கரிப்பு - சிறுகதை
காராள கவுண்டரின் சாலையோர தோட்டக் கிணறு மறுபடியும் இரண்டு மலையாளிகளை உண்டு செரித்திருந்தது. கிணறு தரைமட்டத்திலிருந்து அறுபது அடி ஆழத்தில் இருபத்தைந்துக்கு நாற்பது என்ற அளவில் இருந்தது. காவிரியைத் தொட மாயனூர் செல்லும் அமராவதி ஆறு அவருடைய தோட்டத்திலிருந்து வடக்கில் இரயில் தண்டவாளத்தையும் மூன்று கிலோமீட்டர் தூர வயல்வெளிகளையும் தாண்டினால் வந்துவிடும். ஆனாலும் கிணற்றில் இருப்பதென்னவோ உப்புத்தண்ணீர்தான். காராள கவுண்டரின் நான்கு ஏக்கர் தோட்டம் இருபுறமும் புளியமரங்கள் அணிவகுக்கும் கரூர் திருச்சி மைய சாலை காளிபாளையம் தாண்டி ஆண்டிபாளையம் தொடும் இடத்தின் வளைவில் வடக்குப் பார்க்க இருந்தது. கிணறு தோட்டத்தின் சாலையை ஒட்டிய மேற்கு மூலையில் அமைந்திருந்தது. சூரியன் உச்சி தொடுகையில் சாலையோரப் புளியமரத்தின் நிழல் கிணற்றின் தண்ணீரில...