவம் மிக்க உச்ச தருணங்களில் ஒன்று இது.

சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக்குமான ஆசிரிய மாணவ உறவு தமிழ் இலக்கியம் வாழும் வரை நினைவுகூரப்படும் ஒன்று.

இரண்டு அறிவுஜீவிகள்; ஒருவர் தன்னுடைய வாழ்வின் சிந்தனைத் திறனின் உச்சத்தில் இருக்கிறார். ஒருவர் வாழ்வின் கொந்தளிப்பான சில நிகழ்வுகள் மனித இருப்பின் மீது வீசியிருக்கும் ஆழமான கேள்விகளுடன் அலையும் இளைஞர். சுந்தர ராமசாமி வாழ்வை தர்க்கரீதியாக அறிவியல்பூர்வமாக அணுகுபவர், தன் படைப்புகளையும் அதையொட்டியே அமைத்துக்கொண்டவர். ஜெயமோகன் வாழ்வையும் படைப்புலகையும் தர்க்கம் மீறிய உன்னதங்களை நோக்கி அமைத்துக்கொண்டவர்.

இந்த நூலின் குறிப்பிடத்தக்க அம்சமான சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக்குமான உரையாடல்களின் துல்லியம் சுந்தர ராமசாமியின் ஆளுமையை வாசகனின் கண்கள் முன் அத்தனை துல்லியத்தோடு நிறுவுகிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் சுந்தர ராமசாமியின் அறிவுத்திறனும் கூரிய நகைச்சுவை உணர்வும். நகைச்சுவை உணர்வு ஆளுமையில் அமையாத அறிவுஜீவிகள் வரலாற்றில் இனிய நினைவுகளாக எழுவதில்லை.

மதுரை கல்லூரி ஒன்றில் உரையாற்றி வரும் ஜெயமோகனிடம் பேசுகிறார் சுந்தர ராம்சாமி,

“ஊங்களை அவங்க சிந்தனைச் சிற்பின்னு சொல்லியிருப்பாங்களே?” என்றார். “ஆமாம்” என்றேன். ஆழந்த பெருமூச்சுடன் “என்னையும் சொன்னாங்க” என்றார். பிறகு கறாரான கண்களுடன், “அரிய கருத்துன்னு எத்தனை வாட்டி சொன்னாங்க?” என்றார். “எண்ணலை சார்”. சுந்தர ராமசாமி, “நானும் எண்ணலை” என்றார். பிறகு “எழுத்துக்குச் சொந்தக்காரர்னு எத்தனை வாட்டி சொன்னாங்க?” என்றார். நான் சிரித்துவிட்டேன்.

“அவாள்லாம் ரொம்ப புத்திசாலிகள். எப்படியாவது கண்டு பிடிச்சிருவா. பாரதிதாசனிலே கவிதைக் கூறுகள்னுகூட ரிசர்ச் பண்றாளே”.

இந்த நூல் சுந்தர ராமசாமியின் மேன்மைகளையும் உச்சங்களையும் மட்டுமல்லாமல் அவர் ஒரு ஆளுமையாக சறுக்கிய இடங்களையும் விரிவாகவே பேசுகிறது. சுந்தர ராமசாமி எனும் ஆளுமை குறித்த பதிவுகளோடு ஊடுபிரதியாக ஜெயமோகன் எனும் எழுத்தாளனின் தொடக்க கால இலக்கிய வாழ்வு குறித்த சித்திரத்தையும் ஒரு வாசகன் பெற்றுக்கொள்ளமுடிகிறது.

நூலை வாசித்து முடிக்கையில் ஒரு செவ்வியல் நாவலின் இரண்டு கதாபாத்திரங்களாகவே இருவரும் நம் மனதிற்குள் அமர்ந்துகொள்கிறார்கள். கனடா செல்ல சுந்தர ராமசாமியிடம் விடைபெறும் ஜெயமோகன் அவர் வீட்டிற்குள் ஏறிச் சென்று மறையும் பிம்பத்தைச் சொல்லும் பகுதியில் மனது ஆழந்த ஒரு துக்கத்தை அடைகிறது. ஒரு நாவலின் மையப்பாத்திரம் அதன் முடிவுக்கு வருகையில் மனம் அடையும் அதிர்வுக்கும் தாக்கத்திற்கும் சமானமான உனர்வுநிலை அது.

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் நூலை ஒரு அறிவுஜீவி இன்னொரு அறிவுஜீவியுடனான உறவு குறித்து எழுதிய பின்நவீனத்துவ நாவலாக கற்பனை செய்துகொண்டேன். அது ஒன்றும் அத்தனை விசித்திரமான சிந்தனையல்ல என்றே தோன்றியது.

முதல் பகுதி –

நூலின் முதல் பகுதி சுந்தர ராமசாமியின் இறுதிச் சடங்கிற்காக அமெரிக்காவிலிருந்து அவர் உடல் வரக் காத்திருக்கும் இடைவெளியில் சனிக்கிழமையிலிருந்து செவ்வாய் கிழமைக்குள் எழுதப்பட்டுள்ளது. ஜெயமோகனுக்கும் சுந்தர ராமசாமிக்குமான முதல் சந்திபில் தொடங்கி அவர்களுடைய நட்பு ஜெயமோகனின் எழுத்துக்கு வித்திடும் சுந்தர ராமசாமியின் தொடர் ஊக்கம், இருவருக்குமான கருத்தியல் வேறுபாடுகள், விஷ்ணுபுரம் நாவலுக்குப் பின் சுந்தர ராமசாமி ஜெயமோகனிடமிருந்து கொள்ளும் விலக்கம், அவருடைய அமெரிக்க நகர்வு என பயணித்து இறப்புச் செய்தியில் முடிவடைகிறது.

ஜெயமோகனுக்கு சுந்தர ராமசாமிக்குமான முதல் சந்திப்பு 1985ல் நிகழ்கிறது. பெற்றோரின் தற்கொலையால் அலைக்கழிப்புடன் இருந்த நாட்களில் இருபத்து மூன்று வயது இளைஞனாக ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை திருவனந்தபுரத்திலிருந்து கோட்டயம் பயணத்தில் அதை வைத்திருந்த அறிமுகமற்ற இன்னொரு பயணியிடமிருந்து பெற்று வாசித்து முடிக்கிறார்; காசர்கோடு சென்றவுடன் அவருக்கு முப்பது பக்க கடிதம் ஒன்றை எழுதுகிறார். கடிதத்திற்கான பதிலில் தன்னை வந்து சந்திக்குமாறு சுந்தர ராமசாமி ஜெயமோகனை கேட்டுக்கொள்கிறார், இருவருக்குமான உறவின் தொடக்கமாக அந்த சந்திப்பு அமைகிறது.

கடிதத்தின் உள்ளடக்கமாக ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் அறிவார்ந்த நோக்குடன் எழுதப்பட்டது என்றும், அது சென்று முடியும் இடம் ஒரு வெறுமை என்றும், அது அந்த அறிவின் ஆணவத்திற்கு கிடைக்கும் வெறுமை மட்டுமே என்றும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

‘அறிவார்ந்த நோக்குக்கும் அப்பால் செல்லும் மேலும் உன்னதமான ஒரு நோக்கு தருக்கத்துக்குச் சிக்காத ஒரு நோக்கு நமக்கு இயல்வதுதான் என்று எனக்குப்பட்டது’.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலின் சாராம்சத்துடன் ஜெயமோகன் முரண்படும் இடத்தைக் குறிக்கிறது. ஜெயமோகன் எனும் ஆளுமையின் அடிப்படைத் தேடலை முன்வைக்கிறது; இந்த நோக்கு இன்றுவரை அவருடைய எழுத்துக்கான ஆதார சுருதியாக இருப்பதை அவருடைய தொடர் வாசகர்கள் எவரும் அறியலாம்.

சுந்தர ராமசாமியின் தோற்றம் ஏற்படுத்திய வசீகரம், நேர்த்தியாக உடையணிய விரும்பும் பழக்கம், அவருடைய இல்லத்தில் எப்போதும் குழுமியிருக்கும் தமிழினி வசந்தகுமார் சுகுமாரன் போன்ற நண்பர்கள் கூட்டம், அவர் சிந்தனைகளைத் தொகுத்துக்கொள்ளும் முறை, முதுகை நிமிர்த்தி நடக்கும் அவருடைய உடல்மொழி, புதிய எண்ணம் தோன்றியதும் காற்றில் ‘அ’ என எழுதும் விசித்திரமான பழக்கம், பாத்டப்பில் குளிக்க விருப்பம் என சுந்தர ராமசாமியின் ஆளுமை குறித்த தெளிவான சித்திரம் நமக்கு கிடைக்கிறது.

‘பிறிதொரு மனிதர் மீது நான் அத்தனை ஈர்ப்பை உணர்ந்ததில்லை. நான் வாழும் காலத்திய பெரும் ஆளுமைகளில் ஒருவர் அவர் என எந்த சிந்தனையும் இல்லாம்லேயே எனக்குப் புரிந்தது’

என அவருடைய முதல் சந்திப்பு முடிந்ததும் தன்னுள் ஓடிய எண்ணங்களை ஜெயமோகன் நினைவுகூர்கிறார்.

சுந்தர ராமசாமி எல்லா கலைஞர்களையும் போல வேடிக்கை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம்கொண்டிருக்கிறார். ஒரு காட்சியிலிருந்தே மனிதர்களின் வாழ்வை ஊகித்துவிடும் அரிய பண்பு அவரிடமிருந்துள்ளது. மதியம் திரையரங்கிற்கு படம் பார்க்க அவசரமாக ஓடும் பெண்ணைப் பற்றி இப்படி ஒரு சித்திரத்தை ஜெயமோகனிடம் முன்வைக்கிறார்,

“பாத்தேளா இந்த பொம்பிளைக்கு கடுமையான புரோட்டீன் பற்றாக்குறை. ரத்தசோகை இருக்கும். சரியான சாப்பாடு இல்லை. இவ புருஷன் ஏதாவது சின்ன வேலை செய்றான்னு நினைக்கிறேன். ஆசாரிமார் வீட்டு பொம்பிளை. மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெருவில ஏதாவது சந்தில வீடு இருக்கும். தெருவில நின்னா அடுக்கள தெரியற வீடு. கொஞ்சம் அலுமினியப் பாதிரங்க, புளியமாறு விறகு, பனையோலைல செஞ்ச உறி. சாக்கடை தெருவில வழிஞ்சு கிடக்கும்.”

சுந்தர ராமசாமி சிந்தனைகளைக் கோர்த்து கவித்துவ உச்சம் நோக்கி நகரும் விதத்தை, தனக்கே உரிய தனித்துவ பார்வை மூலம் கருத்துக்களை அடையும் தன்மையை நூல் முழுக்க பல்வேறு பகுதிகளில் துல்லியமாக நம் முன் நிறுத்துகிறார் ஜெயமோகன். சுந்தர ராமசாமியின் ஆளுமையை அவருடைய தோரணையை மிக அருகாமையில் இருந்து கண்டுகொண்ட பிரமை நமக்கு ஏற்படுகிறது,

புதுமைப்பித்தன்னா சுதந்திரம். சார்த்தர் சொல்றது போல இல்ல அது. சுதந்திரத்தோட பிரிக்க முடியாம இணைஞ்சிருக்கிறது பொறுப்பு இல்ல, தனிமைதான். தனியா இல்லாட்டி சுதந்திரம் இல்ல. சுந்தந்திரத்தோட பாரமே அந்தத் தனிமைதான் …

இயல்பா ஒருத்தர்ட்ட ஒரு கோணல் இருந்து அதோட வில் பவரும் சேந்தா அவர் பெரிய அதிகார மையமா ஆயிடுவார். ஹிட்லர் அப்படித்தான். காந்தி அப்படித்தான். இந்திரா காந்தி அப்படித்தான். நாம் எல்லாருக்கும் ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கு, அதிகாரம் ஒழுங்கிலயும் நேர்த்தியிலயும்தான் இருக்குன்னு. அதனால ஒழுங்கையெல்லாம் எதுக்கணும்னு இப்ப சொல்றாங்க. இல்ல, அதிகாரம் கோணலிலதான் இருக்கு. ஒழுங்க நிலைநாட்ட விரும்பற கோணல்தான் அதிகாரம் …

நண்பர்களுடனான உரையாடலில் இயல்பாக மேல் எழுந்து வரும் இத்தகைய அரிய கருத்துக்கள் அவருடைய எழுத்தில் தொடர்ந்து விடுபடும் போக்கை ஜெயமோகன் விவரிக்கிறார். சொற்களை பிரக்ஞைபூர்வமாக அளந்து பயன்படுத்தும் சுந்தர ராமசாமியின் இயல்பு இத்தகைய சுதந்திரமான் வெளிப்பாடுகளை எழுத்தில் தணிக்கை செய்துவிடுகிறது. எமர்சன், ரஸ்ஸல், எலியட் ஆகியோரை அவர் இளம் வயதிலேயே ஆழமாக வாசித்திருக்கிறார். ஆனாலும் அவர்களை எழுத்தில் மேற்கோள் காட்டுவதைக் கூட தவிர்க்கிறார். இந்த ஆற்றாமையை அவருடன் நட்பில் இருந்த அத்தனை ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றத்துடனும் சில நேரங்களில் இளைஞனுக்கே உரிய துடுக்குடனும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் ஜெயமோகன்.

‘கச்சிதம்’ என்ற வார்த்தையை சுந்தர ராமசாமி தொடர்ந்து பயன்படுத்துவதையும், அவருடைய எழுத்தில் அது செலுத்திய ஆதிக்கத்தையும் ஜெயமோகனால் புரிந்துகொள்ள முடிவதில்லை,

மௌனி பத்தி எனக்கு ஒரு நானூறு வோட்ஸ் சொல்றதுக்கு இருக்கு …

இன்னைக்கு எழுதினீங்களா சார்?”

ஆமா. த்ரீ அவர்ஸ் வீதம் வேலை நடக்குது. இன்றைக்கு நூறு வார்த்தை எழுதினேன்

சுந்தர ராமசாமியின் எழுத்துமுறையை தீவிரமாக எதிர்த்து அவரிடம் விவாதிக்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் முதிரா இளமை மற்றும் உணர்வெழுச்சிகள் அனைத்தையும் சுந்தர ராமசாமி பொறுத்துக்கொள்கிறார்.

“நீங்க மட்டும்தான் இதைப் பத்தியெல்லாம் சண்டை போடரேள்…” என்றார்.

“காரணம் நான் உங்களைவிட பெரிய எழுத்தாளர்” என்பேன் சிரித்தபடி.

“ரொம்ப தன்னடக்கம்தான்” என்று சுந்தர ராமசாமி சிரிப்பார்.

இறுதிப் பத்தாண்டுகளில் தன்னுடைய எழுத்துமுறையை மறுபரிசீலனை செய்துகொள்கிறார் சுந்தர ராமசாமி. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை கைகளால் வழக்கத்தைவிட வேகமாகவே எழுதியிருக்கிறார்.

“எழுதுறதுக்கு மூடு வரணும்னு ரொம்ப நாள் நினைச்சிருந்தேன். எழுதணும்னு ஆசைப்பட்டு முயற்சி பண்ணினா மூடு வந்திரும்னு இப்பதான் தெரியுது… நிறைய எழுதணும்னு நினைக்கிறேன்”

ஆனால் தனிமனித பிரக்ஞையை மட்டுமே மையமாகக் கொண்டு எழுதப்படும், வரலாறே அற்ற எழுத்துமுறை சுந்தர ராமசாமியுடையது என்று கருதும் ஜெயமோகன், ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை கடுமையாகவே விமர்சிக்கிறார். ஆனால் அத்தனை தீவிரமாக நாவலை விமர்சித்திருக்கவேண்டாம் என்று தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.

சுந்தர ராமசாமி மீது வாழ்நாள் முழுக்க வைக்கப்பட்ட அவதூறு பிராமண நோக்கும் பிற்போக்குத் தன்மை கொண்டவர் என்பதும்தான். அவருடன் நெருக்கமான உறவில் இருக்கும் ஜெயமோகன் இதை முற்றிலும் மறுக்கிறார். அவர் ஆழத்தில் ஒரு மார்க்சியர் என்பதையும் தெளிவாக விவரிக்கிறார். தான் சந்தித்த முற்போக்காளர்களில் சுந்தர ராமசாமி அளவுக்கு மரபிலிருந்தும், சாதி மத அடையாளங்களிலிருந்தும் விடுபட்ட எவரையும் கண்டதில்லை என்றே குறிப்பிடுகிறார். 

சுந்தர ராமசாமியின் மார்க்சிய நோக்கிற்கான சான்றாக அவருக்கு குடி மீதும் குடிகாரர்கள் மீதும் இருந்த விலக்கம் ஒழுக்கம் சார்ந்த ஒன்றல்ல என்றும் அது முற்றிலும் கிராமப்புற பெண்களின் குடும்ப பொருளாதாரக் காரணங்கள் சார்ந்த ஒன்று என்றும் சொல்கிறார். தலித் அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டவராகவே சுந்தர ராமசாமி வெளிப்படுகிறார்.

சுந்தர ராமசாமியின் அமெரிக்க ஐரோப்பிய மோகம் மீது ஜெயமோகனுக்கு கடுமையான விமர்சனம் என்றும் இருந்துள்ளது. மேலை நாட்டு ஆய்வு நூல்கள் துல்லியமானவை எனும் அவருடைய நம்பிக்கையை விவாதங்களில் முறியடிக்க எண்ணுகிறார். நித்யாவின் மூலமாக மேற்கின் தத்துவங்களை ஆழமாகப் பயின்று சுந்தர ராமசாமியுடன் அது குறித்த விவாதங்களில் இருக்க விரும்புகிறார் ஜெயமோகன். சுந்தர ராமசாமி மேற்குலகின் பண்பாடுகளையும் தத்துவக் கூறுகளையும் ஆழமாக கற்கவில்லை என்ற எண்ணத்தையே பதிவுசெய்கிறார். 

சுந்தர ராமசாமி அமெரிக்காவின் அரைக் குடியுரிமை பெற்றதையும் ஜெயமோகனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர் தன் மகள் தைலாவின் இந்திய சாலைகள் பற்றிய ஒரு கருத்தைப் பகிர்ந்ததற்கு அதை நாங்கள் இந்தியர்கள் பார்த்துக்கொள்கிறோம் என மூர்க்கமாக எதிர்வினையாற்றுகிறார்.

ரஸ்ய இலக்கிய மேதைகளான தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கியை சுந்தர ராமசாமி விரிவாக வாசித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு இருவருடைய எழுத்தின் மீதும் பரிச்சயம் வர அவர் வித்திடுகிறார். தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவருக்கும் இடையில் யார் முதன்மைப் படைப்பாளி எனும் தீவிரமான விவாதங்களும் நிகழ்கின்றன. சுந்தர ராமசாமி தஸ்தயேஸ்கியையும் ஜெயமோகன் தல்ஸ்தோயையும் முன்வைக்கிறார்கள். சுந்தர ராமசாமியுடன் விவாதம் செய்ய காஸர்கோட்டின் சாலைகளில் சொல்லவேண்டிய பகுதிகளை முன்னோட்டம் செய்துகொண்டே நடந்த நாட்களையும் நினைவுகூர்கிறார். இந்த விவாதங்கள் பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் ஒரு பகுதிக்கு உந்துதலாக இருந்ததையும் பதிவு செய்கிறார்.

சுந்தர ராமசாமியின் உள்ளத்தில் வாழும் கறாரான வியாபாரி அவ்வப்போது வெளிவருகிறார். ஆனால் அதையும் மீறி நண்பர்கள் மேல் அவருக்கு இருந்த அக்கறை எதிர்பார்ப்பதையும் மேல் நண்பர்களுக்கு செய்த பண உதவிகள் என இன்னொரு முகத்தையும் ஆவணப்படுத்துகிறார். சுந்தர ராமசாமிக்கு கலை சினிமாவின் மீது இருந்த ஈடுபாடு, தான் ஓவியராகவேண்டும் என அவர் கண்ட கனவு, எம்.எஸ். உடனான அவருடைய விசித்திரமான நாற்பதாண்டுகால நட்பு என முதல் பாகம் நகர்கிறது.

விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து பரவலான வரவேற்பை அடைகிறது. ஆனால் சுந்தர ராமசாமி அதை வாசிக்காமலும், வாசித்தும் கருத்துக்கள் எதையும் பகிராமலும் மௌனம் காக்கிறார். நாவலின் மையமோ அதன் அடிப்படைகளோ அவருக்குப் புரிவதில்லை. இது இளம் ஜெயமோகனை மிகவும் சீண்டுகிறது, அவர் உதாசீனப்படுத்துவதாக உணர்கிறார். நவீனத்துவரான சுந்தர ராமசாமி அந்த நாவலுக்கான தன்னுடைய எதிர்ப்பை ஒரு குரலாக எழுத்தில் பதிவுசெய்திருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார. அப்படிச் செய்திருந்தால் அது விஷ்ணுபுரம் நாவல் குறித்த மாற்று விவாதங்களுக்கான ஒரு அடித்தளமாக அமைந்திருக்கும் என்றும் எண்ணுகிறார்.

விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்த பிறகு இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்படுகிறது. சுந்தர ராமசாமி ஜெயமோகனை சந்திக்கத் தயங்குகிறார், மறுக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் மற்றும் கண்ணன் மூலம் எழுந்த சர்ச்சைகள் இதை இன்னும் ஆழமான விரிசலாக மாற்றுகிறது.

இரண்டாம் பகுதி –

சுந்தர ராமசாமியின் உடல் வருகிறது, இறுதிச் சடங்குகளுக்கு ஜெயமோகன் செல்கிறார். ஆனால் அவருடைய உடலைக் காண மனம் மறுக்கிறது; தனது மனம் சுந்தர ராமசாமி எனும் ஆளுமையை, அவருடைய மறைவை மறுத்து உயிர்ப்போடு நினைவுகளில் வைத்திருக்கவே விரும்புகிறது, சுந்தர ராமசாமியின் கால்களை மட்டும் காண்கிறார், கலக்கமில்லாமல் இருக்கிறார். சுந்தர ராம்சாமி தன்னுடைய இறுதிச் சடங்கை மரபோடு இணைந்த எந்தவிதமான சம்பிரதாயங்களையும் தவிர்த்து நிகழ்த்தவேண்டும் என விரும்புகிறார், அவருடைய விருப்பத்தை ஒட்டியே மகன் கண்ணன் இறுதிச் சடங்குகளை ஒருங்கிணைக்கிறார். சுந்தர ராமசாமியுடன் முரண்பட்ட மற்றும் அவருடன் கருத்தியல் ரீதியாக ஒத்த எண்ணங்களோடு இருந்த இடதுசாரி அமைப்புகள் மற்றும் நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட பெரும் நிகழ்வாக இறுதிச் சடங்கு அமைகிறது.

சுந்தர ராமசாமியுடன் காந்தி குறித்த தீவிரமான உரையாடல்களை நினைவுகூர்கிறார் ஜெயமோகன். காந்தி எனும் ஆளுமையை முதலில் ஏற்க மறுக்கும் சுந்தர ராமசாமி, நாளடைவில் அவர் குறித்த நேர்நிலை எண்ணங்களை அடைகிறார்; காந்தியின் நிலைப்பாடுகளை விமர்சித்தாலும், அதனுடனேயே அவரை ஏற்கவும் இயலும் என்று உணர்கிறார். காந்தி ஒரு அறிவுஜீவி என்றும், இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு மக்கள் தலைவர் என்றும் எண்ணுகிறார். காந்தியை ஏற்க மறுக்கும் சுந்தர ராமசாமியிடம் அவரை மறுதலித்தும் காந்தி எனும் ஆளுமை குறித்த தன் எண்ணங்களை விரித்தும் நிகழ்ந்த உரையாடல்களை விரிவாக ஆவணப்படுத்துகிறார்.

“எல்லாத்தையும் எப்பவும் சின்ன அளவில் செஞ்சு பாத்து அதில உள்ள நடைமுறைப் பிரச்சனைகளைப் பத்தி யோசிச்சு மேலே கொண்டுட்டு போறார்… தொடர்ச்சியா எல்லாப் போராட்ட முறைகளையும் இம்ப்ரூவ் பண்ணிண்டே இருக்கார். மிகப் பெரிய ஒரு சோஷியாலஜிஸ்ட் மாதிரி யோசிச்சு திட்டம் போடறார் மனுஷன்… அவரோட அந்தராத்மா இருக்கே அது வேற யாருமில்ல, இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சயன்டிஸ்டுதான்… அது ராமன்னு கெழம் தப்பா நினைச்சுண்டுடுத்து…”

பெரியாரை ஒரு ஆளுமையாக ஏற்றுக்கொள்ளும் சுந்தர ராமசாமி அவருடைய செயல்களில் இருந்த எதிர்மறைத்தன்மையை விமர்சிக்கிறார்,

“பொதுப் புத்தி மட்டும்தான் அவங்ககிட்ட இருந்தது. வேற இண்டசக்சுவல் வெப்பனே இல்லை”

ஜே. கிருஷ்ணமூர்த்தியை சுந்தர ராமசாமி தொடர்ந்து வாசித்திருக்கிறார். ஆனால் அவர் ஜே. கிருஷ்ணமூர்த்தியை முழுதாக உள்வாங்கத் தவறினார் என்றே ஜெயமோகன் மதிப்பிடுகிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் சுந்தர ராமசாமியின் கவிதைகளிலும் கதைகளிலும் உள்ளதை விளக்குகிறார். அவர் ஜே. கிருஷ்ணமூர்த்தியை தர்க்கத்தால் அணுகியதே அவரை விட்டு விலகக் காரணம் என்றும் ஊகிக்கிறார். நாராயண குருவைப் பற்றி அறிந்துகொள்ளும் சுந்தர ராமசாமி அவரை ஒரு சீர்திருத்தவாதி என்று மட்டுமே கருதுகிறார். அவருடைய இந்தப் போக்கு ஜெயமோகனுக்கு ஏற்பாக இல்லை. அவருக்கு குறைந்தபட்சம் ஒரு தத்துவ அறிஞர் எனும் இடத்தையாவது அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

சுந்தர ராமசாமிக்கு சக இலக்கியவாதிகளுடன் இருந்த நட்பும் விலகலுமான சித்திரம் தொடர்ந்து இரண்டாம் பாகம் முழுக்க வருகிறது. பிரமிளுடன் அவருக்கு இருந்த விலகல் இலக்கிய உலகம் அறிந்த ஒன்றே. பிரமிளின் ஆளுமையில் இருந்த பிளவுகள் சுந்தர ராமசாமியை மிகவும் பாதித்திருந்தன. அவரிடமிருந்து பிரியும் பிரமிள் வெங்கட் சாமிநானுடன் இணைந்து அவர்கள் இருவருக்குமான மோதல்களுக்கு வித்திடுகிறார்.

நகுலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே நல்ல நட்பு இருந்திருக்கிறது. நகுலனுடைய ‘நினைவுப் பாதை’ நாவலை சுந்தர ராமசாமி வெளியிட வகை செய்கிறார். பிற்காலத்தில் நகுலன் அவரை சரமாரியாகத் திட்டுவதை அறிந்து விலகிவிடுகிறார்.

“நகுலன்கிட்ட இலக்கியம் பேசறதே வேடிக்கையான விஷயம். ‘ராமசாமி ‘நாய்கள்’ நாவலிலே ஒரு வரி வருது பாத்தியா… நாய்கள் நடந்து போகின்றன. எப்டி…? நாய்கள் நடந்து போகின்றன…’ அப்டீன்னு சொல்லி அர்த்த புஷ்டியா நம்மைப் பார்த்து சிரிப்பார். நமக்கு ஒரு மண்ணும் புரியாது…”

சுந்தர ராமசாமிக்கு இறுதி வரை அசோகமித்திரனுடனும் ஜெயகாந்தனுடனும் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் இருந்துள்ளன. ஜெயகாந்தன் வணிக இதழ்களில் சமரசம் செய்துகொண்டு எழுதினார் என்று அவர் கருதுகிறார். ஜெயகாந்தனுடைய எழுத்து உரக்கப் பேசுவது பிரச்சார நோக்கு கொண்டது என்றும் எண்ணுகிறார். ஆனால் அவருக்கு ஜெயகாந்தன் எனும் ஆளுமையின் மீது கடைசி வரை நேசமும் இருந்துள்ளது,

“அவன் அசல் இல்லைன்னா நம்ம இலட்சியவாதமே போலின்னு பொருள்”.

“எவ்ளவு கம்பீரமானவன். மேடையில் முழங்கினாலும் சரி, குடிச்சு விழுந்து கிடந்தாலும் சரி, கம்பீரமாத்தான் இருப்பான். எழுத்தாளனுக்கு கம்பீரமே அழகுன்னு தமிழ் மரமண்டைகளுக்குக் காட்டிக் கொடுத்தவன்ல அவன்.”

மாறாக அசோகமித்திரனின் மேல் சுந்தர ராமசாமிக்கு உயர்ந்த எண்ணங்கள் இருக்கவில்லை, அவரைக் கடுமையாகவே விமர்சனம் செய்துள்ளார். அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமியின் மேல் பொறாமை இருந்துள்ளது. மிக பூடகமாக சுந்தர ராமசாமியைச் சீண்டிக்கொண்டே இருக்கிறார் அசோகமித்திரன். சுந்தர ராமசாமியின் அஞ்சலிக் குறிப்பில்கூட அவருடைய சாதனைகளில் ஒன்றாக கிரீன் கார்டு வைத்திருந்தது என்றே குறிப்பிடுகிறார். அசோகமித்திரனை ஒரு முதன்மை ஆளுமையாகக் கருதும் ஜெயமோகன், சுந்தர ராமசாமி மீதான அவருடைய வெறுப்பை ஒரு ஆற்றாமையுடனே வெளிப்படுத்துகிறார்.

“கலை என்பது சித்தரிப்பல்ல, பரிசீலனையே. அசோகமித்திரனிடம் அதிகபட்சமாக வெளிப்படும் வன்முறை அரிவாள்மனையே”.

சுந்தர ராம்சாமி தன் முன்னோடிகளாக கருதியவர்களில் கேரளத்தின் எம். கோவிந்தன் முதன்மையானவர் என்றும் அவரைத் தன் ஆசிரியராகவே கருதுவதையும் ஜெயமோகன் பதிவு செய்கிறார். ஒரு கட்டத்தில் கா.நா.சு. மிகவும் ஈர்த்திருக்கிறார். சுந்தர ராமசாமி எழுதிய கா.நா.சு. வின் அஞ்சலிக் குறிப்பு தமிழில் எழுதப்பட்டவற்றில் முதன்மையானது என்று ஜெயமோகன் கருதுகிறார். சமரசமில்லாமலும் உணர்ச்சிவசப்பட்டும் எழுத்தப்பட்ட அந்த குறிப்பு தஞ்சை பிரகாஷ் போன்றவர்களின் அதிருப்தியைச் சந்திக்கிறது.

“அப்படித்தான் எழுதணும். நாளைக்கு என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியுங்கூட அப்படித்தான் எழுதணும்…”.

காலச்சுவடு இதழுக்காக நித்யாவை ஒரு நீண்ட நேர்காணல் செய்கிறார் ஜெயமோகன். அதற்காக ஒரு வருடமாக தொடர்ந்த வேலைகளில் இருக்கிறார்; இந்த நேர்காணல் மூலம் நித்யா குறித்து சுந்தர ராமசாமிக்கு இருந்த நம்பிக்கையின்மையை உடைக்க எண்ணுகிறார். சுந்தர ராமசாமிக்கு ஆன்மீகம் சாமியார்கள் குறித்த அவ நம்பிக்கை ஆகியவற்றுக்கு அந்த நேர்காணல் பதிலாக அமையும் என்றும் எண்ணுகிறார். ஆனால் அந்த நேர்காணலின் விரிவான எழுத்து வடிவை சுந்தர ராமசாமி கடைசிவரை உதாசீனம் செய்கிறார். பல பக்கங்களை வெட்டவேண்டும் என்று சொல்கிறார். இறுதியில் மிகுந்த ஏமாற்றத்துடன் அந்த முயற்சியை கைவிட்டுவிடுகிறார் ஜெயமோகன். பிறகு மனுஷ்யபுத்திரனின் முயற்சியில் பேட்டி வெளியாகி பெரிய வரவேற்பை அடைகிறது.

நித்யாவுடன் ஏற்பட்ட தன்னுடைய நெருக்கத்தை தன்னை உதாசீனம் செய்யும் செயல் என்று சுந்தர ராமசாமி கருதுவதாக ஜெயமோகன் பதிவுசெய்கிறார். இருவருக்குமான நிரந்தரமான பிரிவுக்கு ஜெயமோகனின் நிதயா மீதான இந்த ஈர்ப்பும் சுந்தர ராமசாமியின் உதாசீனமும் வழிவகுக்கிறது.

“அவர் ஒரு தமிழர்னா இந்த அளவுக்கு பரபரப்படைஞ்சிருக்க மாட்டீங்க…”

என்ற சுந்தர ராமசாமியின் கூற்று ஜெயமோகனை மிகவும் காயப்படுத்துகிறது. இந்த கேள்வியை தனக்குள் மறு பரிசீலனையும் செய்து பார்த்துக்கொள்கிறார் ஜெயமோகன். நித்யாவை நோக்கிய தன்னுடைய நகர்வு மிக இயல்பானதும் வளர்ச்சி சார்ந்த ஒன்றும் என்றே ஜெயமோகன் கருதுகிறார். ஆனால் நித்யாவை நோக்கி சுந்தர ராமசாமியை நெருங்கச் செய்ய எண்ணி மேற்கொண்ட செயல்களுக்கு தன்னுடைய மூர்க்கமும் முதிர்ச்சியின்மையுமே காரணம் என்றும் கருதுகிறார்.

சுந்தர ராமசாமியுடனான இனிய நினைவுகள் சிலவற்றுடன் இரண்டாம் பாகம் நிறைவுபெறுகிறது.

Comments

  1. பாலாஜி அவர்களுக்கு,

    மிக எளிய மொழியில் புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் நேர்த்தியான வாசிப்பனுபவப் பகிர்வு. ஜெவிற்கும் சுராவிற்கும் இருந்த நட்பு, விலகல்கள் பற்றி தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள். முக்கியமான சில விடயங்கள் உள்ளன. கண்டிப்பாக இவற்றை விட நிறைய விடயங்கள் இருந்திருக்கும் புத்தகத்தில். நல்ல ஆரம்பம், பகுதிகளின் முக்கிய விடயங்கள் என்று நல்ல கட்டமைப்பு இருக்கின்றது. முடிவுரையாக எதுவும் எழுதி இருக்கலாம். இரண்டாம் பகுதி பற்றிய குறிப்புடன் சட்டென்று நின்று விட்டது போல இருக்கின்றது. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை